நடிகையாவேன் என்று எதிர்பார்க்கவில்லை!

இந்தியாவின் நட்சத்திரத் தம்பதிகளான கமலஹாசன்-சரிகாவின் இளைய மகள் அக்ஷரா. இவருடைய அக்காவான ஸ்ருதிஹாசன் பிரபல நடிகை மட்டுமல்ல சிறந்த பாடகியும் ஆவார்.
நடிகையாவேன் என்று எதிர்பார்க்கவில்லை!

இந்தியாவின் நட்சத்திரத் தம்பதிகளான கமலஹாசன்-சரிகாவின் இளைய மகள் அக்ஷரா. இவருடைய அக்காவான ஸ்ருதிஹாசன் பிரபல நடிகை மட்டுமல்ல சிறந்த பாடகியும் ஆவார்.  அக்ஷரா முதன் முதலில் "ஷமீதாப்' என்ற ஹிந்தி நகைச்சுவை நாடகத்தில் அறிமுகமானார். தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு தமிழில் வெளியான "விவேகம்' படத்தில் அஜித்துடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். 2019-ஆம் ஆண்டு வெளியான "கடாரம் கொண்டான்' படத்தில் நடித்தார். தற்போது "அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு'  படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் ஓடிடியில் படம் வெளியாக உள்ளது.

மாலை பொழுதில் தேநீர் அருந்தியபடி அக்ஷரா ஹாசனிடம் பேசினோம்:

என்னுடைய அப்பா, அம்மா திரை நட்சத்திரங்களாக இருந்தாலும் என்னுடைய குழந்தை பருவம் எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அப்பா, அம்மாவுடைய சமூக அந்தஸ்து என்பது என்னுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாகத் தான் இருந்தது. 

சென்னை, மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களில் தான் நான் வளர்ந்தேன். வெவ்வேறு மாநிலம், மொழி, கலாசாரம் என்பதால் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. அதுவே என்னை மேம்படுத்திக் கொள்ள வசதியாக இருந்தது.

நான் சிறுவயதில் இருந்தே அமைதியான சுபாவம் கொண்டவள். ஆனாலும் ஜாலியாகவும்  சந்தோஷமாகவும் தான் வளர்ந்தேன். எப்போதும் நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றே விரும்புவேன். அப்போது தான் என்னைச் சுற்றியிருப்பவர்களைச் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். 

நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ள பெண் நான். அதனால் தான் மற்றவர்களுடன் எளிதாகப் பழகிவிடுவேன். "அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' படத்தை தேர்ந்தெடுக்கக் காரணம் அது நகைச்சுவை படம். என்னுடன் பணியாற்றிய படக்குழுவிலும் நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் அதிகம். இந்தப்படம் உலகளவில் அதிக இடங்களில் திரையிடப்பட்டு உள்ளது. தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது.

நட்சத்திர குடும்பத்தில் இருந்து வந்ததால் நீங்கள் வளர்ந்த விதம் சவாலாக இருந்ததா?

சுதந்திரமாக வளர்ந்தேன். நான் என்னவாக வேண்டும் என்பதை நானே தீர்மானித்தேன். என்னுடைய அப்பா-அம்மா அந்த சுதந்திரத்தை எனக்குக் கொடுத்தார்கள். அதற்கு நான் அவர்களுக்குக் கட்டாயம் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.  எனக்கு டான்ஸ், கால்பந்து, எழுத்து மீது ஆர்வம் அதிகம்.

நீங்கள் நன்றாக நடனம் ஆடுபவராமே? உண்மையா?

நடனத்தில் பல வகைகள் உள்ளன. அவை அனைத்தையும் நான் முறையாகக் கற்றுக்கொண்டுள்ளேன். குறிப்பாக ஜாஸ், ஹிப்ஹாப், சல்சா,  பாலே, குச்சுப்புடி, பாரத நாட்டியம் போன்ற நடனங்கள் எனக்குத் தெரியும். 

சிறந்த டான்ஸராக ஆக வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. அல்லது சிறந்த கால்பந்து வீராங்கனையாக வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பமாக இருந்தது.  ஆனால் நடிகையாவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இது எதிர்பாராமல் நடந்தது.

