பெருமை சேர்த்த சென்னை வீரர்கள்!

2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று பெருமை சேர்த்துள்ளனர் சென்னையின் சத்தியன் ஞானசேகரன்-சரத் கமல். சர்வதேச விளையாட்டுகளில் அதீத கவனம், நுட்பம், வேகம், போன்றவற்றுடன் ஆட வேண்டியதில் டேபிள்
பெருமை சேர்த்த சென்னை வீரர்கள்!


2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று பெருமை சேர்த்துள்ளனர் சென்னையின் சத்தியன் ஞானசேகரன்-சரத் கமல். சர்வதேச விளையாட்டுகளில் அதீத கவனம், நுட்பம், வேகம், போன்றவற்றுடன் ஆட வேண்டியதில் டேபிள் டென்னிஸ் முக்கிய அங்கம் வகிக்கிறது. கடந்த 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் முதன்முதலில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு தொடங்கியது. கடந்த 1988-இல் தான் ஒலிம்பிக் போட்டிகளின் அங்கம் ஆனது. ஆடவர், மகளிர் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர், அணிகள் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

சிறிய அளவிலான மேசையில், மிகவும் லேசான "பிங் பாங்' எனப்படும் பிளாஸ்டிக் பந்து, ராக்கெட்டுகளை கொண்டு இந்த விளையாட்டு ஆடப்படுகிறது. பெஸ்ட் ஆப் 3 அல்லது 5 செட்கள் கணக்கிலும் ஆட்டங்கள் ஆடப்படுகின்றன.

ஸ்வீடன், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மனி, சீனா, கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் டேபிள் டென்னிஸில் பலம் மிக்கவையாக திகழ்கின்றன. அதிகளவில் உலக சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளன.

இந்தியாவிலும் டேபிள் டென்னிஸ் விளையாட்டு அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது, கமலேஷ் மேத்தா, சேதன் பபூர், எஸ். ராமன், வேணுகோபால் சந்திரசேகர், மீர் காசிம், ஸ்ரீவத்ச சக்ரவர்த்தி, ஆகியோர் வரிசையில் தற்போது, சரத் கமல், சத்தியன் ஞானசேகரன், அந்தோணி அமல்ராஜ் உள்ளிட்டோர் புகழ் பெற்று விளங்குகின்றனர்,. அதே வேளையில், மகளிர் பிரிவிலும், மம்தா பிரபு, இந்து பூரி, ராதிகா சுரேஷ், மெளமா தாஸ், மனிகா பாத்ரா ஆகியோர் சிறப்புற்று விளங்குகின்றனர்.

தேசிய அளவில் தமிழகம் டேபிள் டென்னிஸில் சிறப்புற்று விளங்குகிறது.சென்னையைச் சேர்ந்த சரத் கமல், அவரது நிழல் போல் சத்தியன் ஞானசேகரன் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு இந்தியாவின் சிறப்பை உலகளவில் ஒளிரச் செய்து வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்தவரான சத்தியன் (28), சிறுவயது முதலே இந்த விளையாட்டில் ஈடுபாடு காட்டினார். சிறந்த ஆட்டத்திறனுக்காக ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் பணி ஆணை பெற்றார் சத்தியன். கடந்த 2011 உலக ஜூனியர் சாம்பியன் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணியின் அங்கமாக திகழ்ந்தார். சர்வதேச அளவில் 2016-இல் பெல்ஜியத்தில் நடைபெற்ற ஐ.டி.டி.எஃப் பெல்ஜியம் ஓபன் போட்டியில் பட்டம் வென்றார். அதன் பின் 2017-இல் ஸ்பானிஷ் ஓபன் போட்டியிலும் பட்டம் வென்று சாதனை படைத்தார். சத்தியன், சரத்தின் திறமையால் 2018-இல் ஆஸி.யில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 60 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பதக்கம் வென்றது. உலக தரவரிசையில் முதல் 25 இடங்களில் இடம் பெற்ற இந்திய வீரர் என்ற பெருமையும் சத்தியன் வசம் உள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி:

12 வயதில் முதன்முதலில் கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் பங்கேற்கச் சென்ற சத்தியன், தற்போது மீண்டும் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தகுதிச் சுற்று போட்டியில் வென்றதின் மூலம் முதன்முறையாக டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த வாய்ப்பை நூலிழையில் தவற விட்ட சத்தியன், தற்போது டோக்கியோ போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தற்போது உலக தரவரிசையில் 32-ஆவது இடம் வகிக்கிறார் சத்தியன்.

4-ஆவது முறை தகுதி பெற்ற சரத் கமல்:

மற்றொரு சென்னை வீரரான சரத் கமல் (38), சிறப்பாக ஆடி 9 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற சிறப்புடையவர்.  தொழில்முறை ஆட்டக்காரரான சரத் கமல், இந்திய டேபிள் டென்னிஸின் மூத்த வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்,. ஐரோப்பிய லீக் போட்டிகளில் ஆடி வரும் சரத், ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை குவித்தவர்.

ஏற்கெனவே 2004, 2008, 2016 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்காக பங்கேற்று ஆடியுள்ளார்.

தற்போது நான்காவது முறையாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆட தகுதி பெற்றுள்ளார். சத்தியனைப் போலவே தோஹாவில் நடைபெற்ற ஆசிய தகுதிச் சுற்று போட்டியில் சிறப்பாக ஆடியதின் மூலம் ஒலிம்பிக் தகுதியை அடைந்துள்ளார்.

இதுதொடர்பாக சத்தியன் கூறியதாவது:

""தோஹாவில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டோர் சர்வதேச அளவிலான போட்டியில் முதன்முதலில் பங்கேற்கச் சென்றேன். தில்லியில் இருந்து தோஹாவுக்கு விமானம் மூலம் செல்ல வேண்டி இருந்தது. 

சிறுவனான என்னை தனியாக அனுப்ப அச்சமுற்ற எனது தந்தை, 2 நாள்கள் ரயில் மூலம் பயணித்து தில்லிக்கு வந்து வழியனுப்பினார்.

இவ்வாறு தோஹா பயணம் எனது முதல் சர்வதேச அனுபவத்தை தந்தது. தற்போது ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியும் இங்கேயே கிடைத்தது சிறப்பானது.

கரோனா பாதிப்பால் ஓராண்டுக்கு மேலாக பயிற்சி பெறுவது தடைபட்டது. எனது வீட்டின் மாடியிலேயே சிறிய அளவிலான கூடத்தில் மேசையை நிறுவி பயிற்சி பெற்றேன். இந்திய, ஐரோப்பிய மேசைகளுக்கு வேறுபாடு உள்ளது. அதற்கு ஏற்ப பயிற்சி பெற்றேன்.

எனது முன்னேறத்தில் பயிற்சியாளர் ராமனுக்கு முக்கிய பங்குள்ளது. இதனால் அண்மையில் தேசிய சாம்பியன் பட்டம், ஒலிம்பிக் தகுதி என்ற இலக்குகளை அடைந்தேன்'' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com