ரோஜா மலரே! - 98: தொலைக்காட்சி தொடரான நாவல்கள்! - குமாரி சச்சு

சினிமாவாக இருந்தாலும், தொலைக்காட்சித் தொடராக இருந்தாலும், எதற்கும் ஒரு கதை தேவை. அந்தக் காலத்தில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் கவனம் நாவல்கள் பக்கமும் இருந்தது.
ரோஜா மலரே! - 98: தொலைக்காட்சி தொடரான நாவல்கள்! - குமாரி சச்சு

சினிமாவாக இருந்தாலும், தொலைக்காட்சித் தொடராக இருந்தாலும், எதற்கும் ஒரு கதை தேவை. அந்தக் காலத்தில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் கவனம் நாவல்கள் பக்கமும் இருந்தது. சிறுகதை என்றால், ஒரு வாரம் அல்லது அதிகமாகப் போனால் இரு வாரங்கள் வரை தான் அதை நிகழ்ச்சியாக்க முடியும். அதுவே நாவல்களாக இருந்தால், பல வாரங்கள் அந்தக் கதையை வைத்து, படப்பிடிப்பை நடத்தி, ஒளிபரப்புச் செய்து மக்களை மகிழ்விக்கலாம் என்று இயக்குநர்கள் நினைத்தார்கள். 

நாவல்கள் என்று சொல்லும் போது மிகவும் புகழ் பெற்ற நாவல்கள் எவை என்று இயக்குநர்கள் தேடிப் பார்க்கவில்லை. காரணம், அன்றைய தேதியில் மிகவும் புகழ் பெற்ற நாவல்கள் என்றால் கல்கி எழுதியது தான். அன்று மட்டுமல்ல, எப்பொழுதும் புகழ் பெற்ற நாவல் உண்டு என்றால், அது கல்கியின் "அலைஓசை', "பாவை விளக்கு', இவை இரண்டும் தமிழர் நெஞ்சங்களில் இன்றும் நிலைத்து நிற்பவை .

இக்கதை சுதந்திர போராட்ட காலத்தில் நடக்கிறது. சுதந்திரத்துடன் வந்த பிரிவினையின் போது மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பதை எடுத்துக்காட்டுகிறது. உலக வரலாற்றின் மாபெரும் மனித வெளியேற்றம் நடந்த, இந்தியப் பிரிவினை காலத்தைப் பற்றி மிகக் குறைந்த அளவே நாவல்கள் வெளிவந்துள்ளன.  "அலை ஓசை'  சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல். இது நான்கு பாகங்களைக் கொண்ட நாவல். அவை பூகம்பம், புயல், எரிமலை மற்றும் பிரளயம் என்ற பெயரில் வெளிவந்தது.

கல்கி எழுதியது எல்லாம் காவியங்கள் தான். அதிலும் இந்த "அலை ஓசை' அவருக்கு மிகவும் பிடித்த நாவல் என்று அவரே ஒரு சமயம் சொல்லி இருக்கிறார். ஏன் என்று பார்த்தோம் என்றால், அவர் அந்தத் தலைமுறையில், எழுதிய சம்பவங்கள், கதாபாத்திரங்கள், சூழ்நிலைகள்,  இந்தத் தலைமுறைக்கும் அப்படியே 100 சதவிகிதம் பொருந்தும். அப்படி என்றால் அவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

கல்கியின் "அலை ஓசை'யை நானும் படித்திருக்கிறேன். நாட்டு மக்களும் படித்து இருப்பார்கள். இந்தக் கதையில் உள்ள எல்லாப் பாத்திரங்களும் சிறப்பாக, முக்கியமானதாக இருக்கும். எனக்குக் கிடைத்தது கதாநாயகனின் அம்மா வேடம்.  காமெடி ரோல் வேண்டாம் என்று நான் நினைத்தபோது, எனக்கு இந்த வேடம் சரியாக, பொருத்தமாகக் கிடைத்தது. கண்டிப்பும், அன்பும் நிறைத்த பொருத்தமான வேடம் எனக்கு கிடைத்தது. அந்த வேடம் எனக்கும் பிடித்திருந்தது. மக்களுக்கும் மிகவும் பிடித்துப் போனது.

தொடர் கதையாக சில வருடங்கள் வந்த நாவல் இது. ஆனால் அவ்வளவு பெரிய நாவலை 13 வாரங்களுக்குள் தொகுப்பது என்பது முடியாத காரியம். அதை வெற்றிகரமாக செய்து முடித்தார் தயாரிப்பாளர் செவன் த் சேனல் நாராயணன். பல திரைப்பட நடிகர்கள் நடித்த, இந்த தொலைக்காட்சி தொடர் ஒரு நல்ல பெயரை எனக்குப் பெற்றுக் கொடுத்தது. மேஜர் சுந்தர்ராஜன், ஏ.ஆர்.எஸ்., நான், ரவி ராகவேந்தர், சுதா, துளசி என்று பலரும் அதில் நடித்தனர். வேணு அரவிந்த் தான் கதாநாயகனாக நடித்தார். இந்த தொலைக்காட்சி தொடரை இயக்கியது ராமலிங்கம்.

