தமிழ்ப் பெண்ணை மணந்த கிரிக்கெட் வீரர்!

இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா, கிரிக்கெட் மைதானத்தில் பந்துவீச்சில் மட்டும் இல்லாது, காதலிலும் வேகம் காட்டியுள்ளார்.
தமிழ்ப் பெண்ணை மணந்த கிரிக்கெட் வீரர்!

இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா, கிரிக்கெட் மைதானத்தில் பந்துவீச்சில் மட்டும் இல்லாது, காதலிலும் வேகம் காட்டியுள்ளார்.
மே.இந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளே வேகப்பந்து வீச்சில் சிறந்து விளங்கி வருகின்றன. சுழற்பந்து வீச்சில் மட்டுமே இந்தியா வலிமையான அணியாக திகழ்ந்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சும் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது.
குறிப்பாக ஜஸ்ப்ரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகிய மூம்மூர்த்திகள் கூட்டணி தலைசிறந்த எதிரணி பேட்ஸ்மேன்களையே நிலைகுலையச் செய்தது.
இதில் பும்ரா, சீரான வேகத்தில் வீசும் யார்க்கர் கண்டிப்பாக விக்கெட்டை பெற்று தரும் வகையில் உள்ளது. அவரது பந்துவீச்சும் வித்தியாசமாக அமைந்துள்ளது.
இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான பும்ரா, கடந்த 1993 டிசம்பரில் சீக்கிய குடும்பத்தில்  குஜராத்தின் ஆமதாபாத் நகரில் பிறந்தார். 5 வயதிலேயே தனது தந்தை ஜஸ்பீர் சிங்கை பறிகொடுத்தார்.
மழலையர் பள்ளி தலைமை ஆசிரியையான அவரது தாய் தல்ஜித் குடும்பத்தை பாடுபட்டு காப்பாற்றினார்.  கிரிக்கெட்டில் சிறிய வயதிலேயே ஆர்வம் காண்பித்த பும்ரா, உள்ளூர் கிரிக்கெட் அகாதெமிக்கு பின், சென்னையில் உள்ள எம்.ஆர்.எஃப் பேஸ் பவுண்டேஷனில் பெற்ற பயிற்சி தான் வாழ்க்கையை கட்டமைத்தது. கிளென் மெக்ராத்திடம் பயிற்சி பெற்று பின்னர் 19- வயதுக்குட்பட்டோர் அணியில் இடம் பிடித்தார். பின்னர் ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ், பயிற்சியாளர் ஜான் ரைட் பார்வையில் பட்டதால், அந்த அணியில் இடம் பிடித்தார்.  
பின்னர் இந்திய கிரிக்கெட்டில் அனைத்து வகையான அணிகளிலும் இடம் பெற்று முன்னணி வீரராக மாறினார்.
எப்போதும் அமைதியான சுபாவம் கொண்ட பும்ரா, மைதானத்திலும் விக்கெட்டை வீழ்த்தினால் கூட சாதாரணமாகவே இருப்பார். ஆரவாரம் எல்லாம் செய்யமாட்டார். தன்னை எதிலும் அதிகம் வெளிப்படுத்த விரும்ப மாட்டார் பும்ரா.
தொலைக்காட்சி  தொகுப்பாளருடன் திருமணம்: அமைதிப் புறாவாக கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ந்து வந்த பும்ராவுக்கு திடீரென ஸ்டார் தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனுடன் திருமணம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி கோவாவில்  இருவருக்கும் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி திருமணம் நடைபெற்றது. குறிப்பாக நெருங்கிய உறவினர்கள் 20 பேர் மட்டுமே திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சஞ்சனா: பும்ராவின் மனைவியான சஞ்சனா கணேசன், ஸ்டார் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர். அவரது தந்தை கணேசன் ராமசாமி தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர். அவரது தாயார் சுஷ்மா கணேசன் வழக்குரைஞராகவும், உடல்தகுதி பயிற்சியாளராகவும் உள்ளார். சஞ்சனா கடந்த 1991-இல் புணேயில் பிறந்தவர். பி.டெக் பட்டதாரியான சஞ்சனா, ஐடி துறையில் பணிபுரிந்தார். "ஃபெமினா' இந்தியா அழகிப் போட்டியிலும் பங்கேற்று இறுதிச் சுற்று வரை முன்னேறினார்.
இந்திய கால்பந்து சூப்பர் லீக், பாட்மிண்டன் சூப்பர் லீக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை தொகுத்தவர் சஞ்சனா. அவரது சகோதரி ஷீத்தல் பல் மருத்துவராக உள்ளார்.
சஞ்சனாவுடன் ரகசியத்தை பேணிய பும்ரா: எனினும் தொலைக்காட்சி தொகுப்பாளரான சஞ்சனாவுடன் தனது காதலை மிகவும் ரகசியமாக போற்றி பாதுகாத்து வந்துள்ளார் பும்ரா. இருவரும் இணைந்து தங்கள் திருமண அறிவிப்பை வெளியிட்ட பின் தான் அவர்களது காதல் வெளியில் தெரியவந்தது. வேகப்பந்து வீச்சில் காட்டிய வேகத்தை,காதலிலும் பும்ரா காட்டியுள்ளார்.
ஐ.பி.எல்லில் பங்கேற்கும் தம்பதி: திருமணத்துக்காக பி.சி.சி.ஐ அவருக்கு விடுமுறை வழங்கி இருந்தது. தற்போது மீண்டும் ஐபிஎல் தொடரில் ஆடத் தொடங்கியுள்ளார் பும்ரா என்பது குறிப்பிடத்தக்கது.அதே போல் ஸ்டார் தொலைக்காட்சிக்காக ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்கும் பணிக்கு திரும்பியுள்ளார் சஞ்சனா.அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் ஒன்றை வெளியிட்டு அதில் வாழ்க்கையின் மதிப்பான நினைவுகள் என பதிவிட்டிருந்தார் சஞ்சனா.
அதற்கு வேடிக்கையாக பதிலளித்த பும்ரா, இந்த படத்தை எடுத்தவர் மிகவும் நல்லவர் என பதிவிட்டார். அதனால் தான் அவரை மணந்து கொண்டேன் என பும்ரா மீதான காதலை வெளிப்படுத்தி இருந்தார் சஞ்சனா.
 பும்ரா ட்விட்டர் பதிவுகள்: ""காதல் உங்களை மதிப்பானவராக கருதினால், அது உங்கள் போக்கை வழிநடத்தும். காதலின் ஊக்கத்தால் நாங்கள் புதிய பயணத்தைத் தொடங்கி உள்ளோம். இந்த நாள் எங்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த நாள் என திருமண அறிவிப்பை வெளியிட்டு பதிவிட்டிருந்தார்.
திருமணத்துக்கு பின் வந்த நாள்கள் மாயாஜாலமானவை. எங்களை வாழ்த்தியவர்களுக்கு மிகவும் நன்றி. நீண்ட உரையாடல், சமாதானம், நகைச்சுவை, வயிறு வலிக்க சிரிப்புகள் என எங்கள் ஒரு மாத வாழ்க்கை கடந்தது'' என பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com