ரத்தத்தின் ரத்தமே... - 12

ரத்தத்தின் ரத்தமே... - 12

குண்டூசி, ஊக்கு, பின், முள், கத்தியின் கூர்நுனி, மெல்லிய கம்பியின் கூர்நுனி, இதுபோன்ற ஏதாவதொரு கூர்மையான நுனி கொண்ட பொருள், நமது கை விரலிலோ, கால் விரலிலோ குத்திவிட்டால், காயம்பட்ட இடத்தில் ஒரு துளியோ

குண்டூசி, ஊக்கு, பின், முள், கத்தியின் கூர்நுனி, மெல்லிய கம்பியின் கூர்நுனி, இதுபோன்ற ஏதாவதொரு கூர்மையான நுனி கொண்ட பொருள், நமது கை விரலிலோ, கால் விரலிலோ குத்திவிட்டால், காயம்பட்ட இடத்தில் ஒரு துளியோ அல்லது சில துளி ரத்தம் உடனே வரும்.

காயம் மிக மிகச் சிறியது என்றால், வெளியே வரும் ரத்தம் ஒரு துளியோடு நின்றுவிடும். காயம் கொஞ்சம் பெரியது என்றால், வெளியே வரும் ரத்தம் சில துளிகளோடு நின்றுவிடும். காயம் ரொம்ப பெரிது என்றால், ரத்தம் பீறிட்டு வந்துகொண்டே இருக்கும்.

நாமும் பயந்துபோய் உடனே கையில் கிடைத்த துணி, பஞ்சு முதலியவற்றை வைத்து ரத்தம் வரும் இடத்தில் நன்றாக அழுத்தி, கொஞ்ச நேரம் பிடித்துக் கொண்டு இருப்போம். சிலர் உடனே ரத்தம் வரும் இடத்தில் கொஞ்சம் காபித்தூளை வைத்து சில நிமிடங்கள் நன்றாக அழுத்திக் கொண்டிருப்பார்கள். சிலர் ஈரமான டீ தூளை வைத்து அழுத்திக் கொண்டிருப்பார்கள். சிலர் சோடா மாவை வைத்து அழுத்திக் கொண்டிருப்பார்கள். சிலர் சர்க்கரையை வைத்து அழுத்திக் கொண்டிருப்பார்கள். சிலர் ஐஸ் கட்டியை வைத்து நன்றாக அழுத்திக் கொண்டிருப்பார்கள். இது ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு மாறுபடும். இது எதையும் பற்றி கவலைப்படாமல் அதுவாக தானாக நின்றுவிடும் என்று மிகச் சாதாரணமாகப் பதில் சொல்பவர்களும் உண்டு.

ரத்தம் வரும் இடத்தில் துணியோ, பஞ்சோ வைத்து அழுத்திக் கொண்டிருக்கும்போதே, அந்தத் துணி நன்றாக நனைந்து, அதற்கு மேலும் ரத்தம் வர ஆரம்பித்தால், மேலும் கொஞ்சம் பஞ்சை வைத்து மறுபடியும் அழுத்திக் கொண்டிருப்பார்கள்.

காயம் ஏற்பட்டு ரத்தம் வெளிவரும் இந்த நிகழ்வு, பெரும்பாலும் ஆண்களுக்கு வீட்டிலோ, வெளியிலோ ஏற்படலாம். ஆனால், பெண்களைப் பொருத்தவரை பெரும்பாலும் இது உங்கள் வீட்டு சமையலறையில் தான் நடக்கும். உங்கள் கைத்திறமையைக் காட்டும் இடமும் சமையலறை தான். அதே நேரத்தில், நீங்கள் கவனமாக, ஜாக்கிரதையாக இல்லையென்றால், உங்கள் உடம்பு அதிகம் பாதிக்கப்படும் இடமும் சமையலறைதான். ஸ்டவ் சூட்டில் சுட்டுக்கொள்வது, காய்கறி வெட்டும் கத்தியால் வெட்டிக் கொள்வது, கண்ணில் மிளகுத்தூள் பட்டுவிடுவது, இதெல்லாம் சமையலறையில் நடக்கும் சாகசங்கள்.
உங்கள் உடம்பில் ஏதாவதொரு இடத்தில் ஏதாவதொரு பொருளால் வெட்டுப்பட்டால், காயம்பட்டால் அல்லது குத்தப்பட்டால், உடனே அந்த இடத்தில் ரத்தம் வடிய ஆரம்பிக்கும். ரத்தம் ஒழுக ஆரம்பிக்கும். சிறிய காயமாக இருந்தால், சில விநாடிகளில் அல்லது சில நிமிடங்களில், வெளிவரும் ரத்தம், வடிந்து கொண்டிருக்கும் ரத்தம் கொஞ்சம் கொஞ்சமாகத் தானாக நின்றுவிடும்.

