ரத்தத்தின் ரத்தமே... - 26

அந்தக் காலத்தில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு பஸ்ஸில் செல்ல வேண்டுமென்றால் பல கிராமங்களுக்கு உள்ளே சென்று  கடைசியாக திருநெல்வேலி போய் சேரும்போது போதும் போதும் என்றாகிவிடும்.
ரத்தத்தின் ரத்தமே... - 26

அந்தக் காலத்தில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு பஸ்ஸில் செல்ல வேண்டுமென்றால் பல கிராமங்களுக்கு உள்ளே சென்று கடைசியாக திருநெல்வேலி போய் சேரும்போது போதும் போதும் என்றாகிவிடும். வேறுவழியே கிடையாது.

ஆனால், இன்றோ கிராமங்களுக்கு உள்ளே போகாமல் நகரங்களுக்கு உள்ளும் போகாமல் பல ஊர்களைத் தவிர்த்து மாற்று வழியில் வெகு விரைவாக நெல்லை போய்ச் சேர்ந்துவிட முடிகிறது. இந்த மாற்றுவழி அதாவது பை-பாஸ் என்பது சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வழி. இந்த பைபாஸ் என்ற வார்த்தை பட்டி தொட்டியெங்கும் சொல்லக்கூடிய அளவுக்கு இப்பொழுது பிரபலமாகிவிட்டது. இதே மாதிரி தான் மருத்துவ உலகிலும் "பைபாஸ் சர்ஐரி', "பைபாஸ் ஆபரேஷன்' என்ற சொல் இப்பொழுதெல்லாம் எல்லோரும் சொல்லக்கூடிய அளவில் பிரபலமாகிவிட்டது. நமது உடலில் மூன்று விதமான தசைகள் இருக்கின்றன.

1.எலும்புத் தசை (ஸ்கெலிடல்): இந்தத் தசைகள் பெரியஅளவில் எலும்புகளோடு ஒட்டியே உடலெங்கும் இருக்கக்கூடியது.

2.மென்மைத் தசை (ஸ்மூத்): இந்தத் தசைகள் மிகச் சிறியஅளவில் உடலெங்கும் இருக்கக்கூடிய மென்மையான தசை
களாகும்.

3.இருதயத் தசை (கார்டியாக்): இந்த மாதிரி தசை உடலியேயே இருதயத்தில் மட்டும்தான் இருக்கும். வேறு எங்கும் இருக்காது. ஒருங்கிணைந்த சுருங்கி விரியும் தன்மை கொண்ட இந்த இருதயத் தசை, ஒரு விசேஷமான, அபூர்வமான, சிறப்பான, தனித்தன்மை கொண்ட தசையாகும்.

உடலிலேயே மனித இருதயம் தான் மிகக் கடினமாக வேலையைப் பார்க்கும் ஓர் உறுப்பு ஆகும். சுமார் 300 கிராம் எடையுள்ள மனித இருதயம் ஒரு நிமிடத்திற்கு சுமார் 72 முறை சுருங்கி விரிந்து உடலிலுள்ள ரத்தத்தை விடாமல் சுழற்சி செய்து கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 8ஆயிரம் லிட்டர் ரத்தத்தை நமது இருதயம் பம்ப் செய்து உடலுக்குள் அனுப்பிக் கொண்டிருக்கிறது.

ஆயுள் முழுக்க 24 மணி நேரமும் சுருங்கி விரிந்து சுருங்கி விரிந்து ரத்தத்தை பம்ப் செய்து கொண்டிருக்கும் இந்த இருதயத்துக்கும் சாப்பாடு வேண்டுமல்லவா‚ இடைவிடாது வேலை செய்யும் இருதயத் தசைகளுக்கு, சுத்தமான ஆக்ஸிஜனும், முக்கிய சத்துப் பொருள்களும் தான் உணவு. ஸ்பெஷல் தசைகளால் ஆன இருதயத்துக்கு உணவு கொடுக்க, இருதயத்தின் மேலேயே ரத்தக்குழாய்கள் இருக்கின்றன.