ஹிந்தி நகைச்சுவை நாடகம் ஒன்றிற்குப் பார்வையாளராகச் சென்றேன். அப்போது நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய நபருக்கு உடல் நலம் சரியில்லாமல் போகவே அவர் நடிக்க வரவில்லை. உடனே இயக்குநர் என்னை நடிக்கக் கேட்டார். அவர் எனக்கு மிகவும் வேண்டிய நபர் என்பதால் அவருடைய பேச்சை மறுக்க முடியாமல் அந்த நாடகத்தில் நடித்தேன். அதுவே என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. பெர்ஃபாமரை விட நடிகையாக இருப்பது பிடித்திருக்கிறது.

நீங்கள் நடிக்கும் படங்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?

கதாபாத்திரங்களை வைத்து தான் நான் நடிக்கும் படங்களைத் தேர்வு செய்கிறேன். என்னைத் தேடி வரும் படங்கள் அனைத்திலும் நடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. 

கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் மற்றும் அது எனக்குப் பொருத்தமாக இருக்குமா? என்று நன்கு யோசித்த பின்பே அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன். கதாபாத்திரத்தின் உண்மைத்தன்மையைப் பொருத்து தான் நடிக்கச் சம்மதிப்பேன்.

சமீபமாக சிறந்த சமையல் கலைஞராகவும் மாறிவிட்டீர்களாமே? 

அப்படி ஒன்றுமில்லை. (சிரிக்கிறார்). எங்களுடைய கொடைக்கானல் தோட்டத்தில் இருந்து பழங்கள் வரும். அதை அனைவருக்கும் கொடுப்போம். அப்படிக் கொடுத்து மீதமுள்ள பழங்களை அப்பா ஜாம் செய்ய  சொன்னார். 

யூடியூப்பைப் பார்த்து ஜாம் செய்ய ஆரம்பித்தேன். இப்போது ஜாம் செய்வதில் அதிகம் விருப்பம் ஏற்பட்டுவிட்டது. உங்களுக்கு ஜாம் வேண்டுமானால் சொல்லுங்கள் நான் செய்து தருகிறேன் நம்புங்கள் (சிரித்தபடியே கேட்கிறார்).

விளையாட்டு மீதுள்ள ஆர்வம் பற்றி?

எனக்குக் கால்பந்து விளையாடுவது ரொம்பப் பிடிக்கும். படப்பிடிப்பு இருப்பதால் என்னால் கால்பந்து விளையாட முடியவில்லையே என்று மிகவும் வருத்தமாக உள்ளது. நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் நபர். ஓர் இடத்தில் என்னால் தொடர்ந்து உட்கார முடியாது. ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். படப்பிடிப்பு தவிர மற்ற நேரங்களில் அதிகம் எழுதுவேன்.

உங்கள் எழுத்து ஆர்வம் பற்றிச் சொல்ல முடியுமா?

என்னுடைய எழுத்து மூலம் என்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்துவது மிகவும் பிடித்தமான விஷயம். என்னைக் கவர்ந்த விஷயங்களை எழுத்து மூலமாக வெளிப்படுத்துவேன். 

முன்பெல்லாம் எனக்குத் தோன்றியதை எழுதுவேன். இப்போது ஆழமாக சிந்தித்து எழுதுகிறேன். என் எழுத்தை வெளியே காட்டியதில்லை. அதற்கு இன்னும் வருடங்கள்  ஆகும். 

போட்டோகிராபி என்றால் எனக்கு உயிர். திரைத்துறையில் உள்ள புகைப்படக்கலைஞர்கள் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். அவர்கள் எனக்கு போட்டோகிராபி பற்றி நிறையச் சொல்லித் தந்து இருக்கிறார்கள்.

நகர வாழ்க்கைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

நகர வாழ்க்கை சந்தோஷமாகத்தான் இருக்கிறது. படங்களில் நடிப்பது உற்சாகமளிக்கிறது. ஆனால் சில நேரம் மலைப்பிரதேசங்களுக்குச் சென்று தனியாக இருக்க வேண்டும் என்று தோன்றும். 

அந்த இயற்கையிடம் என்னை நானே இழக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் காமிரா மட்டும் என்னோடு  இருந்தால் போதும் .

வேறெதுவும் தேவையில்லை நீ மட்டும் போதும் "கடாரம் கொண்டான்' பாடல் பின்புலத்தில் ஒலிக்கிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com