சற்று பெரிய காயமாக இருந்தால், வெளிவரும் ரத்தம் சில நிமிடங்களில் நின்றுவிடும். ஆனால் தலையிலோ, கை-கால்களிலோ காயம் ஏற்பட்டால், மற்ற இடங்களைவிட, மேற்கூறிய இடங்களில் ரத்தம் சற்று அதிகமாக வெளிவரும். ஏனெனில் இந்த இடங்களிலெல்லாம், ரத்தக் குழாய்கள் அதிகமாகவும், பெரிதாகவும், மேலாகவும் இருக்கின்றன. இதுதான் காரணம்.

காயம்பட்ட இடத்தில் வெளிவரும் ரத்தமானது சுமார் 3 நிமிடங்கள் வரை வந்து கொண்டிருக்கும். இந்த நேரத்தைத் தான் "ரத்தம் ஒழுகும் நேரம்' என்று சொல்வோம்.

காயம்பட்ட இடத்திலிருந்து வெளிவரும் ரத்தமானது, 3 நிமிடங்களுக்கு மேல், சுமார் 10 நிமிடங்களுக்குள் (அதிக பட்ச நேரம்) நின்றுவிடும்.  இந்த நேரத்தைதான் "ரத்தம் உறையும் நேரம்' என்று சொல்வோம். இந்த ரத்தம் ஒழுகும் நேரமும் சரி, ரத்தம் உறையும் நேரமும் சரி, மனிதனுக்கு, நம் உடம்புக்கு, இயற்கையாக ஏற்படும் விஷயம். இதை இறைவன் கொடுத்த வரம் என்று கூட சொல்லலாம்.

காயம்பட்ட இடத்திலிருந்து ரத்தம் வெளிவந்து கொண்டிருக்கும்போது, ரத்தத்திலுள்ள "பைப்ரின்' என்கிற புரதப்பொருள், ரத்தத்திலுள்ள பிளேட்லெட் செல்கள், திசுக்கள் எல்லாம் உடனடியாக, அடுத்த விநாடியே ரத்தம் வடியும் இடத்திற்கு வந்து, கொத்துக் கொத்தாக ஒன்று சேர்ந்து, ரத்தம் வடியும் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைக்க ஆரம்பிக்கும். கடைசியில் மொத்தமாக அந்த ரத்தம் வடியும் இடத்திலிருந்து ரத்தம் வெளிவருவதை நிறுத்தும் வேலையை செய்துவிடும்.இதற்குப் பெயர்தான் "ரத்தம் உறைதல்' ஆகும்.

இதுவும் மனிதனுக்கு இயற்கையாக, இறைவனால் தரப்பட்ட வரத்தில் ஒன்று. "ரத்தம் உறைதல்' என்ற ஒரு செயல் இல்லாமல் போனால், மனிதனின் உயிர் என்னவாகும் என்று சற்று நினைத்துப் பாருங்கள்.

"ஹீமோபிலியா' என்கிற ஒரு வகை ரத்தம் சம்பந்தப்பட்ட மிக அரிதான கோளாறில், ரத்தம் இயற்கையாக உறையாது. ஏனெனில் ரத்தம் உறைவதற்குத் தேவையான புரதப் பொருள், அந்த குறிப்பிட்ட நபரின் ரத்தத்தில் இருக்காது. இந்தக் கோளாறு இருப்பவர்களுக்கு ரத்தம் ரொம்ப வடியும். காயம் ஏற்பட்டு வெகு நேரம் ஆனாலும், ரத்தம் வடிந்து கொண்டிருக்கும். 

சின்னச் சின்னக்  காயங்களுக்கு பிரச்னை இல்லை. பெரிய காயம் என்று வரும்போது, மிகவும் உஷாராக இருக்கவேண்டும்.

உடலிலுள்ள மொத்த ரத்தத்தில் பாதி அல்லது பாதிக்கு மேல்,  வெட்டுக் காயத்திலிருந்து வெளிவந்து, சில சமயங்களில் உயிரையே இழக்க நேரிடும் சம்பவங்களும் உண்டு. உங்கள் உடலிலுள்ள ரத்தத்தின் அளவு ரொம்பவும் குறைந்தால்  உங்கள் உடல் உறுப்புகள் சில சரிவர வேலை பார்க்காமல் போய்விடும். உடலிலுள்ள மிகப்பெரிய ரத்தக் குழாய்கள் வெடித்தாலோ, அதிக ரத்த இழப்பு ஏற்பட்டு உயிர் பிரிய நேரிடும்.

