தோல்விக்கும் நன்றி..!

வாழ்க்கையில் ஒவ்வொரு தோல்வியையும் கொண்டாடணும். என்னுடைய தோல்விகள்தான் இன்று என்னை ஒரு  தொழில் முனைவோராக உருவாக்கியிருக்கிறது என்கிறார் சுரேஷ் ராதாகிருஷ்ணன்.
தோல்விக்கும் நன்றி..!

வாழ்க்கையில் ஒவ்வொரு தோல்வியையும் கொண்டாடணும். என்னுடைய தோல்விகள்தான் இன்று என்னை ஒரு தொழில் முனைவோராக உருவாக்கியிருக்கிறது என்கிறார் சுரேஷ் ராதாகிருஷ்ணன். பொறியியல் பட்டதாரியான இவர் தொடங்கிய சாய்காந்த் என்ற தேநீர் கடை 16 இடங்களில் பொது மக்களின் நாவை ருசிக்க செய்துள்ளது. பொறியியல் பட்டதாரியான சுரேஷ் ராதாகிருஷ்ணனின் வெற்றி எப்படி சாத்தியமானது. அவரிடம் பேசினோம்:


""நான் என்னுடைய ஒவ்வொரு தோல்விக்கும் நன்றி சொல்லுவேன். ஒரு தொழில் தொடங்குவது சாதாரணமாக இருக்கலாம். ஆனால், அதை தொடர்ந்து நடத்த போராடணும். நூறு சதவிகிதம் தன்னோட தொழிலை நேசிப்பவர்களால் மட்டுமே அதில் ஜெயிக்க முடியும். தொழில் செய்ய படிப்பு தேவையில்லை. ஒவ்வொரு சறுக்கலிலும் மனவலிமையோட எந்திரிச்சு நிக்கிற துணிச்சல் இருந்தால் போதும்.

நாம் ஒரு தொழிலதிபரின் வெற்றி முகத்தை தான் பார்க்கிறோம்.ஆனா அந்த வெற்றிக்கு அவங்க எத்தனை தோல்விகளை கடந்து வந்துள்ளார்கள் என்பதை கேட்டால் தான்தெரியும்.

நல்ல வேலையில் சேர்ந்து வெளிநாட்டில் செட்டில் ஆகணும்னு சராசரிக் கனவுகளோட வாழ்க்கையை தொடங்குன நடுத்தரக் குடும்பத்து நபர் நான். பி. இ பட்டதாரி. அம்மா, அப்பா படிக்கலைனாலும் அவங்க சக்திக்கு மீறி என்னை படிக்க வெச்சாங்க. எங்க வீட்டில் ஆசைப்பட்ட மாதிரியே படிப்பு முடிச்சு ஐ.டி நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்துட்டேன். வாழ்க்கையையே ஜெயிச்சுட்ட மாதிரி அப்பா, அம்மா சந்தோஷப்பட்டாங்க. நாலு வருஷம் ஐ.டி துறையில் வேலைபார்த்தேன். கை நிறைய சம்பளம் வாங்குனாலும், எந்திரம் மாதிரி ஓடிக்கிட்டே இருக்கிற உணர்வு இருந்துச்சு.

ஒருத்தர்கிட்ட வேலை பார்ப்பதை விட, வேலை கொடுக்குற இடத்துக்கு வரணும்னு நினைச்சேன். அந்த நேரத்தில் பிசினஸ் பத்தி எந்த புரிதலும் எனக்கு இல்ல. பிசினஸ் சார்ந்து நிறைய புத்தகங்களை படிக்க ஆரம்பிச்சேன்.

பிசினஸ் ஸ்டார்ட் பண்ணப்போறேன்னு சொன்னதும், வீட்டில் கொஞ்சம் பயந்தாங்க. அதனால் உடனே வேலையை விட முடியல. பார்ட் டைமா பிசினஸ் பண்ணலாங்கிற முடிவு எடுத்தேன். சில எதிர்ப்புகள், நிறைய சமாதானங்களுக்குப் பிறகு என் சேமிப்பு எல்லாவற்றையும் முதலீடாக்கி ஐ.டி டிரெயினிங் சென்டர் ஆரம்பிச்சேன். ஆனா, அது தான் நான் என் வாழ்க்கையில் பண்ண மிகப்பெரிய தப்பு.

ஒரு பிசினஸ்க்கு முதலீட்டை விட பிசினஸ் பண்றவங்களின் நேரமும், அக்கறையும் ரொம்ப முக்கியம்னு பிசினஸ் ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே எனக்கு புரிஞ்சுது. துணிஞ்சு வேலையை விட்டேன். ஆனாலும் அந்த பிசினஸ்ஸில் என்னால் சக்சஸ் கொடுக்க முடியல. 2 வருஷத்தில் 40 லட்ச ரூபாய் கடனோட வெளிய வந்தேன். எப்படியாவது ஜெயிச்சுருவேன்னு வீட்டில் நான் சொல்லியிருந்த எல்லா நம்பிக்கை வார்த்தைகளும் உடைஞ்சு போயிருந்தது.

ஒரு மிடில் கிளாஸ் மக்களுக்கு அது ரொம்ப பெரிய தொகை. வீட்ல எல்லாரும் உடைஞ்சு போயிட்டாங்க.சொந்தபந்தமெல்லாம் அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சாங்க. கடனிலிருந்து எப்படி மீண்டு வரப் போறேன்னு தெரியாமல் தவித்தேன். எல்லாரும் நான் தோத்துட்டதா சொன்னாங்க.

அந்தக் கஷ்டத்தில் கூட, நான் தோல்வி அடையல, என்னோட பிசினஸ் மாடல் தான் தோல்வி அடைஞ்சுருக்குனு என் மனசுக்குள்ள ஒரு எண்ணம் ஸ்ட்ராங்கா இருந்துச்சு. என் கனவுகள் தோற்கக் கூடாது. வெற்றிகரமான தொழிலதிபராக மாற முடியும்னு நம்பிக்கை என் மனசு முழுக்க வேர்விட்டு இருந்துச்சு.

இன்னொரு பிசினஸ்னு வீட்டில் சொன்னதும் சம்மதிக்கவே இல்ல. ஆனால் என் மனைவி துணை நின்னாங்க.

என்னோட புது பிசினஸ் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத ஒன்றாக இருக்கணும்னு தோணுச்சு. நான் ஒரு டீ லவ்வர். நல்ல டீ குடிக்கனுங்கிறதுக்காக ஒரு கிலோ மீட்டர் நடக்க சொன்னாலும் நடப்பேன். அதனால் டீ பிரியர்களுக்கான ஷாப் தொடங்கலாம்னு ஐடியா வந்துச்சு. அது தொடர்பா நிறைய சர்வே பண்ண ஆரம்பிச்சேன். ரெகுலரான டீ மாஸ்டர்கள் கிடைக்காதது, பெண்கள் தனியா நின்னு டீ குடிக்கும் சூழல் இல்லாதது, சுத்தம் இல்லாததுனு நிறைய பிரச்னைகள் டீகடைகளுக்கு இருக்கிறது தெரிஞ்சுது. இந்த பிரச்னைகளையெல்லாம் நிவர்த்தி பண்ற மாதிரியான ஒரு அவுட்லெட்டில் என்னோட தொழில் இருக்கணும்னு முடிவு பண்ணினேன். அப்படியான ஒரு ஷாப் டிசைனை உருவாக்கினேன்.

என்னோட பிசினஸ் ஐடியாவைக் கேட்டுட்டு நிறைய பேர் சிரிச்சாங்க. "இவ்வளவு படிச்சுட்டு டீக்கடை வைக்கப்போறீயா'னு கிண்டல் பண்ணாங்க. யாருடைய கருத்தையும் நான் மூளைக்கு ஏத்திக்கல. சில லட்சங்கள் லோன் வாங்கி "சாய் கிங்' னு ஒரு பிராண்டை ஆரம்பிச்சேன். என்னோட பிராண்ட்ல யாரு எப்போ டீ குடிச்சாலும் டேஸ்ட் ஒரே மாதிரியா இருக்கணும்னு முடிவு பண்ணி, டீயில் சேர்க்கும் எல்லா பொருளையும் ஒரு அளவுக்குள் கொண்டு வந்தேன்.

அதனால் மாஸ்டர்களே தேவைப்படல. ஊட்டியில் இருந்து கொண்டு வரப்படும் ஃப்ரெஷ் டீத்தூளில் டீ தயார் செய்தோம்.

கொஞ்சம் எழுந்து நிற்க ஆரம்பிச்சதும், எல்லாரும் வித்தியாசமான ஐடியானு பாராட்டுனாங்க. மூணு ஐ.டி நிறுவனங்களில் ஷாப் ஓப்பன் பண்ணிணேன்.

ஆரம்பத்தில் நல்ல ரீச் இருந்துச்சு. ஆனால் தொடர்ந்து ஐ.டி நிறுவனங்களுக்கு டீ டெலிவரி பண்றதில் நிறைய சிக்கல்கள் இருந்தது. பணப்புழக்கம் செய்வதில் பிரச்னை வந்துச்சு.

என்னால் பிசினஸ்ûஸ தொடர்ந்து நடத்த முடியல. ஐ.டி நிறுவனகளில் வெச்சுருந்த மூணு ஸ்டால்களையும் க்ளோஸ் பண்ணேன். அடுத்த ஒரு வருசத்தில் 15 ஸ்டால்கள் திறக்கணும்னு ஐடியாவோட ஓட ஆரம்பிச்சேன். முதலீடு செய்ய என்கிட்ட ஒரு ரூபாய் கூட கிடையாது. இன்வெஸ்டர்களின் உதவியோட களமிறங்கினேன்.

என்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸ் மாஸா இருக்கணும்னு மெனக்கெட்டேன் "சாய் காந்த்னு பெயர் வெச்சேன். இந்த புதுவகையான டீ- ஸ்டால்களுக்கு மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சுது.

நிறைய டீ-டெஸ்ட் பண்ணி விதவிதமான 21 வகையான டீ வகைகளை அறிமுகம் செய்தேன். ஒரு நாளைக்கு 50 டீ விற்பனை செய்த என்னோட நிறுவனம் இப்போ மாசத்துக்கு 13000 டீக்களை விற்பனை செய்யுது. இப்போ 16 இடத்தில் நடத்தப்படும் நிறுவனமாக உருவாகியிருக்கு,

சில வருஷ போராட்டம் இன்னைக்கு ஒரு சக்சஸ் ஃபுல் பிசினஸ் மேன். இது என் தன்னம்பிக்கையோட வெற்றி. நம்முடைய ஆசைகளுக்கும், கனவுகளுக்கு உயிர்கொடுக்கவும், உழைக்கவும் நாம் தயாராக இருக்கும் போது நம்முடைய எண்ணங்களை யாராலும் அழிக்க முடியாது. போராடி ஜெயிப்போம்'' விடை பெறுகிறார் சுரேஷ் ராதாகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com