ரத்தத்தின் ரத்தமே... - 11

பண்டைய காலத்தில்,  நன்றாக ஓடி ஆடி வேலை செய்துகொண்டிருந்த ஒருவர், ஏதோ ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு, திடீரென்று படுக்கையில் படுத்துவிட்டால்,  அப்போதிருந்த வைத்தியர்கள் அந்த நோயாளியை தொட்டுப்
ரத்தத்தின் ரத்தமே... - 11

பண்டைய காலத்தில்,  நன்றாக ஓடி ஆடி வேலை செய்துகொண்டிருந்த ஒருவர், ஏதோ ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு, திடீரென்று படுக்கையில் படுத்துவிட்டால்,  அப்போதிருந்த வைத்தியர்கள் அந்த நோயாளியை தொட்டுப் பார்க்காமல், தடவிப் பார்க்காமல், தலை முதல் கால் வரை கண்களால் மட்டுமே அலசிப் பார்த்து, அவருக்கு நோய் என்ன என்பதை முடிவு பண்ணி, மூலிகைச் சாறு,  மூலிகை மருந்துகள் முதலியவைகளைக் கொடுத்து சிகிச்சை அளித்தார்கள். இது ஒரு காலகட்டம்.

காலங்கள் கொஞ்சம் கடந்த பின்னர், நோயாளியைத் தொட்டுப் பார்த்து,  தடவிப் பார்த்து, நோய் இருக்கும் இடத்தை அமுக்கிப் பார்த்து, பின் நாடி பிடித்துப் பார்த்து, அவருக்கு நோய் என்ன என்பதை முடிவு செய்து, சிகிச்சை அளித்தார்கள். இது ஒரு காலகட்டம்.

பின்னர், நோயாளியின் சிறுநீரை பிடித்து வைத்துக்கொண்டு, அதை தொட்டுப் பார்த்து, அதன் நிறத்தைப் பார்த்து, சில துளி சிறுநீரை நாக்கில் தடவி ருசித்துப் பார்த்து, அவருக்கு நோய் என்ன என்பதை முடிவு பண்ணி சிகிச்சை அளித்தார்கள். இதுவும் ஒரு காலகட்டம்.

உடலில் ஏற்படும் எல்லா நோய்களுமே, உடலுக்கு உள்ளே உள்ள திரவங்களின் கோளாறுகளினால் தான், என்று கிரேக்க மருத்துவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். சிறிது காலம் கழித்து யூரோஸ்கோப்பி, என்கிற ஒரு முறையை பின்பற்ற ஆரம்பித்தார்கள். அதாவது நோயாளியின் சிறுநீரை வைத்துக்கொண்டு, அதில் ரத்தம், சீழ், நிறமாற்றம்,  அதிக சூடு இதில் ஏதாவது இருக்கிறதா என்பதை வைத்து நோயைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தார்கள்.

எகிப்து, பாபிலோன், இந்தியா போன்ற சில நாடுகளில் இந்த யூரோஸ்கோப்பி முறைதான், பழக்க வழக்கத்தில் இருந்தது. சிறுநீரை கண்ணால் அலசிப் பார்த்து, நோயைக் கண்டுபிடிப்பது என்பது சிறுநீரகம், சிறுநீரகப்பாதை நோயை மட்டுமே அதிகமாகக் காண்பிக்கும் நிலையில் இருந்ததே தவிர, உடலின் மற்ற பாகங்களில் இருக்கும் பிரச்னைகளைக் கண்டுபிடிக்க சிறுநீர் உதவவில்லை. எனவே, இந்த முறை சரியானதல்ல என்றும், இது விஞ்ஞான ரீதியான முறையும் அல்ல என்றும் சொல்லி,  அதை தூக்கி வீசிவிட்டார்கள்.

