கவிதை பேசும்  சிற்பக்கலை!

களிப்பூட்டும் கலைவண்ணம் குடிகொண்ட கன்னல்மிகு மல்லையிலே அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி  கருவானது எப்படி அழகாய் உருவானது எப்படி?  
கவிதை பேசும்  சிற்பக்கலை!

களிப்பூட்டும் கலைவண்ணம் குடிகொண்ட கன்னல்மிகு மல்லையிலே அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி  கருவானது எப்படி அழகாய் உருவானது எப்படி?  

விசுவகர்மா என்றழைக்கப்படுகின்ற சிற்ப மரபினரது கலைத்தொழில் ஐந்து கிளைகளுக்குள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை கொல்லர், மரத்தச்சர், கற்தச்சர், உலோக வேலை மற்றும் பொற்கொல்லர் என்பனவாகும். ஆகையினாலே, இவர்கள் மனு விசுவகர்மா (இரும்பு), மய விசுவகர்மா (மரம்), சிற்பி விசுவகர்மா (கல்), துவட்டா விசுவகர்மா (உலோகம்) மற்றும் விசுவக்ஞ விசுவகர்மா (பொன்) என்று தொழிலையொட்டி காரணப் பெயர்களாலேயே அடையாளம் காணப்பட்டு வந்துள்ளனர். சிற்பமரபில் திருக்கோயில்களை வடிவமைத்து நிர்மாணிக்கின்ற கட்டடக்கலைஞர்கள் ஸ்தபதி என்றழைக்கப்படுகின்றனர். இவரே சிற்பிகளில் தலைமைச் சிற்பியாகவும் விளங்குவார். 

ஸ்தபதி எனும்போது ஒரு கோயில் கட்டுமானத்திற்குரிய அனைத்தையும் அதாவது கோயிலுக்கு இடம் தேர்வு செய்தல், திக் நிர்ணயம் செய்தல், சிற்ப இலக்கணங்களுக்கு ஏற்றவாறு வரைபடங்களைத் தயாரித்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் கால்கோளிட்டு (அஸ்திவாரமிட்டு) அக்கோயிலை அளவியலுக்காகவும் அழகியலுக்காகவும் எழுப்புதல், அக்கோயிலுக்குரிய மூலபேரம், பரிவாரங்களை உரிய அளவுகளுடன் உயிர்ப்பு நிறைந்த இறைவடிவங்களாகக் கருவறையில் நிறுவுதல், செப்புக் கலசங்களைப் படியவைத்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் முறையான பயிற்சியாலும் அனுபவத்தாலும் கற்றுத்தேர்ந்தவர்கள் இவர்கள்.

மாமன்னர்களின் கலைமடியில் கண்துயிலாப் படைப்புகளைத் தந்த சிற்பிகளின் நலமோ கேட்பாரற்றும்அவர்தம் கலைப்படைப்புகளைப் போன்றுகவனிப்பாரன்றி துவண்டு போயிருந்தனர். 

சுதந்திரத்திற்குப் பின்னர் பிரதமர் நேருவின் கவனத்திற்கு நலிவுற்ற கைவினைக்கலைகள், சிற்பிகளின் வாழ்வாதாரம் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியக் கைத்தொழில் வாரியத்தின் இயக்குநர் கமலாதேவி சட்டோபாத்தியாயா   நியமிக்கப்பட்டார்.

நாடெங்கினும் பராமரிப்பின்றிக் காணப்படும் பிரம்மாண்டமான கலைக்கோயில்கள், சிற்பங்கள், நலிந்து காணப்படும் கைவினைஞர் சமுதாயம் ஆகியவற்றைச் சீரமைக்கும் பொருட்டு கமலாதேவி அம்மையார் குழு மாநிலம் மாநிலமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அவ்வம்மையார் தமிழ்நாட்டிற்கு வந்தபோது அப்போதைய முதல்வர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, காஞ்சி மகாப்பெரியவர் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் ஆகியோருடன் தமிழருடைய சிற்பக்கலை மறுமலர்ச்சி பற்றிய விரிவான கலந்தாய்வினை நடத்தியுள்ளார். அதன்பயனாய்த் தமிழ்நாட்டில் சிற்பக்கலைப் பயிற்சி நிலையம் ஒன்றைத் தொடங்க வழிவகுக்கப்பட்டது.

