வரலாறு கூறும் சுடுமண் முத்திரைகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிகளில் அகரம் கிராமத்தில் நடைபெற்ற ஆய்வில் அழகிய சுடுமண் முத்திரை கிடைத்த செய்தியைப் பார்த்தோம்.
வரலாறு கூறும் சுடுமண் முத்திரைகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிகளில் அகரம் கிராமத்தில் நடைபெற்ற ஆய்வில் அழகிய சுடுமண் முத்திரை கிடைத்த செய்தியைப் பார்த்தோம். இம்முத்திரை உடுக்கை போன்ற அமைப்பில் உருளை வடிவில் காணப்படுகிறது. முத்திரையின் கீழ் பகுதியில் தடிமனான வட்டவடிவ அலங்கார வேலைப்பாடு காணப்படுகிறது. அதில் சிறுசிறு புள்ளிகள் குழி வடிவாக உள்ளன.

முத்திரையின் தலைப்பகுதி வழவழப்பாக பிடித்துக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.  இம்முத்திரை கையால் செய்யப்பட்டதாகும். இதன் உயரம் 2.75 செ.மீ. கீழ்ப்பகுதி 2.8 செ.மீ. இதன் எடை 24 கிராம் ஆகும் என்பது செய்திகளின் மூலம் அறிய முடிகிறது.  இதேபோன்ற சுடுமண் முத்திரை இந்த கீழடி அகழாய்வில் இதற்கு முன்பும் கிடைத்துள்ளது. பிடித்துக் கொள்ள ஏதுவாக மேற்புறமும் கீழ்ப்பகுதி தட்டையாக வட்ட வடிவில் அமைந்துள்ளது. அதில் நடுவில் ஒரு குழியும் அதனைச் சுற்றி சிறுசிறு புள்ளிகள் வட்ட வடிவில் உள்ளன.  

அதனைத் தொடர்ந்து சற்று வெளிப்புறம் வட்ட வடிவில் வரிசையாக புள்ளிகளும் இடைவெளிவிட்டு நீள வட்ட வடிவில் நான்கு புள்ளிகளும் உள்ளன. முத்திரையின் விளிம்பிலும் சிறு சிறு புள்ளிகளின் வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. இதன் பயன்பாட்டினை அரிய முடியாவிடினும் ஓரளவு ஊகிக்க முடிகிறது. கீழடி அகழ்வாய்வில் பல கட்டடப்பகுதிகள், நீர் செல்லும் குழாய் அமைப்புகள், செங்கற்களால் ஆன தொட்டிகள் போன்றவை ஆய்வில் தென்பட்டதால் இங்கே துணிகளை சாயம் போடுதல், வடிவமைப்புகளை செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று இருக்கலாம் துணிகளின் மீது வடிவமைப்பு செய்ய இத்தகைய சுடுமண் முத்திரைகள் பயன்பட்டிருக்கலாம் எனக் கருத முடிகிறது.

நமது சங்க இலக்கியங்களிலும் முத்திரை இடம்பெற்றதை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சங்ககாலத் துறை முகப்பட்டினமான காவிரிப்பூம்பட்டினத்தில் மதில் சுவரில் இருந்த கதவுகளில் (புலிப்பொறி போர்க் கதவின் - பட்டினப்பாலை 40) புலி முத்திரை இடப்பட்டிருந்தது. பூம்புகார் துறைமுகத்தில் இருந்த பொருள்கள் ஏற்றுமதி இறக்குமதி ஆனது பொருள்களின் மீது புலி முத்திரை இலச்சினை பொறிக்கப்பட்ட (பட்டினப்பாலை 131 - 137) கூறுகிறது.

புலி பொறித்து புறம் போக்கி 
மதி நிறைந்த மலி மண்டபம் 
பொதி மூடைப் போர் ஏறி ...

