மங்காப் புகழ்பெற்ற 'மாங்குடி'

தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமையை எடுத்துக் கூறுவது சங்க இலக்கியங்கள் ஆகும்.
மங்காப் புகழ்பெற்ற 'மாங்குடி'


தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமையை எடுத்துக் கூறுவது சங்க இலக்கியங்கள் ஆகும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, தொல்காப்பியம் என்னும் நூல்கள் பண்டைய தமிழ் மக்களின் பண்பாட்டுச் சிறப்புகளை எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளன. பத்துப்பாட்டில் இடம்பெறும் நெடுநல்வாடையும், மதுரைக்காஞ்சியும் பண்டையத் தமிழர்களின் வீரம், கொடை, சமுதாய நிலை பற்றி அறியும் வரலாற்றுச் சான்றுகளாக விளங்குன்றன. மேலும் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் ஆட்சி சிறப்பு மற்றும் அரசு முறை பற்றியும் எடுத்துக் கூறுகின்றது.

மதுரைக்காஞ்சியை இயற்றியவர் புலவர் மாங்குடி மருதனார் ஆவார். இவர் மாங்குடி கிழார், மதுரைக்காஞ்சிப்புலவன் எனவும் அழைக்கப்படுகிறார். பழம் பாடல் ஒன்றில் "பெருகுவள மதுரைக்காஞ்சி" எனச் சிறப்பிக்கப்படுகிறது. மாங்குடி மருதனார் பாண்டியன் நெடுஞ்செழியனின் அவையில் தலைமைப் புலவராக இருந்தார் என புறநானூறு (புறம்; : 72 பாடல்) குறிப்பிடுகிறது. மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவனாக, மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சிறப்பிக்கப்படுவதை காணலாம்.

மதுரை நகரம் எவ்வாறு இருந்தது அதன் அமைப்பு நடைபெற்ற விழாக்கள் போன்ற பல்வேறு செய்திகள் மதுரைக்காஞ்சியில் காணப்படுகின்றன. வணிக நகரங்களான கொற்கை, நெல்லூர் (அழகன்குளம்), அங்காடிகள், பெளத்த, சமணப்பள்ளி போன்ற வழிபாட்டுத் தலங்கள் என பல செய்திகளை அளிப்பதால் மதுரையின் வரலாற்று பெருமையை அறிந்து கொள்வதற்கு ஒரு முக்கியமானச் சான்றாக மதுரைக்காஞ்சி விளங்குகிறது.

மாங்குடி

மதுரைக்காஞ்சியை இயற்றிய மாங்குடி மருதனார் தோன்றிய ஊர் என்ற சிறப்புடன் "மாங்குடி' என்ற ஊர்;திருநெல்வேலி மாவட்டத்தில், சங்கரன்கோவில் வட்டத்தில், ராஜபாளையம் அருகே அமைந்துள்ளது. 

தேவி ஆறு என்ற சிறிய ஆற்றின் வடகரையில் இவ்வூர் அமைந்துள்ளது. இப்பகுதியில் மேற்கொண்ட தொல்லியல் மேற்பரப்பின் ஆய்வில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை 2001 - 2002 ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சியை இங்கே மேற்கொண்டது. 

இந்த ஆய்வில் மாங்குடியின் பெருமைக்குச் சான்றாக பல தொல்பொருள்கள் கிடைத்தன. மேலும் புத்தூர், புனல்வேலி, சேத்தூர், தேவதானம், தளவாய்புரம், ராஜபாளையம், முத்துக்குடி,சோழபுரம், கரிவலம் வந்தநல்லூர், தென்மலை, அருகன்குளம் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்கள் மாங்குடியைச் சுற்றி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மாங்குடியில் அகழாய்வு மேற்கொள்ளும் முன் இவ்வூரைச் சுற்றியுள்ள பல இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புத்தூர், மனத்தேரி போன்ற ஊர்களில் 10000 ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால கருவிகள் கிடைத்தன. 

சங்க காலத்திற்கு முன்னதாக விளங்கும் இரும்புக் காலத்தைச் சேர்ந்த கருப்பு சிவப்பு பானை ஓடுகள் போன்றவை கிடைத்தன. மேலும் இவ்வூர் வணிகப்பெருவழியில் சிறந்து இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன. பாண்டிய நாட்டுத் தலைநகரிலிருந்து சேரநாட்டுக்கு செல்லும் வழியில் வாசுதேவநல்லூர்,  கடையநல்லூர் போன்ற ஊர்கள் அமைந்துள்ளன. 

