கரோனா பாதிப்பு: களத்தில் இளம் பொறியாளர்கள்!

கரோனா வைரஸ் நம்மில் பலர் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா பாதிப்பு: களத்தில் இளம் பொறியாளர்கள்!


கரோனா வைரஸ் நம்மில் பலர் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாற்றங்களில் ஒன்று சென்னையைச் சேர்ந்த இளம் பொறியாளர்கள் கூட்டாக இணைந்து கரோனா பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார்கள். இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து அந்தக் குழுவிலுள்ள பொறியாளர்களான ரஞ்சித், பிரியதர்ஷனிடம் பேசினோம்:

""மக்களுக்குச் சேவையாற்றும் மக்கள் என்ற திட்டத்தை நாங்களே உருவாக்கி இந்த முறையில் உதவியைச் செய்து வருகிறோம். நாங்கள் பணியாற்றும் ஐ.டி நிறுவனம் அவனிகோ டெக்னாலஜிஸ். இங்கு 60 பேர் பணியாற்றுகிறோம். எங்களுடைய நிர்வாக இயக்குநர் அனந்த கிருஷ்ணன். குடும்பத்துடன் கரோனாவால் பாதிக்கப்பட்டார்.

தனிமைப்படுத்தப்பட்ட அவர்களால் உணவை சமைக்க முடியவில்லை. வெளியில் தான் சாப்பாடு வாங்கினார்கள். ஆனால் அவர்கள் விரும்பிய சத்தான உணவு எதுவும் கிடைக்கவில்லை.கரோனா பாதித்த நேரத்தில் அவர்களுக்கு சுவை, வாசம் எதுவுமே தெரியவில்லை. அதற்கு ஏற்ற உணவுகளும் கிடைக்கவில்லை. அதனால் தான் தன்னுடைய குடும்பம் போன்று யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்துடன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு கொடுக்க முடிவு செய்தார்.

மே மாதம் 5-ஆம் தேதி இந்த உணவு வழங்கும் பணியைத் தொடங்கினோம். கொவைட் பாதித்தவர்களுக்கு அந்த பாதிப்பிலிருந்து மீளும் வரை மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். எங்கள் நிறுவனத்தை சேர்ந்த 7 பொறியாளர்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்தாலும் நோயாளிகளின் வீட்டிற்குச் செல்லும் மேப், உணவு பட்டியல் போன்ற விவரங்களைச் சேகரித்துத் தன்னார்வலர்களுக்குச் சரியான முறையில் வழி காட்டி வருகிறோம்''.

பாதித்தவர்கள் உதவி பெறுவது எப்படி?

எங்களுடைய இலவச சேவையை நாடி வருபவர்கள் எங்களை முதலில் செல்லிடப்பேசியில் அழைக்க வேண்டும். அப்போது விண்ணப்பம் ஒன்றை அனுப்புவோம். அதனை நிரப்பி அதனுடன் கொவைட் பாஸிட்டிவ் சான்றிதழையும் இணைத்து எங்களுக்கு அனுப்ப வேண்டும். அதில் அவர்களுடைய வீடு எங்கே இருக்கிறது என்ற தெளிவான முகவரியுடன் தொடர்பு எண், வீட்டில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களையும் வாங்கி விடுவோம். எங்களுக்கு முழு விவரம் கிடைக்கப் பெற்றவுடன் தன்னார்வலர்கள் மூலமாக மூன்று வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்கிறோம். ஒரு வீட்டில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களுடன் இருப்பவர்களுக்கும் உணவு வழங்குகிறோம்.

எங்கள் குழு சார்பாக மூன்று சமையல் செய்யும் நபர்களை வேலைக்கு வைத்துள்ளோம்.

காலை 7 மணிக்கு டிபன் தயாராகிவிடும். சம்மந்தபட்டவர்களுக்கு 8.30 மணிக்கு உணவு சென்றுவிடும். காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல் போன்ற டிபன் ஐயிட்டங்கள் வழங்குகிறோம்.

மதிய உணவு 12 மணிக்கு தயாராகிவிடும். முழு சாப்பாடு அல்லது வெஜிடபுள் பிரியாணியுடன் முட்டை வழங்குகிறோம். மாலை நேரத்திற்குத் தேவையான சுண்டல், அல்லது பச்சை பயிறு போன்ற சத்தான உணவுகளை மதிய சாப்பாட்டுடன் வழங்கிவிடுவோம். சரியாக 1 மணியளவில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு விடும்.

இரவு உணவு 8 மணிக்கு தயாராகிவிடும். இட்லி சப்பாத்தி, உப்புமா போன்றவை இரவு 8.30 மணிக்கு வழங்கப்பட்டு விடும்.

உணவுடன் கபசுர குடிநீர் வழங்கலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் அவை பார்ச்சலாக வழங்குவதில் சிக்கல் இருந்ததால் வழங்க முடியவில்லை. அதற்கு மாற்றாகச் சத்தான உணவு வகைகளை சாப்பாட்டுடன் வழங்கி விடுகிறோம்.
குறிப்பாக ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரியில் உள்ளவர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். சென்னை நகரத்தின் வேறு பகுதியில் உள்ளவர்களும் ஆள் வைத்து பிக் அப்பாக எடுத்து செல்பவர்களும் இருக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு 250 பேர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம். தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது.

கரோனா நோயாளிகள் குணமாகும் வரை நாங்கள் உணவை வழங்குவோம். அவர்கள் குணமாகிவிட்டால் எங்களுக்குத் தெரிவித்து விடுவார்கள். இந்த உணவு சேவைக்காக எங்கள் நிர்வாக இயக்குநர் யாரிடமும் உதவி கேட்டதில்லை.

எங்கள் உணவு சேவையைப் பயன்படுத்தியவர்கள் ""எங்களால் முடிந்த பணத்தைத் தருகிறோம் வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று கட்டாயப்படுத்துகிறார்கள். ஆனால் யாரிடமும் எந்த உதவியும் பெற வேண்டாம் என்று எங்கள் நிர்வாக இயக்குநர் சொல்லிவிட்டார். கரோனா ஏழை, பணக்காரன்னு பார்த்து வருவதில்லை. எனவே அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியம்'' என்றார்கள் இளம் பொறியாளர்களான ரஞ்சித், பிரியதர்ஷன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com