சாப்பிட்டால் காசு கேட்காத உணவகம்....!

"கப்புச்சின் மெஸ்.' வித்தியாசமாகத் தோன்றுவது  பெயர் மட்டுமல்ல...
சாப்பிட்டால் காசு கேட்காத உணவகம்....!


"கப்புச்சின் மெஸ்.' வித்தியாசமாகத் தோன்றுவது பெயர் மட்டுமல்ல... மெஸ்ஸின் நடவடிக்கைகளும்தான். மெஸ்ஸிற்கு வருபவர்களுக்கு காலை- மதியம் உணவு வழங்க மெஸ் ஊழியர்கள் உண்டு. உணவுப் பண்டங்களின் விலை பட்டியலும் உண்டு. ஆனால் ஒன்று மட்டும் இல்லை. வலை போட்டுத் தேடினாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் பில் தொகை வாங்கும் கவுண்ட்டர். கல்லா கவுண்ட்டர் இல்லை என்றாலும் டோக்கன் கொடுக்கவும் டோக்கனுக்கு பணம் வாங்கவும் கூட ஆளில்லை.

உணவகத்துக்கு வருபவர்கள் சாப்பிடலாம். சாப்பிட்ட பிறகு சாப்பிட்டதற்கான பணத்தை கூடுதலாகவோ, குறைவாகவோ அங்கு வைக்கப்பட்டிருக்கும் அஞ்சல் பெட்டியில் போடலாம்... கையில் பணமில்லை என்றால் சாப்பிட்ட பிறகு, ஏப்பம் விட்டவாறே நடையைக் கட்டலாம். "சாப்பிட்டதற்கான பணத்தை ஏன் அஞ்சல் பெட்டியில் போடவில்லை' என்று மெஸ் ஊழியர்கள் யாரும் ஒரு வார்த்தை கூட கேட்கமாட்டார்கள்.

உண்மையிலேயே வித்தியாசமான "கப்புச்சின் மெஸ்' கொச்சி நகரின் பூணித்துறா பகுதியில் செயல்படுகிறது. மெஸ்ஸின் நிர்வாகியான போபி ஜோஸ் கட்டிக்காட் மெஸ் குறித்து விளக்குகிறார்:

""மனித குலம் எந்த நூற்றாண்டிலும் நேரிடாத பேரிடர்களை கரோனா மூலம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையை கிடுக்கிப் பிடி போட்டு நெரித்துக் கொண்டிருக்கும் கரோனா, விளிம்பு நிலை மக்களை பசி, பட்டினிக்கு தள்ளிவிட்டிருக்கிறது. தொழில் இழந்து, வருமானம் குறைந்து கையில் பணம் இல்லாமல் உணவு உண்ண முடியாமல் யாரும் பட்டினி கிடக்கக் கூடாது என்ற நோக்கத்தில்தான் ."கப்புச்சின் மெஸ்' 2020 செப்டம்பர் 1-இல் கொச்சி "பூணித்துறா' வில் தொடங்கினோம்.

அப்போதுதான் பொது முடக்கம் தளர்த்தப்பட்டது. கையில் காசு உள்ளவர்களும், காசு இல்லாதவர்களும் உணவகத்திற்கு வருகை தந்தார்கள். இருக்கையில் அமர்ந்து உணவு உண்டார்கள். கிறிஸ்துவத்தின் ஒரு பிரிவான "கப்புச்சின் பிரான்சிஸ்கன் சபை' கிபி 12 09-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அந்தப் பிரிவைச் சேர்ந்த நாங்கள் எங்களது பொதுநல மெஸ்ஸிற்கு "கப்புச்சின் மெஸ்.' என்று பெயர் வைத்தோம்.

ஆனால் 2021-இல் மீண்டும் கரோனா உக்கிரமாக தொடங்கியதும் உணவகங்களில் அமர்ந்து உண்ண தடைவிதிக்கப்பட்டது. உணவுப் பொருள்களை பார்சல் செய்து வழங்கமட்டும் அனுமதி தரப்பட்டது. அதன் காரணமாக "கப்புச்சின் மெஸ்' ஸýக்கு வருகிறவர்களுக்கு உணவுப் பார்சல் வழங்கி வருகிறோம். உணவுப் பொட்டலம் பெற்றுச் செல்பவர்கள் கையில் பணம் இருந்தால் அஞ்சல் பெட்டியில் போடலாம். அப்படிப் போடப்படும் தொகையில், பணம் கொடுக்க இயலாதவருக்கு உணவு வழங்க. அந்த நபர் மறைமுகமாக உதவுகிறார்.

அமர்ந்து உணவு உண்ண அனுமதி இருந்த போது தினமும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்தார்கள். பார்சல் உணவு வழங்க ஆரம்பித்த போது வருகை தருபவர்கள் அறுபது பேர்களாகக் குறைந்துவிட்டார்கள். தற்சமயம் காலை, மதியம் உணவை வழங்கி வருகிறோம். மாலை வேளைகளில் தேநீர் வழங்கப்படும். காலை உணவு 25 ரூபாய். மதிய உணவு 40 ரூபாய். சைவ உணவு மட்டுமே வழங்கப்படுகிறது... பொது மக்களுக்காகத் தயாரிக்கப்படும் உணவைத்தான் ஆசிரமத்தில் வசிக்கும் பாதிரிமார்களும் சாப்பிடுகிறோம்'' என்கிறார் போபி ஜோஸ் கட்டிக்காட்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com