மாங்குடி அருகே உள்ள கரிவலம் வந்த நல்லூர்,  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் நத்தம்பட்டி என்ற ஊர்களில் கிடைத்த ரோமானிய காசுகள் அயல்நாட்டு வாணிகத்தின் தொடர்பினை எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளன.

மாங்குடியில் "லிங்கத்திடல்" என்ற பகுதியில் மத்திய வரலாற்றுக் காலத்தை சேர்ந்த பானை ஓடுகள், கூரை ஓடுகள், காசுகள், சீன நாட்டு பானை ஓடுகள் போன்றவை சேகரிக்கப்பட்டன. மேலும் இப்பகுதியில் சிவன் கோயில் ஒன்று இருந்து அழிந்ததற்கான சான்றுகளாக விநாயகர், துர்க்கை, காளி, படைவீரர்கள் தங்கும் (12ஆவது இடம் என்ற பொருள் கொண்ட) கல்வெட்டு போன்றவை ஆய்வில் காணப்பட்டன. இடிந்துபோன கோயிலிலிருந்த கல்வெட்டுகள் மூலம் இப்பகுதியில்  தடுப்பணைகள் வைத்து கட்டப்பட்டுள்ளதையும் பார்க்க முடிந்தது.

மேலும் தொடர்ச்சியாக 16 - 17-ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதி நாயக்க அரசர்கள்,  தென்காசிப் பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்தன என்பதையும் அறிய முடிந்தது. தொல்லியல் மேற்பரப்பு ஆய்வுகள் முடிந்த பின்னர் மாங்குடி கிராமத்தின் ஒரு பகுதியாக விளங்கும், நாயக்கர் புஞ்சை, லிங்கத்திடல் போன்ற இடங்களில், சற்று மேடான பகுதியில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள உயரமான இப்பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட அகழாய்வு குழிகள் இடப்பட்டன.

மனித வரலாற்றில் பழைய கற்காலத்திற்கு பின்னர் வருவது நுண்கற்காலம் ஆகும். இவ்வூரின் தொன்மை வரலாறு நுண்கற்காலத்தில் இருந்து துவங்குகிறது. தமிழகத்தின் தென்பகுதியில் தேரிக்காடு எனப்படும் பகுதி
களில் அதிக அளவில் நுண்கற்காலக் கருவிகள் கிடைக்கின்றன. 

இம்மாவட்டத்தில் திருத்தங்கல் என்ற ஊரில் தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் நுண்கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கும் மேலாக இரும்புக்காலம் எனப்படும் பெருங்கற்காலப் பண்பாட்டின் கருப்பு சிவப்பு பானை ஓடுகள்,  குறியீடு உள்ள பானை ஓடுகள்,  சிவப்பு பூச்சு பூசப்பட்ட பானை ஓடுகள்,  கருப்பு நிற பானை ஓடுகள் போன்றவை கிடைத்தன. 

மேலும் சுடுமண் பொம்மைகள் விளக்குகள் நூல் நூற்கும் தக்களிகள், மணிகள், குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள், போன்றவை கிடைத்தன. இரும்பினாலான கத்தி, செம்பினால் ஆன ஊசி போன்ற பொருட்களும் ஆய்வில் கிடைத்தன. மக்கள் சிறப்பாக இங்கே வாழ்ந்ததற்கான அடையாளமாக இவை விளங்குகின்றன. மேலும் இவ்வூரில் நடைபெற்ற வேளாண்மையில் பயிரிடப்பட்ட தானியங்கள் பற்றிய குறிப்புகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

மாங்குடி அகழ்வாய்வு ஒரு தனிச்சிறப்புடன் விளங்குகிறது. சுமார் 10000 ஆண்டுகளுக்கு முந்தைய நுண்கற்காலப் பண்பாட்டுடன் தொடங்கி பெருங்கற்காலம், சங்ககாலம், மத்திய வரலாற்றுக் காலம் என தொடர்ச்சியாக இப்பகுதியில் மனித சமுதாயம் சிறப்பாக வாழ்ந்ததற்கான சான்றுகளை அகழ்வாராய்ச்சி வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற் கொண்டால் மேலும் பல வரலாற்றுச் சான்றுகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. 


நன்றி : தமிழகத் தொல்லியல் துறை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com