மனதின் வெளிச்சமே மானிட வெளிச்சம்!

சாமான்யர்களின் சந்தோஷம், அன்பு, கோபம், வாழ்க்கை இதுதான் கதையின் ஒரு வரி. இரண்டே வார்த்தைகளில் திரைக்கதை வடிவம் பேசுகிறார் இயக்குநர் ருத்ரன்.
மனதின் வெளிச்சமே மானிட வெளிச்சம்!

சாமான்யர்களின் சந்தோஷம், அன்பு, கோபம், வாழ்க்கை இதுதான் கதையின் ஒரு வரி. இரண்டே வார்த்தைகளில் திரைக்கதை வடிவம் பேசுகிறார் இயக்குநர் ருத்ரன். "வண்ணத்திரை' படத்தின் மூலம் கோடம்பாக்கத்துக்கு அறிமுகமானவர், இப்போது " ரூ.2,000' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.

""எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. இதில் நான் சொல்ல வருவதும் அதுதான். இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல், பண வேட்கை... எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு அழகானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும் அன்போடும் கொண்டாடுபவர்கள் இந்த மாதிரியான எளியவர்கள்தான். கிருஷ்ணகிரி தொடங்கி நான் பயணித்த ஒவ்வொரு நாளும் ஓர் அனுபவம். அப்போது நான் பார்த்த, தரிசித்த உலகங்களின் ஒரு சில காட்சிகள்தான் இந்த படம். எல்லாமே எங்கேயோ நடந்த சம்பவம், யாரோ பேசினவார்த்தைகள்....அதுதானே சினிமா''

தலைப்பின் வழியாக என்ன சொல்ல வர்றீங்க?

கதையின் மனசாட்சியை ஒரு தலைப்பு பிரதிபலிக்க வேண்டும். அதற்காகத்தான் இப்படியொரு தலைப்பு. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எல்லோருக்கும் ஒரு சூழல் வந்தது. அப்படி எழுந்த ஒரு சூழலை கடக்கிற ஒரு மனிதனின் கதைதான் இது. சந்தோஷத்தை எதிர்கொள்கிற அதே நேரத்தில், உண்மையைப் பார்த்தால் மனுஷக்கு அவ்வளவு பயம். இதுதான் வாழ்வின் பெரும் சவால். சந்தோஷத்தை அடைவதற்காக ஒரு பொய் சொல்கிறோம். என்னை கேட்டால் உண்மையை நேருக்கு நேர் சந்திக்கிற தைரியம்தான் வாழ்க்கை. அது வலிக்கும். உசுரை எடுக்கும். ஆனால், அதுதான் சரி. இப்படி ஒரு அனுபவம் இங்கே சிலருக்கு கைக் கூடி வருகிறது. இதை சில கோணங்களின் வழியே கடத்தியிருக்கிறேன்.

படத்தின் உள்ளடக்கம் எப்படியிருக்கும்...

இந்தக் கதையின் எல்லாக் காட்சிகளும் போய் முடிவது மனிதத்தின் வாசலில்தான். ஒவ்வொரு மனிதனுக்குமான அன்பும் வன்மமும் மாறி மாறி கண்ணீரிலும் புன்னகையிலும்தான் போய் முடியும். கிளைக் கதையாக ஒரு காதல், கண்ணீர் என போகும் இடங்களும் இருக்கின்றன. காதலுக்காக இளவரசனும்... கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜும்... சங்கரும்... சோனாலியும், ஃப்ரானிசிகாவும், சுவாதியும் வரமாட்டார்கள். அந்தக் கணக்கும், அதன் பின்னால் உள்ள கதைகளும் கூடும்போது, இன்னும் அதிர்ச்சிகள். ஏன் இத்தனை கொலைகளும்... தற்கொலைகளும்...? ஒரே காரணம்தான்... "மனித மாண்புகள் விழுமியங்கள் மாறிவிட்டன. இந்த காரணத்துக்குப் பின்னால் மத, பண்பாடு சார்ந்த அழுத்தமான அரசியலும் இருக்கிறது. நாங்கள் புது யுகத்துக்குள் நுழைந்துவிடோம்...நவ நாகரிகம் அடைந்துவிட்டோம். அந்தக் கணத்தின் அனைத்துப் பரிமாணங்களிலும் வாழ்கிறோம்... கொண்டாடுகிறோம் என்று கொண்டாட்டத்தை வெளித்தோற்றத்தில் முன்வைத்தாலும். அவர்கள் உள்ளுக்குள் உறவுச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதன் தெளிவான எடுத்துக்காட்டுத்தான் இந்தப் புள்ளிவிபரம். ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும் சமூக விடுதலை என்பது தேவையாக இருக்கிறது. அழகு, நிறம், பணம் என்று அன்றாட அத்தனை அபத்தங்களையும் அடித்து நொறுக்கி, அன்பையும் அக்கறையையும் மட்டுமே முன்வைக்கிற இடம் அது. மனதின் வெளிச்சமே மானிட வெளிச்சம் என்று உணர்கிற இடங்கள் ஆங்காங்கே வரும். அதுதான் இந்த கதையின் பலம் என்று நினைக்கிறேன்.

பண மதிப்பிழப்பு... ஜாதி மறுப்பு திருமணம்... இதில் கதை எழுதி
இயக்கும் அளவுக்கு வியந்த விஷயம் என்ன...

வாழ்க்கைதான் நாம் யோசிக்கவே முடியாத சினிமா. இது அவ்வளவு உண்மை. நாம் அனுதினமும் கவனிக்காமல் கடந்து போகிற ஒவ்வோர் எளிய மனிதனும், அவன் உலகத்தில் ஹீரோதான். அப்படி நான் சந்தித்த பல சுவாரஸ்யமான ஹீரோக்கள்தான் இந்தப் படத்தின் நாயகர்கள். கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்தப் படம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது. பிறக்கும் போது அவனோடு பிறக்கிற வரலாறு, அவன் இறந்த பின்னாலும் அவனது உறவுகள் மூலம் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களை தவிர வேறு எதையும் விட்டு விட்டு போகக் கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். மனித உறவுகளின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. இதுதான் இதன் சிறப்பு. இந்த தலைமுறைக்கு தற்கால அரசியல் தந்திருப்பது இயலாமையும் கோபமும் கையறுநிலையும்தான்.

யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்...

பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார் இந்தப் படத்தின் பெரும் பலம். திட்டம் வகுத்து ஒவ்வொருவரையும் நடிக்க வைத்தோம்.அரசியல் விமர்சகர் அய்யநாதன், பெண்ணிய செயற்பாட்டாளர் ஓவியா இப்படி சினிமாவுக்கு வெளியே இருந்த பலரை இந்த கதை இணைத்தது. ருத்ரன் பராசு, ஷர்னிகா இப்படி சில புதுமுகங்களும் பலம். எல்லோரும் நல்ல ஒத்துழைப்பு தந்தார்கள். அவர்களுக்கு நன்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com