இந்தத் தொலைக்காட்சி தொடருக்காக நாங்கள் தஞ்சாவூர் சென்றோம். கதையில் ஒரு அக்ரஹாரத்தில் நடப்பதாக ஒரு சில காட்சிகள் வருகின்றன. அதை  கணபதி அக்ரஹாரம் என்ற ஊரில் எடுப்பதற்காகச் சென்றோம். அங்கு நாங்கள் எடுத்தது  ஒரு கல்யாண காட்சி. இவ்வளவு தூரம் நாங்கள் சிரமப்பட்டது, அவரது எழுத்துகளுக்குக் காட்சி வடிவம் கொடுப்பதற்காகத் தான்.. கல்கி எப்படி எழுதி இருந்தாரோ, அப்படியே காட்சி படுத்த முடிவு செய்தார் நாராயணன். அந்தத் தெருவில் வசித்த மக்களும், தொலைக்காட்சி தொடரில் நடிக்கச் சம்மதித்தார்கள். ஜே ஜே என்று மக்கள் கூட்டம், எங்களுக்கெல்லாம் இது ஒரு படப்பிடிப்பு என்றே தெரியவில்லை. ஒரு ஜாலியான சூழ்நிலையில் இதன் படப்பிடிப்பு நடந்தது.  

அக்ரஹாரத்தில் படப்பிடிப்பு முடிந்தவுடன் அங்குள்ள ரயில் நிறுத்தத்தில் சில காட்சிகள் எடுத்தார்கள். சில மணி நேரம் ரயில்களை நிறுத்தி விட்டு, படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அவ்வளவு செலவு செய்து எடுக்கப்பட்டது.

சென்னையிலும் அந்தப் படப்பிடிப்பை நடத்தியிருக்க முடியும்.  நாவலில் கூறியுள்ள அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துப் படப்பிடிப்பு நடத்தினார்கள். அங்கு ஒரு விநாயகர் கோயில் இருந்தது. அதில் விசேஷம் என்னவென்றால், விநாயகர் சதுர்த்தி அன்று, ஒருவர் வீட்டிலும் விநாயகர் பூஜையோ, கொழுக்கட்டை செய்யவோ மாட்டார்களாம். பிள்ளையார் சதுர்த்தி அன்று எல்லோரும் பிள்ளையார் கோயிலில் கூடுவார்களாம். அங்கு பிள்ளையாருக்கு பூஜை செய்து, கொழுக்கட்டை படைத்து எல்லோருக்கும் பிரசாதமாகக் கொடுப்பார்கள். 

1942-ஆம் ஆண்டின் போது கல்கி எழுத்தில் தஞ்சாவூர் பற்றிய குறிப்பும் இருந்தது. அதைப் பின் பற்றியே எவ்வாறு கல்யாணம் செய்வார்கள்? கல்யாணம் செய்யும் முறை பற்றியும் தெரிந்து கொள்ள இந்த தொலைக்காட்சி தொடரை பார்த்தாலே போதும். எனக்கு நல்ல பெயரை கொடுத்த தொடர் "அலை ஓசை'. 

இந்த கல்கி காவியத்தில் மீண்டும் நடித்தேன். அதே "அலை ஓசை' வானொலி நாடகமாகவும் தயாரிக்கப்பட்டது. வசனங்கள் எல்லாம் அவரது எழுத்து மூலமே இருக்கட்டும் என்று வானொலி நிலையத்தார் நினைத்தார்கள். அவரது புத்தகத்தை வைத்து ஒரு முறைக்கு இருமுறையாக சரி பார்த்து வசனங்களைச் சொல்லிப்பார்த்து எடுத்தார்கள்.

வானொலி நாடகமாக தயாரிக்கப்பட்ட பொழுது, ஒரு நாள் ஒலிப்பதிவு செய்ய இருப்பதாக எனக்கு தொலைபேசியில் தெரிவித்தார்கள். தொலைக்காட்சியில் நடித்தவர்கள் இந்த வானொலி நாடகத்தில் நடித்திருந்தார்கள். தொலைக்காட்சி தொடரில் நடித்த அதே வேடம் எங்களுக்கு எல்லாம் தரப்படவில்லை. அதன் ஒலிப்பதிவும் தொடங்கியது. 

எங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேடத்தில் நாங்கள் எல்லோரும் திறம்பட நடித்துக் கொண்டு இருந்தோம். அப்பொழுது அந்த வானொலி நாடகத்தின் உதவியாளர் ஒருவர் வந்து ஒரு செய்தியை தெரிவித்தார். ஒரு வேடத்தில் நடிப்பதற்கு ஒரு நடிகரை அழைத்திருந்தார்கள். அவரும் தான் வருகிறேன் என்று சொன்னார். ஒலிப்பதிவு செய்யும் பொழுது அழைத்திருக்கிறார்கள். அவர் அன்றைய நாளில் வருகிறேன் என்று சொல்லி விட்டு,  ஊரில் இல்லை என்று கடைசி நேரத்தில் சொல்லி விட்டாராம். இந்தச் செய்தி எங்கள் எல்லோருக்கும் தெரியவந்தது. 

வானொலி நாடகத்தில் ஒரு காட்சியில் நடித்த குரல்.  திரும்பவும் அதே குரல் தான் ஒலிக்க வேண்டும். நாடக இயக்குநர் என்னிடம் வந்து, "நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்' என்றார். விஷயத்தை என்னிடம் சொல்லிவிட்டு "நீங்கள் தான் குரலை மாற்றி,  இந்த வேடத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும்' என்றார். நான் சந்தோஷமாக செய்தேன். வானொலி நாடகமாக ஒலிபரப்பட்ட பொழுது நடித்தது இரண்டு வேடங்களில். எனக்கு அதிலும் பாராட்டுக் கிடைத்தது. 

நான் கதாநாயகியாக நடித்த நிறுவனத்திடமிருந்து எனக்கு மீண்டும் அழைப்பு வந்தது.  

(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com