அப்போது,  காந்தியடிகளுக்காக  முதல்வர் ராஜாஜியின்  நேரடிப் பார்வையில் மணிமண்டபம் ஒன்று கிண்டியில் எழுப்பப்பட்டு வந்தது. அம் மணிமண்டபத்தினைக் வடிவமைத்து எழுப்பித் தந்தவர் தஞ்சையைச் சேர்ந்த சிற்பக் கலாசாகரம்  ம.வைத்யநாத ஸ்தபதி .  அன்னாரது அற்புதச் சாஸ்திர ஞானம், சிற்பக்கலை ஆளுமை  போன்றவற்றைப் போற்றிய முன்னாள் முதல்வரும், காஞ்சி மகாப்பெரியவரும் அவரைத் துணைக்கொண்டு தமிழகத்தில் நலிவுற்றுக் காணப்படுகின்ற சிற்பக்களஞ்சியங்களை மீட்டெடுத்துச் சீரமைத்திடலாம்  என்ற முடிவிற்கு வந்தனர்.

சிற்பக்கலையானது தொன்றுதொட்டுத் தந்தை மகனுக்கும், மகன் அவன் பிள்ளைக்கும் என்று வாழையடி வாழையாகவே பயிற்றுவிக்கப்பட்டு வருகின்ற தொழில் ஆகும். இந்நிலையில், குருகுலத்தை ஒத்தவொரு பயிற்சி நிலையம் வாயிலாகச் சிற்பக்கலையை முறையாகப் பயிற்றுவித்தால், பொலிவிழந்து காணப்படுகின்ற எண்ணிலடங்கா திருக்கோயில்களையும் சிற்பங்களையும் பேணிப் பாதுகாக்கலாம் என்ற கருத்தினை ம.வைத்யநாத ஸ்தபதி  அரசிடம் எடுத்து வைத்தார்.  

இதை ஏற்றுக்கொண்ட அரசு உடனடியாகக் கலைக்கட்டுமானங்கள் நிறைந்த மாமல்லபுரத்தில் பயிற்சி நிலையம் அமைத்திடுவதற்கு ஆணை பிறப்பித்து அதற்கான இடத்தையும் வழங்கியது. இப்பயிற்சி நிலையத்தில் சிற்பக்கலை பற்றிய பாடங்களைக் கற்பித்தல்  மட்டுமின்றிக் கருங்கல் சிற்ப வேலை, மரச்சிற்ப வேலை, சுதைச் சிற்ப வேலை, உலோகச்சிற்ப வேலை முதலியவற்றினைக் கைத்தொழிற் பயிற்சிகளாகவும் தரவேண்டும் என வரையறையும் செய்யப்பட்டது. 

இவற்றிற்குரிய பாடத்திட்டங்களைத் ஸ்தபதியுடன் சேர்ந்து அவருடைய மூத்த மைந்தர் பத்மபூஷண். கலைமாமணி டாக்டர்.வை.கணபதி ஸ்தபதி மிகவும் எளிமையாகவும் நேர்த்தியாகவும் உருவாக்கித் தந்தார்.

அதற்காகச் சிற்ப சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்டுள்ள ரூபத்யான இலட்சணம், பிரதிமா இலட்சணம், பிராசாத இலட்சணம், புனருத்தாரன இலட்சணம் போன்றவற்றைப் பாடங்களாக்கிக் கற்பிக்கவும், அதற்குத் தகுந்தாற்போன்ற சித்திரப் பயிற்சியும், கைத்தொழிற் பயிற்சியும் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டிருந்தன.

அதன்படி, 1957-ஆம் ஆண்டு தமிழக அரசின் முழு ஆதரவுடன் மாமல்லபுரத்தில் சிற்பக்கலையைப் பயில்வதில் ஈடுபாடு மிகுந்த பத்து மாணவர்களுக்கு மரபுவழியாகச் சிற்பக்கலையில் நன்கு அனுபவம் வாய்ந்த இரண்டு ஆசிரியர்களுடன் ம.வைத்யநாத ஸ்தபதி  தலைமையில் "கோயில் கட்டட - சிற்பக்கலைப் பயிற்சி நிலையம்' நிறுவப்பட்டது. 

