Enable Javscript for better performance
அம்பேத்கர் விரும்பினார் மோடி நிறைவேற்றினார்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  அம்பேத்கர் விரும்பினார் மோடி நிறைவேற்றினார்!

  By   |   Published On : 20th June 2021 06:00 AM  |   Last Updated : 20th June 2021 06:00 AM  |  அ+அ அ-  |  

  sk1

   

  தமிழக அரசியலில் நேர்மைக்கும் நாணயத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய அரசியல் வாதிகளில் டாக்டர் ஹண்டேயும் ஒருவர். 1967-இல் சுதந்திராக் கட்சி உறுப்பினராக டாக்டர் ஹெச்.ஹண்டே சட்டப்பேரவையில் நுழைந்த போது ஒட்டு மொத்த தமிழகமும் அவரை பிரமிப்புடன் பார்த்தது. 1967, 1971 தேர்தல்களில் சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1977 முதல் சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்த டாக்டர் ஹண்டே எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த பத்து ஆண்டுகளும் அவரது அமைச்சரவையில் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  டாக்டர் ஹண்டே 1950-ஆம் ஆண்டு மருத்துவக் கல்வியை முடித்தபின் 23-ஆவது வயதில் மருத்துவப் பணியோடு அரசியல் பணியையும் தொடங்கினார். மூதறிஞர் ராஜாஜியின் சீடராக அரசியல் உலகில் பிரவேசித்துப் பின்னர், அண்ணா திமுகவில் இணைந்து எம்.ஜி.ஆர் அரசில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகப் பரிமளித்தார்.

  திமுக தலைவர் மு.கருணாநிதி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வெற்றி பெற முடிந்த ஒரே ஒரு தேர்தல் 1980. அவரை எதிர்த்து அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டவர் டாக்டர் ஹண்டே. அரசியல்வாதியாக மட்டுமல்லாது ஒரு மருத்துவராகவும் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற டாக்டர் ஹண்டே கடந்த 75 ஆண்டு சுதந்திர இந்திய வரலாற்றுக்கு  சாட்சியாக இருப்பவர். தனது மனசாட்சி வழி வாழ்பவர்.

  தீவிர அரசியிலிலிருந்து ஒதுங்கிய ஹண்டே, இலக்கியப் பணி, எழுத்துப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். கம்பராமாயணத்தை முழுவதுமாகக் கற்று, 8 ஆண்டுகள் இடையறாது உழைத்து ஆங்கிலத்தில் உரைநடையில் முழுமையாக எழுதி நூலாகக் கொண்டு வந்தார். அந்த சீரிய பணிக்காக, கடந்த ஆண்டு  தமிழக அரசு அவருக்கு கம்பர் விருதினை வழங்கிச் சிறப்பித்தது.

  94 வயதிலும் துடிப்புள்ள இளைஞரைப் போல் சமூகப் பணி ஆற்றி வரும் டாக்டர் ஹெச்.வி. ஹண்டே. காலையில் எழுந்ததும் நடைபயிற்சி மேற்கொள்கிறார். முறையான உணவுப் பழக்கத்தையும் கடைப்பிடித்து வருகிறார். பல ஆண்டுகளாக யோகா பயிற்சியும் மேற்கொள்ளும் அவர், உணவு நேரம் நீங்கலாக இதர சமயங்களில் நொறுக்குத் தீனியை அறவே ஒதுக்குவது தனது ஆரோக்கியத்தின் ரகசியம் என்கிறார். ஷெனாய் நகரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். அவருடன் இணைய வழியாக ஓர் நேர்காணல்:

  ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்தது குறித்து நூலை வெளியிட்டிருக்கிறீர்கள். ஒரு கேள்வி, 370-ஆவது பிரிவை நீக்குவதற்கான அவசியம் என்ன?

  உங்கள் கேள்வி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370-ஆவது பிரிவு ஏன் கொண்டுவரப்பட்டது? என்றுதான் அமைந்திருக்க வேண்டும். நம் நாடு விடுதலை பெற்ற பிறகு ஹைதராபாத், ஜூனாகத் ஆகிய அனைத்து பிரதேசங்களும் அரசமைப்புச் சட்டம் 238-ஆவது பிரிவின் கீழ் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. அதைப் போல், ஜம்மு காஷ்மீரும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக, தேவையே இல்லாமல் 370-ஆவது பிரிவின் கீழ் அதற்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது. 

  அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டு அது அரசியல் சாசனத்தில் இணைக்கப்பட்ட பிறகு அது குறித்து விவாதிப்பது அவசியம் தானா?

  அரசியல் சட்டத்தில் இதுவரை 105  திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அரசியல் சாசனம் என்பது மாற்றக்கூடாதது அல்ல. 370-ஆவது பிரிவுக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு இருந்து வந்தது. ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதே? இதை அரசியல் சட்டத்தை உருவாக்கிய குழுவின் தலைவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரே இதை ஏற்கவேயில்லை. ஆனால், அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஷேக் அப்துல்லா தனக்கு ஜவாஹர்லால் நேருவுடன் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி, தன் மாநிலத்துக்குத் தனி அரசியல் சட்டம் வேண்டும், தன்னைப் பிரதம மந்திரியாக அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தினார். அதற்குப் பணிந்து, நேருதான், 370-ஆவது பிரிவைக் கொண்டுவந்தார். இதை அறிந்த அம்பேத்கர், இதனை ஏற்க திட்டவட்டமாக மறுத்தார்.

  அதற்கு என்ன காரணம்  சொன்னார் டாக்டர் அம்பேத்கர்? 

  உங்கள் மாநில எல்லையை இந்தியா பாதுகாக்க வேண்டும் என்றும், சாலைகளை இந்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் கேட்கிறீர்கள். ஆனால், உங்கள் மாநிலத்தில் இந்தியாவுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது என்றும் நினைக்கிறீர்கள். இது சரியா? என்று அவர் ஷேக் அப்துல்லாவிடமே கேட்டார். 

  அதற்குப் பிறகு என்னவாயிற்று?

  சட்டப்பிரிவு 370 இந்தியாவுக்கு எதிரான போக்கு. சட்ட அமைச்சர் என்ற முறையில் நான் இதை அனுமதிக்க மாட்டேன். "370-ஆவது பிரிவினால் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் முழுவதும் தொழில் திட்டங்கள் முடங்கும். வளம் ஏற்படாது. மாநிலம் தனிமைப்படுத்தப்படும்' என்று எச்சரித்தார் டாக்டர் அம்பேத்கர். 

  அவர் மட்டும் தான் எதிர்த்தாரா? பிறகு ஏன் அந்தச் சட்டப்பிரிவு இணைக்கப்பட்டது?

  அம்பேத்கர் மட்டுமல்ல, துணைப் பிரதமர் சர்தார் வல்லப பாய் படேலும் 370-ஆவது பிரிவை ஆட்சேபித்தார். இது தொடர்பாக படேல் எழுதிய கடிதம், எனது நூலில் இடம்பெற்றுள்ளது. பிரதமர் ஜவாஹர்லால் நேரு அரசியல் நிர்ணய சபையில் இடம்பெற்றிருந்த என். கோபாலசாமி ஐயங்காரின் உதவியை நாடினார். கடைசியில் வேறு வழியின்றி, அரசியல் சாசனத்தின் அனைத்து சரத்துகளின் வரைவுகளையும் டாக்டர் அம்பேத்கர்  ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. சட்ட அமைச்சர் என்கிற முறையில் பெரும்பான்மை முடிவை அவர் ஏற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

  அதற்குப் பிறகு கடந்த 70 ஆண்டுகளாக அந்தப் பிரிவு அனைவராலும் ஏற்கப்பட்டது. இப்போது அதை அகற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது?

  அதற்கான துணிவு மத்திய ஆட்சியாளர்களுக்கு இருக்கவில்லை. அதனால் அது தொடர்ந்தது. 1953-இல் நேருவே அதை அகற்றி இருக்க வேண்டும். சிறிது காலத்திலேயே அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை சரியானது என்பது தெரிந்தது. 

  என்ன நடந்தது?

  370-ஆவது பிரிவைப் பயன்படுத்தி காஷ்மீரைத் தனி நாடாக அறிவிக்க ஷேக் அப்துல்லா முயற்சி செய்ததை அறிந்து நேரு அதிர்ச்சி அடைந்தார். நேருவின் உத்தரவை அடுத்து, ஜம்மு -காஷ்மீர் அரசை காஷ்மீர் மாநில ஆளுநர் அந்தஸ்தில் இருந்த டாக்டர் கரண்சிங் கலைத்தார். 1953-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி இரவு ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு, 11 ஆண்டுகள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டார். இது வரலாறு. 

