ரோஜா மலரே!: கலைஞர்களுக்கு சந்தோஷம் தருவது எது தெரியுமா? - 76

என்னுடன் நின்றிருந்த நடிகை ராஜஸ்ரீயை காணவில்லை. கூச்சல், குழப்பம் மட்டுமல்ல, கூட்டத்திலிருந்து கற்களும் வந்தன. நான் ஒரு மறைவில் ஒளிந்து கொண்டு நிகழ்ந்தவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
ரோஜா மலரே!: கலைஞர்களுக்கு சந்தோஷம் தருவது எது தெரியுமா? - 76


என்னுடன் நின்றிருந்த நடிகை ராஜஸ்ரீயை காணவில்லை. கூச்சல், குழப்பம் மட்டுமல்ல, கூட்டத்திலிருந்து கற்களும் வந்தன. நான் ஒரு மறைவில் ஒளிந்து கொண்டு நிகழ்ந்தவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தேன். கற்கள் சரமாரியாக வந்து விழுந்தன. அப்பொழுது தான், ஒரு மேஜைக்கு அடியில், ராஜஸ்ரீ பதுங்கி இருந்ததைப் பார்த்தேன். எங்களுக்கு அவ்வளவு பயம்.

நானும் நடிகை ராஜஸ்ரீயும், மறைவில் இருந்து வெளியே வந்தோம். நடிகை காஞ்சனா ஒரு புறம் இருந்து வெளியே வர, "ஏன் இந்தக் கூச்சல் குழப்பம்', என தெரிந்தவர்களிடம் கேட்டேன். "நாங்கள் எல்லோரும் படத்தையும் பார்த்து விட்டு, நடித்த நடிகையர்களைப் பார்க்க வந்தோம். எங்களைத் தடுத்து நிறுத்திவிட்டால் எப்படி' என்றனர். அதற்கு நிகழ்ச்சி நடத்துவோர், "நாங்கள் நடிகர், நடிகையர் எல்லோரையும் வாசலுக்கு வரவழைத்து விட்டு, நிகழ்ச்சியை நடத்துகிறோம்' என்று தமிழிலும், கன்னடத்திலும் சொன்னார்கள். நிகழ்ச்சியை அமைதியான முறையில் நடத்த நீங்கள் ஒத்துழையுங்கள்,என்று கேட்டு கொண்டார்கள். சொன்னது போலவே நாங்கள் எல்லோரும் வெளியே போய் நின்று, அவர்களுக்குக் கை அசைத்து விட்டு, அவர்கள் கேட்ட ஒன்று இரண்டு கேள்விகளுக்குப் பதில் அளித்து விட்டு, உள்ளே வந்தோம். அப்புறம் தான், அங்குக்கூடி இருந்த மக்கள் நாங்கள் நிகழ்ச்சியை நடத்த அனுமதித்தார்கள்.

கல் வீச்சில், கண்ணாடி மாளிகையின் ஒரு பக்கக் கண்ணாடி உடைந்தது. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அதற்கு நஷ்ட ஈடு கொடுத்து சரி கட்டினார்கள். அந்த விழாவிற்கு கர்நாடக அமைச்சர்களும், திரை உலகத்தினரும், வந்திருந்தனர். விழா பிரம்மாண்டமாக இருந்தது. அந்த ஆண்டு வெளிவந்த படங்களில் இது போன்று வெள்ளிவிழா கொண்டாடிய படம் வேறு இல்லை.

என்ன தான் கலைஞர்கள் கஷ்டப்பட்டு, ஒவ்வொரு படமும் நடித்தாலும், இப்படிப்பட்ட பாராட்டுகளும், ரசிகர்கள் முன்னிலையில் வாழ்த்தும் கிடைப்பது எங்களுக்கு வரப்பிரசாதம் தான். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பாராட்டுவதும், இப்பொழுதுள்ள திரையுலகில் நடக்குமா? என்று தெரியவில்லை. இது மீண்டும் தமிழ் சினிமாவிற்கு கிடைக்குமா என்றும் தெரியவில்லை. காரணம், சூழ்நிலைகள் இன்று மாறிவிட்டன.

ஆனாலும் இன்று அப்படி ஒரு விழா எடுத்தாலும் அதை ரசிகர்கள் முன்னிலையில் எடுங்கள் என்று தயாரிப்பாளர்களை வேண்டி, விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

