விடாமுயற்சியின் நாயகன்

சர்வதேச டென்னிஸ் உலகில் விடாமுயற்சி, தன்னம்பிக்கையின் அடையாளமாக விளங்குகிறார் நட்சத்திர வீரரும், உலகின் நம்பர் ஒன் வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்.
விடாமுயற்சியின் நாயகன்


சர்வதேச டென்னிஸ் உலகில் விடாமுயற்சி, தன்னம்பிக்கையின் அடையாளமாக விளங்குகிறார் நட்சத்திர வீரரும், உலகின் நம்பர் ஒன் வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்.

கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, வாலிபால், பாட்மிண்டன் என பல்வேறு விளையாட்டுகள் இருந்தாலும், டென்னிஸ் விளையாட்டுக்கு என தனி பாரம்பரியம் உள்ளது. டென்னிஸ் பயிற்சி பெறவும், அதற்கான ராக்கெட், பந்துகள், உபகரணங்களை வாங்க அதிக தொகை தேவைப்படுகிறது. இந்நிலையில், உலகின் நளினமான, கெளரவமான விளையாட்டாக கருதப்படுவது டென்னிஸ் ஆகும்.

வேகம், நிதானம், பொறுமை, நீடித்த தன்மை, வலிமை போன்றவை ஒருங்கிணைந்து ஆடினால் தான் டென்னிஸ் விளையாட்டில் கோலோச்ச முடியும். அமெரிக்கா, ஐரோப்பிய ஆசிய ஆஸ்திரேலிய கண்டங்களைச் சேர்ந்த வீரர், வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். குறிப்பாக கடந்த 17 ஆண்டுகளாக ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபேல் நடால், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் அடங்கிய "பிக் த்ரீ' எனப்படும் மூவரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.


கடந்த 2003 விம்பிள்டன் போட்டி முதல் 2021 பிரெஞ்சு ஓபன் போட்டி வரை மூவரின் ஆதிக்கம் தொடர்கிறது. மூவரும் இணைந்து இதுவரை கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் உள்பட 275 சர்வதேச பட்டங்களை கைப்பற்றியுள்ளனர்.

அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்:

விம்பிள்டன், யு.எஸ் ஓபன், பிரெஞ்சு ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் எனப்படும் கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ரோஜர் பெடரர் , ரபேல் நடால் தலா 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், ஜோகோவிச் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளனர். புல்தரைப் போட்டியான விம்பிள்டனில் பெடரரும், களிமண் தரை போட்டியான பிரெஞ்சு ஓபனில் நடாலும், ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சும் அதிக முறை பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய யுகோஸ்லேவியாவும், தற்போது செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் 1987-இல் எளிய குடும்பத்தில் பிறந்த ஜோகோவிச், நான்கு வயதிலேயே டென்னிஸ் மட்டையை பிடிக்கத் தொடங்கி விட்டார். 14 வயதில் முதன்முறையாக ஐரோப்பிய சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச், செர்பியா, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலிய மொழிகளைப் பேசுவதில் வல்லவர்.

பெடரர், நடாலின் ஆதிக்கம் வலுவாக இருந்த காலத்தில் தான் கால் ஊன்றத் தொடங்கினார் ஜோகோவிச். கடந்த 2008-இல் ஆஸ்திரேலிய ஓபனில் வென்று முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். 2009-ஆம் ஆண்டில் 10 போட்டிகளில் இறுதிச் சுற்று முன்னேறி 5 பட்டங்களை வென்றார் ஜோகோவிச்.
ஏறுமுகத்தில் இருந்த ஜோகோவிச்சுக்கு 2011-மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. ஆஸி. விம்பிள்டன், யுஎஸ் ஓபன் என 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார். அதோடு 5 ஏடிபி மாஸ்டர் பட்டங்களையும் கைப்பற்றினார்.

2012-இல் உலகின் நம்பர் ஒன் வீரர்: இதன் தொடர்ச்சியாக 2012-இல் முதன்முறையாக உலகின் நம்பர் ஒன் வீரர் அந்தஸ்தைப் பெற்றார். 2016-இல் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் நடப்பு சாம்பியன் என்ற சிறப்பான நிலையைப் பெற்றிருந்தார். தொடர்ந்து 2018-ஆம் ஆண்டில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் சறுக்கல் ஏற்பட்டது.எனினும் அதில் இருந்து மீண்டும் 2019, 2020, 2021 ஆண்டுகளில் தொடர்ந்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றினார்.

அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவர் என்ற பெருமையை ரோஜர் பெடரர் பெற்றுள்ளார். இந்நிலையில் அண்மையில் பாரீஸில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி நடாலின் 19 கிராண்ட்ஸ்லாம்அதை சமன் செய்துள்ளார் ஜோகோவிச். இந்த வெற்றி அவருக்கு எளிதில் கிட்டவில்லை.

அரையிறுதியில் களிமண் தரை மன்னனான ரபேல் நடாலை நான்கு செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார். இதன் மூலம் பிரெஞ்சு ஓபன் போட்டியில் நடாலை 2 முறை வென்ற வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

இறுதி ஆட்டத்தில் கிரேக்க இளம் வீரர் ஸ்டெஃபனோ சிட்சிபாûஸ எதிர்கொண்டார். 22 வயதே ஆன சிட்சிபாஸிடம்

முதலிரண்டு செட்களை இழந்தார். அதன் பின் சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அனுபவம் மற்றும் விடாமுயற்சியுடன் 4 மணி நேரம், 11 நிமிடங்கள் போராடி அடுத்த 3 செட்களை கைப்பற்றி பட்டத்தையும் தனதாக்கிக் கொண்டார். முதலிரண்டு செட்களை இழந்து பின் அடுத்த 3 செட்களை கைப்பற்றி ஆட்டத்தை வெல்வது இது 6-ஆவது முறையாகும்.

இத்தகைய சிறப்பான வெற்றியோடு, 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் இருமுறை வென்ற முதலாவது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் நிகழ்த்தியுள்ளார் ஜோகோவிச்.

பெடரர், நடால் ஆகியோர் 20 பட்டங்களின் சாதனையை சமன் செய்ய அடுத்து வரும் விம்பிள்டன், யு.எஸ் ஓபன் போட்டிகளில் ஜோகோவிச்சுக்கு வாய்ப்பு காத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

டேவிஸ் கோப்பையில் அதிக முறை செர்பியா வெல்ல ஜோகோவிச்சின் சிறப்பான ஆட்டம் ஒரு காரணமாகும். இந்நிலையில் அவரை தங்கள் நாட்டுக்கு வந்து ஆடும்படி இங்கிலாந்தில் அழைப்பு விடப்பட்டது. அதிக பணம் தருவதாகவும் அவரிடம் கூறப்பட்டது. ஆனால் செர்பியாவுக்காக ஆடுவதே தனக்கு கெளரவம் எனக்கூறி அதை நிராகரித்து விட்டார் ஜோகோவிச்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com