ரத்தத்தின் ரத்தமே... - 23

ஒரு நோயாளி டாக்டரைச் சந்தித்து முடித்தவுடன் நாலைந்து முக்கியமான  ரத்த டெஸ்ட்டுகளை செய்யச் சொல்லி எழுதிக் கொடுப்பார் .
ரத்தத்தின் ரத்தமே... - 23

ஒரு நோயாளி டாக்டரைச் சந்தித்து முடித்தவுடன் நாலைந்து முக்கியமான  ரத்த டெஸ்ட்டுகளை செய்யச் சொல்லி எழுதிக் கொடுப்பார். ரத்தத்தில் ஆயிரக்கணக்கான டெஸ்ட்டுகள் இருந்தாலும் அடிக்கடி செய்ய சொல்வது 5 டெஸ்ட்டுகள் தான். 

1. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு
2. ரத்தத்தில் உப்பின் அளவு
3. ரத்தத்தில் கொழுப்பின் அளவு 
4. ரத்தத்தில் இரும்புச்சத்தின் அளவு 
5. ரத்தத்தில் தைராய்டு ஹார்மோன் அளவு

அதிலும் முதல் 2 டெஸ்ட்டுகளைத்தான் அடிக்கடி செய்யச் சொல்லுவார். ரத்தத்தில்  சர்க்கரையின் அளவு - இது அன்றாடப் பிரச்னை. கூடினாலும் தொல்லை; குறைந்தாலும் தொல்லை.  அதனால் அடிக்கடி டெஸ்ட் செய்து தான் ஆக வேண்டும். அடுத்தது ரத்தத்தில் உப்பின் அளவு - இதுவும் அப்படித்தான். கூடினாலும் பிரச்னை; குறைந்தாலும் பிரச்னை. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் வெளியே தெரிவிக்காமல் "சைலன்ட் கில்லர்'  என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதுபோல அமைதியாக இருந்து உடலுக்கு அதிக தொல்லையை தரக்கூடியது உப்பு. ஆனால் உப்பு சம்பந்தப்பட்ட ரத்த டெஸ்ட்டுகளை நாம் அடிக்கடி செய்வதில்லை.

சர்க்கரையும், உப்பும் இல்லாமல் வாழ முடியாது என்று சொல்கிற அளவிற்கு இவை இரண்டும் நமது உடலோடும் உயிரோடும் வாழ்வோடும் சேர்ந்து பயணம் செய்யக்கூடிய உணவுப் பொருள்களாக இருக்கின்றன. உடலில் அதிக அளவு சர்க்கரையினால் அதிகமாக அவதிப்பட்ட சர்க்கரை வியாதிக்காரர்கள், சர்க்கரையை பார்க்காமல், சர்க்கரையை சேர்க்காமல், சர்க்கரையை உபயோகிக்காமல் இருக்க பழகிக் கொள்கிறார்கள். ஆனால்,  உப்பு விஷயத்தில் அப்படி இருக்க முடியாது. உப்பு சேர்க்காமல், உணவு தயாரிப்பதென்பது மிகவும் கடினம். மேலை நாடுகளில் ரொட்டியை விட்டால் வேறு ஐயிட்டமே கிடையாது. ஆனால் உலகிலேயே காலை உணவுக்கு நூற்றுக்கணக்கான ஐயிட்டங்கள் கிடைக்கக்கூடிய ஒரே இடம் தென்னிந்தியா மட்டும்தான். காலை உணவுக்கு மட்டுமே ரவா இட்லி , சாம்பார் இட்லி, மினி இட்லி, இட்லி, தோசை, பூரி, பொங்கல் ,கேசரி, உப்புமா, செட் தோசை மசால் தோசை, ரவா தோசை, ஊத்தப்பம், இடியாப்பம்,  புட்டு, அடை, மெதுவடை, மசால்வடை, கிச்சடி என சொல்லிக்கொண்டே போகலாம். 

