தமிழ் சினிமாவின் தனி அடையாளம்!

ரஜினி 1975-ஆம் ஆண்டுதான் நடிக்க வந்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் ஏன் இந்தக் காலத்திலுமே  ஒரு திரை நாயகனுக்கான பொதுப்பார்வையில் இருந்த எல்லா இலக்கணங்களையும் கட்டுப்பாடுகளையும் 
தமிழ் சினிமாவின் தனி அடையாளம்!


ரஜினி 1975-ஆம் ஆண்டுதான் நடிக்க வந்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் ஏன் இந்தக் காலத்திலுமே ஒரு திரை நாயகனுக்கான பொதுப்பார்வையில் இருந்த எல்லா இலக்கணங்களையும் கட்டுப்பாடுகளையும் உடைத்தெறிந்துவிட்டுத்தான் களம் புகுந்திருக்கிறார்.
அவரே சொன்னதுபோல் அவருக்கு ஓர் எதிர்பாராத வரவேற்பைத்தான் தமிழகம் தந்திருந்தது என்றாலும் அதைத் தக்க வைத்துக் கொண்டு ஆட்டத்தில் நீடிப்பது சாதாரண காரியமல்ல. காதலன் எல்லாவற்றிலும் தன்னை இம்ப்ரெஸ் செய்து கொண்டே இருக்க வேண்டுமென காதலி நினைப்பது போலத்தான் தனக்குப் பிடித்த நடிகன் பற்றிய ரசிகனின் எதிர்பார்ப்பும். அதைப் பூர்த்தி செய்தபடியே இருக்கும் நடிகர்கள், காலத்தின் ஓட்டத்தில் தேங்குவதே இல்லை. ரஜினி அதில் காட்டாறு!
"அரங்கேற்றம்', "சொல்லத்தான் நினைக்கிறேன்', "அபூர்வ ராகங்கள்' என தனது வரலாற்றின் ஆரம்பப் பக்கங்களில் ஒரு "சாக்லேட் பாய்' என்ற தோற்றமே கமல்ஹாசனுக்கு. அதனாலோ என்னவோ, அவருக்கான ஒரு கையெழுத்து ரொமான்ஸிலிருந்து தொடங்கியது.
ஆனால், ரஜினிகாந்தின் தொடக்கமும் ஆரம்பகாலத் தோற்றமும் அவர் நம்பியாருக்கும் அசோகனுக்கும் மாற்றாக இருக்குமோ எனக் கருத வைத்தது. உடலில் நிற்காத கோட் சூட், சவரம் செய்யாத முகம், எந்தப் பக்கமும் வார முடியாத கோரை முடி.
சினிமாவின் ஒட்டுமொத்த இலக்கண மீறலாக அடியெடுத்து வைத்த அவருக்கு எந்த ஒரு பாசிட்டிவ் இமேஜும் எளிதில் கிடைத்துவிடவில்லை. அப்படி இமேஜ் எதுவும் கிடைக்காத ரஜினி, தனக்கான இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காகத் தனக்கு சுலபமாகக் கைவரும் கதாபாத்திரங்களில் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.
அது அவரை ஒரு முரடன், என்ற பிம்பத்தை அனைவரிடத்திலும் முன்னிறுத்தியது. ""நான் என் வழியை மாத்திக்கிட்டேன். எனக்கு வர்றதைச் செஞ்சேன்'' என்று "என் வழி தனி வழி' என்று அன்றே வசனத்தை நடைமுறைப்படுத்திவிட்டார். தனது பாதையை மாற்றிக்கொள்ளாது, அவருக்கான அடிகளைப் பார்த்துப் பார்த்துதான் எடுத்துவைத்தார். முதல் திருப்புமுனையாக கருப்பு வெள்ளை படமாக வந்து வசூல் சாதனை படைத்தது "பைரவி'. படத்தின் தயாரிப்பாளர் கலைஞானம், இயக்குநர் எம்.பாஸ்கர், விநியோக உரிமை பெற்றிருந்த கலைப்புலி தாணு "சூப்பர் ஸ்டார்' என்று போஸ்டர் போட்டார். அதிலிருந்து ரஜினியுடன் சூப்பர் ஸ்டார் சேர்ந்து கொண்டது.
