ரோஜா மலரே! - 83: புதுமைக்குப் பெயர் போன இயக்குநர் - குமாரி சச்சு

"சொர்க்கம்' படத்தில் நடித்த நான்கு கதாபாத்திரங்களும், ஒருவர் மாற்றி ஒருவர் அம்மாவிடம் பேசும்படி காட்சிகள் இருந்தன.
ரோஜா மலரே! - 83: புதுமைக்குப் பெயர் போன இயக்குநர் - குமாரி சச்சு

"சொர்க்கம்' படத்தில் நடித்த நான்கு கதாபாத்திரங்களும், ஒருவர் மாற்றி ஒருவர் அம்மாவிடம் பேசும்படி காட்சிகள் இருந்தன. அது மட்டுமல்லாமல், அவரது மூன்று மகள்களும், அவர்கள் பங்குக்கு வசனம் பேசி நடிக்க வேண்டிய காட்சிகள் வேறு இருந்தன. அன்று 70 எம்எம், சினிமாஸ்கோப் ஃபிலிம் எல்லாம் வரவில்லை. இந்த 35எம்எம் ஃபிலிமில் தான் இந்த நாலு கதாபாத்திரங்களையும் காட்ட வேண்டும். இதில் ஒளிப்பதிவாளர் உடல் உழைப்பு நான்கு மடங்காகும். 

நடிகர்கள் எல்லோரும் தயாராக இருக்க வேண்டும். இந்த வேடத்தில் ஒரு பாட்டும் இருந்தது. "நாலு காலு சார், நடுவில ஒரு வாலு சார்'. இந்தப் பாடல் மட்டுமல்ல, காட்சிகளும் மாஸ்க் போட்டு தான் படம் எடுக்க முடியும். நாலு பகுதிகளாக இருக்கும் 35 எம்எம் பிலிம் அசைந்தால், மறைந்த, மாஸ்க் பண்ணிய இடத்தில் விழுந்து, காட்சியைக் கெடுத்து விடும். 

நகைச்சுவை காட்சிகளில் மட்டும் அவர் கவனம் செலுத்தவில்லை, அதீதமான கற்பனையைக் காட்சிகளாக்கினார். 

நம் வீடுகளில் வேடிக்கையாக அல்லது கோபமாக சொல்வோமே, "இப்படியே நீங்கள் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தால், நம் வீட்டில் ஒரு பணம் காய்ச்சி மரம் வளர்க்க வேண்டியது தான்'. அது இந்தப் படத்தில் உண்மையாகக் காட்சிப்படுத்தப்பட்டது. அதற்கு ஒரு பாடல் காட்சியை நாம் கூறலாம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், விஜயலலிதா ஆட, "பொன்மகள் வந்தாள்' என்ற ஆலங்குடி சோமு எழுதியுள்ள பாடலில், இந்தப் பணம் காய்ச்சி மரம் வரும். காட்சிப்படி சிவாஜி கணேசன் ஏழை. அவர் பூங்காவில், ஒரு மர நிழலில் படுத்துக் கொண்டு இருப்பார்.

இருவர் வந்து உட்கார்ந்து கொண்டு, லட்ச ரூபாய் பரிவர்த்தனைப் பற்றிப் பேசிக் கொண்டு இருப்பார்கள். அதைக் கேட்டு சிவாஜி கணேசன், நம்மிடம் உள்ளது 10 காசு, லட்ச ரூபாய் பற்றி எல்லாம் நினைக்க முடியுமா? என்று கூறிவிட்டுக் கனவு காண்பார். அந்தக் கனவில் தங்கம், வைரம் மட்டுமல்ல, ரூபாய் நோட்டுகள் மரத்தில் இருந்து கொட்டும். இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களும், கண்ணதாசன் எழுத, இந்த ஒரு பாடல் மட்டும் ஆலங்குடி சோமு எழுதினார். இந்தப் பாடலில் ஒரு காட்சியில் அவருடன் கூட நடிக்கும் நடிகை விஜயலலிதா, 100 ரூபாய், 1000 ரூபாய் நோட்டால், உடை தைத்து போட்டுக் கொண்டு, இந்தப் பாடலில் ஆடி இருப்பார். அன்றே புதுமைக்குப் பெயர் எடுத்தவர் இயக்குநர் ராமண்ணா.    

