தலை நிமிரும் தமிழ்!

தமிழ் வழியில், அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தமிழக  அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தலை நிமிரும் தமிழ்!


தமிழ் வழியில், அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரை பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு என்று அனைத்தையும் முழுவதுமாக தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும்.

கல்லூரிகளில் முழுவதுமாக தமிழ் வழியில் கல்வி பயின்றிருந்தால் மட்டுமே அரசு பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ் அறிஞர்கள், தமிழ்த்துறை பேராசிரியர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது பற்றி சிலரின் கருத்தை கேட்டோம்:

சுயசிந்தனை உருவாகும்
பேராசிரியர் தி.இராசகோபாலன்


பயிற்று மொழியிலேயே எல்லோரும் படிக்க வேண்டும் என்று ஓமந்தூர் ராமசாமி விரும்பினார். ராஜாஜி விரும்பினார். காமராஜர் விரும்பினார். இவர்களால் சாதிக்க முடியாததை இன்றைய முதல்வர் சாதித்து காட்டியுள்ளார். பாவேந்தவர் பாரதி தாசன், பாரதியார், மறைமலை அடிகள் என பலரும் தமிழ் பயிற்று மொழியில் படிக்க வேண்டும் என்றார்கள். அவர்கள் விரும்பியது இன்று நடைமுறைக்கு வந்துள்ளது வரவேற்தக்கது.

ஒவ்வொரு குழந்தையும் அவரவர் தாய்மொழியில் தான் படிக்க வேண்டும். ஜெர்மன் நாட்டில் உள்ளவர்கள் ஜெர்மன் மொழியிலும், பிரான்ஸில் உள்ளவர்கள் பிரெஞ்சு மொழியிலும் தான் படிக்க வேண்டும். அவரவர் தாய்மொழி தான் உண்மையான அறிவை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதனால் தமிழ்நாட்டிலுள்ள குழந்தைகள் தமிழில் தான் படிக்க வேண்டும். உளவியல் வல்லுநர்கள் அதனால்தான் தாய்மொழியில் படிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். காரணம் என்னவென்றால் தாய்மொழியில் தான் சுயசிந்தனை உருவாகும் என்கிறார்கள். அதனால் தான் தாகூர் "கீதாஞ்சலி'யை வங்காள மொழியில் எழுதினார். பின்னர் தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

ஐசக் நியூட்டன் ஹீப்ரு மொழியில் தான் தன்னுடைய 3 விதிகளையும் எழுதினார். திருகுர் ஆன் அரபு மொழியில் தான் எழுதப்பட்டது. விவிலியம் ஹீப்ரு மொழியில் தான் எழுதப்பட்டது. தாய் மொழி கல்வியை வலியுறுத்தும் விதத்தில் கேரளாவில் ராமாயணத்தை மலையாளத்தில் எழுதிய எழுத்தச்சன் வழியில் வந்தவர்களிடத்தில் அந்த குருமார்கள் குழந்தைகளின் நாக்கில் மலையாளத்தில் தான் எழுதுகிறார்கள்.

தாய்மொழியில் கற்கவோ, பேசவோ முடியவில்லை என்றால் மனைவியிடத்தில் வழக்கறிஞர் வைத்து பேசுவது போன்றது என்றார் தாகூர்.பயிற்று மொழி என்பது தாய்ப்பாலை போன்று தூய்மையாக இருக்கும் என்ற பாரதியார் பிற மொழிகள் கற்றதை நினைத்து வருத்தப்படுகிறார்.


மகிழ்ச்சி... நெகிழ்ச்சி..!
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

 

நான் ஒரு முறை லண்டன் தமிழ் சங்கத்திற்கு "தமிழ் படிப்போம். தரணியை வெல்வோம்' என்று கட்டுரை எழுதியிருந்தேன். "தமிழ் படித்தால் ஜெயிக்க முடியுமா?' என்று பலர் கேட்கிறார்கள். இன்று அச்சு ஊடகம், காட்சி ஊடகம், இணையதள ஊடகம் என பல ஊடகங்கள் பெருகிவிட்டன. இவை அனைத்திலும் தமிழ் படித்தவர்களுக்கு தான் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கிறார்கள்.

அச்சு ஊடகத்தை பொருத்தவரை தமிழைப் பிழை இல்லாமல் எழுதவும், படிக்கவும் தமிழ் படித்தவர்களால் மட்டுமே இயலும். வாக்கிய அமைப்பு முறை, ஒருமை, பண்மை என பல விஷயங்களை அவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். கவிதை எழுதும் திறனும், பேச்சுத்திறமையுடன் தமிழ் படித்தவர்கள் தலைப்பை அழகாக தேர்வு செய்வார்கள்.

கலைஞர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா, கிருபானந்த வாரியார் போன்றவர்கள் மேடைகளில் வார்த்தைகளால் விளையாடுவார்கள். தமிழால் மட்டும்தான் அந்த இன்பத்தை தர முடியும். வானொலியில்
எல்லோரும் பேசலாம். ஆனால் ஒரு சிலரின் பேச்சு, குரலும் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படுவது அவர்களின் உச்சரிப்பால் தான். தமிழை தப்பு தப்புகாக பேசுபவர்களால் எதையும் சாதிக்க முடியாது.

