ரத்தத்தின் ரத்தமே...:  30

அறுபது - எழுபதுகளில் நெல்லை மாவட்டம் பத்தமடையிலுள்ள ராமசேஷய்யர் உயர்நிலைப் பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்தபொழுது, சுமார் 5 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திலுள்ள கிராமங்களிலிருந்து பெரும்பாலான
ரத்தத்தின் ரத்தமே...:  30

அறுபது - எழுபதுகளில் நெல்லை மாவட்டம் பத்தமடையிலுள்ள ராமசேஷய்யர் உயர்நிலைப் பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்தபொழுது, சுமார் 5 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திலுள்ள கிராமங்களிலிருந்து பெரும்பாலான மாணவர்கள் தினமும் நடந்தே தான் பள்ளிக்கு வருவார்கள். போவார்கள். சைக்கிளில் வருபவர்கள் மிகமிகக் குறைவு. அதிக தூரத்திலிருந்து வருபவர்களும், அதிக செளகரியம் உள்ளவர்களும் மட்டுமே சைக்கிளில் வருவார்கள்.

அந்த பள்ளி நாள்களில் சைக்கிளில் வருபவர்களையும், சைக்கிளையும் பார்த்துப் பார்த்து, ஏக்கம் அடைந்தவர்கள் ஏராளம் ஏராளம். எனது சொந்த ஊரில் எனது உறவினர் ஒருவர் அந்தக் காலத்தில் பள்ளிக்குச் செல்ல புதிய சைக்கிள் ஒன்றை வாங்கினார். அந்த சைக்கிளின் பெயர் ராலே. தினமும் அதை துடைத்து, பளபளவென்று வைத்திருப்பார். அதைப் பார்த்து ரசிப்பதற்கே ஒரு கூட்டம் வரும். என்னை மட்டும் அந்தப் புதிய சைக்கிளில் டபுள்ஸ் சில சமயங்களில் ஏற்றிச் செல்வார். இன்றைய ரோல்ஸ் ராய்ஸ் காரில் போகும்போது கிடைத்த ஆனந்தம், அன்று அந்த ராலே சைக்கிளில் பின் சீட்டில் அமர்ந்து பள்ளிக்கு பயணம் செய்தபோது எனக்கு கிடைத்தது. அன்று ராலே சைக்கிள் வைத்திருப்பது என்பது இன்று ராயல் என்பீல்ட் புல்லட் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பதற்குச் சமம்.

ஒரு சக்கர தள்ளுவண்டி, இரு சக்கர தள்ளுவண்டி, செயின் இல்லாத இரு சக்கர தள்ளுவண்டி, செயின் உள்ள சைக்கிள், பெடல் இல்லாத சைக்கிள். பின் பெடல் உள்ள சைக்கிள். இப்படியாக சைக்கிள் ஜெர்மனி மற்றும் சில நாடுகளில் உருவானது பழைய விஷயம். பெடல் உள்ள முதல் சைக்கிள் 1853 -ஆம் ஆண்டில் ஜெர்மனியில் தான் உருவாக்கப்பட்டது.

சைக்கிள்களின் முழு உபயோகம் என்பது 19 -ஆம் நூற்றாண்டில் தான் உலகெங்கும் காணப்பட்டது. குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருளாகவும், சந்தோஷத்தைக் கொடுக்கும் பொருளாகவும் சைக்கிள் பயன்பட்டது. வாலிப வயதினருக்கு ஸ்டைலுக்காகவும், உல்லாசத்துக்காகவும் சைக்கிள் பயன்பட்டது. பெரியவர்களுக்கு வேலைக்குச் செல்லவும், அன்றாட காரியங்களைச் செய்யவும் பயன்பட்டது. சைக்கிள் இல்லையேல் வாழ்க்கை இல்லை என்ற ஒரு நிலையை அந்தக் காலத்தில் இந்த சைக்கிள் ஏற்படுத்தியது. அன்றாட வாழ்க்கையோடு சேர்ந்த ஒரு பொருளாக, ஒரு வாகனமாக சைக்கிள் இருந்து வந்தது.

உலகெங்கும் எஞ்சின் உள்ள மோட்டார் சைக்கிள் என்றொரு புதிய வாகனம் உபயோகத்திற்கு வந்த பிறகு, எஞ்சின் இல்லாத இரு சக்கர சைக்கிள் வாகனத்தின் உபயோகம் மெதுமெதுவாக குறைய ஆரம்பித்தது. பள்ளிக்குப் போக, கடைக்குப் போக, வேலைக்குப் போக என்று மிகமிக பயனுள்ளதாக இருந்த சைக்கிள் வாகனத்தின் உபயோகம், இப்போது ரொம்ப ரொம்ப குறைந்துவிட்டது.

பந்தய உபயோகத்திற்காகவும், சந்தோஷ சவாரிக்காகவும், பொழுது போக்குக்காகவும் இப்பொழுது சைக்கிள் வாகனம் பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் டெல்லியைச் சேர்ந்த விஷால் அவலத் என்றொரு ராணுவ அதிகாரி 2018- ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுமார் 25338 கிலோ மீட்டர் தூரத்தை  107 நாட்களில் நீண்ட தூரம் சைக்கிளில் பயணம் செய்து சாதனை செய்திருக்கிறார்.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு சமூக அமைப்பு, 20 வயதிலிருந்து 93 வயது நிரம்பிய முப்பதாயிரம் மக்களை வைத்து சுமார் 14 ஆண்டுகளாக நடத்திய ஒரு ஆய்வில், தினமும் சைக்கிள் ஓட்டுவது இருதய நோய் வராமல் நம்மை பாதுகாக்கிறது என்று அறிவித்திருக்கிறது.

சைக்கிள் ஓட்டுவதன் அருமை, பெருமை இன்றைய தலைமுறையினருக்குத் தெரிவதில்லை. தெரியவும் இல்லை. சைக்கிள் ஓட்டினால் அது தரக்குறைவு என்று நினைக்கிறார்கள். மேலை நாடுகளில் எத்தனை கார்கள் ஒரு வீட்டில் இருந்தாலும், ஒரு சைக்கிளையும் கண்டிப்பாக வைத்திருக்கிறார்கள். தினமும் உபயோகிக்கவும் செய்கிறார்கள். மற்ற காரியங்களுக்கு சைக்கிள், உடல் நலத்துக்காக சைக்கிளை எல்லோரும் உபயோகித்தே ஆக வேண்டும்.

பெரும்பாலும் நகரங்களில் சைக்கிளின் உபயோகம் மிகக் குறைந்துவிட்டாலும், கிராமங்களில் இன்றைக்கும் சைக்கிளின் உபயோகம் இருக்கத்தான் செய்கிறது. தினமும் சைக்கிள் ஓட்டிப் பழகியவர்களுக்கு, இனிமேல் நீங்கள் சைக்கிளைத் தொடக் கூடாது என்று சொன்னால், அவர்களால் இருக்க முடியாது. சைக்கிள் தினமும் உபயோகித்து வந்தால், நாம் அதற்கு அடிமை ஆகிவிடுவோம். ஒரு நாள் கூட ஓட்டாமல் இருக்க முடியாது. சைக்கிள் ஓட்டி சுகம் கண்டுவிட்டால், அப்புறம் அதிலிருந்து வெளிவர முடியாது.

அன்றாட வேலையே சைக்கிளில் தான் என்றிருப்பவர்களுக்கு, எதுவுமே சொல்லத் தேவையில்லை. தினமும் சைக்கிள் ஓட்டுவது தான் அவர்களுக்கு பலமே. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை என்கிற ஊரிலிருந்து, நெல்லை மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி என்கிற ஊர் வரை, சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு, அதிகாலையில் பறித்த பச்சைக் காய்கறிகளை சைக்கிளில் தினமும் கொண்டுவந்து, முழுவதையும் விற்றுவிட்டு, முழு ஆனந்தத்துடன், மாலையும் இரவும் சந்திக்கின்ற வேளையில் ஊருக்குத் திரும்புபவர்களை நிறைய நான் பார்த்திருக்கிறேன். அதிக தூரம் தினமும் சைக்கிள் ஓட்டுவதால் இவர்களது தேக ஆரோக்கியம் இயற்கையாகவே மிக நன்றாக இருக்கும்.

உடற்பயிற்சிக்காகவென்று சைக்கிள் ஓட்டுபவர்கள் தினமும் சுமார் 15 கிலோமீட்டர் தூரமாவது, ஓட்டுவது தேக ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அதிலும், மணிக்கு சுமார் 20 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டுவதுதான் சிறந்தது. நானும் சைக்கிள் ஓட்டுகிறேன் என்று,  ஒரு நாள் சைக்கிளை எடுத்தவுடன், மோட்டார் சைக்கிளை முந்துகிறேன் பார் என்று சொல்லி, மிக வேகமாக ஓட்டிச் சென்று, அதற்குப் பிறகு மறுநாள் எழுந்திருக்க முடியாமல் படுத்துக்கிடப்பது சரியல்ல.

தொழில் சம்பந்தமாக தினமும் சைக்கிள் ஓட்டுபவர்கள், வாரத்துக்கு சுமார் 150 கி. மீட்டரிலிருந்து 200 கி.மீ தூரம் வரை சைக்கிள் ஓட்டிவிடுவார்கள். இம்மாதிரி ஓட்டுபவர்களின் உடல் அதிக வேகத்தையும் தாங்கும். அதிக தூரத்தையும் தாங்கும். அதிக நேரத்தையும் தாங்கும்.

