ரத்தத்தின் ரத்தமே... - 21

நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்து 1954 - ஆம் ஆண்டில் வெளியான படம் "ரத்தக் கண்ணீர்' . கவலையின் மொத்த உருவமாக ஒருவர் இருக்கும்போது அவர் தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தார் என்றுதான் சொல்வார்களே தவிர
ரத்தத்தின் ரத்தமே... - 21

நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்து 1954 - ஆம் ஆண்டில் வெளியான படம் "ரத்தக் கண்ணீர்' . கவலையின் மொத்த உருவமாக ஒருவர் இருக்கும்போது அவர் தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தார் என்றுதான் சொல்வார்களே தவிர ரத்தக் கண்ணீர் வடித்தார் என்று சொல்வதில்லை. பின் எப்படி ஒரு திரைப்படத்திற்கே ரத்தக் கண்ணீர் என்று அந்தக் காலத்திலேயே பெயர் வைத்திருக்கிறார்கள்? கண்ணீர் ரத்தமாக வருவதுண்டா? கண்களில் ரத்தம் வடிவதுண்டா? இது உண்மையா?

ஆம். உண்மைதான். மருத்துவ மொழியில் "ஹீமோலேக்ரியா' என்றால் "ரத்தக் கண்ணீர்' என்று அர்த்தமாகும். கண்ணீர் ரத்தமாக வருவதைப் பார்த்தவர்கள் மிகமிகக் குறைவு. இது மிக மிக அரிதாக எப்போதாவது யாருக்காவது எங்கேயாவது ஏற்படுவதுண்டு.கண்களைப் பொருத்தவரை இரண்டு விதமாக ரத்தக் கசிவு ஏற்படலாம்.

1.கண்ணின் வெளிப்பகுதியில் ஏற்படும் ரத்தக்கசிவு. இது பார்த்தாலே நமக்குத் தெரியும்.
2. கண்ணின் உட்பகுதியில் ஏற்படும் ரத்தக்கசிவு. இது நமக்குத் தெரியாது. கண்டுபிடிக்கவும் முடியாது. கண் பார்வையில் ஏதாவது பிரச்னை வந்தால்தான் நாம் கண் டாக்டரைப் பார்த்து என்னவென்று தெரிந்து கொள்ளப் போவோம். அதுவரை கண்ணின் உள்ளே என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்று நமக்குத் தெரியாது.
கண்ணில் ரத்தக்கசிவு ஏற்படுவதென்பது அடிக்கடி நடக்கக்கூடிய ஒரு விஷயம் அல்ல. விபத்தினால் கண்ணில் காயம் ஏற்பட்டால் கைவிரலால் அல்லது நகத்தால் அல்லது கூர்மையான ஒரு பொருளால் கண்ணில் குத்திக் கொண்டால் மிக நுண்ணிய ஏதாவதொரு பொருள் கண்ணில் விழுந்துவிட்டால் கண்களில் ரத்தம் கசிய வாய்ப்புண்டு.

1)கண்களின் உள்பகுதியிலுள்ள மிகச்சிறிய ரத்தக் குழாய்கள் இயற்கையாக இருக்கவேண்டிய நிலைக்குப் பதிலாக மாறி இருப்பது
2)கண்ணில் புற்றுநோய்
3) கண்ணின் உள்ளே அதிக அளவில் ரணம்
4) உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்
5) மாதவிடாய் காலங்கள்
6) கண்ணின் வெள்ளைப் பகுதியில் ஏற்படும்
காயங்கள்
7) கண்ணீர் சுரப்பி அடைத்துக் கொள்ளுதல்
8) சில ரத்தக் கோளாறுகள் (ஹீமோபிலியா)
9) அதிகமாக மூக்கில் ரத்தம் வடிதல்
10) சீழ் கட்டிகள்
11) கரும்புற்று நோய் (மெலனோமா)
12) மழைக்காலத்தில் வரும் கண்நோய் - மேற்கூறிய பிரச்னைகளிலெல்லாம் சில சமயங்களில் கண்களில் ரத்தம் வடிய வாய்ப்புண்டு.