இன்று பேஸ்புக், டுவிட்டர், இணையதளம் போன்றவற்றில் தமிழ் படித்தவர்கள் தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள். தமிழ் படித்தவர்களுக்கு தான் தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். மருத்துவரால் ஒரு உயிரை காப்பாற்ற முடியும். ஆனால் அந்த உயிரை மகிழவும், நெகிழவும் வைக்க தமிழால் மட்டுமே முடியும். நான் இதுவரை போகாத நாடுகள் இல்லை. மேடை பேச்சுகள் பேசாத ஊர்கள் இல்லை. எனக்கு தெரிந்து தமிழ் படித்ததால் மட்டுமே இது சாத்தியமானது என்று சொல்வேன்.


தலைகுனிவு இல்லை
முனைவர் ஆதிரா முல்லை


நுனி நாக்கு ஆங்கில மோகமும் அயலகப் பணி மோகமும் அவர்களைத் தமிழ் வழியில் படிக்க விடாமல் செய்துள்ளன. பலரிடம் ஆங்கிலம் அறிவு மொழி என்ற தவறானப் புரிதலும் உள்ளதைப் பார்க்க முடிகிறது. இதன் பயன் ஆங்கிலமும் முழுமையாகக் கைவரப் பெறாது தமிழிலும் பேசவே தடுமாறிக்கொண்டும் இளைய சமுதாயம் திணறுவதைப் பார்க்க முடிகிறது.

தமிழக அரசின் கடிதங்கள், முதல் ஊடகங்களின் தலைப்புச் செய்திகள் வரை பரவலாகப் பிழைகள் காணப்படுவது இதற்குச் சான்று. முடிவு தன்னம்பிக்கையற்று வாழும் நிலைக்கு இந்த தலைமுறை தள்ளப்பட்டிருக்கிறது.

தங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் பேச வேண்டும் என்னும் ஆசை ஓர் பக்கம் இருந்தாலும் எதிர்க்காலத்தில் பிள்ளை வேலை இல்லாது திண்டாடக் கூடாதே என்னும் அச்சமே பெற்றோர் தங்கள் குழந்தைகளை எவ்வளவு பாடுபட்டும் ஆங்கில வழியில் படிக்க வைக்கக் காரணம்.

தமிழ் படித்தால் தமிழாசிரியராக மட்டும் போக முடியும் என்று நினைத்த காலம் இப்போது இல்லை. தமிழில் தகுதியை வளர்த்துக் கொண்டால் எட்டுத் திக்கிலும் கொட்டிக்கிடக்கின்றன வாய்ப்புகள். தொலைக்காட்சிகள் மட்டும் இருந்த நிலை மாறி வலையொளி (யூ டியூப் சேனல்கள்) என்று இணையத் தெருவெங்கும் ஊடகங்கள் வளர்ந்துள்ளன.

ஊடகங்களில் செய்தி தயாரிக்க, எழுத, வாசிக்க, நிகழ்ச்சிகளில் பேச,, நேர்காணல் எடுக்க, தொகுத்து வழங்க என்று எண்ணற்ற வாய்ப்புகள் வந்துவிட்டன. திரைத்துறையில் சின்னத்திரை தொடர்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பேசக் கற்றுத்தர என்று பல வாய்ப்புகள் குவிந்துள்ளன. ஒரு பக்கம் ஆள் கிடைக்காத நிறுவனங்கள் ஒரு பக்கம் வேலை கிடைக்காத இளைஞர்கள் இரண்டுக்கும் சரியான பாலம் இல்லாமையே தமிழ்ப் படித்தால் வேலை கிடைக்காது என்று அச்சப் படக் காரணம்.

அச்சு ஊடகங்கள், பதிப்பகங்கள் தவிரவும் எல்லா அச்சு ஊடகங்களும் மின் ஊடகங்களாகவும் வளர்ந்துள்ளன. மின்னூல், ஒலிநூல், விளம்பர நிறுவனங்கள் என்று வலைத்தளங்களில் தமிழுக்கான தேவைக்குத் தமிழ் ஆளுமைகள் பஞ்சமே நிலவுகிறது. பல நிறுவனங்களில் எழுத்தர் (கண்டென்ட் ரைட்டர்) மொழிபெயர்ப்பாளர், பணிகளுக்குத் தமிழ் தெரிந்தவர்கள் தேவை இருக்கவே செய்கிறது. தமிழ் படித்தால் வேலை இல்லை என்னும் நிலை இந்த மின் யுகத்தில் இல்லை. ஆகவே குழந்தைகளைத் தமிழ் வழியில் படிக்க வைப்பது சிறந்தது. தமிழில் படிப்பதால் தலைக்குனிவு இல்லை. தலை நிமிர்ந்து நிற்கலாம்.

அரசின் இந்த அறிவிப்பு அரசு பள்ளியில் பயில்பவருக்கு என்று கூடுதலாகச் சொல்லி இருப்பது மேலும் சிறப்பு.

தமிழ் மொழி மெல்ல மெல்லத் தேய்ந்து போகுமோ என்னும் அச்சத்திலிருந்து நம்மை ஆசுவாசப்படுத்துகிறது இந்த அறிவிப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com