மதிய உணவுக்கு சாதம், சாம்பார், வத்தக்குழம்பு, காரக்குழம்பு,மோர்க்குழம்பு,  ரசம், மோர், கூட்டு, பொரியல், அப்பளம், ஊறுகாய்  என சொல்லிக் கொண்டே போகலாம். மேற்கூறிய எல்லா உணவு வகைகளுக்கும், தேவையான அளவு உப்பு, சேர்த்துத்தான் ஆகணும். உப்பு சேர்க்காமல், தயாரிக்கவும் முடியாது. தயாரித்து உபயோகமும் இல்லை. உடலுக்கு உயிர் கொடுப்பது உப்புதான். உணவில் சரியான அளவில் உப்பு சேர்க்கப்பட்டால், அந்த உணவின் ருசியே தனிதான். உணவுகளில் சரியான அளவில் உப்பு சேர்க்கத் தெரியாமல் தானே, நிறைய பெண்கள், இன்னும் சமையலறையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மனித உடலில் நிறைய உப்புகள் இருக்கின்றன. ஆனால் இவை எல்லாவற்றிலும் அன்றாடம் நாம் உபயோகிக்கும் சோடியம் குளோரைடு என்று சொல்லக் கூடிய உப்புதான், மிக முக்கியமானதாகவும், மிக அதிகமானதாகவும் இருக்கின்றது. மொத்த உடல் எடையில் சுமார் 0.4 சதவீதம் உப்பு, உடலில் பரவியிருக்கின்றது. அதாவது 60 கிலோ எடையுள்ள ஒருவனின் உடலில் 240 கிராம் உப்பு (சுமார் 48 டீஸ்பூன்) இருக்கின்றது. நமக்கு வியர்வை வெளிவர வெளிவர உப்பும் குறைந்து கொண்டே வரும். மறுபடியும் சாப்பிட சாப்பிட உப்பு சேர்ந்து கொண்டே வரும்.
இந்தியர்கள் உணவை காரசாரமாக ருசித்து சாப்பிட்டுப் பழகியவர்கள். அதனால் இந்தியர்களுக்கு உப்பு மீது அதிக ஆர்வம், ஆசை உண்டு. உப்பு போடாத உணவுகள் ஒன்றைக்கூட தொடமாட்டார்கள். சாப்பாட்டில், சரியான அளவில் உப்பு இல்லை என்பதற்காக, மனைவியை விவாகரத்து செய்தவர்கள் கூட இருக்கின்றார்கள்.

உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்வதில், முதலிடம் வகிக்கும் நாடு சீனா என்று சொல்லலாம். அந்த நாட்டில் வாலிப வயதுள்ளவர்கள், தினமும் 10 கிராமுக்கு மேல் உப்பை உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த அளவு, ஒரு நாளைக்கு இவ்வளவுதான் உபயோகித்தாக வேண்டும் என்று சொல்வதை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

உப்பு அதிகமாக சேர்க்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட உணவு கனடா நாட்டில்தான் அதிகம். எகிப்து நாட்டில், உணவில் உப்பு அதிகமாக சேர்ப்பதில்லை. ஒரு நாளைக்கு உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்ளும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது சீனா. 2). மாண்டி நெக்ரோ (தென்கிழக்கு ஐரோப்பா) 3). போர்ச்சுகல் 4). பெனின் (மேற்கு-ஆப்ரிக்கா) 5). இத்தாலி 6). இந்தியா 7). அமெரிக்கா 8). ஆஸ்திரேலியா 9). நியூசிலாந்து 10).கனடா 11). இங்கிலாந்து.

நமது உடலுக்கு தினமும் தேவைப்படும் உப்பின் அளவு வெறும் 2 கிராம் மட்டுமே. உலக சுகாதார நிறுவனம், ஒரு நாளைக்கு 5 கிராம் வரை உப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று பரிந்துரை செய்கின்றது. ஆனால், உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த 5 கிராமை விட 2 மடங்கு அதிகமாக இந்தியர்கள் உப்பை உபயோகிக்கிறார்கள்.

உப்பின் ரசாயனப் பெயர் சோடியம் குளோரைடு ஆகும்.  உப்பில் 40 சதவீதம் சோடியம் இருக்கிறது.  சாப்பிடும் உணவில், சோடியம் அளவு எவ்வளவு இருக்கிறது என்பது  தெரிய வேண்டும். இதைத் தெரிந்துகொண்டால்,  தினமும் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவை கூட்டவோ, குறைக்கவோ செய்ய முடியும். வெளியில் தெரியாமல், ரத்தத்தில் ஒளிந்திருக்கும் பொருள் தான் சோடியம். ரத்தத்தில் சோடியம் அளவை குறைக்க வேண்டுமென்றால்; பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவுகள், பாக்கெட், டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சாதாரணமாக  வீட்டில் தயாரிக்கும் உணவுகளிலேயே சோடியம் அதிக அளவில் சேர்ந்திருக்கிறது. உப்பு அதிகம் சேர்த்த எந்த உணவுப் பொருள்களையும் வாங்குவதைக் குறையுங்கள்.