காலம் காலமாகச் சொல்லப்படும் ரொமான்டிக் ஃப்ரேம்களில் அவரைப் பொருத்திப்பார்க்க அன்றைய சினிமா வர்த்தகமும் தயாராக இல்லை. தனக்கான ஸ்டைல் பீடத்தைக் கட்டமைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், அவரை வைத்து செய்யப்பட்ட சோதனை முயற்சிகளான "முள்ளும் மலரும்' (1978), "ஆறிலிருந்து அறுபது வரை' (1979) இரண்டுமே மிகப்பெரிய வெற்றியைத் தந்தன.
இந்த இடைப்பட்ட காலத்தில் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் வெளிவந்த "தர்மயுத்தம்' படத்தின் கதையமைப்பு ரஜினியின் அன்றைய வாழ்க்கையுடன் பொருத்திப் பார்க்கப்பட்டது. இமேஜ் கடந்து அதையும் வெற்றியாக்கினார் ரஜினி.
இதன் பிறகு காதலைத் தூக்கிச் சுமக்கும் ஜனரஞ்சகமான ஒரு கதாபாத்திரத்தை ரஜினிக்கு "ஜானி' படத்தில் இயக்குநர் மகேந்திரன் கொடுத்து அழகு பார்த்தார். மகேந்திரன் - ரஜினி கூட்டணியில் "முள்ளும் மலரும்', "ஜானி', "கை கொடுக்கும் கை' என எல்லாமே பொக்கிஷங்கள்.
ரஜினி எனும் நடிகரை வியாபாரப் பிம்பமாகத் தமிழ் சினிமா கடைசி வரை ஒரு சிறிய வட்டத்துக்குள் சுருக்கி வைத்துக்கொண்டிருக்கிறது எனச் சொன்னால், அதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அதில் அவருக்கும் பங்கு இருக்கிறது. விமர்சனங்கள் இருந்தாலும் "சூப்பர் ஸ்டார்' ரஜினியைவிட "நடிகர்' ரஜினியை ரசிப்பவர்களும் விரும்புவர்களும் ரசிகர்களாக இருக்கத்தான்
செய்கிறார்கள்.
ஒரே சூப்பர் ஸ்டார்தான். அது எப்போதும் ரஜினிதான். தன்னால் செய்ய இயலாததைத் திரையில் செய்பவனைத்தான் ஒரு ஹீரோவாக சாமானிய மக்கள் பார்க்கிறார்கள். ஒரு வெகுஜன சினிமாவில் கதையின் வலு, திரைக்கதை நேர்த்தியெல்லாம் தாண்டி அதன் நாயகனின் தனித்துவ அம்சமும் முக்கியத்துவம் பெறுகிறது.
ரஜினியைப் பொருத்தவரை அது அவரது வேகம். நடப்பது, நிற்பது, சிரிப்பது, திரும்புவது, அமர்வது,
எழுவது என எல்லாவற்றிலும் ரஜினியிடம் ஒரு துரிதம் இருக்கும். இந்த வேகம் பிறப்பியல்பாகவும் கூட இருக்கலாம். ஆனால், அதை ரசிகன் ரசிக்கும் வண்ணம் உடல் மொழியைத் தொடர்ந்து மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார். ஒரு மனிதன் தன் தாய்மொழி அல்லாத ஒரு மொழியை இவ்வளவு வேகமாகப் பேச முடியுமா என யோசித்துப் பார்த்தாலே ரஜினியின் வேகம் எவ்வளவு பிரமிப்பூட்டுவதெனப் புரிந்துவிடும்.
அதே வேகத்தில் 70-வயதை தாண்டி விட்ட இந்த வயதிலும் இன்னும் ரசிகனுக்காகச் சிந்திக்கிறார். ரசிகனின் திருப்தியே தன் உழைப்பின் பலன் என்பதை அறிந்திருக்கிறார். "மூன்று முடிச்சு', "முரட்டுக்காளை'யில் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த "பேட்ட', "தர்பார்' படம் வரையிலும் அவரது ஸ்டைலும் உழைப்பும் அதை நிரூபித்தது.
ரஜினியின் தனித்தன்மை ஸ்டைல். ரஜினி என்றாலே ஸ்டைல்தான். ஆனால், ஒருவர் என்ன செய்தாலும் ஸ்டைலாக இருந்தால் அதைத் தனித்தன்மையெனச் சொல்வது தகுமா என்று தெரியவில்லை!
