ஆண்களை வலிமையாக்கும் பெண்கள்!

காலை நேரம் பரபரப்பாக கம்பு சுத்தி எதிரில் இருக்கும் ஆண்களுக்கு தற்காப்பு பயிற்சியளித்து கொண்டிருக்கிறார்  26 வயதான  இளம் பெண் சூர்யா.
ஆண்களை வலிமையாக்கும் பெண்கள்!

காலை நேரம் பரபரப்பாக கம்பு சுத்தி எதிரில் இருக்கும் ஆண்களுக்கு தற்காப்பு பயிற்சியளித்து கொண்டிருக்கிறார் 26 வயதான இளம் பெண் சூர்யா. அவரை காண்பதற்கு சென்னையை அடுத்துள்ள பொன்னேரி பகுதிக்கு சென்ற போது பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் என பலருக்கு சிலம்பாட்டம் பயிற்சியளித்து கொண்டிருந்தார். பயிற்சி முடித்து வந்தவரிடம் பேசினோம்:

உங்களிடம் பயிற்சி பெறுபவர்களில் ஆண்களின் எண்ணிக்கை தான் அதிகமா?

இதுவரை ஆயிரம் பேருக்கு சிலம்பாட்ட பயிற்சி அளித்துள்ளோம். அதில் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள் தான். இது போன்ற பயிற்சிகளை ஆண்கள் மேற்கொள்வதால் ஏராளமான பலனை அடைகிறார்கள். போட்டிகளில் பங்கேற்று அதில் கிடைக்கும் சான்றிதழ்களை வைத்து கல்லூரிகளில் எளிதாக சீட் வாங்கி விடுகிறார்கள். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை கிடைக்கிறது. காவல்துறை, ராணுவ பணிகளுக்கு எளிதாக தேர்வாகி விடுகிறார்கள். நான் கற்று தருவது வெறும் சிலம்பாட்ட பயிற்சி மட்டுமல்ல அதற்கு பின்னால் யோகா, உடலை மேம்படுத்தும் பயிற்சி, தற்காப்பு கலை என பல விஷயங்களில் இதன் பின்னால் உள்ளன. குறிப்பாக இந்த கலை ஆண்கள் விரும்பி பயில்வதற்கு காரணம் உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் வலிமையாகிறார்கள்.

எத்தனை ஆண்டுகளாக இந்தப் பயிற்சி அளித்து வருகிறீர்கள்?

நான் பிறப்பதற்கு முன்பே என்னுடைய அப்பா இறந்துவிட்டார். 3 வயதில் இருந்து சிலம்பம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். கட்டணம் செலுத்த பணமில்லை. ஆனால் ஆர்வம் இருந்தது. அதனால் சுப்பிரமணிய ஆசான் எங்களுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுதந்தார்.. அவர் மறைவிற்கு பிறகு ஹரிதாஸ் ஆசானிடம் கற்றுக்கொண்டேன். இவர் என்னுடைய தாய்மாமா. இப்போது சுப்பிரமணிய ஆசான் கலைக்கூடம் என்ற பெயரில் பயிற்சி பட்டறை தொடங்கி உலகம் முழுவதும் பயிற்சியளித்து வருகிறேன். பென்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு பயிற்சியளிக்கிறேன். சென்னையில் அடையாறு, ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சியளிக்கிறேன்.

அரசுப்பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவிகள், கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு இலவசமாக தான் பயிற்சியளித்து வருகிறேன். வறுமையின் வலி என்பதை நான் நன்றாக அறிவேன். அதனால் தான் ஏழை மாணவர்களிடம் கட்டணம் வாங்குவதில்லை.

என்னுடன் சேர்ந்து அக்கா சந்தியாவும் பயிற்சியளித்து வருகிறார். அவரும் சிலம்பாட்ட கலையை கற்றுத் தேர்ந்தவர். நாங்கள் இலவசமாக பயிற்சியளிப்பதை பார்க்கும் ஆசிரியர்கள் அறக்கட்டளைகளை மூலமாக எங்களுக்கு பண உதவி கிடைக்க ஏற்பாடு செய்து தருகிறார்கள். 2018-ஆம் ஆண்டு வட அமெரிக்க தமிழ் சங்கம் சார்பாக எங்கள் இருவரையும் விருது வழங்குவதற்காக அமெரிக்கா அழைத்துச் சென்றார்கள். 15 நாள்களுக்கு மேலாக அங்கே தங்கியிருந்து இரண்டு மாகாணங்களுக்கு சென்று பயிற்சி அளித்தோம். இப்போது அமெரிக்காவிலிருந்து 80 பேர் ஆன்லைன் மூலமாக எங்களிடம் பயிற்சி பெறுகிறார்கள்.