இருதயத் தசைகளுக்குஆக்ஸிஜனையும், சத்துப் பொருள்களையும் எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்களுக்கு "கொரனரி ரத்தக் குழாய்கள்' என்று பெயர். லத்தீன் மொழியில் "கொரனரி' என்றால் "க்ரெளன்' அதாவது "கிரீடம்' என்று அர்த்தம். இருதயத்தின் மேல் படர்ந்துள்ள, இந்த ரத்த ஓட்ட அமைப்பும், ஒரு கிரீடம் போல் அமைந்திருக்கிறது. அதனால் இதற்கு "கொரனரி' ரத்த ஓட்ட அமைப்பு என்று பெயர் வந்தது.

ஒரு பக்கம் இருதயம், தன்னுள்ளே வந்து கொட்டும் ரத்தத்தை இடைவிடாமல் பம்ப் செய்து உடலெங்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், இப்படி இடைவிடாமல் வேலை பார்க்கும் இருதயத்தின் தசைகளுக்கு, கொரனரி ரத்தக் குழாய்கள் உணவைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இது காலங்காலமாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிற ஒன்றாகும். இதில் மாற்றம் எதுவும் இல்லாமல், வாழ்க்கையும் போய்க்கொண்டே இருக்கிறது.

இவ்வாறாக, ஒழுங்காக போய்கொண்டிருக்கும் வேளையில், திடீரென்று, கால்சியம் திட்டுகள், கால்சியமும் கொழுப்பும் சேர்ந்த திட்டுகள், கொழுப்புத் திட்டுகள், கொழுப்புக் கட்டிகள், ரத்தம் உறைந்து உருண்டையான குருதிக் கட்டிகள் முதலியவைகள் இருதயத்திலுள்ள சிறப்பு தசைகளுக்கு ரத்த சப்ளை செய்யும் கொரனரி ரத்தக் குழாய்களில், முதலில் ஓரங்களில் படிந்து, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து, ரத்தம் ஓடவிடாமல் செய்துவிடுகிறது. சில நேரங்களில் கொரனரி ரத்தக் குழாய் முழுவதையுமே அடைத்துவிடுகிறது. இதனால் இருதயத் தசைகளுக்கு கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜனும், உணவும் கிடைக்காமல் போய்விடு

கிறது. இதனால் இருதயத் தசைகள் ஆக்ஸிஜனும், உணவும் கிடைக்காமல் ஏங்க ஆரம்பித்துவிடுகிறது, போராட ஆரம்பித்துவிடுகிறது, தவிக்க ஆரம்பித்துவிடுகிறது. இதனால் தான் மாரடைப்பு அதாவது "ஹார்ட் அட்டாக்' ஏற்படுகிறது. இதை காலத்தின் கொடுமை என்று கூட நாம் சொல்லலாம்.
அடைபட்ட, சுருங்கிப்போன "கொரனரி' ரத்தக் குழாயை எப்படி சரி செய்வது? அடைபட்ட, சுருங்கிப்போன கொரனரி ரத்தக் குழாயை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு, மாற்று வழி மூலமாக அதாவது பைபாஸ் மூலமாக இருதயத் தசைகளுக்கு ரத்த சப்ளை கொடுப்பது. அதாவது உடலின் ஏதாவது ஒரு பகுதியிலிருந்து, ஒரு நல்ல, ஆரோக்கியமான ரத்தக்குழாயை வெட்டி எடுத்து, அடைபட்ட ரத்தக் குழாய் இருக்கும் இடத்தில், மாற்று வழியாக இந்தப் புதிய ரத்தக்குழாயை பொருத்திவிடுவது தான்.

அதாவது, அடைத்துப் போன, பாழான, கெட்டுப்போன கொரனரி ரத்தக்குழாயை விட்டுவிட்டு, அந்த இடத்தில் புதிய ரத்தக் குழாயை ஒட்ட வைப்பது தான் கொரனரி ரத்தக் குழாய் பைபாஸ் கிராப்ட் சர்ஜரி ஆகும். இருதயத்தின் மேல் ஒட்டவைப்பதற்காக உடலிலிருந்து எடுக்கப்படும் புதிய ரத்தக் குழாய்த் துண்டு, காலில் இருந்தோ, மார்புப் பகுதியிலிருந்தோ, கை மணிக்கட்டுப் பகுதியிலிருந்தோ எடுக்கப்படும்.