"காதலிக்க நேரமில்லை' வெளியான காலத்தில், எல்லாமே பெரிய படங்களாக வெளியாயின. இந்தப் படம்தான் புதுமுகங்கள், நடித்த படம். இயக்குநர் ஸ்ரீதர் கடைசி காலத்தில் உடல்நலம் குன்றி பேசுவதில் சிரமம் ஏற்பட்டது. அதைக் கேள்விப்பட்டு அவரைஅவ்வப்போது போய் பார்த்து விட்டு வருவேன். "காதலிக்க நேரமில்லை' படம் வெளியாகி சுமார் 50 ஆண்டுகள் முடிந்ததையொட்டி, இயக்குநர் ஸ்ரீதருக்கு பெரிய விழா எடுக்க விரும்பினார் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன். இன்னும் சொல்லப்போனால், அவர் "காதலிக்க நேரமில்லை' படத்திற்காக இருமுறை விழா எடுத்தார். "எவ்வளவு தடவை அந்த படத்தைப் பார்த்திருப்பேன் என்று எனக்குத் தெரியாது. நான் தூங்கி எழும்போதெல்லாம் இந்தப் படத்தைதான் பார்ப்பேன்',என்று சொல்லும் மகேந்திரன், ஒருமுறை இயக்குநர் ஸ்ரீதர் உயிரோடு இருக்கும் போதே விழா எடுத்தார். அவர் காலஞ்சென்ற பின் ஒரு விழா எடுத்தார். முதல் விழாவில் "காதலிக்க நேரமில்லை' படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் என எல்லோரையும் அழைத்திருந்தார். அடுத்து எடுத்த விழாவில் இயக்குநர் ஸ்ரீதர் உள்பட பலர் இல்லை.

இங்கே இயக்குநர் ஸ்ரீதரின் மனைவி, தேவசேனா பற்றிச் சொல்லவேண்டும். பொறுமைசாலி மட்டும் அல்ல திறமைசாலியும் கூட. தேவசேனா இயக்குநர் ஸ்ரீதரை பார்த்துக் கொண்ட முறை மிகவும் சிறப்பானது. நான் அவர்கள் வீட்டுக்குச் சென்ற போதெல்லாம், அவர் ஸ்ரீதரை ஒரு குழந்தையைப் போல் பார்த்துக் கொண்டார். அவர் விருப்பத்தை நிறைவேற்ற எப்பொழுதும், அவர் ரெடி. கலியுகத்தில் இப்படி ஒரு மனைவி இருப்பாரா? என்று நினைக்கத் தோன்றும்.

முதல் முறையாக விழா காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் அன்று எல்லோரும் கலந்து கொண்டோம்.

இயக்குநர் ஸ்ரீதரும் வரவேண்டும் என்று எல்லோரும் விரும்பினோம். இதை கோரிக்கையாக அவர் மனைவி தேவசேனாவிடம் கேட்டுக் கொண்டோம். தேவசேனாவும், கண்டிப்பாக அவரை அழைத்து வருவேன் என்று சொன்னார். சொன்னபடியே இயக்குநர் ஸ்ரீதரை ஒரு சக்கர நாற்காலியில் அழைத்து வந்தார். எங்களுக்கு எல்லாம் அவர் எப்படி இருக்கிறார் என்று தெரியும். தெரியாதவர்களுக்கு ஸ்ரீதரை பார்த்ததும் மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் ஸ்ரீதருக்கு அந்த விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. அடுத்த நாள் என்னிடம் தொலைபேசியில் பேசிய தேவசேனா சொன்னார். அவருக்கு ஒரு புறத்தில் வருத்தம் இருந்ததாம். ""முன்பு போல் பேச முடியவில்லையே என்றும், நடந்து மேடைக்கு வர முடியவில்லையே'' என்று உள்ளுக்குள் சோகம் இருந்ததாம். மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகும், தன் படத்தை நினைவில் வைத்து கொண்டு பாராட்டுகிறார்களே என்று சந்தோஷப்பட்டாராம்.

அது மட்டுமல்ல, விழாவில் நாகேஷ், ரவிச்சந்திரன், வி.எஸ்.ராகவன், காஞ்சனா, ராஜஸ்ரீ உட்பட எல்லோரும் கலந்து கொண்டோம். நான் இயக்குநர் ஸ்ரீதரிடம் போய், "உங்களால் தான் இந்த பெயரும், புகழும் எங்களுக்குக் கிடைத்தது' என்று சொன்னேன். அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது என்று அவரது முகபாவனைகளில் இருந்து நான் தெரிந்து கொண்டேன்.

தொடர்ந்து நிறையப் படங்களில் நடித்தேன். அந்தப் படங்கள் எல்லாம் வெற்றி பெற்றன. அந்தப் படங்களின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு பல்வேறு பெரிய மனிதர்களிடம், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்களிடம், மற்றும் மத்திய, மாநில, விவிஐபிகளிடம் நான் பல முறை பரிசு பெற்று இருக்கிறேன்.

அது மட்டுமல்ல, அதுவும் பலமுறை, திரையரங்குகளில் பிரம்மாண்டமாக இந்த விழாக்கள் நடந்து இருக்கின்றன. ஆனாலும் "காதலிக்க நேரமில்லை' படம் போன்று வெள்ளி விழா அனுபவம் இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. அவ்வளவு இனிமையானமற்றும் மறக்க முடியாத அனுபவம் அது. என் வாழ்க்கையில், "காதலிக்க நேரமில்லை' முன் - பின் என்று தான் சொல்ல வேண்டும். அந்தப் படத்திற்கு முன் நடந்தவற்றைச் சொல்லிவிட்டேன். பின்பு நடந்தது என்ன?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com