ரத்தத்தின் ரத்தமே... - 46

இயற்கையாக எழுப்பப்படும் ஓசையையும், செயற்கையாக எழுப்பப்படும் ஓசையையும் கேட்க..... கேட்டு ரசிக்க, நமது உடலில் இயற்கையாக படைக்கப்பட்ட ஒரு முக்கியமான உறுப்புதான் காது.
ரத்தத்தின் ரத்தமே... - 46


இயற்கையாக எழுப்பப்படும் ஓசையையும், செயற்கையாக எழுப்பப்படும் ஓசையையும் கேட்க..... கேட்டு ரசிக்க, நமது உடலில் இயற்கையாக படைக்கப்பட்ட ஒரு முக்கியமான உறுப்புதான் காது.  காதுகள் மூலம் வெளிப்படும் உணர்வுகளே ஐம்புலன்களில் ஒன்றான ஓசை ஆகும். ஆகவே, ஓசையைக் கேட்க காது கண்டிப்பாக வேண்டும். காது கேட்காவிட்டால், வாய் பேச முடிந்திருக்காது. நாக்கு புரண்டிருக்காது. நாக்கு புரளாவிட்டால், உலகில் இத்தனை மொழிகளும் தோன்றியிருக்காது.

உடல் உறுப்புகளில் கால்களுக்கு நாம் எப்படி முக்கியத்துவம் கொடுப்பதில்லையோ, அதுபோல காதுகளுக்கும் நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பிறந்த நாளிலிருந்து ஆயுள் முழுக்க காது கேட்டுக் கொண்டு தானே இருக்கிறது. அப்படியிருக்கும்போது அதைத் தனியாக கவனிக்க வேண்டிய வேலை என்ன இருக்கிறது? என்று தான் நாம் எல்லோரும் நினைக்கிறோம். ஆனால் காது கேட்பதில் பிரச்னை வரும்போது தான், ஆஹா, காதை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று மிகவும் வருத்தப்படுகிறோம்.

காது - இதை செவி என்றும் சொல்வதுண்டு. சப்தத்தைக் கேட்பது, உடலை சமநிலைப்படுத்தி நேராக இருக்க வைப்பது - இந்த இரண்டு முக்கிய காரியங்களையும் காதுதான் செய்கிறது. காது சரியாக வேலை பார்க்கவில்லை என்றால், காது கேளாமை,  அறிவாற்றல் சரிவு (எண்ணங்கள், செயல்கள், நம்பிக்கைகள்), உடல் சமநிலைப்படுத்துவதில் பிரச்னை, பேசுவதில் தாமதம் இதுபோல இன்னும் நிறைய பிரச்னைகள் ஏற்பட்டுவிடும். காதுகள் உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளும் வேலையை சரிவர செய்யாவிட்டால், நாம் இடது 

பக்கமோ அல்லது வலது பக்கமோ, ஏதாவது ஒரு பக்கம் சாய்ந்துதான் இருக்க வேண்டி வரும். நேராக நிற்க முடியாது. நேராக நடக்க முடியாது. கை- கால்கள் மட்டும் இருந்தால் போதும் நடந்துவிடலாம் என்று நினைப்பீர்கள். இது தவறு. ஒழுங்காக நடக்க காதுகளின் உதவியும் தேவை.  எனவே காதை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

ஒரு காது மட்டும் இருக்கலாமே? ஏன் இரண்டு காதுகள் இயற்கையாகப் படைக்கப்பட்டிருக்கின்றன என்று நீங்கள் கேட்கலாம். நாலா பக்கமும் உங்கள் தலையை சுற்ற முடியாது. அந்த நிலையில், உங்களைச் சுற்றி எழுப்பப்படும் சப்தம், சரியாக எந்த திசையில் இருந்து வருகிறது, எவ்வளவு தூரத்தில் இருந்து வருகிறது, எவ்வளவு வேகத்தில் வருகிறது என்பதை மிகத் துல்லியமாகக் கண்டுபிடிக்கவும், உங்களது உடலை எந்த தருணத்திலும், சமநிலையில் வைத்துக் கொள்ளவும்தான் இரண்டு காதுகள் படைக்கப்பட்டிருக்கின்றன.