படங்களில் ஸ்டைல் என்பதைக்கூட விட்டுவிடலாம். அது எத்தனை டேக் வேண்டுமானாலும் போயிருக்கும். அல்லது இயக்குநரின் உள்ளீடுகளும் பாதிப்பும் இருக்க நிறைய வாய்ப்புண்டு. ஆனால், பொது நிகழ்ச்சி விழாக்களில், பத்திரிகையாளர் சந்திப்புகளில், இன்ன பிற நிகழ்ச்சிகளில் பேசும்போதும், சிரிக்கும்போதும், நடக்கும்போதும் கூட அவரை மீறி வெளிப்படும் ஸ்டைல்களை எல்லாம் கூர்ந்து கவனித்தால் தெரியும். ஸ்டைல் என்பது ரஜினிக்கு பிறப்பிலேயே அமைந்த ஒரு கூடுதல் உறுப்பென்று! அல்லது ஸ்டைலானது தனக்கென ஒரு ரூபம் கொடுத்துக்கொண்டால் அதுவே ரஜினி.
தனக்குக் கிட்டிய குறைந்தபட்ச வரவேற்போடு திருப்தியுறாமல் தன்னிடம் மக்கள் விரும்பிய ஸ்டைலையே, ஸ்டைல் ஸ்டைலாக ஒவ்வொரு படத்திலும் இறக்கினார். உதாரணமாக, சிகரெட் பிடிக்கிற காட்சியை எடுத்தால் ஒவ்வொரு படத்திலும் அந்த சிகரெட்டுக்கான நெருப்பு எங்கிருந்து வருகிறது என்பது மாறிக்கொண்டே இருக்கும். அது ரசிகனிடமிருந்து ஒரு புன்னகையைப் பற்றவைக்கும். ஒரு ஹீரோ ஸ்டாராகி, சூப்பர் ஸ்டாராகும் தருணம் அது.
தமிழ் சினிமாவில் ரஜினிக்கு முன்பும் பின்பும் (நாயகிகளைத் தவிர்த்து) எவருடைய கண்ணையும் ரசிகர்கள் இவ்வளவு ரசித்திருப்பார்களா எனத் தெரியவில்லை. காந்தக் கண்கள் என்று பெண்களை வர்ணிக்கலாம். ஓர் ஆணின் கண்களுக்கு அப்படி ஒரு வசீகரம் பெரும்பாலும் சாத்தியமில்லை. ஒரு நடிகனுக்கு முக பாவங்களில் கண்கள் முக்கியப் பங்கு வகிக்கும். அந்த வகையில் ஆக்ரோஷ வசனமோ, மனமுருகும் சென்டிமெண்டோ காட்சியின் தீவிரத்தைக் கண்களில் கொண்டு வருவதில் ரஜினி விற்பன்னர்.
உதாரணமாக "அண்ணாமலை' படத்தில் நண்பன் அஷோக்கிடம் சவால்விடும் காட்சியில், ரஜினி தொடைதட்டிப் பேசிக்கொண்டிருக்கும் வசனங்கள் தாண்டி கண்கள் தனியாய் "இந்த மாஸ் காட்ட வேற எவன்டா இருக்கான்' எனத் தனி சவால்விடும்.
நடிப்பில் பெரிதாக சாதித்ததில்லை, வெரைட்டி காட்டியதில்லை என்னும் குற்றச்சாட்டுகள் பொதுவாக அவர் மீது உண்டு. ஆனால், ஆக்ஷன், மசாலா படங்களில் நடிக்கும் போதுகூட அவர் முகபாவங்கள் அவ்வளவு நுட்பமாக இருக்கும். அவர் அப்பாவியாக நடிக்கும் காட்சிகளில் அவர் முகத்தில் அவ்வளவு வெகுளித்தனம் கொப்பளிக்கும். அடுத்த நொடியே அக்காட்சியில் அதிரடி வசனம் பேச வேண்டியிருந்தால் அதே முகம் அதற்கேற்ப பிசிறின்றி மாறும்.
திரைக்கதையில் டிரான்ஸ்ஃபர்மேஷன் என்ற விஷயம் இல்லாத படங்களில்கூட ரஜினியின் டிரான்ஸ்ஃபர்மேஷன் காட்சிகளை இயல்பாக உணர முடியும். 80-களின் ரஜினி படங்களில் பல சண்டைக் காட்சிகளில் இதை ரசிக்கலாம்.