சில பேருக்கு கண்ணின் வெள்ளைப் பகுதியில் ரத்தம் கசிந்து திட்டுத் திட்டாக நிற்பதுண்டு. மிகக் குறைவான அளவே ரத்தம் கசிந்து இப்படி கண் முழுக்க திட்டுத் திட்டாக நிற்கும். ஆனால் பார்க்க பயங்கரமாக இருக்கும். கண்ணின் வெள்ளைப் பகுதியில் ரத்தம் கசிந்து அதிக நாள்களாக நிற்கிறதென்றாலோ கண்ணின் கருவிழியில் ரத்தம் கசிந்து குறையாமல் அப்படியே இருக்கிறதென்றாலோ ஓரிரு வாரங்களில் ரத்தக் கசிவு நிற்கவில்லை என்றாலோ தாமதிக்காமல் உடனே கண் டாக்டரைப் பார்ப்பது தான் சிறந்தது.
கண்களின் உள்பகுதியிலுள்ள ரத்தக் குழாய்களில் பிரச்னை இருந்தால் அது மூளையிலுள்ள சுத்த மற்றும் அசுத்த ரத்தக் குழாய்களில் பிரச்னை இருக்கிறதென்று அர்த்தம். இம்மாதிரி ஏற்பட்டால் இதைத் தொடர்ந்து பக்கவாதம் ஏற்படக்கூட வாய்ப்புண்டு. எனவே கண்களில் ரத்தக்கசிவு வந்தால் அது பக்கவாதம் வருவதற்கு ஒரு அறிகுறியாக இருக்குமோ என்று நினைத்துக்கொண்டு வீட்டில் உட்கார்ந்திருக்காமல் உடனே கண் மருத்துவமனைக்குச் சென்று டாக்டரைப் பார்த்து தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.

கெட்டிக் குருதி, அதாவது கெட்டியாக உறைந்து போன ரத்தம் கண்களின் விழித்திரைக்குச் செல்லும் ரத்தக் குழாயை முழுவதுமாக அடைத்துவிட்டால் ஆபத்து மிக அதிகம். சில நேரங்களில் இப்படி அடைப்பு ஏற்பட்டால் கண் பார்வை முழுவதுமாக தெரியாமல் போவதற்குக் கூட வாய்ப்புண்டு.
அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண் பார்வை விஷயத்தில் மிக மிகக் கவனமாக இருக்கவேண்டும். ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளா விட்டால் கண்களின் பின் பகுதியிலுள்ள மிக நுண்ணிய ரத்தக் குழாய்களைப் பாதிக்கச் செய்து கண்ணின் பின்பகுதியாகிய விழித்திரையை பாதித்து முதலில் மங்கலான பார்வை அடுத்து மொத்தப் பார்வையும் பறிபோய்விடும் நிலைக்கு கொண்டுபோய் விட்டுவிடும். சில சமயங்களில் நாம் பார்க்கும் பார்வையில் நம் கண்ணில் படும் பொருள்கள் எல்லாமே சிவப்பாகவும் நிழல்கள் நடமாடுவது போன்றும் அங்கும் இங்கும் ஏதோ ஓடுவது போன்றும் உங்கள் கண் பார்வையில் தென்பட்டால் கண்ணின் உள்ளே ஏதோ ரத்தக் கசிவு ஏற்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். உடனே கண் டாக்டரைப் பார்ப்பது நல்லது.

கண்கள் விஷயத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாள்பட்ட சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கண்ணின் விழித்திரையிலுள்ள ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு (கண்ணுக்குள்ளேயே ரத்தம் கசிதல் விழித்திரையில் ரத்தம் கசிதல் போன்றவை ஏற்பட்டு பார்வை பறிபோவதற்கு வாய்ப்புண்டு.

மிக வேகமான ஒரு தும்மல் மிக வேகமான ஒரு இருமல் கூட கண்ணுக்குள் இருக்கும் மிக மெல்லிய மிக நுண்ணிய ரத்தக்குழாயை உடைத்து ரத்தக் கசிவை ஏற்படுத்த வாய்ப்புண்டு. சில நேரங்களில் விழி வெண்படலத்தில் ரத்தம் கசிந்து நின்றால் ஓரிரு வாரங்களில் தானாகவே கரைந்து சரியாகிவிடும். சில நேரங்களில் மூக்கின் வழியாக அதிக அளவில் வரும் ரத்தம் மறுபடியும் திரும்பி கண்ணுக்கும் மூக்கிற்கும் இடையிலிருக்கும் துவாரம் வழியாக கண்ணுக்குள் வந்து ரத்தக் கண்ணீராக வெளிவர வாய்ப்புண்டு.

