ரத்தத்தின் ரத்தமே... - 1

செந்நீர்,  செஞ்சாறு,  உதிரம்,  ரத்தம்,  குருதி,  ரக்தா,  கோரி,  ரக்த்,  ரக்த,  ரக்தம்  - இப்படி ரத்தம் பல இந்திய மொழிகளில் பலவாறாக அழைக்கப்படுகிறது.
ரத்தத்தின் ரத்தமே... - 1


செந்நீர்,  செஞ்சாறு,  உதிரம்,  ரத்தம்,  குருதி,  ரக்தா,  கோரி,  ரக்த்,  ரக்த,  ரக்தம்  - இப்படி ரத்தம் பல இந்திய மொழிகளில் பலவாறாக அழைக்கப்படுகிறது.

இன்னும் உலகின் பல்வேறு மூலைகளில் ரத்தத்திற்கு என்னென்ன பெயர் வைத்து எப்படி  எப்படியெல்லாம் அழைக்கிறார்களோ நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. எந்த மொழியில் எப்படி அழைக்கப்பட்டாலும் உலகம் முழுவதும் ரத்தம் ஒன்று தான். "உதிரம்' என்ற பெயரில் ஒரு ரத்த வங்கி கூட நமது ஊரில் இயங்குகிறது. "உன் கண்ணில் நீர் வழிந்தால்  என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி' என்று மகாகவி பாரதியார் கூட ரத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அன்றே பாடல் எழுதியிருக்கிறார்.

உயிருக்கு ஆதாரமே  ரத்தம் தான். அதனை "ஜீவன்' என்று கூட சொல்லலாம். நாம் உயிர்வாழ  மிக மிக முக்கியமான தேவை ரத்தமே. வீர வசனம் பேசும் மனிதர்களும் சரி வீச்சரிவாளைத் தூக்கும் மனிதர்களும் சரி  ரத்தத்தைப் பார்த்தாலும் சரி  ரத்தத்தைப் பற்றிய பேச்சைக் கேட்டாலும் சரி ஒரு நொடியாவது பயப்படாமல் இருப்பதில்லை. உயிர்காக்கும் ஒரு முக்கியப்பொருள் என்பதாலும்  ரத்தம் உடலில் இல்லாவிட்டால் உயிரே போய்விடும் என்பதாலும்  எல்லோருக்கும் ரத்தத்தின் மீது தன்னை அறியாமலேயே ஒரு பயம் வந்துவிடுகிறது.

உலகம் முழுவதும் மனிதனாக  விலங்குகளாக  மற்றும் பல்வேறு உயிரினங்களாகப் பிறந்தவைகளுக்கும் ரத்தம் தான் உடலில் ஓடுகின்றது. ஆனால் மனிதர்களைப் போல் எல்லா உயிரினங்களுக்கும் ரத்தம் சிவப்பாக இருப்பதில்லை. வெவ்வேறு உயிரினங்களுக்கு ரத்தம் வெவ்வேறு நிறத்தில் இருக்கின்றது. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் உச்சகட்ட குளிரின் உறைவிடமான அண்டார்டிக் பிரதேசத்தில் வாழும் "ஆக்டோபஸ் விலங்கின் உடலிலுள்ள ரத்தம் நீல நிறத்தில் தான் இருக்கின்றது. ஆக்டோபஸ் உடலிலுள்ள ரத்தத்தில் "தாமிரம்' அதிகமாகக் கலந்திருப்பதால் அதனுடைய ரத்தம் நீல நிறமாக இருக்கின்றது. கரப்பான் பூச்சியின் ரத்தம்  நிறமே இல்லாமல் இருக்கின்றது. பூச்சிகளின் உடலிலுள்ள ரத்தம் மனிதனின் ரத்தத்தைப்போல் ஆக்ஸிஜன் போன்ற வாயுக்களை சுமந்து செல்வதில்லை. அதனால் பூச்சிகளின் ரத்தத்தில் "ஹீமோகுளோபின்' இல்லை. பூச்சிகளின் ரத்தத்தில் "சிவப்பணுக்களும் இல்லை. அதனால் தான் பூச்சிகளின் ரத்தம் சிவப்பாக இல்லை.

நம் உடல் முழுவதும் ரத்தம் பரந்து  விரிந்து  பாய்ந்து சென்று நம் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் பல சத்துப்பொருட்களை உடல் முழுவதுமுள்ள செல்களுக்குக் கொண்டுபோய் சேர்க்கின்றது. அதே மாதிரி உடலிலுள்ள செல்களிலிருந்து வெளியாகும் பல கழிவுப் பொருட்களை உடல்  முழுவதுமுள்ள பல பாகங்களிலிருந்து எடுத்துவந்து உடலிலிருந்து வெளியேற்றவும் உதவுகிறது.

ரத்தத்திற்கு மாற்றுப்பொருள் கண்டுபிடிக்கப் போகிறார்கள் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றெல்லாம் நம்பகத் தன்மையற்ற செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ரத்தத்திற்கு மாற்றுப் பொருள் இன்றைய தேதி வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ரத்தத்தை தயாரிக்கவோ உருவாக்கவோ உற்பத்தி செய்யவோ முடியாது. அன்புள்ளம் கொண்ட கருணை உள்ளம் கொண்ட சேவை மனப்பான்மை கொண்ட தியாக உள்ளம் கொண்ட நல்ல எண்ணங்களுக்குச் சொந்தக்காரர்கள் சிலர் ரத்தத்தைத் தானமாகக் கொடுக்கிறார்கள். ரத்தத்தைத் தானமாகக் கொடுக்கும் இப்படிப்பட்ட "நன்கொடையாளர்கள் செய்யும் ரத்த தானத்தின் ழூலம் தான் ரத்தம் நமக்குக் கிடைக்கின்றது. ரத்தம் கிடைக்க ஒரே வழியும் இதுதான். 

ஒரு துளி ரத்தத்தில் சுமார் 7000-லிருந்து சுமார் 25000-வரை வெள்ளை அணுக்கள் உள்ளன. ரத்தத்தின் அடர்த்தி ஒரு சுத்தமான நல்ல தண்ணீரின் அடர்த்திக்கு சமமாகும். ஒரு துளி ரத்தம் என்பது சுமார் 0.05 மில்லி லிட்டர் ஆகும். 1 மில்லி லிட்டர் ரத்தம் என்பது 20 துளிகள் சேர்ந்ததாகும். "இருபதாயிரம் ரத்தத்துளிகள் கொண்டதுதான் ஒரு லிட்டர் ரத்தமாகும். அதனால் ஒவ்வொரு துளி ரத்தமும் விலை மதிப்பற்றது தான். உங்கள் உடலில் எத்தனை லிட்டர் ரத்தம் இருக்கிறது என்று தெரியுமா?

டாக்டர் எஸ். அமுதகுமார் பொது மருத்துவராக 1981-ஆம் ஆண்டு முதல் சிகிச்சையளித்து வருகிறார். மருத்துவராக இருந்தாலும் எழுத்தார்வம் காரணமாக தன்னுடைய துறை சார்ந்து இதுவரை பயனுள்ள பல மருத்துவ நூல்களை எழுதியுள்ளார். 

"பயனுள்ள மருத்துவச் செய்திகள்', "நலம் தரும் நடைப்பழக்கம்', "தலைமுதல் கால் வரை' (இரண்டு பாகங்கள்) "உடலும் உணவும்',  ஆங்ய்ங்ச்ண்ற் ர்ச் ரஹப்ந்ண்ய்ஞ் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். 

இவர் சென்னைப் பல்கலைக்கழக செனட் குழுவிலும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் இருந்தவர். 

மேலும் மத்திய திரைப்படத் தணிக்கை குழுவின் உறுப்பினராக 11 ஆண்டுகள் அங்கம் வகித்திருக்கிறார். தமிழக அரசின் "கலைமாமணி' விருது பெற்றவர்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com