கலைகளின் வழியே விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டாரம், குண்டியந்தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் வ.தேவன்(58) 5-ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போதே தெருக்கூத்து மீது ஆர்வம் ஏற்பட்டு, படிப்பையும் பாதியில் நிற
கலைகளின் வழியே விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டாரம், குண்டியந்தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் வ.தேவன்(58) 5-ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போதே தெருக்கூத்து மீது ஆர்வம் ஏற்பட்டு, படிப்பையும் பாதியில் நிறுத்தி விட்டு தெருக்கூத்து நடத்தும் கலைஞராகி இருக்கிறார் வ.தேவன். மாரியம்மன் தெருக்கூத்து நாடக சபா என்ற ஒன்றையும் நடத்தி வரும் இவர் "கடந்த 45 ஆண்டுகளாக இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருக்கூத்துக்களைத் தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் நடத்தியிருக்கிறேன்' என்றும் பெருமையோடு கூறுகிறார்.

காஞ்சிபுரத்தில் கலை பண்பாட்டுத்துறை மண்டல இயக்குநர் அலுவலகத்துக்கு 
வந்திருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்: 

குடிப்பழக்கத்தின் தீமைகள், வரதட்சணைக் கொடுமைகள், தீண்டாமை ஒழிப்பு, சுற்றுப்புற சுகாதாரம்,பெண்ணின் திருமண வயது  உள்பட  சமுதாய விழிப்புணர்வு தெருக்கூத்துக்களை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரிகளில்  நடக்கும் ஆண்டு விழாக்கள், அரசு விழாக்கள் ஆகியனவற்றில் தெருக்கூத்து நடத்துகிறோம். கிராமங்களில் ஆடி மாதங்களில் நடக்கும் அம்மன் கோயில் திருவிழாக்கள், தீமிதித் திருவிழாக்கள், காப்புக்கட்டு உற்சவங்கள் போன்றவற்றில் எங்களின் தெருக்கூத்தைத்தான் இன்றும் மக்கள் விரும்பி பார்க்கிறார்கள்.

மாரியம்மன் பிறப்பு,மகாபாரதம், ராமாயணம், இரணியன் வரலாறு, முருகப்பெருமானின் கதை,அர்ச்சுனன் தபசு என ஆன்மிகம் தொடர்பான பல்வேறு தெருக்கூத்துக்களையும் அதிகமாகக் கிராமங்களில் நடத்தி வருகிறோம். இசைக் கலைஞர்கள் உட்பட மொத்தம் 16 பேர் எனது குழுவில் உள்ளனர். கதையைச் சேகரித்து வைத்துக் கொண்டும், அதைப் பாடியும்,நடித்தும்,வசனமாகப் பேசியும் தெருக்கூத்து நடத்துகிறோம். எங்களின் தெருக்கூத்தை வேடிக்கைப் பார்ப்பவர்களுக்குக் கதை மிகவும் எளிமையாக மனதில் பதிந்து விடும்.

ஒரு சில கிராமங்களில் தொடர்ந்து 10 நாள்கள் நடக்கும் திருவிழாவின் போது எங்கள் குழுவினர் அங்கேயே தங்கியிருந்து கூத்து நடத்தி, கிராமத்து மக்களின் பாராட்டுகளைப் பெறுவோம். அர்ச்சுனன் தபசு போன்ற நிகழ்வுகளில் சுமார் 40 முதல் 50 அடி உயரமுள்ள மரத்தில் துணி அல்லது குச்சி மூலம் கட்டப்பட்டிருக்கும் ஏணி வழியாக ஒவ்வொரு படியாகப் பாட்டுப்பாடிக் கொண்டே ஏறி, உச்சிக்கு சென்று அங்கு வழிபாடு செய்து விட்டு இறங்கி வருவோம். தெருக்கூத்து நடத்தும் போது நாங்கள் அணிந்து கொள்ளும் அலங்கார உடைகள், கிரீடம் ஆகியனவற்றின் மொத்த எடை சுமார் 50 கிலோ வரை இருக்கும். அதற்காகச் செலவாகும் தொகையும் சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்பு பெறும்.மேக்கப் போடுவதற்கு சுமார் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகும்.

தமிழகத்திலும் புதுதில்லி, அமெரிக்கா, சிங்கப்பூர், மஸ்கட் போன்ற நாடுகளிலும் நிகழ்ச்சி நடத்தி பாராட்டு பெற்றிருக்கிறேன்.கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலைச்சுடர்மணி விருது,தமிழ் இலக்கிய வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது, அனைத்திந்திய கிராமியக் கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் கிராமிய கலைத் திலகம் விருது என்பன உட்படப் பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறேன்.

கடந்த 45 ஆண்டுகளில் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருக்கூத்துக்களை நடத்தியிருக்கிறேன். கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டோம்.தமிழக அரசு நிவாரணமாக ரூ.2 ஆயிரம் தந்து உதவியது.எனது உறவினர்கள் பலரும் தெருக்கூத்து நடத்தி வருகின்றனர். அரசு எங்களைப் போன்ற பாரம்பரியக் கலைஞர்களுக்கு இக்கலை அழிந்து விடாமல் பாதுகாக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த அதிகமான வாய்ப்புகள் தரவேண்டும் எனவும் வ.தேவன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com