சில பேருக்கு சில நேரங்களில் கண்கள் இரண்டும் செக்கச் செவேலென்று சிவப்பாகத் தோன்றும். இது இயற்கையாக ஏற்படுகிறதா? அல்லது சில பல காரணங்களினால் ஏற்படுகிறதா? என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும் "வசந்த மாளிகை' என்றொரு தமிழ் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கண்கள் இரண்டும் கோவைப்பழம் போன்று சிவந்து காணப்படும். நிறைய பேர் நிச்சயம் இந்தக் காட்சியைப் பார்த்திருப்பீர்கள்.

இது வெறும் நடிப்புதான். "க்ளகோமா' என்கின்ற கண் அழுத்த நோய் அதிகமாக இருக்கின்ற போதும் அதிக கோபத்தின் போதும் கண் நோய் இருக்கின்ற போதும் அதிக மது அருந்திய போதும் அதிக சிகரெட் புகைத்தபோதும் தொடர்ந்து பல நாள்கள் தூக்கமில்லாமல் இருந்த போதும் ரத்த நிறத்தில் கண்கள் சிவப்பாகிவிடும் என்பது உண்மைதான். கண்ணிலுள்ள விழிவெண் படலத்தில் அதிக ரத்த ஓட்டம் ஏற்படும்போது இம்மாதிரி தெரியும். காரணங்கள் சரியான பின் சில மணி நேரங்களிலோ அல்லது சில நாட்களிலோ கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பு குறைந்து தானாகவே சரியாகிவிடும்.

பெண்களைப் பொருத்தவரை மாதவிடாய் காலங்களில் சில சமயங்களில் மிக அரிதாக சிலருக்கு ரத்தக் கண்ணீர் வருவதுண்டு. உடல் நிலையைப் பொருத்தவரை இந்தப் பெண்களுக்கு எந்தவித பிரச்னையும் கிடையாது. இருக்கவும் செய்யாது. ஆனால் அந்தப் பெண்களின் மாதவிடாய் தேதிகளையும் கண்களில் ரத்தம் வரும் தேதிகளையும் கணக்கிட்டுப் பார்த்தால் மாதவிடாய் வரும் தேதியும் ரத்தக் கண்ணீர் வரும் தேதியும் ஒத்துப்போகும். மற்றபடி இப்பெண்களுக்குத் தலைவலியோ தலை சுற்றலோ வாந்தி வருவது போன்ற உணர்வோ கண் வலியோ கண் எரிச்சலோ வேறு எதுவுமே இருக்காது.

கண்ணீருடன் ரத்தம் சேர்ந்து வடிந்தால் கண்களை நன்றாக சுத்தமான தண்ணீர் விட்டு பலமுறை கழுவுங்கள். மூக்கின் உள் பகுதியையும் கண்ணின் உள்பகுதியையும் டெஸ்ட் பண்ணிப் பார்க்க வேண்டும். எனவே உடனே கண் டாக்டரைப் பார்ப்பது நல்லது. சில சமயங்களில். இதற்கு சிகிச்சையே தேவைப்படாமல் தானாகவே சரியாகிவிடும். கண்ணின் நடுவிலுள்ள கருவிழியிலும் கண்மணியிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டால் அது உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.

எந்தவொரு கால கட்டத்திலும் கண்களில் ரத்தம் கசிந்திருக்கிறது என்றால் உடனே நீங்கள் கண் மருத்துவரை பார்ப்பதுதான் நல்லது. பல சமயங்களில் கண்களில் ரத்தம் கசிவதென்பது ஆபத்தான ஒரு விஷயம் அல்ல என்று நினைத்தாலும் கூட சில சமயங்களில் ரத்தக் கசிவு அதிகமாகி கண் பார்வையே பறிபோகிற அளவுக்குக் கொண்டுபோய் விட்டுவிடும்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com