சோடியம் உடலுக்கு மிகவும் தேவையான ஒரு பொருள். நமது உடலில் இருக்கும் 2 சிறுநீரகங்களே . நமது உடலில் சோடியம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை கட்டுப்படுத்துகிறது. உடலில் அதிக உப்பு இருந்தால், சிறுநீரகங்கள் அந்த அதிக உப்பை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடுகிறது. ஆனால்  உணவு மூலம் நாம் சேர்த்துக் கொள்ளும் உப்பு  அதிகமாக இருந்தால் சிறுநீரகத்தால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விடும். எனவே இந்த அதிக உப்பு ரத்தத்தில் சேர்ந்துவிடும். ரத்தத்தில் உப்பு அதிகமானால் ரத்தம் உடலிலுள்ள தண்ணீரை உறிஞ்சும். அதிக உப்பு சாப்பிட்டால்  அதிக தண்ணீர் உடலில் சேரும். அதிக தண்ணீர் ரத்தத்தின் அளவை அதிகப்படுத்திவிடும். இதனால் ரத்த அழுத்தம்  அதிகமாகிவிடும்.

நமது உடலிலுள்ள ரத்தத்தின் குணத்தை, தரத்தை, நிர்ணயிப்பது நமது ரத்தத்திலுள்ள உப்பின் அளவே. மூளையில் ஏற்படும் சிக்னல்களை மூளையிலிருந்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்பும் வேலையில் உப்பின் பங்கு மிக அதிகம்.

நமது ரத்தத்திலுள்ள உப்பின் அளவு 1 லிட்டருக்கு 9 கிராம் ஆகும். 4 லிட்டர் ரத்தம் உள்ள ஒருவரின் ரத்தத்தில் 36 கிராம் உப்பு இருக்கும். நமது ரத்தத்தில் உப்பு இருக்கிறது. நமது கண்ணீரில் உப்பு இருக்கிறது. நமது வியர்வையில் உப்பு இருக்கிறது. கடல்நீரில் 1 லிட்டருக்கு 35 கிராம் உப்பு இருக்கிறது. ரத்தத்தில் சோடியம் எவ்வளவு இருக்கிறது என்பதை நாம் ரத்த டெஸ்ட் மூலம் கண்டு
பிடித்துவிடலாம்.

பாக்கெட்டுகளில் சால்டடு என்று எழுதப்பட்ட வேர்க்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா, சிப்ஸ் முதலியவைகளில் உப்பு அதிகம் இருக்கிறது. அநேக பழங்களில் உப்பு குறைவாகத்தான் இருக்கிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், முட்டை முதலியவைகளில் இயற்கையாகவே உப்புச் சத்து அதிகம் இல்லை. ஒரு சின்ன ஸ்பூன் ஊறுகாயில் சுமார் 299 மில்லி கிராம் சோடியம் இருக்கிறது. இதுதான் மிக மிக ஆபத்தானது. சமைக்கும்போது அதிக அளவில் உப்பை சேர்க்காதீர்கள். உப்பு குறைவான உணவு சாப்பிட்டு பழகினால், முதலில் வெறுப்பாகவும், கோபமாகவும் இருக்கும். உணவு பிடிக்காது. ஆனால் விடாதீர்கள். தொடர்ந்து உப்பு குறைவாகவே சாப்பிட்டு பழகுங்கள். சில வாரங்கள் கழித்து உங்கள் நாக்கிலுள்ள சுவை அரும்புகள், தானாகவே சரிசெய்து கொள்ளும்.

நமது உடலிலிருந்து சிறுநீர், கண்ணீர், வியர்வை இந்த மூன்றின் மூலமாக, சோடியம் உப்பு தினமும் வெளியே போய்க்கொண்டேதான் இருக்கும். இந்த மூன்றும் பெரும்பாலும் பாட்டாளிகளிடமும், கடின உழைப்பாளிகளிடமும், ஏழை வர்க்கத்தினரிடமும் தான் அதிகமாக இருக்கும். எனவே இவர்களுக்கு அதிக உப்பு, உடலில் சேராது. தினமும் இயற்கையாகவே வெளியேறிக் கொண்டிருக்கும். பிரச்னையில்லை. ரத்தத்தில் உப்பை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள். வளமோடு வாழுங்கள்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com