பண்டைய கால வெள்ளத் தடுப்பு முறைகள்

இயற்கை சக்தி எல்லையற்றது.  ஆற்றில் வரும் வெள்ளத்தால் பல நகரங்கள் அழிவுற்றன  என்று வரலாறுகள் கூறுகின்றன.  
பண்டைய கால வெள்ளத் தடுப்பு முறைகள்

இயற்கை சக்தி எல்லையற்றது. ஆற்றில் வரும் வெள்ளத்தால் பல நகரங்கள் அழிவுற்றன என்று வரலாறுகள் கூறுகின்றன. இன்றும் இத்தகைய நிகழ்வை நடக்கக் காண்கிறோம். வெள்ளத்தால் சிந்து நதிக்கரையில் இந்த ஹரப்பா மொஹஞ்சதாரோ நகரங்கள் அழிந்தன என்று அகழ்வாய்வினால் தெரியவந்துள்ளது. இவ்வாறு வெள்ளங்கள் ஏற்பட்டதைப்பற்றியும் அதனைத் தடுக்க எடுக்கப் பெற்ற முயற்சிகளைப் பற்றியும் கல்வெட்டுக்கள் கூறும் சில செய்திகளை காண்போம்.

பண்டைய சோழ மன்னர்களின் உள்நாட்டு தலைநகரமாக விளங்கியது உறையூர். உறையூர் அழிந்ததற்கு காரணம் பல வகையாகக் கூறப்படுகின்றன. ஆனால் உண்மையில் நடந்தது என்ன? உறையூரில் அகழ்வாராய்ச்சி நடந்த பொழுது குழிகளில் மணலும் களிமண்ணும் அடுக்கடுக்காக அடுத்தடுத்து காணப்பட்டன. அவற்றினிடையே சிறிதும் பெரிதுமான கருங்கற்கள் புதைந்திருந்தன. ஒரு பெரிய வெள்ளப்பெருக்கினால் இவ்வாறு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதே அது எடுத்துக்காட்டியது. அகழ்வாராய்ச்சிக் கணிப்புப்படி வெள்ளம் ஏற்பட்ட காலம் கி.பி 9 முதல் 10 ஆம் நூற்றாண்டாகும். இதை மெய்ப்பிக்கும் வகையில் உறையூருக்கு அருகில் உள்ள அல்லூர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு ஒரு செய்தியை நமக்குத் தருகிறது.

காவிரி வெள்ளத்தால் அல்லூர் கோயில் நிலங்கள் அழிந்தன என்று கூறுகின்றது. உறையூரிலிருந்து அல்லூர் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இவ்வெள்ளம் முதலாம் பராந்தகச் சோழனுடைய 37-ஆவது ஆட்சி ஆண்டில் ஏற்பட்டதாக கூறுகிறது. ஆகவே உறையூர் கி.பி பத்தாம் நூற்றாண்டில் காவிரி வெள்ளத்தால் அழிந்தது என்ற உண்மை விளங்குகிறது.

விக்கிரமச் சோழனது 6- ஆம் ஆட்சி ஆண்டில் வெள்ளம் ஏற்பட்டு ஊர் அழிந்ததாக வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டு கூறுகின்றது.

பாலாற்றில் வெள்ளம் வந்து வண்டல் படிந்து நிலங்கள் செப்பனிட 12 கோல் நிலம் கூலியாக அளிக்கப்பட்டதாகத் திருக்கோயில் கல்வெட்டு கூறுகின்றது.

ஆற்றில் வெள்ளம் வரும்போது அதிகமாக வரும் நீரை ஆற்றின் கரையிலிருந்து சிறு கால்வாய்களின் மூலம் கொண்டு சென்று நிலங்களுக்கு நீர் பாய்ச்சும் முறை இருந்து வந்திருக்கிறது. இந்த அமைப்பிற்கு வெள்ளைக்கால் என்ற பெயர். இந்த அமைப்பின் மூலம் ஆற்றில் வரும் அதிகப்படியான நீர் சென்று விடுவதால் கரை உடையாது. அதிகப்படியான நீரையும் நிலங்களுக்கு பயன்படுத்தலாம். பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் ஏக தீர மங்கலத்தைச் சார்ந்த அந்தணர்களுக்கு வேகவதியாற்றிலும், பாலாற்றிலும் வெள்ளைக் கால்களை அமைத்து அதன் மூலம் நிலங்களுக்கு நீரைப் பாய்ச்சும் உரிமை அளித்ததாக ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது.