சோழன் நலங்கிள்ளி தன் புலி இலச்சினையை தனது எதிரிகளின் கோட்டைக் கதவில் பொறித்தான் என புறநானூறு (புறம் - 33 - 39) கூறுகிறது. மேலும் எதிரிகளின் மலையின் மீது புலியும் மீண்டும் ஒன்றாக பொறிக்கப்பட வேண்டும் புறநானூறு (புறம் - 58) குறிப்பிடுகிறது. வில் - கயல் - புலி மூன்றும் இலச்சினையாகப் பொறிப்பது சங்க காலத்தில் நிலவி வந்த மரபினை சிலம்பும் எடுத்துக்கூறுகிறது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற பல அகழாய்வுகளில் வரலாற்றுச் சிறப்பினை எடுத்துக் கூறும் வகையில் முத்திரைகள் கிடைத்துள்ளன. கோவை மாவட்டத்தில் பேரூர் அகழ்வாய்வில் மற்றும் திருப்பூர் பகுதியில் மேற்கண்ட ஆய்வில் பானை ஓட்டில் சேரமன்னர்களின் வில், விளக்குகள் போன்றவற்றுடன் வட்ட வடிவ பானை ஓடுகள் கிடைத்துள்ளன. கோயம்புத்தூர் அருகே போளுவாம்பட்டி என்ற ஊரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் 6-ஆம்,  7-ஆம் நூற்றாண்டு கால கிரந்த எழுத்துக்கள் உடன் சுடுமண் முத்திரையும் அதன் பின்புறம் பட்டையாக கயிறு கட்டியதற்கான அடையாளங்கள் உள்ளன. ஏற்றுமதியாகும் மூட்டையின் மீது கயிற்றால் பிணைத்த கட்டு  அதன் மீது களிமண் வைத்து முத்திரை இடப்பட்டு இருக்கவேண்டும்.

இதேபோன்று சென்னைக்கு அருகில் குன்றத்தூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியிலும் கிரந்த எழுத்துக்களுடன் களிமண் முத்திரை கிடைத்துள்ளது. அரிக்கமேடு, காஞ்சிபுரம்,  அழகன்குளம் போன்ற இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளிலும் முத்திரைகள் கிடைத்துள்ளன. விழுப்புரம் அருகே கோப்பெருஞ்சிங்கனின் தலைநகராக விளங்கிய சேந்தமங்கலத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில், உலோகத்தால், கையால் பிடித்துக் கொள்ளும் வகையில் அமைந்துள்ள பாண்டிய அரசர் இலச்சினையான இரண்டு மீன்களுடன் முத்திரை கிடைத்துள்ளன. முத்திரை இடுவதற்கு ஏதுவாக இலச்சினை சற்று குழிவாக காணப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சி செய்த மன்னர்களின் இலச்சினையுடன் கூடிய கல்வெட்டுகள், செப்பேடுகள், மண்டபத்தூண்கள், கோபுரங்கள் போன்றவை காணப்படுகின்றன. அரச முத்திரைகள் என்பது ஒரு வரலாற்று சான்றாக திகழ்கிறது. அப்பகுதியில் ஆண்ட மன்னர்கள் மற்ற அரசர்களோடு கொண்டிருந்த உறவுகள், வெளியிட்ட காசுகள் பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது. 

பாணகவி எழுதிய ஹர்ஷ சரித்திரத்திலும் அரசனுடைய முத்திரை பற்றிய சம்பவம் காணப்படுகிறது. கெளட தேசத்தின் மீது படையெடுத்துக் கிளம்பிய ஹர்ஷ மன்னன் நதிக்கரையில் படைகளுடன் இருந்தார். அப்பொழுது அந்த ஊர் அதிகாரி அன்றைய தினம் செய்யவேண்டிய செயல்களுக்கு ஆணை வேண்டி உத்தரவுக்கு முத்திரையை அளிக்க பொன் முத்திரை ஒன்றையும் கொடுத்து அதனை பொறிப்பதற்காக களிமண்ணையும் நீட்டினார். அரசன் வாங்கிய முத்திரை தவறிக் கீழே விழுந்து நிலத்தில் பதிந்தது. அதிகாரிகள் கவலையடைய அரசனோ இவ்வுலகம் முழுவதும் தன் ஒரே ஆணைக்கு அடங்கியதாகும் என நினைத்து மகிழ்ந்தான் என்ற செய்தி காணப்படுகிறது. 

தொன்மைச் சிறப்புமிக்க கீழடி - அகரம் அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கும் சுடுமண் - முத்திரைகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது. தொடர்ந்து நடைபெறும் அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கும் தொன்மைச் சான்றுகள் முத்திரைகளின் பயன்பாட்டை அறிய உதவும். சுடுமண் முத்திரைகள் தமிழகத்தின் வரலாற்றுக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்றால் மிகை இல்லை.


தொல்லியல் துறை (ஓய்வு) சென்னை  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com