மிகச் சிறிய வெட்டுக்காயங்களில் துணி, பஞ்சு போன்ற கையில் கிடைத்த எதையாவதொன்றை வைத்து அழுத்திக் கொண்டு இருங்கள். சில நிமிடங்களில் ரத்தம் ஒழுகுவது நின்றுவிடும். ரத்தம் மேலும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால், இன்னும் கொஞ்சம் பஞ்சை வைத்து, இன்னும் கொஞ்சம் அழுத்திப் பிடியுங்கள். இப்பொழுது நின்றுவிட்டால் சரி. 

பத்து நிமிடங்களுக்கு மேலும் ரத்தம் வெளிவந்து கொண்டிருந்தால், மேலும் அழுத்திப் பார்த்தும் ரத்தம் நிற்கவில்லையென்றால், உடனே மருத்துவரிடமோ அல்லது மருத்துவமனைக்கோ செல்ல வேண்டும். அதுவாக நின்றுவிடும் என்று சொல்லிக் கொண்டு, கைவிரலைப் பார்த்துக்கொண்டு, வீட்டிலேயே இருந்துவிடக் கூடாது. காலம் தாழ்த்தாதீர்கள். சில நேரம் காயம் சற்று பெரிதாக இருந்தால், தையல் போடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். காயம்பட்டு ரத்தம் வெளிவந்து கொண்டிருக்கும் இடத்தை, தையல் போட்டு மூடினாலே ரத்தம் நின்றுவிடும். 

ஆகவே உடனே மருத்துவமனைக்கு செல்வது மிகவும் நல்லது. ரத்தம் வடிந்துகொண்டிருக்கும் இடத்துக்கு, தொடர்ந்து நன்றாக அழுத்தம் கொடுப்பது என்பது ரத்தம் வடிவதை நிறுத்த ஒரு சிறந்த வழி. கையாக இருந்தால், காயம்பட்ட இடத்தை கீழ்நோக்கி தொங்கவிடாமல் மேல் நோக்கி தூக்கிப் பிடிப்பது மிகவும் நல்லது.

ரத்தம் அதிகமாக வெளிவந்தவர்களுக்கு, ரத்த இழப்பை சரிசெய்ய அதிக அளவில் நீர் சேர்த்துக் கொள்வது, ரத்தம் ஏற்றுவது, ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜனை அதிகப்படுத்துவது, இரும்புச் சத்து அதிகமாக உள்ள உணவுப்பொருள்களை அதிகமாகக் கொடுப்பது போன்றவைகளைச் செய்தால் ரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகமாகி ரத்த இழப்பு கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும்.

ரத்தத்திலுள்ள பைப்ரின் புரதப்பொருள், பிளேட்லெட் செல்கள், திசுக்கள் எல்லாம் உடனடியாக ரத்தம் வடியும் இடத்திற்கு வந்து, கொத்துக் கொத்தாக ஒன்று சேர்ந்து, ரத்தம் வடியும் இடத்தில் உறைய ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக அடைக்கிறதல்லவா' உறைந்த மேற்கூறிய பொருள்களானது, காய்ந்து, கடினமாகி, பொக்கு அல்லது பொருக்கு என்று சொல்லப்படும் ஒரு ஓடு மாதிரி ஆகிவிடும். அன்றைக்கே இந்தப் பொக்கைப் பிய்த்து எடுத்து விடக்கூடாது. சில நாள்கள் கழித்து இன்னும் நன்றாகக் காய்ந்து தானாகவே விழுந்துவிடும்.

ரத்தத்தை மிகச் சாதாரணமாக நினைத்துவிடக்கூடாது. ரத்தம் உயிரைக் காக்கவும் செய்யும். அதே நேரத்தில் கவனமில்லாமல், அக்கறை இல்லாமல், பொறுப்பில்லாமல் இருந்தால், ரத்தம் உயிரைப் போக்கவும் செய்யும்.

(தொடரும்)

காயம்பட்ட இடத்தில் வெளிவரும் ரத்தமானது சுமார் 3 நிமிடங்கள் வரை வந்து கொண்டிருக்கும். இந்த நேரத்தைத் தான் "ரத்தம் ஒழுகும் நேரம்' என்று சொல்வோம்.

காயம்பட்ட இடத்திலிருந்து வெளிவரும் ரத்தமானது, 3 நிமிடங்களுக்கு மேல், சுமார் 10 நிமிடங்களுக்குள் (அதிக பட்ச நேரம்) நின்றுவிடும்.  இந்த நேரத்தைதான் "ரத்தம் உறையும் நேரம்' என்று சொல்வோம். இந்த ரத்தம் ஒழுகும் நேரமும் சரி, ரத்தம் உறையும் நேரமும் சரி,  மனிதனுக்கு, நம் உடம்புக்கு, இயற்கையாக ஏற்படும் விஷயம். இதை இறைவன் கொடுத்த வரம் என்று கூட சொல்லலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com