பொழுது போக்கு என்றால், அதில் என்ன என்ன அம்சங்களை வைக்க முடியும் என்று யோசித்து, அதை எல்லாம் தன் படத்தில் வைப்பவர் இயக்குநர் ராமண்ணா. இந்தப் படத்தில் மட்டுமல்ல அவர் இயக்கிய எந்தப் படத்திலும், இப்படிப்பட்ட ஏதாவது ஒரு விஷயம் இருக்கும். இயக்குநர் ராமண்ணா, தான் செய்யும் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு புதுமையைச் செய்வார். 

"சொர்க்கம்' படத்தில் இந்த "பொன்மகள்' பாடலை வைத்தார். படத்தில் எங்கள் நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக வந்திருக்கும். அதுவும் கதையைக் கெடுக்காமல் தொடர்ச்சியாக வரும். நகைச்சுவை காட்சிகள் தானே என்று அசட்டையாக இல்லாமல், ரொம்பவே உழைத்து எடுத்தார். உழைப்புகேற்ற பலன் அவருக்கு இந்தப் படத்தில் கிடைத்தது.

இப்படிப் புதுமையான முறையில், மக்களுக்குப் பொழுது போக்கு அம்சங்களுடன் வெளிநாடு போகாமல், இங்கேயே மக்களை எப்படி மகிழ்விக்கலாம் என்று சிந்தித்து,  புதுமைகளைச் செய்தவர். 

நான் நடித்த சுமார் ஐநூறு படங்களிலேயே இந்த "சொர்க்கம்' படத்திற்குத் தனிச் சிறப்பு உண்டு. எல்லாப் படங்களிலும் நாங்கள் நடிக்கும் போது சரியாக, முழுமையான ஈடுபாடு, உற்சாகமான உணர்வில் தான் நடிக்கிறோம். எங்களுடைய நகைச்சுவையினால் எந்த ஒரு படமும் கெட்டுப் போய் விட்டது என்று சொல்ல முடியாது. இன்னும் சொல்லப் போனால், எங்களுடைய காமெடியினால், அந்தப் படம் நன்றாக ஓடியது என்று தான் சொல்வார்கள். மேலும் உண்மையாக சொல்ல வேண்டுமானால், பல படங்கள் கதை அம்சங்கள் சுமாராக இருந்தாலும், எங்கள் காமெடி மக்களைத் திரையரங்கத்திற்கு வர வழைத்திருக்கிறது என்ற உண்மையை இங்கு நான் சொல்லித் தான் ஆக வேண்டும். நான் மட்டும் இதற்கு சொந்தம் கொண்டாட முடியாது. இந்த சாதனையை ஆச்சி மனோரமா-நாகேஷ் முதல், பலரும் நடித்து உருவாக்கி இருக்கிறார்கள். "சொர்க்கம்' படமும், அதன் அனுபவங்களும் என்றும் மறக்க முடியாதவை.

இப்படியாகப் பல  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த நான்  படம் ஒன்றில் ஒரு காட்சி மட்டும் நடித்திருக்கிறேன். அதுவும் நாகேஷுடன். அதுவும் பெரிய தயாரிப்பு நிறுவனம் எடுத்தது. அந்த நிறுவனம் தயாரித்த சில படங்களில் நடித்தும் இருக்கிறேன். எனக்கு மிகுந்த மரியாதை கொடுக்கும் நிறுவனம். அந்த நிறுவனம் முதன் முதலில் ஒரு சீன் உள்ள ஒரு காட்சியை எனக்குச் சொல்லி, அதுவும் நாகேஷுடன் நீங்கள்  நடிக்கிறீர்கள் என்று சொன்னவுடன் ஒப்புக்கொண்டேன். அந்தப் படம் எடுக்கும் போது, நானும் நாகேஷும் புகழ் பெற்ற ஜோடி. அதனால் மட்டுமல்ல, அந்தக் காட்சி எனக்கும் பிடித்திருந்தது. எனக்கும் அந்தக் காட்சியில் நடிப்பு, நடனம் அனைத்தையும் காட்ட சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தப் படம் எது?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com