ரத்தத்தின் ரத்தமே... 28

"கொஞ்சம் கூட சொரணை இல்லாம நிக்கிறானே எருமை மாட்டுத்தோலா இருக்கும்னு நினைக்கிறேன்' என்று சிலபேரை கோபத்தில் நாம் சொல்வதுண்டு. என்ன நடந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் எதைப்பற்றியும்
ரத்தத்தின் ரத்தமே... 28


"கொஞ்சம் கூட சொரணை இல்லாம நிக்கிறானே எருமை மாட்டுத்தோலா இருக்கும்னு நினைக்கிறேன்' என்று சிலபேரை கோபத்தில் நாம் சொல்வதுண்டு. என்ன நடந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் எதைப்பற்றியும் கவலைப்படாமல், எருமை மாடுகள் இருப்பதுண்டு. இதேபோன்று, எதைப்பற்றியும் கவலைப்படாமல், எந்த வித உணர்ச்சியும் இல்லாமலிருக்கும் சில மனிதர்களை எருமை மாட்டுடன் ஒப்பிட்டுப் பேசுவதுண்டு. ஆனால், உண்மையில் சொல்லப்போனால், மருத்துவ ரீதியாக, விஞ்ஞான ரீதியாக, மனிதனின் தோலும், பன்றியின் தோலும்தான் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்குமே தவிர, எருமை மாட்டின் தோல் அல்ல. மற்ற பாலூட்டி விலங்குகளின் தோல் போன்றே, மனிதனின் தோலும் சற்றேறக்குறைய ஒன்றாக இருக்கும். பன்றியின் தோலிலுள்ள மயிர்க்கால்களும், மனிதனின் தோலிலுள்ள மயிர்க்கால்களும் கூட ஒன்றுபோல் இருக்கும்.

விலங்குகளில் காண்டாமிருகத்தின் தோல் மிகவும் தடிமனானது. அதேபோன்று திமிங்கிலம்,  சுறாமீன் தோலும் மிகவும் தடிமனானது. சுமார் 15 சென்டிமீட்டர் தடிமன் இருக்கும். கொம்பன் திமிங்கிலம் என்றொரு திமிங்கில வகையில் ஓர் ஆரஞ்சுப் பழத்தில் எவ்வளவு வைட்டமின் சி சத்துப் பொருள் இருக்குமோ அதுபோன்று அதிக அளவில் வைட்டமின் சி சத்துப்பொருள் இந்தக் கொம்பன் திமிங்கலத்தின் தோலில் இருக்கும். முதலைகளின் தோல் மிகவும் கடினமானது. அதனால்தான் முதலைத் தோலில்  மேல்கோட்டு போன்றவை தைப்பதுண்டு. முதலையின் தோல் மிகமிக விசித்திரமானது. வெகு தூரத்தில் தண்ணீருக்குள் இறங்கும் தனது இரையை தனது தோலிலுள்ள ரசாயன ஏற்பிகள் மூலம் உணர்ந்து உடனே அங்கு நகர்ந்து செல்ல ஆரம்பித்துவிடும்.

எண்ணெய்த் திமிங்கிலம் என்றொரு வகை இருக்கிறது. இதனுடைய தோலின் தடிமன் சுமார் 35 சென்டி மீட்டர் கூட இருக்குமாம். சில வகை நத்தைகளுக்கு அதன் உடலிலுள்ள தோலே கண்ணாக உபயோகப்படுவதுண்டு. உடல் குளிர்ச்சியாக இருக்க சிங்கம் நிழலைத் தேடும். யானை தன் உடல் மீது சேற்றை வாரி பூசிக்கொள்ளும். காண்டாமிருகம் தண்ணீரை விட்டு வெளியே வராது. ஆனால் காட்டில் கடும் வெப்பத்தில் வாழும் ஒட்டகச்சிவிங்கி உடலை வெப்பத்திலிருந்து பாதுகாக்க என்ன செய்ய முடியும்? ஒட்டகத்தைப் போன்று வியர்வையை வெளியேற்றி உடலின் சூட்டைத் தணித்துக் கொள்ளாது ஒட்டகச்சிவிங்கி. ஆனால் அதற்குப் பதிலாக ஒட்டகச்சிவிங்கி தனது உடலின் உஷ்ணத்தை சுமார் 10 டிகிரி வரை அதிகமாக்கி அதாவது தன்னைச் சுற்றியிருக்கும் இடத்தின் வெப்பத்தைவிட தன் உடலின் வெப்பத்தை அதிகமாக்கிக் கொள்கிறது. அதனால் வியர்வையே வருவதில்லை. வியர்வை என்ற பேச்சுக்கே இடமில்லை. தனது உடலின் தோலுக்கு நிறைய அளவில் ரத்தத்தை சப்ளை செய்து உடல் வெப்ப நிலையை சீராக்கி, உடல் தோல் முழுவதையுமே தானாகவே குளிர்ச்சி ஆக்கிக் கொள்ளும்.

நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் பச்சோந்தி தரையில் வாழும் ஆமை, பாலைவனங்களில் வாழும் ஒட்டகம், இன்னும் சில விலங்குகளுக்கு அதனுடைய தோல், உடலை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கவும், இரையைப் பிடிக்கவும், உடலின் உஷ்ணத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ளவும் மிகவும் உதவியாய் இருக்கின்றது.

மனிதனைப் பொருத்தவரை, தலை முதல் கால் வரை, நமது உடல் முழுவதையும் போர்த்தி, பாதுகாக்கும் ஓர் உறுப்பு தான் தோல் ஆகும். நமது உடலின் மொத்த எடையில் சுமார் 16 சதவீதம் தோலின் எடையாகும். உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், சுமார் அறுபது கிலோ எடையுள்ள ஒருவரின் உடலிலுள்ள மொத்த தோலின் எடை மட்டும் 9.6 கிலோ ஆகும். ஆக, உடலின் மொத்த எடையில், கிட்டத்தட்ட 10 கிலோ, தோலின் எடையில் மட்டுமே போய்விடுகிறது. அதே போன்று, உடலின் மொத்த தோலையும் உரித்து, உடலிலிருந்து பிரித்தெடுத்துப் பார்த்தால், அது சுமார் 2 சதுர மீட்டர் இருக்கும். 2 க்கு 2 என்ற நம்முடைய புது வீட்டின் தரையில் பெரிய டைல்ஸ் பதித்திருப்போம் அல்லவா அந்த அளவுதான், நமது உடலிலுள்ள மொத்த தோலின் நீள அகலம் ஆகும்.

எப்பிடெர்மிஸ், டெர்மிஸ், ஹைப்போடெர்மிஸ் என்று மூன்று அடுக்குகளாக இருக்கும் தோல், தசைகள், நரம்புகள், எலும்புகள், ரத்தக் குழாய்கள், உடலின் உள்ளேயிருக்கும் உறுப்புகள் முதலிய மொத்த உறுப்புகளின் மீதும் படிந்து, நமது உடலைப் பாதுகாத்து கொண்டிருக்கிறது. தோல் உரித்த கோழி எப்படியிருக்கும்? சற்றே நினைத்துப் பாருங்கள். அதேபோன்று தான், தோலில்லாமல் இருந்தால், நமது உடலும் அப்படித்தான் இருக்கும். பார்க்க சகிக்காது.

வெளியே உள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றமாதிரி, நமது உடலை மாற்றி பாதுகாக்க உதவுவது நமது தோல்தான். ஒரு குறிப்பிட்ட அளவு அதிக குளிரையும், ஒரு குறிப்பிட்ட அளவு அதிக வெப்பத்தையும் தாங்கக்கூடிய சக்தி தோலுக்கு உண்டு. தோலினுடைய தடிமன் நமது உடலில் எல்லா இடத்திலும் ஒன்று போல் இருக்காது. உள்ளங்கை, உள்ளங்கால் போன்ற இடங்களில் தோல் அதிக தடிமனாகவும், மற்ற இடங்களில் சற்று மெல்லியதாகவும் இருக்கும். உடலிலேயே தோல் அதிக தடிமனாக உள்ள இடம் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் (சுமார் 1 மில்லி மீட்டர்) அதே போன்று உடலிலேயே தோல் மிகமிக மெல்லியதாக உள்ள இடம் கண் இமையின் கீழ்ப்பகுதியாகும். தோலுடைய தடிமன் மட்டுமல்ல, தோலுடைய அமைப்பும் இடத்துக்கு இடம் மாறுபடும்.

நமது தோலின் மூன்று அடுக்குகளில், நடுவிலுள்ள "டெர்மிஸ்' என்று சொல்லக் கூடிய பகுதிதான் மிகவும் தடிமனானது. இந்த அடுக்கில் தான் நரம்புகள், ரத்தக்குழாய்கள், வியர்வை சுரப்பிகள், மயிர்க்கால்கள், எண்ணெய் சுரப்பிகள் முதலியவை இருக்கின்றன. தோலுக்கு சக்தியையும் நெகிழ்வுத் தன்மையையும் கொடுப்பது இந்த டெர்மிஸ் என்கிற நடு அடுக்கு தோல்தான்.தொடு உணர்வு, வலி, அழுத்தம், எரிச்சல், நமைச்சல், வெப்பம், குளிர் முதலியனவற்றை உணரவைப்பது, மூளைக்கு தெரிவிப்பது இந்த நடு அடுக்கு டெர்மிஸ்தான்.