சந்திரமெளலி பேராற்றில் வந்த வெள்ளத்தால் தண்ணீர் கோயிலின் அருகே சாலை வரையிலும் வந்து பெருக்கெடுத்து ஓடியது. இதைக்கண்ட திருமறைக்காடுடையான் என்பவன் வெள்ளநீரை வடியச் செய்வதற்கும், ஆற்றில் வெள்ளத்தால் ஊருக்கு ஏற்படும் துன்பம் மீண்டும் நடக்காமல் இருப்பதற்கும் ஆற்றின் போக்கையே மாற்றினான்.

ஆறு முன்பு ஒடிக்கொண்டிருந்த வரியும் அதன் அருகில் இருந்த கோயிலின் சில நிலங்களும் ஊரைச்சுற்றி வரும் இரண்டாவது சாலையாக மாற்றப்பட்டது. அச் சாலை திருமறைக்காடுடையன் என பெயரிட்டு அழைக்கப்பட்டது. அவ்வாறு சாலையாகக் கோயில் நிலங்கள் மாற்றப்பட்டுவிட்டதால் கோயிலுக்கு இரண்டு வேலி நிலம் தானமாக அளித்தான் . வெள்ளத்தைத் தடுக்க எடுத்த முயற்சியைப் பற்றி ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் எட்டாம் ஆண்டைய திருக்குவளைத் தியாகராஜ சுவாமி கோயில் கல்வெட்டு கூறுகின்றது.

மூன்றாம் ராஜ ராஜனின் திருமழபாடி கல்வெட்டில் எதிரிலிச் சோழ மூவேந்த வேளான் என்பவன் இவ்வூருக்கு செய்த நன்மைகள் பற்றி கூறப்படுகின்றது.

மேற்கண்ட கல்வெட்டு வரிகளால் இவ்வூருக்குக் கொள்ளிட ஆற்றின் வெள்ளத்தால் துன்பம் உண்டாக்கி இருக்கிறது என்பதை அறியலாம். கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ளது திருமழபாடி. இவ்வாறு சேதம் உண்டாகாமல் தடுக்க நாட்டின் தெற்கு பகுதியில் இருந்த நிலத்தை கரை அமைத்து ஊரை காப்பாற்றி இருக்கிறான் என்பதை உணர்த்துகிறது. ஆற்றின் வெள்ளத்தால் சேதம் உண்டாக்காமல் இருக்க ஆற்றின் போக்கையே மாற்றி அமைத்திருக்கிறார்கள் என்பதை அறிகிறோம்.

வெள்ளம் ஏற்படுத்தும் அழிவைத் தடுப்பதற்கு எடுத்த முயற்சிகளைப் பற்றி விஜயநகர மன்னனான சதாசிவராயரின் திருவரங்கக் கோயில் கல்வெட்டு கூறுகிறது. திருவரங்கத்தை காவிரி வெள்ளம் அழிப்பதைக் கண்ட ஒளக்கு நாராயண திருவேங்கடய்யங்கார் என்பவர் திருவரங்கத்தின் மேற்குக் கரைக்கு எந்திர ஸ்தாபனம் செய்வதும் அய்யனார் உருவச்சிலை அமைத்தும் காவிரியின் வடகரையில் நாணலை நட்டதாகவும் கூறப்படுகிறது.

மேற்கண்ட செய்திகளால் பண்டைய காலத்தில் பல்வேறு வழிகளில் வெள்ளத்தை தடுப்பதற்கு உரிய பணிகளை மேற்கொண்டுள்ளனர் என்பதை அறிகிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com