  அப்போதே இந்தச் சட்டப்பிரிவை அகற்றி இருக்க வேண்டும் என்கிறார்களா?

  நிச்சயமாக தற்போது 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டு காஷ்மீரையும், லடாக்கையும் தனித்தனி பிரதேசங்களாக மோடி அரசாங்கம் மாற்றியதை காங்கிரஸ் தலைவரான கரண்சிங் வரவேற்றிருக்கிறார். ஷேக் அப்துல்லா ஆட்சியை 1953-இல் கலைத்தபோது, அந்த மாநில ஆளுநராக இருந்தவர் கரன்சிங் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

  அப்போதே அகற்றப்பட்டிருந்தால் இப்போதைய நிலைமை காஷ்மீருக்கு ஏற்பட்டிருக்காது என்று கருதுகிறீர்களா?

  370-ஆவது பிரிவினால் காஷ்மீரில் கடந்த 70 ஆண்டுகளாக ஆயுதங்கள் ஏந்திய தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், கல்வீசுபவர்கள்,  ஜிஹாதிகள், பாகிஸ்தானின் ஐந்தாவது படை ஆகியவைதான் அதிகரித்தன. ஜம்மு - காஷ்மீரில் அமைதி குலைந்து போனது. ஏராளமான இந்திய வீரர்களைப் பலிகொடுத்தோம். அந்த மாநிலத்திற்கு ஏராளமாக பாதுகாப்பு நிதியை வீணாக ஒதுக்கினோம். இப்போது சொல்லுங்கள் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து தேவையா? பிரதமர் நரேந்திர மோடி தீவிர ஆலோசனைக்குப் பிறகே, இந்தியாவின் ஒட்டுமொத்த நலனுக்காக இந்த முடிவை எடுத்தார். ஜம்மு காஷ்மீரில் வேகமாக வளர்ச்சி காணப்படுவதை இனிமேல் கட்டாயம் பார்க்கலாம்!

  370-ஆவது பிரிவை முடிவுக்குக் கொண்டு வந்ததால் யாருக்கு லாபம், எந்த வகையில் பயனளிக்கும்? 

  இனிமேல், நாட்டின் இதர மாநிலங்களைப் போலத்தான் ஜம்மு காஷ்மீரும் இருக்கும். அதே சமயம் அங்கே தொழில்களின் வளர்ச்சியும் இதர மேம்பாடுகளையும் காணலாம். ஜம்மு - காஷ்மீரின் ஆளுகைக்கு உட்பட்டு கடந்த காலங்களில் இருந்த லடாக்கில் நிலைமை மோசமாக இருந்தது. இனிமேல், நிலைமை மாறும். லடாக் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் நாடாளுமன்றத்தில், 370-ஆவது பிரிவை நீக்கும் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆகஸ்ட் 5-ஆம் தேதிதான் அப்துல்லாக்களின் பிடிகளிலிருந்து விடுதலை பெற்ற சுதந்திர தினம்' என்ற வாசகம் கொண்ட பதாகை ஏந்தினர். உண்மையில், முந்தைய காலங்களில் லடாக்கில் வாழும் பெüத்த மதத்தினர் பாலியல் வன்முறை, கொலை, சித்திரவதை என பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாயினர் என்று லடாக் மக்களவை உறுப்பினர் ஜம்யங் செரிங் நம்கியால் அவையில் கூறினார். அதுதான் அங்கிருந்த உண்மை நிலை. இனி அது மாறும்.

  370 சட்டப்பிரிவு குறித்து இந்திராகாந்தியின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

  1981-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நியூயார்க்கில் வசிக்கும் காஷ்மீர் பண்டிதர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், "நீங்கள் உங்களது சொந்த மாநிலமான காஷ்மீருக்குச் செல்ல இயலவில்லை என்று ஏங்குகிறீர்கள். நானும் அதைப் பகிர்ந்து கொள்கிறேன். எனது மூதாதையரும் அங்கிருந்துதான் வந்தனர். ஆனால், சொந்தமாக ஓரிடம் கூட எங்களால் வாங்க இயலவில்லை' என்று கவலை தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தின் பிரதியை என் நூலில் இடம்பெறச் செய்திருக்கிறேன். 