சைக்கிள் பந்தயத்துக்கு ஓட்டுபவர்கள் கூட, எடுத்தவுடன் மிக வேகமாக ஓட்டிவிட மாட்டார்கள். தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் வேகத்தை கூட்டுவார்கள். நீங்கள் சைக்கிள் ஓட்டினாலோ, வேறு ஏதாவது கடின உடலுழைப்பு செய்தாலோ, அல்லது உடற்பயிற்சியில் ஈடுபட்டாலோ, உங்களது உடலிலுள்ள தசைநார்கள் (குறிப்பாக கை- கால்கள்- முதுகு- வயிறு) சிறிது சேதமடையும். இது இயற்கை. சேதமடைந்த இந்த தசைநார்கள் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி பழைய நிலைக்கு மீண்டு வர, சிறிது கால அவகாசம் தேவை. மோட்டார் சைக்கிளைக் கூட நாம் சற்று அதிக தூரமும், அதிக நேரமும் ஓட்டிவிட்டால், எப்படி கை- கால் தசைநார்கள் சோர்ந்து போய்விடுமோ, அதுபோலவே சைக்கிள் ஓட்டினாலும் அதே சோர்வு, அதே வலி, உடலில் ஏற்படும். ஒருமுறை இந்த மாதிரி தசை நார்கள் சோர்வடைந்து, சேதமடைந்து பின் குணமாகி மீண்டு வந்தால் , அதே தசைகள் முதல் முறையை விட இந்தமுறை சற்று பெரிதாகவும், அதிக சக்தியுடைய தசைகளாகவும் ஆகிவிடும்.
வாரத்துக்கு ஜந்து நாள்கள் சைக்கிளில் வேலைக்கு செல்பவர்கள், சனி - ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களை இழந்த சக்தியை மீண்டும் பெற, இழந்த உடலை மீண்டும் பெற, இழந்த தசைநார்களை மீட்டெடுக்க, நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மீட்டெடுக்கும் செயலை, மீட்பு நேரம் என்று கூட சொல்லலாம். நீண்ட தூரம் சைக்கிள் ஓட்டிவிட்டு வந்தபின், இந்த மீட்பு நேரத்தைத் தாங்கக் கூடிய சக்தி நமது உடலுக்கு வேண்டும். மீட்பு சக்தி இல்லாமல், சைக்கிள் ரொம்ப நேரமும் ஓட்டக்கூடாது. ரொம்ப  தூரமும் ஓட்டக்கூடாது. மிகச் சாதாரணமாக, அதிக வேகம் இல்லாமல், அதிக தூரமும் இல்லாமல் சைக்கிள் ஓட்டினாலே, அதிக மூச்சு வாங்குகிறது, அதிக சோர்வாகி விடுகிறது என்றால், நீங்கள் உடனடியாக உங்கள் குடும்ப டாக்டரைச் சந்திப்பது நல்லது.

சைக்கிள் தினமும் ஓட்டினால் ஏற்படும் நன்மைகள்:

1. இருதய நோய் வராமல் இருதயத்தைப் பாதுகாக்கும். 2. சைக்கிள் ஓட்டும்போது கால்களிலுள்ள பெரிய தசைகள் நன்றாக சுருங்கி விரிகிறது இதனால் இருதயத்துடிப்பு அதிகமாகிறது. இதனால் ரத்த ஓட்டம் உடலெங்கும் அதிகமாகிறது. 3. இருதயத்தின் திறனை, சக்தியை அதிகப்படுத்துகிறது. 4. உடலெங்கும் உள்ள தசைகளின் சக்தியை அதிகப்படுத்துகிறது. 5. கை - கால், முதுகெலும்பு மூட்டுகளின் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது. 6). எலும்புகளை இன்னும் உறுதியாக்குகிறது. 7).உடலிலுள்ள அதிக கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. 8). வயிற்றிலுள்ள வேண்டாத, தேவையில்லாத கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. சிக்ஸ் பேக், எயிட் பேக் போன்ற எல்லா பேக்குகளும் சைக்கிள் தினமும் ஓட்டினாலே வந்து விடும். 9). உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. 10). நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 11). பக்கவாதம், அதிக ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், சர்க்கரை நோய், உடல் பருமன் போன்றவைகள் வராமல் உடலைப் பாதுகாக்கிறது. 12). ரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. 13). சுத்தமான காற்றை தினமும் சுவாசிக்க வாய்ப்பு கிடைக்கிறது. 14). இதனால் நுரையீரலின் செயல்பாடு அதிகமாகி, நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

உலகம் முழுவதும் சுமார் 200 கோடி மக்கள் தினமும் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். கார், மோட்டார் சைக்கிள் வைத்திருந்தாலும் தினமும் குறைந்தது 15 நிமிடமாவது சைக்கிள் ஓட்டுவதற்கு ஒதுக்குங்கள். சந்தோஷத்துக்காக, ஜாலிக்காக, பொழுதுபோக்குக்காக, வேலை நிமித்தத்துக்காக, கடைக்குப் போவதற்காக, பக்கத்துத் தெருவிலிருக்கும் நண்பரைப் பார்ப்பதற்காக இன்னும் பல காரியங்களுக்காக நீங்களே ஏதாவதொரு காரணத்தை ஏற்படுத்திக் கொண்டு, ஒரு ரூபாய் கூட செலவே இல்லாத தினமும் சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை இன்றே ஆரம்பியுங்கள். சைக்கிள் ஓட்டம் உங்கள் வாழ்நாள் முழுவதும் நன்றாக இருந்தால், உங்கள் ரத்த ஓட்டமும் வாழ்நாள் முழுவதும் நன்றாக ஓடும்.

தொடரும்...  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com