இவற்றையெல்லாம் மற்ற நடிகர்கள் எல்லோரும் செய்வதுபோல் பத்தோடு பதினொன்றாக அவர் செய்வதில்லை என்பதால்தான் அவருக்கு இந்த வரவேற்பு. காலங்கள் தாண்டியும் நிலைத்து நிற்கிறார். ஒரு வசனம் ஆக்ரோஷமாக இருக்கலாம், ஒரு சண்டை ஆவேசமாக இருக்கலாம், ரஜினியைப் பொருத்தவரை பார்வையும் சிரிப்புமேகூட ஆக்ரோஷமாக, ஆவேசமாக இருக்கும். அதுவே வில்லனாக நடித்திருந்தால் குரூரமாக இருக்கும்.
இதற்கு "எந்திரன்' ஓர் உதாரணம். அவ்வளவு போக்கிரித்தனமான உடல்மொழிகொண்ட மனிதனால் ராகவேந்திரராக நடித்தபோது தெய்வீக முகமும் காட்ட முடிந்தது. "முள்ளும் மலரும்' நடித்தபோது பேரன்பைப் பொழிய முடிந்தது. "ஆறிலிருந்து அறுபது வரை' நடித்தபோது சோகத்தை ஏந்த முடிந்தது. "தம்பிக்கு எந்த ஊரு' படத்தில் நகைச்சுவை பக்கத்தைப் பார்க்க முடிந்தது.
"படிக்காதவன்', "தர்மதுரை' இரண்டிலுமே சகோதர உறவின் உன்னதத்தை உண்ர்த்திப் போனார். "தளபதி' படத்தில் நட்பின் விசுவாசத்தைக் காட்ட முடிந்தது. "கபாலி', "காலா' நடித்தபோது காதலில் தோய முடிந்தது. சினிமாவில் அவர் தேர்ந்தெடுத்த பாதையில் வித வித கேரக்டர்கள் அவருக்கு அதிகம் வாய்க்கவில்லை என்பது முற்றிலும் ஏற்கப்பட வேண்டிய உண்மை. என்றாலும் அவரால் மாறுபட்ட பாத்திரங்களேற்று நடிக்க முடியாது என்பது ஓர் அபத்த முன்முடிவு. தவிர, இன்னும் காலமிருக்கிறதே அதை எல்லாம் செய்து காட்ட. ரஜினியின் சமூகப் பங்களிப்பு ஒன்று உண்டு.
பல நடுத்தர ஏழ்மைக் குடும்பக் குழந்தைகளுக்கு வறுமையை மறக்கடிக்கும், கவலையை போக்கும், தன்னையும் ஒரு ஹீரோவாக உணர வைக்கும் மேஜிக்கை ரஜினி நிகழ்த்தினார். அவ்வகையில் அவர் சத்தமின்றிச் செய்துகொண்டிருப்பது ஒரு மனோசிகிச்சை. இன்றும், இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கும் ரஜினியைப் பிடிக்கிறது. ரஜினி படம் பார்க்காமல் பால்யம் கடந்தவர்கள்தாம் பால்யம் தொலைத்தவர்கள்.
ஆறிலிருந்து அறுபது வரை என்பது ரஜினி ரசிகர்களின் வயதும்தான். "கொடுக்கிற காசுக்கு படம் முடிஞ்சு வரப்போ சந்தோஷமா வர்றோமா' என்பதுதான் சராசரி ரசிகனின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. கணிசமான முறையில் அதை நிறைவாகச் செய்தவர் ரஜினி. "தர்பாரி'லும் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்.
வயது, அனுபவம் ஏற ஏற, பொறுப்பு, முதிர்ச்சி கூடக் கூட நாம் முக்கியத்துவம் தரும் விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இன்று தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றாக ரஜினி நிச்சயம் இருப்பார்.
தமிழ் சினிமா ஒரு புத்தகம் எனில் அதன் அட்டைப்படம் ரஜினிதான். அட்டைப்படத்தைப் பார்த்து புத்தகத்தைத் தீர்மானிக்கக் கூடாதுதான். ஆனால் புத்தகத்துக்கான அடையாளம், அந்த அட்டைப்படம்தான்.

தாதா சாஹிப் பால்கே விருதுக்கு வாழ்த்துகள் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com