இதுவே ஆசியாவின் முதல் மரபுக் கட்டட மற்றும் சிற்பக்கலைக்கென உண்டான பயிற்சி நிலையம் என்பது மிகவும் பெருமைக்குரியது. இச்சிற்பக்கலைப் பயிற்சி நிலையமானது மெட்ராஸ் தொழில் மற்றும் வர்த்தகத்துறையின் கீழ் இயங்கி வந்தது. 

இதன் வாயிலாக, சிற்பப் பாரம்பரியத்தின்   தனித்துவமான    கைவினைத்திறன்,  மரபுத் தொழில்நுட்பம் ஆகியவற்றை மீட்டெடுப்பதற்கும் தமிழகப் புராதன கலைக்களஞ்சியங்களைச் சீரமைத்துப் பாதுகாப்பதற்குமான  அரசின் உயரிய நோக்கம் நிறைவேறியது.

ம.வைத்யநாத ஸ்தபதிக்கு பிறகு இப்பயிற்சி நிலையத்தின் அடுத்த கண்காணிப்பாளராக பத்மபூஷண்.டாக்டர்.வை.கணபதி ஸ்தபதியை தமிழக அரசு தேர்ந்தெடுத்தது. தந்தையைத் தொடர்ந்து டாக்டர். கணபதி ஸ்தபதி  மாணவர்களின் மேன்மை கருதி அப்போதைய பாடத்திட்டங்களுடன் இக்கலைப் படிப்புக்கான தேவையைக் கருதி ஆங்கிலம், இயற்பியல், பொறியியல் போன்ற இதர துணைப்பாடங்களையும் சேர்த்திருக்கிறார்.

மேலும், சுற்றுலாத் தலத்திற்குப் பெயர்பெற்ற மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக்கலைப் பயிற்சி நிலையம் வாயிலாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சொந்தமாகவே சிற்பப் பட்டறைகளை வைத்துப் பலவகையான சிற்பத்தொகுதிகளை வடிக்கத் தொடங்கினர். 

இப்பட்டறைகள் சுற்றுலா வாசிகளை வெகுவாக ஈர்த்ததுடன் அங்கே விற்பனை செய்யப்பட்ட கலைப்பொருட்களையும் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். 

மேலும், இப்பட்டறைகளில் இருந்துதான் பல்வேறு கோயில் திருப்பணிகளுக்கு வேண்டிய சிற்பங்கள் எடுத்துச் செல்லப்பட்டன . இது மாமல்லபுரத்தில் நாம் பார்க்கின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பப்பட்டறைகளின் தோற்றமும் வளர்ச்சியும் இதுவே ஆகும்.

இவ்வாறு, சிற்பக்கலைப் பயிற்சி நிலையத்தின் முன்னேற்றத் திறனைப் பாராட்டிய தமிழக அரசு இந்நிலையத்தைத் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி இயக்குநரகத்தின் கீழ் "அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி' என்று அறிவித்துச் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைத்தது.

இச்சிற்பக்கலைக் கல்லூரியின் நோக்கமானது சிறந்த சிற்பிகளையும் ஸ்தபதிகளையும் உருவாக்குவதாகும். அதற்குச் சான்றாக இக்கல்லூரியில் பயின்ற மாணவர்களைக் கொண்டு இக்கல்லூரியின் முதல்வர் டாக்டர்.வை.கணபதி ஸ்தபதி  வள்ளுவர் கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், மதுரை காமராஜர் கல்லூரியின் நுழைவுத் தோரணவாயில், அண்ணாநகர் அலங்கார நுழைவுவாயில்கள், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நூலகம், நிர்வாகக் கட்டடங்கள் போன்ற  எழில்மிகு படைப்புகளின் வாயிலாகவே தமிழ்நாட்டின் கலைநுணுக்கங்கள் உலகம் முழுவதும் பரவலாயிற்று.