ராத்திரி ஆகிவிட்டது,  நாம் தூங்கப் போகிறோம். தூங்கும் போது காதுக்கு வேலை ஒன்றும் இல்லையே அதனால் காதை ஆஃ ப் பண்ணிவிட்டு படுக்கலாம். காலையில் எழுந்தவுடன் ஆன் பண்ணிக் கொள்ளலாம் என்ற அபாரமான நினைப்பு சில பேருக்கு வரும். ரேடியோ, டிவி, செல்போன் மாதிரி உங்கள் காதுகளை ஆஃப் பண்ண முடியாது. நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தாலும் கூட, உங்களுக்கு காது கேட்டுக் கொண்டுதான் இருக்கும். காதுக்கு டே டூட்டி, நைட் டூட்டி என்றெல்லாம் கிடையாது. ஆயுள் முழுக்க லீவே இல்லாத டூட்டி.

வெளிக்காது, நடுக்காது, உட்காது என்று காது மூன்று பாகங்களாகப் பிரிக்கப்படுகின்றன. நாம் கண்ணால் பார்க்கும் காது மடல் பகுதியே வெளிக்காது ஆகும். வெளிக்காது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலருக்கு தட்டையாக தலையோடு ஒட்டியும், சிலருக்கு குடை போன்று தலையை விட்டு வெளியே குவிந்தும் இருக்கும். எப்படி இருந்தாலும் தவறில்லை.  ஆக மொத்தத்தில் காது கேட்க வேண்டும். அதுதான் முக்கியம். வெளிக்காது என்று சொல்லப்படும் பகுதி,  எலாஸ்டிக் போன்று வளையக்கூடிய, மென்மையான எலும்பு போன்ற ஜவ்வினால் ஆனது. வெளிக்காதில் ரத்தக்குழாய்கள் இருப்பதில்லை. உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு காது மடலின் நீளம் இவ்வளவு தான் இருக்க வேண்டும், அகலம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்றெல்லாம் கணக்கு இருக்கிறதாம். வெளிக்காதைப் போல, மூக்கின் ஒரு பகுதி கூட எளிதில் வளையக் கூடிய மென்னையான ஜவ்வினால் உருவானதுதான். நாலாபுறமும் இருந்து வரும் சப்தங்களை குவித்து,  சேர்த்து ஒலி அலை அதிர்வுகளாக நடுக்காதுக்குள் அனுப்புவது தான் வெளிக்காதின் வேலையாகும்.

வெளிக்காதிலும், செவிக்குழாயிலும் மெழுகுச் சுரப்பியும், எண்ணெய்ச் சுரப்பியும் உள்ளன. இவ்விரண்டு சுரப்பிகளிலிருந்தும் சுரக்கும் திரவ மெழுகு, காதைப் பாதுகாக்க மிகவும் உபயோகமாக இருக்கின்றன. வெளிக்காதிலும், செவிக்குழாயிலும் சுமார் இருபதாயிரம் மிகச் சிறிய முடிகள் இருக்கின்றன. தூசி, அழுக்கு, போன்றவை உள்ளே போகாமல் இருக்கவும் , காதில் சுரக்கும் மெழுகு வெளியே வரவும், செவிப்பறை அதாவது நடுக்காது சவ்வை பாதுகாக்கவும் முடிகள் உபயோகமாக இருக்கின்றன. வெளிக்காது அழகுக்காகவும், பாதுகாப்புக்காகவும் தான் இருக்கிறதே தவிர, வேற எந்த உபயோகமும் இல்லை. நமக்கு அழகாக, பெரிதாக தலையின் இரண்டு பக்கமும் காதுகள் இருக்கின்றன. வெளியிலும் தெரிகின்றது. ஆனால் வாத்து, தவளை, பல்லி, எறும்பு, பாம்பு, சிட்டுக்குருவி,  காகம் முதலியவைகளின் காதுகள் நம் கண்களுக்குத் தெரியாது.

சாதாரணமாக,  நமக்கு தலையின் இரண்டு பக்கங்களிலும் வெளியில் இருக்கும் காது மடல்களை மட்டுமே தெரியும். அதற்குப் பிறகு,  ஒரு சுண்டு விரல் உள்ளே நுழையக் கூடிய துவாரம் இருப்பது தெரியும். அவ்வளவுதான். அதற்குப் பிறகு, உள்ளே, ஒன்றுமே நம் கண்ணுக்குத் தெரியாது. ரயில் குகைக்குள் போகும்போது கும்மிருட்டு மட்டும்தான் தெரியும். அதேபோல் தான் இதுவும். காது மடலின் உள்ளே, சுமார் 2   செ.மீ நீளத்திற்கு செவிக்குழாய் உள்ளது. இந்தக் குழாய் , நடுக் காதில் போய் முடிகிறது. ஆடு- மாடு போன்ற உயிரினங்கள் தங்களது காதுகளை சுற்றியுள்ள தசைகளைக் கொண்டு,  காது மடலை இப்படி அப்படி திருப்பியும், முன்பக்கம் பின்பக்கம் குவித்தும் வெளிக்காதின் திசையை மாற்றி மாற்றி, பல பக்கத்திலிருந்து வரும் ஒலியை சேகரித்து,  ஒன்றுகூட்டி காதுக்குள்ளே அனுப்ப முடியும். ஆனால் மனிதனின் காதுகளை அவ்வாறு வளைக்கவோ, திருப்பவோ முடியாது.

காதுகளில் குருமி என்று சொல்லப்படும் மெழுகுத்திரவம் அதிகமாக சேர்ந்து காதுகளை அடைத்துவிடும். அப்படி அடைத்துவிட்டால்,  காது சரியாக கேட்காதுஎன்ற பரவலான கருத்து எல்லோரிடமும் இருக்கிறது. காதில் சேரும் மெழுகை க்ளீன் பண்ண, எண்ணெய்யை விட்டோ, அல்லது தண்ணீரை பீய்ச்சி அடித்தோ செய்ய வேண்டிய தேவையில்லை. அப்படி செய்யவும் கூடாது. காதில் தினமும் சேரும் திரவ மெழுகு,  அவ்வப்பொழுது அதுவே வெளியே வந்து காற்றில் கரைந்து காணாமல் போய்விடும். சில நேரங்களில் சில பேருக்கு, மற்றவர்களைவிட மெழுகு அதிகமாக சுரக்கும். அந்த மாதிரி நபர்கள், அந்த மாதிரி சமயத்தில், மிகமிக சுத்தமான,  மிகமிக மெல்லிய காட்டன் துணியின் நுனியை நன்றாக, மெல்லிதாக சுருட்டி, காது துவாரத்திற்குள் விட்டு, சுழற்றி சுழற்றி எடுத்தாலே காது க்ளீன் ஆகிவிடும். சுருட்டி காது துவாரத்திற்குள் விடும் துணியின் நுனியானது, ஒரு குறிப்பிட்ட தூரம் சென்று, ஒரு இடத்தில் தட்டி நின்றுவிடும். அந்த இடத்தில் நிறுத்திவிட வேண்டும். மேலும் உள்ளே தள்ளக் கூடாது. அதுதான் எல்லை.

நவீன காலத்தில் அதிகமாக சேரும் காது மெழுகை அப்புறப்படுத்த பட்ஸ் என்றழைக்கப்படும் மிக சுத்தமான பஞ்சு மொட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன. அதைத்தான் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். பட்ஸ் போட்டு க்ளீன் பண்றேன்,  நல்லா க்ளீன் பண்றேன் என்று சொல்லிக் கொண்டே,  செவிப்பறையைக் குத்தி,  ஓட்டை போட்டுவிடாதீர்கள். ஜாக்கிரதை.  வெகு காலத்திற்கு முன்பு, காது வலிக்கிறது என்று சொன்ன அந்த முக்கிய பிரமுகரை, இந்திய அளவில் காது மூக்கு தொண்டை மருத்துவத்துறையில் புகழ்பெற்ற எனது ஆசான் பேராசிரியர் டாக்டர்.கே.கே.ராமலிங்கத்திடம் அழைத்துச் சென்றேன். "இரண்டு காதுகளிலும் அதிக அளவில் மெழுகு சேர்ந்து, குளிக்கும்போது போகும் சோப்புத் தண்ணீர் முதலியவைகளெல்லாம் சேர்ந்து,  ஒன்றாகத் திரண்டு, காய்ந்து, கடினமாகிப் போய்விட்டது. 