இருதயத் தசைகளுக்கு உணவையும், ஆக்ஸிஜனையும் சப்ளை செய்யும் "கொரனரி' ரத்தக்குழாய் அடைப்பதினால் தானே இந்த பைபாஸ் அதாவது மாற்றுவழி ரத்தக்குழாய் வெட்டுவது, பின் ஒட்டுவது போன்ற காரியங்களெல்லாம் செய்ய வேண்டியதிருக்கிறது. "கொரனரி' ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமலிருக்க மருந்து மாத்திரைகள் போக வீட்டிலேயே எளிமையான சிலவிஷயங்களை செய்து, சரி செய்து கொள்ளலாம்.

1.சிகரெட் உபயோகிப்பவராக இருந்தால் நிறுத்துங்கள்.
2.காலை உணவை கண்டிப்பாக சாப்பிடுங்கள். தவிர்க்காதீர்கள்.
3.கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை கண்டிப்பாக குறையுங்கள்.
4.மது பழக்கம் உள்ளவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து கடைசியில் நிறுத்த முயற்சி செய்யுங்கள்.
5.சிறிய வகை மீன்கள் அதிக அளவில் சாப்பிடுங்கள்.
6. தினமும் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும் என்பதை கண்டிப்பாக செய்தாக வேண்டிய காரியங்களில் ஒன்றாக வைத்துக் கொள்ளுங்கள்.
7. உங்களுக்கு சந்தோஷம் தரக்கூடிய இடத்துக்கு சென்று வாருங்கள்.
8. உப்பை உணவில் கண்டிப்பாகக் குறையுங்கள்.
9. முடிந்தவரை ஒல்லியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
10. நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருள்களை உணவில் தினமும் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
11. அடிக்கடி சிரியுங்கள். அதிகமாக சிரியுங்கள்.
12. இடுப்பு மடிப்பு விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
13. பெண்களைப் பொருத்தவரை துணி தைப்பது, பீடி சுற்றுவது, விவசாய வேலைகளில் உதவி செய்வது, சமையல் செய்வது, வீட்டை ஒழுங்காகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வது, துணி துவைப்பது போன்ற சில வேலைகளை செய்ய முயற்சி
செய்யுங்கள்.
14. ஏதாவது ஒரு விளையாட்டை பொழுது போக்குக்காக
வைத்துக்கொண்டு அதை தினமும் செய்யுங்கள்.
15. பற்களை சுத்தமாக வைத்திருங்கள்.
16.உங்களுக்கு இனிமையான பாடல்களை கேட்டு மகிழுங்கள்.
17.தேவையில்லாமல் கோபப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள், எரிச்சல் அடையாதீர்கள்.
18. முதலில் வீட்டிலிருப்போரிடம் சிரித்து, பேசி சந்தோஷமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

உலகில் 1893 - ஆம் ஆண்டில் முதல் "ஓப்பன் ஹார்ட் சர்ஜரி' செய்யப்பட்டது. தமிழகத்தில் இருதய பைபாஸ் ஆபரேஷன் துறையில் சுமார் 52 ஆண்டுகள் அனுபவம் பெற்றவரும், அகில இந்திய அளவில் மருத்துவத் துறையின் மிகப்பெரிய, மிக உயரிய விருதாகிய பி.சி.ராய் விருதைப் பெற்றவரும், மத்திய அரசின் பத்மபூஷண் விருதைப் பெற்ற வருமாகிய டாக்டர். எம்.ஆர்.கிரிநாத் சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேல் பைபாஸ் ஆபரேஷன்களை வெற்றிகரமாக செய்து முடித்து இன்றைக்கும் தொடர்ந்து மருத்துவப் பணி செய்து கொண்டிருக்கிறார். பைபாஸ் அதாவது மாற்றுவழி மனிதன் பயணம் செய்வதற்கு மட்டுமல்ல, அவனது உயிர் பயணம் செய்யவும் மிகுந்த உதவியாய் இருக்கிறது.

-தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com