  370-ஆவது பிரிவுக்கும் காஷ்மீர் பண்டிதர்களின் வெளியேற்றத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்ன? 

  370-ஆவது பிரிவு இருந்ததால்தான் காஷ்மீரை வாழ்விடமாகக் கொண்ட பண்டிதர்கள் (இந்துக்கள்) விரட்டி அடிக்கப்பட்டனர். அத்துடன் அவர்களால் அங்கே எதையும் சொந்தம் கொண்டாட முடியாமல் போனது! அவர்களது சொத்துகள் அபகரிக்கப்பட்டன. இனிமேல், அந்தப் பிரிவு ரத்து செய்யப்பட்டதால், அந்த மாநிலத்தில், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்கல்வி நிறுவனங்கள், தொழில்கள் தொடங்கப்படும். ஜம்மு - காஷ்மீர், லடாக் பகுதிகளைச் சேர்ந்த அனைத்து தரப்பினருமே பயன் பெறுவர். 

  370-ஆவது பிரிவை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில், எதிர்காலத்தில் மற்ற மாநிலங்களின் உரிமைகளுக்கும் தீங்கு ஏற்படும் என்று கூறப்படுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  இது மிகவும் தவறான பார்வை. 370-ஆவது பிரிவை நீக்கியதை அடுத்து மற்ற மாநிலங்களின் உரிமைகளும் பறிபோகும் என்ற பொய்யான தோற்றத்தை சிலர் பரப்புகிறார்கள். இது அர்த்தமற்றது. மாறாக, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வடிவமைத்த இந்திய அரசியல் சாசனத்தின் கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் உள்ள அந்தஸ்து ஜம்மு - காஷ்மீருக்கும் கிடைக்கும். கூட்டாட்சித் தன்மை நீடிக்கும். இப்போது 370-ஆவது பிரிவுக்கு ஆதரவாக பேசும் எந்தத் தலைவரும் அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கரின் விருப்பத்துக்கு எதிராக 1949-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி 370-ஆவது பிரிவு கொண்டு வரப்பட்டபோது பிறந்திருப்பார்களா என்பது சந்தேகமே! நான் அப்போது 22 வயது நிரம்பிய மருத்துவக் கல்லூரி மாணவன் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

  இந்த நூலை எழுதுவதற்கு எது தூண்டுதலாக இருந்தது? எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டீர்கள்?

  அந்தக் காலத்தில் ஏறத்தாழ எல்லா மாணவர்களும் இந்திய மாணவர் காங்கிரஸில் இடம்பெற்றிருந்தோம். அப்போதே எங்களைப் போன்றோர் "ஷேக் அப்துல்லாவின் விருப்பத்திற்கு ஜவாஹர்லால் நேரு ஏன் இரையாகிறார்?' என்று கவலைப்பட்டோம். அரசமைப்புச் சட்டம் முழுமையான வடிவம் பெறுவதற்கு முன் வரைவு நகல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒப்புதலுக்காக சென்றது. 370 -ஆவது பிரிவுக்கு ஒப்புதலைப் பெற என்.கோபாலசாமி ஐயங்கார் முயன்றபோது அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களும் கோபப்பட்டு, வரைவு நகலைக் கிழித்தெறிந்தனர். அப்போது நியூயார்க்கில் இருந்த நேருஜி அங்கிருந்தபடியே காங்கிரஸ் உறுப்பினர்களைச் சமாதானம் செய்ய நேர்ந்தது.
  அந்த வரலாறு இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. அதைப் பதிவு செய்திருக்கிறீர்களா?

  காங்கிரஸ் கட்சியினரிடையில் இத்தகைய உணர்வு இருந்ததை என்னால் மறக்கவே முடியாது. அதனால்தான், கார்கில் போரின்போது கூட அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை ஏற்க இயலாது' என்று கட்டுரை எழுதினேன். அதில், ஜம்மு காஷ்மீரை 1947-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி இந்தியாவுடன் இணைக்கும் செயலில் ஜவாஹர்லால் நேரு எப்படி பிழை செய்துவிட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறேன். பிரதமர் நேரு செய்த பிழை என்ன?