18-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், படுத்த படுக்கையிலேயே நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நோயாளி வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருப்பார். டாக்டர் மட்டும் வந்து வந்து சிகிச்சை அளித்துவிட்டு போவார். மிகப்பழைய தமிழ்த் திரைப்படங்களில் கூட, இம்மாதிரி காட்சிகள் நிறைய நீங்கள் பார்த்திருக்கலாம்.

மைக்ராஸ்கோப் கண்டுபிடித்தபிறகு, மைக்ராஸ்கோப் மூலம் மனித உடலிலுள்ள திசுக்களையும், நோய்களை உண்டாக்கும் உயிர்க்கிருமிகளையும் துல்லியமாக பார்த்து முடிவு பண்ண ஓரளவு உதவியாக இருந்தது.

19-ஆம் நூற்றாண்டின் கடைசிக்காலம் வரைக்கும் கூட, காய்ச்சலை அளக்க உபயோகப்படுத்தும் தெர்மாமீட்டரும், இருதயத் துடிப்பை அளக்க உபயோகப்படுத்தும் ஸ்டெதாஸ்கோப்பும் கூட, முழுவதுமாக பயன்பாட்டில் வரவில்லை. 18- ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், மருத்துவமனைகள், கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தன. நோயாளிகள் மருத்துவமனைக்குப் போய் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்ற முறையும் மெதுவாக வர ஆரம்பித்தது.

எகிப்திலும், மெசபடோமியாவிலும் டாக்டர்கள், நோயாளியைத் தொட்டுப் பார்த்து, தடவிப் பார்த்து, அமுக்கிப் பார்த்து, ஸ்டெதாஸ்கோப்பை வைத்து, சுவாசப் பாதை செயல்பாடு, ரத்த ஓட்ட செயல்பாடு, இருதய செயல்பாடு முதலியவைகளை ஒலிச்சோதனை மூலம் கண்டுபிடித்து, நோயாளி சொல்லும் கஷ்டங்களையும், குறைகளையும் வைத்து நோய் என்ன என்பதை முடிவு செய்தார்கள்.

சிறுநீரை தரையில் ஊற்றுவது, பின் ஏதாவது எறும்பு, புழு, பூச்சி, அந்த சிறுநீர்கிட்டே வருகிறதா என்ற காத்திருந்து கவனித்து, அதை வைத்து நோய் என்ன என்பதை முடிவு செய்தார்கள் இது கொஞ்ச காலம் ஓடியது.

மருத்துவ உலகின் தந்தை, கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் ஹிப்போக்கிரடிஸ் ,  "மனது, அறிவு, ஞானம் இவைகளை, நோயைக் கண்டுபிடிக்கும் கருவிகளாக உபயோகப்படுத்த வேண்டும் என்று சொன்னார். "ஒருவருக்கு நோய் வருவது என்பது, அவரது பாவத்திற்கான தண்டனை என்றும், அவருக்கு வைக்கப்பட்ட சூனியத்தினுடைய முடிவும்தான் என்று ஐரோப்பாவில் வாழ்ந்த ஆரம்பகால கிறிஸ்துவர்கள் நம்பினார்கள்.

சிறுநீரை சோதித்துப் பார்ப்பது, நுரையீரலின் சத்தத்தை கவனிப்பது, இருதயத்துடிப்பை அளப்பது, உடலின் மேலே உள்ள தோலின் நிறம், தோலில் ஏற்படும் நிறமாற்றம், இப்படி பலவிதமான உடல்சோதனைகளை வைத்து நோயைக் கண்டுபிடிக்கும் முறைகள் முடிவுக்கு வந்தன. இந்தக் காலம் முடிவடையும் நேரத்தில்தான் மருத்துவ புரட்சியாக நோயாளிக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க உதவும் பரிசோதனைக் கூடம், மெதுவாக வர ஆரம்பித்தது.

1940 -ஆம் ஆண்டில் ராபின் கூம்ப்ஸ் என்கிற பிரிட்டிஷ் நோயெதிர்ப்பு மருத்துவ நிபுணர் நோயாளியின் ரத்தத்தை வைத்து, டெஸ்ட் செய்து, நோய் என்ன என்பதைக் கண்டுபிடிக்கலாம் என்பதை உலகுக்கு முதன்முதலில் அறிவித்தார். அதே மாதிரி டெஸ்ட் செய்தும் காண்பித்தார்.