மேற்கண்ட நிலையில், மரபுவழி மற்றும் பட்டதாரி சிற்பிகள், ஸ்தபதிகள் என்று இவர்களுடைய தனித்துவத்தை ஆழ்ந்து பார்க்கின் - மரபுவழிக் குலத்தொழில் பின்னணியிலிருந்தோ அல்லது குருமுகமாகவோ பயிற்றுவிக்கப்பட்டவர்களை மரபுவழி வந்தோர் எனவும் - மரபுவழியினரால் உருவாக்கப்பட்ட சிற்பக்கலைக்கல்லூரியின் வாயிலாகப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் பட்டயம்/பட்டதாரி ஸ்தபதியாகவும் அடையாளம் காணலாம். 

இன்று பெரும்பான்மையான மரபுவழிவந்த ஸ்தபதிகளும் பட்டம் பெற்ற ஸ்தபதிகளும் இந்தியாவில் மட்டுமல்லாது உலகெங்கும் தத்தமது கலைசெறிந்த படைப்புகளின் வழியாகத் தமிழர்தம் கலையைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்  என்பது உண்மை.

இன்னும் சொல்ல வேண்டுமானால், மானசாரம், மயமதம் போன்ற சிற்பசாஸ்திரங்களில் ஸ்தபதிகளுக்குரிய இலக்கணங்கள், அவர்தம் தகுதிகள், குணநலன்கள் போன்றவை பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளன. 

ஆகவே, இக்கலையினை மரபு வாயிலாகவோ அல்லது சிற்பக்கலைக் கல்லூரியின் மூலமாகவோ முறையாகப் பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்தம் கலைத்தொழில் மீதான  அணுகுமுறையும், சிற்பசாஸ்திர இலக்கண அறிவும், தொழில்நுட்பத் திறனும், பற்பல திருப்பணிகளின்போது அவர்தாம் பெற்ற அனுபவறிவும் சிறந்த ஸ்தபதிகளுக்கான அடையாளத்தைக் கொடுக்கின்றது.

சிற்பக்கலைக்கு ஆணிவேராக விளங்குவது அளவியல், அழகியல், சிற்பயிலக்கணக் கோட்பாடுகள் என மூன்று கூறுகளாகும். இவை ஒருங்கிணைத்து அமைக்கப்படுகின்ற திருக்கோயில் கட்டமைப்பில் இயல்பாகவே அருள்வீச்சுகள் வெளிப்படுவதாக ஆகம, வாஸ்து, சிற்ப சாஸ்திர நூல்கள் வலியுறுத்திச் சொல்கின்றன. 

ஆகையால், பழங்கோயில்களைப் புதுப்பிக்கும் போது ஏற்கெனவே அங்கு நிலவியுள்ள அருள்வீச்சுகளுக்கும் அவற்றினுள் குடிகொண்டுள்ள இறைத்திருமேனிகளின் உயிர்ப்புத்தன்மைக்கும் எவ்வகைக் களங்கமும் ஊறும் விளையாமல் புதுப்பித்தலே நன்மைகளைப் பயக்கும் என்றும் சாஸ்திர ஏடுகள் குறிப்பிடுகின்றன.

இன்னும் சொல்ல வேண்டுமாயின், இன்று நடத்தப்படுகின்ற திருக்கோயில் புதுப்பித்தல் பணிகளில் மரபுவழியாகப் பட்டறிவு வாய்க்கப்பெற்ற ஸ்தபதிகள் அல்லது சில ஆண்டுகளாவது பழங்கோயில் புதுப்பித்தல் பணிகளில் பட்டறிவு வாய்ந்த பட்டதாரி ஸ்தபதிகளாகவோ இருப்பார்களேயானால் அக்கோயில்களைச் சாத்திர நெறிமுறைகளிலிருந்து சிறிதும் பிறழ்ந்திடாமல் செப்பனிட்டுச் சீரமைத்திடலாம். 

அவ்வாறு சீரமைக்கப்பட்ட திருக்கோயில்களையும் சிற்பங்களையும் தொடர்ந்து பராமரித்துப் பேணிக்காப்பதன் மூலம் அங்கே தொடர்ந்து நிலவுகின்ற நல்ல அருள் வீச்சுகள் நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மைகளை 
வாரி வழங்கிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com