நுரையீரல் இல்லாமல் வாழ்ந்தவர்
By DIN | Published On : 17th January 2021 06:00 AM | Last Updated : 17th January 2021 06:00 AM | அ+அ அ- |

உங்கள் வலது பக்க நுரையீரலை எடுக்க நேர்ந்தால், மொத்த நுரையீரலின் செயல் திறனில், 60 சதவீதம் குறைந்து விடும். உங்களது இடதுபக்க நுரையீரலை எடுக்க நேர்ந்தால், 40 சதவீத செயல் திறன் குறைய வாய்ப்புள்ளது. சில சமயங்களில், நுரையீரலின் ஒரு பகுதியை மட்டும் நீக்க வேண்டி இருக்கும். அது போன்ற சமயங்களில், எந்தப் பகுதி நுரையீரலை எடுக்கிறோமோ, அந்த நுரையீரலின் செயல்திறனில் மேல்பகுதி எனில், 40 சதவீதம், கீழ்ப்பகுதியை நீக்கினால், 60 சதவீதம், நடுப்பகுதியை மட்டும் நீக்கினால், 25 சதவீதம் செயல் திறன் குறைய வாய்ப்பு உள்ளது.
இரு நுரையீரலில் ஒன்றை நீக்கினால், நுரையீரலின் செயல்திறன் குறையுமே தவிர, வேறு எந்த தொந்தரவும் ஏற்படாது. ஆனால் இரண்டு நுரையீரலும் இல்லாமல் வாழ முடியுமா?
கனடாவை சேர்ந்த மெலிஸ்சா என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவை அடுத்து அவரை பரிசோதித்த டாக்டர்கள் நோய் பாதித்த நுரையீரலை அகற்றி விட்டு தானமாக பெற்று மாற்று நுரையீரல் பொருத்த முடிவு செய்தனர்.
இதற்கிடையே உடல் உறுப்புகள் செயல் இழப்பதை தடுக்கவும், அவரின் உயிரை காப்பாற்றவும் 2 நுரையீரல்களும் அகற்றப்பட்டு, சிறிய செயற்கை நுரையீரல் பெனாய்ட்டின் இதயத்துடன் பொருத்தப்பட்டது. நுரையீரல்கள் இன்றி செயற்கை நுரையீரலுடன் 6 நாள்கள் உயிர் வாழ்ந்தார். அதன் பின்னர் அவருக்கு நுரையீரல் தானமாக கிடைத்ததை அடுத்து பொருத்தப்பட்டன. தற்போது உடல் நலத்துடன் இருக்கும் அவர், உலகிலேயே நுரையீரல் இன்றி 6 நாள்கள் உயிர் வாழ்ந்த முதல் மனிதர் ஆவார்.