சிலம்பம் களத்தில் நின்று விளையாடும் விளையாட்டு ஆன்லைனில் எப்படி சாத்தியமானது?

ஆரம்பிக்கும் போது மிகவும் கஷ்டமாகத் தான் இருந்தது. அதில் இருந்த சிக்கல்களை நாளடைவில் சரி செய்தோம். இப்போது ஆன்லைனில் சொல்லிக்கொடுப்பது மிகவும் எளிதாகிவிட்டது. மேலும் எம்.பில் பட்டம் பெற்றுள்ள நான் சிலம்பம் குறித்து டிப்ளமோ பட்டம் பெற்றுள்ளேன். மேலும் சிலம்பம் குறித்த ஆராய்ச்சிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன்.

அந்த ஆராய்ச்சியின் போது சேர, சோழர்கள் காலத்தில் இருந்தே இந்த கலை பயன்பாட்டில் உள்ளது என்பதற்கு கல்வெட்டு ஆதாரங்களும் இருக்கின்றன.

ஆதிகாலத்தில் மனிதனும் மிருகங்களிடமிருந்து தன்னை காத்து கொள்ள இந்த சிலம்ப பயிற்சி ஈடுபட்டுள்ளான். பிற்காலத்தில் ஒரு சிலம்பக் குச்சியைக் கொண்டு கை, கால் மற்றும் உடல் அசைவுளைச் செய்து, எதிரியிடம் இருந்து தன்னைத் தற்காத்துக்கொண்டான். தேவைக்காகக் உருவானதே, சிலம்பம். தமிழர்களின் வீரவிளையாட்டான இது, சிலம்பக் குச்சியைப் பயன்படுத்தப்படுவதன் அடிப்படையில் அடிமுறை, தொடுமுறை, சுற்றுமுறை என மூன்று வகைப்படும்.

64 ஆயகலைகளுள் ஒன்றாக வரிசைப்படுத்தியுள்ளனர். சிலம்பம் பற்றிய முதலாவது வரலாற்று ஆதாரமாக தமிழகத்தில் கண்டறியப்பட்டது ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி . இன்றைய சிலம்பக்கலையில் பயன்படும் குறுவாள்கள், குத்துமுனைகள் போன்றவை அவ்வாராய்ச்சியில் கிடைத்ததன் மூலம் சிலம்பக்கலை ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு தற்காப்பு போர்கலையாக வழக்கத்தில் இருந்துள்ளது உறுதியாகிறது.

சிலம்பம் கற்றுக்கொள்வதால் என்னென்ன நன்மைகள்?

சிலம்பம் தொடர்ச்சியாக விளையாடுவதன் மூலமாக, தன்னம்பிக்கை, விட்டுக்கொடுக்கும் குணத்துடன் நினைவாற்றலையும் அதிகரித்துக்கொள்ள முடியும். தொடர்ந்து சிலம்பப் பயிற்சி மேற்கொள்ளும்போது கை, கால்கள் பலம் பெறும்.

சிலம்பம் விளையாடும்போது பசியே எடுக்காது. விளையாடி முடித்ததும் பசி நன்றாகத் தூண்டப்படும். சாப்பிட அடம் செய்யும் குழந்தைகளுக்குச் சிலம்பப் பயிற்சி கொடுப்பதன் மூலம் அவர்களின் பசி தூண்டப்படும் என்பதுடன் உடல் வலிமையும் பெறுவார்கள்.

பெரியவர்கள் தொடர்ந்து சிலம்பாட்டப் பயிற்சியை மேற்கொள்ளும்போது இருதயக் கோளாறுகள், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை தவிர்க்கப்பட்டு உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்., நினைவாற்றல் பெருகும். இப்போது குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க சொல்லி எங்களிடம் வரும் அப்பாக்கள் தான் ஒரு கட்டத்தில் எங்களிடம் மாணவர்களாகி சிலம்பம் கற்கிறார்கள் என்கிறார் சூர்யா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com