மனித உடலிலுள்ள தோலின் தடிமனே ஒரு மில்லி மீட்டர் கூட கிடையாது. அப்படியிருக்கும் போது, அந்த மெல்லிய தோலில் மூன்று அடுக்கு இருக்கின்றது. அந்த மூன்றடுக்கில், நடுவிலுள்ள "டெர்மிஸ்' என்கிற அடுக்கில்தான் எல்லாமே இருக்கிறது என்கிறீர்கள். இதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியவில்லையே மிக இளம் வயதில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த ஒரு பெண்ணைப் பார்த்து, "நீயே ஒரு குழந்தை, உனக்கு ஒரு குழந்தையா?' என்று கேட்ட மாதிரி இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உண்மைதான் இயற்கையின் படைப்பில், உடலின் ஒவ்வொரு உறுப்பும் விநோதமானவைதான். 

உடலின் உள்ளே செல்லச் செல்ல, அற்புதங்களும், ஆச்சரியங்களும், விந்தைகளும், விநோதங்களும், பிரமிப்புகளும் தான் நிறைந்திருக்கும். "டெர்மிஸ்' என்கிற நடு அடுக்குத் தோலில்தான் தோலுக்கு ரத்த சப்ளை செய்யும் மிக நுண்ணிய ரத்தக் குழாய்கள் இருக்கின்றன. இந்த மிக மிக நுண்ணிய ரத்தக்குழாய்கள் வழியாகத்தான் தோலுக்கு ரத்த சப்ளை கிடைக்கின்றது. தோல் மிகவும் உஷ்ணமாக இருந்தால், உடனே இந்த நுண்ணிய ரத்தக் குழாய்கள் பெரிதாகி உடல் உஷ்ணத்தை தோல் மூலமாக வெளியேற்றிவிடும். தோல் மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், இந்த நுண்ணிய ரத்தக் குழாய்கள் உடனே சுருங்கி, உடல் உஷ்ணத்தை தோல் மூலமாக வெளியே விடாமல் பார்த்துக் கொள்ளும். இப்படியாக வெளியிலிருக்கும் வெப்பம், குளிருக்கு ஏற்றபடி, நமது உடல் சூட்டை ஒரே நிலையில் வைத்துக் கொள்ள, நமது தோலிலுள்ள ரத்தம் மிகவும் உதவியாய் இருக்கிறது.

சாதாரணமான சூழ்நிலையில், ஒரு நிமிடத்துக்கு சுமார் 250 மில்லி லிட்டரிலிருந்து 500 மில்லி லிட்டர் வரை ரத்தம், நமது தோலில் சுழன்று கொண்டிருக்கும். உடல் மிகவும் சூடாகிவிட்டால் தோலில் ரத்த ஓட்டம் மிக மிக அதிகமாகிவிடும். இந்த மாதிரி நேரத்தில் ஒரு நிமிடத்துக்கு சுமார் 8 லிட்டர் ரத்தம் கூட ஓடும் சூழ்நிலை ஏற்படும். எனவே தோலிலுள்ள உஷ்ண நிலை, தோலில் ஓடும் ரத்தத்தை வைத்தே முடிவு செய்யப்படுகிறது.

நீண்ட நாட்களாக அடைபட்டுப் போன ரத்தக் குழாய்கள், உபயோகமின்றி, ரத்த சப்ளை இன்றி, வைரஸ் கிருமிகளின் தாக்கத்தால், நிறம் மாறிப் போய் தோலில் கறுப்பு நிறத்தில், கடினமாக இருக்கும். அதற்குப் பெயர்தான் மரு. மச்சங்கள் பிறந்த நாளிலிருந்து இருக்கும். இது கறுப்பாகவோ, பழுப்பு நிறத்திலோ இருக்கும். திடீரென்று மச்சம்,  உருமாறி, நிறம் மாறி, அதிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படுகிறதென்றால், உடனே சரும நோய் நிபுணரைப் பார்ப்பது நல்லது. ஏனெனில் அந்த மாதிரி மாறும்போது, தோல் புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்புண்டு.

தோலிலுள்ள வியர்வை சுரப்பிகள், உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவி செய்யும். தோலிலுள்ள செபேஸியஸ் சுரப்பிகள். எண்ணெய்யை உற்பத்தி செய்து,  தோல் எப்பொழுதும் மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதத்துடனும் இருக்க உதவி செய்கிறது. வைட்டமின் டி சத்து உருவாக, தோல் ஒரு காரணமாக இருக்கிறது. வைட்டமின் பி சத்து உடலில் பாதுகாப்பாக இருக்க, தோல் மிகவும் உதவி செய்கிறது.

தோல், உணர்வுகளை தெரிவிக்கும் ஒரு உறுப்பு. ஒரு வாட்டர் ப்ரூப் உறுப்பு. உடலின் மற்ற உறுப்புகளைப் போல், தோலுக்கும் கண்டிப்பாக ரத்தம் தேவை. உடலை முழுவதுமாக மூடி பாதுகாக்கும் ஒரு காப்புறை என்று கூட தோலைச் சொல்லலாம்.

 தொடரும் ....               

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com