ரத்தத்தின் ரத்தமே... - 24

அவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்தது. அதனால அவருடைய ஈரல் கெட்டுப் போச்சு.
ரத்தத்தின் ரத்தமே... - 24

"அவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்தது. அதனால அவருடைய ஈரல் கெட்டுப் போச்சு.'
"இவர் குடிச்சே இவருடைய ஈரல் வீணாப் போச்சு.'
"அவர் வாயைக் அடக்குவதில்லை. சாப்பாடு விஷயத்துல கட்டுப்பாடு கிடையாது. அவர் இஷ்டத்துக்கு எதை வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் சாப்பிடுறார். அதனால அவரோட ஈரல் சுத்தமா வேலை பாக்கலை' வேற ஈரல்தான் மாத்தணுமாம்.'
இப்படி அங்கங்கே பேசுவது உங்கள் காதுகளில் விழுந்திருக்கும். "ஈரல் ஈரல்' என்று அவர்கள் சொல்வது எல்லாமே நமது உடலிலுள்ள கல்லீரலைத் தான். மனித உடலில் வயிற்றின் வலது மேற்பகுதியில் சுமார் 1 கிலோ எடையுடனும் சுமார் 15 செ.மீ. நீளத்துடனும் முக்கோணவடிவில் இருக்கும் மிகப்பெரிய உறுப்புதான் கல்லீரல் ஆகும்.
நாம் உயிர் வாழ உணவு கண்டிப்பாக தேவை. ஒரு நாளில், காலையிலிருந்து இரவு வரை, அவரவர் வசதிக்கேற்ப, பல வகைகளில் நாம் உணவை எடுத்துக் கொள்கிறோம். காலை உணவாக சில வகைகள், மதிய உணவாக சில வகைகள், இரவு உணவாக சில வகைகள். இதற்கிடையே காபி, டீ, பால், மோர், லஸ்ஸி, குளிர்பானங்கள், துரித உணவுகள், நொறுக்குத் தீனிகள் எனப் பலவாறாக நாம் சாப்பிடுகிறோம். இன்று நாம் சாப்பிட்ட உணவுகளில் நல்ல பொருள்கள் என்னென்ன இருக்கின்றன. கெட்ட பொருள்கள் என்னென்ன இருக்கின்றன என்று கேட்டால் நமக்குச் சொல்லத் தெரியாது. வயிறு பசிக்கிறது ஏதோ கிடைக்கிறது சாப்பிடுகிறோம். அவ்வளவுதான். நாம் எது சாப்பிட்டாலும் சரி, எது அருந்தினாலும் சரி வாயிலேயே பாதி அரைக்கப்பட்டு இரைப்பையில் அது கூழ் கூழாக ஆக்கப்பட்டு நன்றாக ஜீரணிக்கப்பட்டு இரைப்பை மூலமாகவும் சிறுகுடல் மூலமாகவும் ரத்தத்தில் சேர்ந்து விடுகிறது.
இரைப்பையிலிருந்தும் குடலிலிருந்தும் வெளிவரும் ரத்தம் முழுவதும் கல்லீரலுக்குள் வந்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். எனவே உணவுக் கூழிலுள்ள சத்துப் பொருள்கள் வைட்டமின்கள் தாதுப்பொருள்கள் நல்ல பொருள்கள், கெட்ட பொருள்கள் என எல்லாமே ரத்தக் குழாய்கள் மூலமாக கல்லீரலுக்குள் வந்து சேர்கிறது. நாம் சாப்பிடும் உணவிலுள்ள நல்ல பொருள்களையும், கெட்ட பொருள்களையும் தனித்தனியாக பிரித்தெடுப்பது எது? நமது உடலில் எங்கு அந்த வேலை நடக்கிறது? கழிவு நீரகற்று வாரியம் போல் நமது உடலில் அந்த வேலையைச் செய்யும் உறுப்பு எது? அதுதான் கல்லீரல்.
உங்கள் உடலிலுள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவதும் கல்லீரல் தான். நாம் சாப்பிடும் உணவு, முழுமையாக, நல்ல முறையில் ஜீரணமாக தேவைப்படும் பித்த நீரை உற்பத்தி செய்வதும் கல்லீரல் தான். உங்கள் உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்க "க்ளைகோஐன்' என்ற வடிவத்தில் சர்க்கரையை சேமித்து வைத்திருப்பதும் கல்லீரல்தான். நாம் சாப்பிடும் உணவிலுள்ள விஷப்பொருள்களை, முறியடித்து, செயலற்றதாக்கி, உடலை விட்டு வெளியே அனுப்பும் வேலையைச் செய்வதும் கல்லீரல்தான்.