பல காலம் காதுகளை கவனிக்காமலே விட்டதால் வந்த வினை. கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுத்துவிடலாம் என்று சொல்லிவிட்டு, எடுக்க ஆரம்பித்தார். எடுக்கிறார்... எடுக்கிறார்... எடுத்துக்கொண்டே இருக்கிறார். முடிந்த பாடில்லை. கடைசியாக ஒரு வழியாக எடுத்து முடித்துவிட்டார். ஒவ்வொரு காதிலும் ஒரு புளியங்கொட்டை அளவு காது குருமி, காது மெழுகு, காது அழுக்கு வெளிவந்தது.   டாக்டர் சுத்தமாக எடுத்து முடித்தவுடன் அந்தப் பிரமுகர் சொன்னார் - "அய்யோ, இவ்வளவு காலம் இந்த அடைத்துப் போன காதுகளை வைத்துக் கொண்டா நான் நடமாடிக் கொண்டு இருந்திருக்கிறேன். எனக்கே வெட்கமாக இருக்கிறது. இப்பொழுது எனக்கு சப்த உலகின் ஐன்னல்கள் மொத்தமும்,  முழுமையாக திறந்துவிட்ட மாதிரி மிகத் துல்லிய ஓசையெல்லாம் கூட மிக நன்றாக கேட்கிறது என்று ஆனந்தத் தாண்டவம் ஆடினார். எனவே காதுகளை அவ்வப்பொழுது கவனித்துக் கொண்டே இருங்கள்.  இந்தப் பக்க காது வழியாக ஒரு மெல்லிய கம்பியை விட்டால், அந்தப் பக்க காது வழியாக வெளியே வந்து எட்டிப் பார்க்கும் என்று சிலர் சொல்வார்கள். நம்பாதீர்கள். இரண்டு காதுகளுமே முட்டு சந்துதான். இதிலிருந்து அந்தப் பக்கம் போக,  வழியே கிடையாது.

காதுகளின் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு, ரத்தம் சப்ளை செய்வதில் வித்தியாசங்கள் இருக்கின்றன. காதின் முன்பக்கத்திலிருந்தும் , பின் பக்கத்திலிருந்தும் வெளிக்காதுக்கு, பல ரத்தக் குழாய்கள் மூலம் ரத்தம் சப்ளை செய்யப்படுகின்றது. ஆனால் பெரும்பாலான ரத்தம் வெளிக்காதுக்கு, காதின் பின்பக்கமுள்ள ரத்தக் குழாய்கள் வழியாகத்தான் கிடைக்கிறது. நடுக்காதுக்கு ரத்தம், தலையின் பின் பகுதியிலுள்ள ரத்தக் குழாய்கள் மூலம் கிடைக்கிறது. உள்காதுக்கு ரத்தம், நடு மூளை, சிறு மூளை முதலியவைகளுக்கு சப்ளை செய்யும் ரத்தக் குழாய்கள் மூலமாகக் கிடைக்கிறது.

அதனால் காதுகளுக்குள் நல்ல சொற்களும் நுழையும்,  நல்லவை அல்லாத சொற்களும் நுழையும். நல்லவற்றை மட்டும் கேட்டுக் கொண்டு,  நலமுடன் வாழவேண்டும். அதற்கு காது ரொம்ப முக்கியம். காதுகளை பத்திரமாக,  பராமரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- தொடரும்               

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com