நன்றிக்கடனாகும் நாடகங்கள்!

கோயில் திருவிழா  என்றால் ஒரு நாள் நடக்கும்.. மூன்று நாள் நடக்கும்... பத்து நாள் கூட நடக்கலாம்...
நன்றிக்கடனாகும் நாடகங்கள்!


கோயில் திருவிழா என்றால் ஒரு நாள் நடக்கும்.. மூன்று நாள் நடக்கும்... பத்து நாள் கூட நடக்கலாம்... ஆனால் நூறு நாள்கள் திருவிழா நடப்பது எங்காவது கேள்விப்பட்டுள்ளீர்களா ? அதுவும் தினம் ஒரு நாடகத்துடன் கோயில் விழா ஒன்று நடப்பது அதிசயத்திலும் அதிசயம்.

மதுரை அருகேயுள்ள வலையங்குளம் கிராமத்தின் தலைமைக் கடவுள் "தானாக முளைத்த தனிலிங்கப் பெருமாள்'. இந்தக் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி அன்று துவங்குகிறது. விழாவில் ஒவ்வொரு நாள் இரவிலும் ஒவ்வொரு நாடகம் நடக்கும். பக்தர்கள் நேர்த்திக் கடனாக நாடகம் நடத்துகிறார்கள்.

தமிழ்நாட்டுக் கோயில்கள் குறித்து எழுதிவரும் டி.வி.எஸ் ரவிச்சந்திரன் 38 ஆண்டுகாலமாக வலையங்குளம் கிராமத்தில் வசித்து வருகிறார். "தானாக முளைத்த தனிலிங்க பெருமாள்' கோயில் குறித்த இதர செய்திகளை ரவிச்சந்திரன் பகிர்கிறார்:

""இந்தக் கோயிலில் வேறு எந்தப் பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் கிடையாது. இரவு பத்து மணிக்குத் தொடங்கும் நாடகம் விடியும் வரை நடக்கும். கோயில் மைதானத்தில் நாடகம் நடத்த நிரந்தரமாக "கலை அரங்கம்' ஒன்றையும் கிராம மக்கள் கட்டியுள்ளனர்.

நாடகம் தவிர வேறு எந்த நிகழ்ச்சியும் இதுவரை நடந்ததில்லை. ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் திருவிழாவின் போது நாடகங்கள் இந்த கலை அரங்கில் நடந்தால் அடுத்த ஆண்டு நாடகங்கள் நடக்கும் வரை கலை அரங்கத்தை வேறு எதற்காகவும் பயன்படுத்துவதில்லை.

நாடக நேர்ச்சை செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போவதால் இந்தக் கோயிலில் நடக்கும் திருவிழாவில் 100 நாடகங்கள் வரை அரங்கேறியுள்ளன.

நாடகம் நடத்த நேர்த்திக் கடன் செய்து கொண்டவர்கள் கோயிலில் தங்கள் பெயரை முன்பதிவு செய்ய வேண்டும். வரிசைப் படி நாடகம் நடத்த அனுமதி கிடைக்கும். "என்ன நாடகம்.. எந்த நாடகக் கம்பெனி' என்று சொல்லிவிட்டால் ஏற்பாடு செய்ய ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர். நாடகச் செலவு அதிகப் பட்சம் ஐம்பதாயிரம் ரூபாய் வரை ஆகிறது.

கோயில் விழாவின் முதல்நாள் இரவு "வள்ளி திருமணம்' நாடகத்துடன் நாடகவிழா தொடங்கும். தொடர்ந்து "பவளக்கொடி', "அரிச்சந்திரன்' "வீர அபிமன்யு' போன்ற புராண நாடகங்களும், "வீரபாண்டிய கட்டபொம்மன்' போன்ற சரித்திர நாடகங்களும் அரங்கேறும்.

நாடகங்களைப் பார்க்க இரவில் பாய், ஜமுக்காளம், தலையணை சகிதம் கிராம மக்கள் நாடகம் பார்க்க வந்துவிடுவார்கள். நள்ளிரவு கடந்ததும், பாய் அல்லது ஜமுக்காளத்தை விரித்துத் தலையணை போட்டுப் படுத்துக் கொண்டே நாடகத்தை ரசிப்பார்கள். நடுநடுவே தூங்கியும் விடுவார்கள்.

நாடகத்தை கூத்தபிரானும் (லிங்கம் - சிவன்) மோகினியுமான (மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணு) "தனிலிங்கப் பெருமாளாக' இணைந்திருக்கும் கடவுள் கண்டுகளிக்கிறார் என்று மக்கள் நம்புகிறார்கள்.

அதனால் கோயிலுக்கு அருகிலேயே கடவுளின் பார்வை படும்படியான இடத்தில் கலை அரங்கம் அமைந்துள்ளது. கோயிலுக்குள் பெண்கள் போக மாட்டார்கள். வெளியே நின்றுதான் கும்பிடுவார்கள். கோயில் அமைந்துள்ள தெருவில் யாரும் செருப்புடனும் நடக்க மாட்டார்கள்.

நிறைவு நாளில் பட்டாபிஷேகம் நடத்தி சமபந்தி உணவுடன் திருவிழா நிறைவுபெறும். இந்தக் கோயிலில் நாடகம் நடத்தும் பழக்கம் திருமலை நாயக்கர் மன்னர் காலத்திலேயே இருந்ததாம். தொடர்ந்து நாடகங்கள் நூறு வரை நடத்தப்படுவதால் வலையங்குளம் நாடக கிராமம்.. என்றும் அடையாளப்படுத்தப்படுகிறது'' என்கிறார் ரவிச்சந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com