  அப்போது ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தானியர் மெல்ல மெல்ல ஆக்கிரமித்தனர். அதை முறியடிக்கும் வேலையில் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் திம்மையா ஈடுபட்டார். அவர் தடுக்கப்பட்டார். மவுண்ட்பேட்டன் பிரபுவின் வற்புறுத்தலுக்கு பிரதமர் நேரு ஆளாகிவிட்டார். அதன் விளைவாக ஜம்மு - காஷ்மீரின் ஐந்தில் ஒரு பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக இப்போதும் நீடிக்கிறது. அப்படி இருந்தும், நன்றி மறந்து மவுண்ட்பேட்டனை பாகிஸ்தான் அதிபர் முகமது அலி ஜின்னா ஏற்காமல் வெளியேற்றினார். அந்தச் செய்திகள் எல்லாம் எனது நூலில் இடம்பெறுகின்றன.

  அதுதான் இந்த நூலை எழுதக் காரணமா?

  ஆமாம். இவை எல்லாவற்றையும் நன்றாக அறிந்த காரணத்தால்தான் 370-ஆவது பிரிவை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நீக்கியபோது மிகவும் உற்சாகம் அடைந்தேன். அதுதான் அரசமைப்புச் சட்டம் 370-ஆவது பிரிவின் தோற்றமும் முடிவும்”என்ற நூலை எழுதத் தூண்டியது. இதற்காக எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு மூன்று மாதங்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டேன். இதில் பண்டித ஜவாஹர்லால் நேருவுக்கும் ஷேக் அப்துல்லாவுக்கும் இடையில் பரிமாறப்பட்ட கடிதங்கள், என்.கோபாலசாமி ஐயங்காருக்கு சர்தார் படேல் எழுதிய காரசாரமான கடிதம், இந்திரா காந்தியின் கடிதம் என பல ஆவணங்களை சேர்த்திருக்கிறேன். 

  நீங்கள் எழுதியிருக்கும் ஏனைய நூல்கள் குறித்தும் கூறுங்கள்...

  கம்ப ராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பணிக்காக தவம் போல எட்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டேன். பாரதிய வித்யா பவன் பிரசுரித்த ஆங்கில உரையுடனான நூலை அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா வெளியிட்டார். முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கடராமன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு வாழ்த்தினார். எனது அரசியல் ஆசான் மூதறிஞர் ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் எழுதினேன். அதை மகாராஷ்டிர முன்னாள் ஆளுநர் சி. சுப்பிரமணியம் வெளியிட்டார். 

  "நெருக்கடி காலத்தில் அரசியல் சட்டத்தின் மீதான அழிவு நடவடிக்கைகள்' என்ற நூலை 2002-ஆம் ஆண்டு பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் வெளியிட, தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். அதில், நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் அரசியல் சாசனம் சிதைக்கப்பட்டதை விரிவாக எழுதியுள்ளேன். அரசியல் சட்டத்தின் முகப்புரையிலேயே திருத்தம் கொண்டுவந்ததையும் அதில் கூறியுள்ளேன். 

  அரசியல் சட்டம் குறித்து இதற்கு முன்னால் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறீர்கள் போலிருக்கிறதே?

  நான் மிகவும் ஈடுபட்டு எழுதிய புத்தகம் அது. "அம்பேத்கரும் அரசமைப்புச் சட்டத்தின் உருவாக்கமும்' என்ற மாக்மில்லன் கம்பெனி பிரசுரித்துள்ள இந்நூலுக்கு மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அணிந்துரை எழுதியுள்ளார். 2009-ஆம் ஆண்டு அந்நூலை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எல்.கே. அத்வானி வெளியிட்டார். அதில் சில உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளேன். அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கருக்கு இடம் தராமல் ஒதுக்க காங்கிரஸ் கட்சி முயன்றதையும், அந்த முயற்சி தோல்வியடைந்ததையும் அந்த நூலில் விவரித்திருக்கிறேன். 

  எம்ஜிஆர் பற்றியும் ஒரு நூல் எழுதினீர்கள் போலிருக்கிறதே?

   எம்ஜிஆர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வரலாற்றைக் குறிக்கும் எனது நூல் 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அவருடன் நெருங்கிப் பழகிய நினைவலைகள் அதில் இடம்பெற்றுள்ளன.  

  நேர்காணல் : முனைவர் பா. கிருஷ்ணன்


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp