ஓ! போட வைக்கும் ஒட்டகப் பால் !

சேலம் நகரில் கோரிமேடு பகுதியில் இருக்கும் "சைலம்' உணவு விடுதியில் ஒட்டகப் பால் ... ஒட்டகப் பாலில் தயாரிக்கப்படும் தேநீர், காபி விற்பனை சக்கை போடு போடுகிறது.
ஓ! போட வைக்கும் ஒட்டகப் பால் !


சேலம் நகரில் கோரிமேடு பகுதியில் இருக்கும் "சைலம்' உணவு விடுதியில் ஒட்டகப் பால் ... ஒட்டகப் பாலில் தயாரிக்கப்படும் தேநீர், காபி விற்பனை சக்கை போடு போடுகிறது. கேட்டரிங் படித்த இரண்டு இளைஞர்கள் உணவு விடுதி தொடங்கி... மாறுதலுக்காக ஒட்டகப் பால் கொண்டு தயாரிக்கப்படும் தேநீர், காபி, மில்க் ஷேக், சாக்லேட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒட்டகப்பாலா? அத்தனை ஒட்டகங்கள் தமிழ்நாட்டில் வளர்க்கப்படுகிறதா? நமது ஆச்சரியத்தைப் போக்குகிறார் "சைலம்' உணவு விடுதியின் உரிமையாளரான பிரபாகரன்.

""ஒட்டகப் பாலை நாங்கள் ராஜஸ்தானிலிருந்து வாங்குகிறோம். குளிரூட்டும் வசதியுள்ள வேன்களிலிருந்து இரண்டு நாளைக்கு ஒரு முறை தருவிக்கிறோம். ஒட்டகப் பால் கறக்கப்பட்டதும் கேனில் அடைத்து 48 மணி நேரத்திற்குள் ராஜஸ்தானிலிருந்து பால் சேலம் வந்தடையும் . மொத்தமாக கேனில் வாங்கி சின்னச் சின்ன பெட் பாட்டில்களில் விற்பனை செய்கிறோம். "ஆத்யா' என்ற பெயரில் ஒட்டகப் பால் சேலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டகப் பாலில் தேநீர், காபி, மில்க் ஷேக், சாக்லேட் விற்பனை தொடங்கி ஒரு மாதம்தான் ஆகிறது. நானும் நண்பர் அருணும் சேர்ந்து இந்த உணவகத்தை நடத்தி வருகிறோம்.

காலை டிபன், மதியம் உணவு.. இரவு டிபன் என்று சம்பிரதாய முறையில் உணவு விடுதி இயங்குகிறது. ஒட்டகப் பாலை லிட்டர் 900 ரூபாய்க்கு விற்கிறோம். தினமும் 15 லிட்டர் ஒட்டகப் பாலை விநியோகிக்கிறோம். உணவு விடுதியில் தேநீர் 60 ரூபாய். காபி 65 ரூபாய். தேநீர், காபிக்காக தினமும் பத்து லிட்டர் ஒட்டகப்பால் தேவைப்படுகிறது. மில்க் ஷேக் 140 ரூபாய், சாக்லேட் 75 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். ஒட்டகப்பாலை குளிரூட்டும் பெட்டியில் வைத்தால் நான்கு ஐந்து நாள்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். ஒட்டகப் பாலில் தயிர், வெண்ணெய், நெய், பன்னீர் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை விரைவில் அறிமுகப்படுத்துவோம் என்கிறார் பிரபாகர்.

ஒட்டகப் பாலில் அதிக சத்துக்கள் உள்ளன. குடித்தால் எளிதில் ஜீரணமாகும். மாட்டுப் பாலை விட, ஒட்டகப்பால் கெட்டியாக இருக்கும். கொஞ்சம் உப்பு சுவை தூக்கலாக இருக்கும். கொழுப்பும் குறைவு. விட்டமின் பி அதிகம். இரும்பு சத்தோ பசும்பாலைவிட பத்து மடங்கு அதிகமாக உள்ளது. இந்த பாலில் தாதுக்கள் அதிகம்.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும். ஒட்டகப் பாலில் இன்சுலின் அளவு 52 யூனிட் இருப்பதால், தொடக்க நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு பால் மருந்தாக மாறுகிறது.

புற்றுநோய் நோயாளிகள் தினமும் ஒட்டகப்பால் குடித்து வந்தால் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும். இதயத்திற்கு எதிரியான கெட்ட கொழுப்புகளை ஒட்டகப்பால் கரைப்பதால் இதயம் சீராகச் செயல்படும். ஆட்டிஸம் பாதித்திருக்கும் சிறார்களுக்கு ஒட்டகப்பால் மருந்தாக இருக்கிறது'' என்கிறார் அருண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com