மிகச் சாதாரணமான மிகக் குறைந்த அளவிலான ரத்த டெஸ்ட்டுகளை மட்டுமே  செய்ய ஆரம்பித்த பரிசோதனைக் கூடங்கள் நாளடைவில் ஏகப்பட்ட ரத்த டெஸ்ட்டுகளை செய்ய ஆரம்பித்தன. எந்த நோயாக இருந்தாலும் ரத்த டெஸ்ட்டுகள் மூலம் கண்டுபிடித்து விடலாம் என்றும், எல்லாவிதமான டெஸ்ட்டுகளிலும், ரத்த டெஸ்ட்டே முதன்மையானது என்றும் மருத்துவ உலகில் பேசப்பட்டது.

1949 -ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன்முதலாக தில்லியில் டாக்டர். எஸ். கே. லால் என்பவர் மருத்துவ பரிசோதனைக் கூடத்தை ஆரம்பித்தார். இன்று இவரது லால் பரிசோதனைக் கூடங்கள் இந்தியா முழுவதும் சுமார் 800 நகரங்களில் சுமார் 2000 ரத்த மாதிரிகள் சேகரிக்கும் மையங்களுடன் மிகப்பெரிய அளவில் இயங்கி வருகின்றது. ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி மக்கள் பல்வேறு விதமான ரத்த டெஸ்ட்டுகளுக்காக, இந்த பரிசோதனைக் கூடத்துக்கு சென்று வருகிறார்கள்.

இன்று தெருவுக்கு தெரு, மூலைக்கு மூலை, மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இந்தியாவில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் பரிசோதனைக் கூடங்கள் இருப்பதாக தெரியவருகிறது. இதில், சஅடக என்று சொல்லக்கூடிய தரக் கட்டுப்பாடு அங்கீகாரம் பெற்ற பரிசோதனைக் கூடங்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாக சொல்லப்படுகிறது. "பரிசோதனைக் கூடங்களில் மனிதனாலும் தவறு வரக் கூடாது. அங்கு இருக்கும் இயந்திரங்களினாலும் தவறு வரக் கூடாது. ரத்த டெஸ்ட்டுகளின் முடிவுகள் மிக மிகச் சரியாக, மிக மிகத் துல்லியமாக, இருக்க வேண்டும். ஏனெனில் இது ஒரு மனிதனின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். இங்கு விளையாட்டுக்கு இடமே இல்லை என்று பொதுமக்கள் சொல்கிறார்கள்.

அமெரிக்காவில் சுமார் இரண்டு லட்சம் பரிசோதனைக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் பாதி பரிசோதனைக் கூடங்கள் தனியாகவும், பாதி பரிசோதனைக் கூடங்கள் மருத்துவமனையோடு சேர்ந்தும் இயங்கி வருகின்றது.

சுமார் ஆயிரம் ரத்த டெஸ்ட்டுகளை செய்யும் அளவிற்கு இன்று இந்தியாவில் பரிசோதனைக் கூடங்கள் வளர்ந்து விட்டன. கணினி மயமாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கருவிகள், உபகரணங்களுடன் ரத்த டெஸ்ட் செய்யும் பல நவீன பரிசோதனைக் கூடங்கள் இன்று இயங்கிவருகின்றன.

"கத்தி இல்லாமல், ரத்தம் இல்லாமல் சுதந்திரம் பெற்றோம்' என்று நாம் சொல்வதைப் போல ரத்தம் இல்லாமல், ரத்த டெஸ்ட் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்கள் அந்தக்கால மருத்துவர்கள். ஆனால் இன்று ரத்த டெஸ்ட் இல்லாமல் எந்த நோயையும் கண்டுபிடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

( தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com