உடலிலுள்ள மொத்த ரத்தத்தில் 10 சதவீதம் ரத்தம், எப்பொழுதும் கல்லீரலில் இருக்கும். சில நேரங்களில் நாம் சாப்பிடும் சில உணவுகளே, உடலுக்கு உபயோகமான பின், சிதைந்து சிதைந்து கடைசியில் விஷப்பொருளாக மாறிவிடுகிறது.
இரைப்பையிலிருந்தும், குடலிலிருந்தும், உணவிலிருந்தும் பிரிக்கப்பட்ட வைட்டமின்கள், சத்துப் பொருள்கள், தாதுப்பொருள்கள் இன்னும் பல நல்ல கெட்ட பொருள்கள் ரத்தத்தின் மூலமாக நேராக கல்லீரலுக்கு வருகிறது. உடலின் மற்ற இடங்களுக்கு போவதற்கு முன்னால் இந்த சத்து நிறைந்த ரத்தம் முதலில் கல்லீரலுக்கு வந்து அங்கு கொஞ்ச நேரம் தங்கியிருக்கிறது. பின் கல்லீரலிருந்து உடலுக்குத் தேவையான சத்துப் பொருட்கள் ரத்தம் மூலம் உடலின் மற்ற பாகங்களுக்குப் போய்ச் சேருகிறது. கெட்ட பொருள் கழிவுப் பொருள் போன்றவை பித்தநீருடன் கலந்து குடல் வழியாக மலத்தில் சேர்ந்து வெளியே வந்துவிடுகிறது. இன்னும் சில கழிவுப் பொருட்கள் ரத்தத்தின் வழியாக சிறுநீரகத்துக்குப் போய் அங்கிருந்து சிறுநீரோடு சேர்ந்து வெளியே வந்துவிடுகிறது.
உங்களுக்குத் தெரியாமல் நீங்கள் ஏதாவது நச்சுத்தன்மை உள்ள உணவுப்பொருள்களை ஒருவேளை சாப்பிட நேர்ந்தால் கல்லீரல் அந்த உணவுப் பொருளிலுள்ள விஷத்தை முறித்து பயனற்றதாக்கி செயலற்றதாக்கி உடலிலிருந்து வெளியேற்ற முயற்சி செய்யும். அதற்காக கல்லீரல் பார்த்துக் கொள்ளும் என்று கண்டதையும் சாப்பிடாதீர்கள்.
நீங்கள் தலைவலிக்கு ஒரு மாத்திரை சாப்பிட்டால் கூட கல்லீரல் அந்த மாத்திரையிலுள்ள முக்கிய தேவையான பொருளை மட்டும் தனியாக பிரித்து உடலுக்கு அனுப்பும். தேவையில்லாததை உடலுக்கு வெளியே அனுப்பும்.
ஒரு நிமிடத்துக்கு சுமார் 1400 மில்லி லிட்டர் ரத்தத்தை கல்லீரல் வடிகட்டி சுத்தம் செய்து கொண்டே இருக்கிறது. ரத்தத்தை வடிகட்டி சுத்தம் பண்ணும் இந்த வேலையை செய்ய சுமார் முப்பதாயிரம் கோடி சிறப்பு செல்கள் இதற்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இன்றைக்கு தினம், தினம், புதிது புதிதாக ரசாயனப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு, நாம் அதை பல்வேறு வித உணவுகளாக உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த மாதிரி நவீன, பயங்கரமான ரசாயனப் பொருள்களையெல்லாம் பிற்காலத்தில் சந்திக்க வேண்டியது வரும் என்று முன்பே தெரிந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனித உடலில், இயற்கை என்னும் சக்தி கல்லீரலை உருவாக்கியிருக்கிறது.
கல்லீரல் இல்லையென்றால் ரத்தம் உறையாது. ரத்தம் உறையவில்லையென்றால் உயிர் வாழ முடியாது. நமது உடலில் கல்லீரல் செய்யும் வேலைகள் சுமார் 500-க்கும் மேலிருக்கும் என்று சொல்லப்படுகிறது. கல்லீரல் இல்லை என்றால் அதன் வேலையை எப்படி யார் பார்ப்பது என்பது கேள்விக்குறியே. இன்றைய தேதியில் கல்லீரலின் வேலைகளைப் பார்க்க உடலில் வேறு ஒரு உறுப்பு கூட கிடையாது. இயற்கை உறுப்பும் கிடையாது ; செயற்கை உறுப்பும் கிடையாது. பழுதடைந்த சிறுநீரகத்தைப் பாதுகாக்க , செயற்கை சிறுநீரகம் இருக்கிறது. அந்த மாதிரி கல்லீரலுக்கு எந்த கருவியும் கிடையாது. கல்லீரலின் வேலையை எந்தக் கருவியும் பார்க்கவும் முடியாது.

ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பதில் கல்லீரலின் பங்கு மிக மிக முக்கியம். ரத்தத்தில் கலந்திருக்கும் அநேக ரசாயனப் பொருட்களின் அளவை கல்லீரல் தான் கண்ட்ரோல் செய்கிறது.

கல்லீரல் ஜீரணத்துக்குப் பயன்படும் ஒரு முக்கியமான உறுப்பும்கூட.

மூளையைப் போல், கல்லீரலுக்கும் இரண்டு வழிகளில் ரத்த சப்ளை கிடைக்கிறது.

1.இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் முதலியவைகளிலிருந்து ஒரு ரத்தக் குழாயும்
2. இதயத்திலிருந்து நேராக கல்லீரலுக்கு, ஆக்ஸிஐன் நிறைந்த மற்றொரு ரத்தக் குழாயும் இருக்கிறது.

கல்லீரலின் முக்கியமான​ வேலைகள்

1. ஜீரணத்திற்கு மிகவும் பயன்படும் பித்தநீரை தயாரிக்கிறது.
2.பிலிரூபின், கொலஸ்ட்ரால் (கொழுப்பு), ஹார்மோன்கள், மருந்துகள், ரசாயனப் பொருள்கள், நச்சுப் பொருள்கள் முதலியவைகளை வெளியேற்றுகிறது.
3.மாவுச்சத்து, புரதம், கொழுப்பு ஆகிய மூன்றையும் வளர்சிதை மாற்றம் செய்து, பிரித்துக் கொடுக்கிறது.
4. உடலுக்குப் பயன்படும் என்ûஸம்களை செயல்படுத்தி ஊக்குவிக்கிறது.
5.க்ளைகோஜன், வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் முதலியவைகளை சேமித்து வைக்கிறது.
6.அல்புயூமின் போன்ற புரதச்சத்துக்களை உருவாக்குகிறது.
7. ரத்தம் உறைவதற்குத் தேவையான பொருட்களை உருவாக்குகிறது.
8.கல்லீரலிலுள்ள சிறப்பு செல்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து உருவாகும் விஷத்தன்மை மிகுந்த அம்மோனியாவை விஷத்தன்மை குறைந்த யூரியாவாக மாற்றி ரத்தத்துக்கு அனுப்பிவிடுகிறது. ரத்தம் இந்த யூரியாவை சுமந்து கொண்டு சிறுநீரகங்களில் கொண்டுபோய் விடுகிறது. சிறுநீரகம் சிறுநீர் வழியாக யூரியாவை உடலிலிருந்து வெளியேற்றுகிறது.

ரசாயன கலப்படம் இல்லாத இயற்கையான உணவுகளை சாப்பிட்டு கல்லீரலுக்கு அதிக வேலை கொடுக்காமல், கல்லீரலை மிக அருமையாக பாதுகாத்து வந்த நாம், இன்று, கலப்பட , ரசாயன, மசாலா உணவுகளால் கவர்ந்திழுக்கப்பட்டு வண்ணமயமான உணவுகளிலும், கல்லீரலை தினமும் காயப்படுத்தி வருகிறோம். 24 மணி நேரமும் ரத்த சப்ளையுடன், ஓய்வில்லாமல் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கும் கல்லீரலைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

1). கல்லீரலுக்கு முதல் எதிரியான மதுவை நிறுத்துங்கள்
2). செயற்கை சர்க்கரைப் பொருட்களை உணவில் சேர்க்காதீர்கள்
3). உணவில் உப்பைக் குறையுங்கள்
4).எண்ணெய் உபயோகித்து வறுத்த, பொரித்த, தாளித்த உணவுப் பொருள்களைக் குறையுங்கள்
5). இறைச்சி வகை உணவுகளை குறையுங்கள்
6). குளிரூட்டப்பட்ட கலர் பானங்களை தவிருங்கள்
7). உடல் அதிக எடை இருந்தால் குறையுங்கள்
8). சோம்பேறித்தனமாக இருக்காதீர்கள்.

மேற்கூறியவைகளை நீங்கள் விடாமல் தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் கல்லீரல் உங்களை மிகவும் விரும்பும்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com