ரத்தத்தின் ரத்தமே... - 5

"பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ரத்தம் டெஸ்ட் செய்த போது "ஏ பாசிட்டிவ்' என்று சொன்ன ஞாபகம்.
ரத்தத்தின் ரத்தமே... - 5


"பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ரத்தம் டெஸ்ட் செய்த போது "ஏ பாசிட்டிவ்' என்று சொன்ன ஞாபகம். ஆனால் இப்பொழுது என் கண்ணெதிரே ரத்த டெஸ்ட் செய்துவிட்டு "ஓ பாசிட்டிவ்' என்று சொல்றாங்க எதை நம்புவது? ஒரே குழப்பமா இருக்கே' என்று நீங்கள் புலம்பினால் தவறு உங்களிடம் தான் இருக்கிறதே தவிர ரத்த பரிசோதனையிலோ ரத்தத்திலோ இல்லை. நீங்கள் வாரத்துக்கு ஒருமுறை ரத்தம் டெஸ்ட் பண்ணினாலும் சரி வருடத்துக்கு ஒரு முறை ரத்தம் டெஸ்ட் பண்ணினாலும் சரி பிறக்கும்போது என்ன ரத்தவகை உங்களுக்கு கண்டுபிடிக்கப்பட்டதோ அதுதான் உங்களின் ஆயுள் முழுக்க இருக்கும். மாறவே மாறாது.

எதிர்பாராத விதமாக சில அசாதாரண சூழ்நிலைகளில், அதாவது உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் மாற்று எலும்பு மஜ்ஜை சிகிச்சை செய்தவர்கள் "சில குறிப்பிட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில குறிப்பிட்ட அரிதான நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள். இம்மாதிரி நபர்களுக்கு மிக அரிதாக, மிக மிக மிக அரிதாக ரத்த வகை மாற வாய்ப்புண்டு. இதைப் படித்தபின் எங்கே உங்களுக்கும் ரத்த வகை மாறிவிடுமோ என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். பயப்பட வேண்டாம். கவலையும்வேண்டாம்.

1900 -ஆவது ஆண்டில் வியன்னா பல்கலைக்கழக, விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டெயினர் "ஏ, பி, ஏபி மற்றும் ஓ' ஆகிய ரத்த வகைகள் மனித உடலில் இருக்கின்றன என்று கண்டுபிடித்து, 1909-இல் உலகுக்கு அறிவித்தார். அரிதாக சில ரத்த வகைகள் உலகின் சில மூலைகளில் இருந்தாலும், பிரதான ரத்த வகைகளாக இந்த "ஏ, பி, ஏபி மற்றும் ஓ' ஆகிய நான்கு ரத்த வகைகள்தான் நடைமுறையில் இருக்கின்றன. உங்களுடைய ரத்தவகை இந்த நான்கில் ஏதாவதொன்றாகத்தான் கண்டிப்பாக இருக்கும். உங்களுடைய ரத்த வகை உங்களது தாய், தந்தையரின் மரபு வழியாக தீர்மானிக்கப்பட்டு மரபணுக்கள் மூலமாக உங்களுக்கு வந்து சேருகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை "ஓ' ரத்த வகைதான் அதிகம். இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் சுமார் 37.12 சதவீதம் பேர் "ஓ' ரத்தவகையைச் சேர்ந்தவர்கள். அடுத்ததாக சுமார் 32.26 சதவீதம் பேர் "பி' ரத்தவகையைச் சேர்ந்தவர்கள். அதற்கடுத்ததாக சுமார் 22.88 சதவீதம் பேர் "ஏ' ரத்தவகையைச் சேர்ந்தவர்கள். கடைசியாக சுமார் 7.74 சதவீதம் பேர் "ஏபி' ரத்தவகையைச் சேர்ந்தவர்கள். "ஏபி' ரத்தவகையைச் சேர்ந்தவர்கள்தான் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.

"மிக அரிதாக சில ரத்தவகை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதுண்டு. மொத்த ஜனத்தொகையில் ஆயிரத்தில் ஒருவருக்கு ரத்தவகை "ஏ, பி, ஏபி' மற்றும் ஓ ஆகிய இந்த நான்கில் ஒன்றாக இல்லாமல் வேறு ஏதோவொன்றாக இருந்தால் அது அரிதான ரத்தவகை தானே "பம்பாய் ஓஹெச்' என்று ஒரு ரத்தவகை 7600 பேரில் ஒருவருக்கு பம்பாயில் இருக்கிறதாம். மகாராஷ்டிர மாநிலத்தின் தென்மேற்கு பகுதியிலும் 2500 பேரில் ஒருவருக்கு இந்த "பம்பாய் ஓஹெச்' ரத்தவகை இருக்கிறது. நமது நாட்டில் இந்த இடத்தைத் தவிர வேறு எங்கும் இந்த "பம்பாய் ஓஹெச்' ரத்த வகை இல்லை. 1952- ஆம் ஆண்டில் இந்த ரத்தவகை பம்பாயில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது.

நடிகை வித்யா பாலன் முக்கிய வேடத்தில் நடித்து சிறந்த நடிகை சிறந்த படம் போன்ற பல தேசிய விருதுகளைப் பெற்று 2012-இல் வெளியான "கஹானி' இந்தித் திரைப்படத்தில் கூட "பம்பாய் ஓஹெச்' ரத்தவகையைப் பற்றி ஒரு காட்சியில் மிக அருமையாக சொல்லியிருப்பார் படத்தின் இயக்குநர். இந்தியாவைப் பொருத்தவரை "பம்பாய் ஓஹெச்' தான் மிக அரிதாக இருக்கக் கூடிய ரத்தவகை.

பொதுவாக ஜோதிடர்கள் இந்த ராசியில், பிறந்தவர்களுக்கு இந்த குணாதிசயமெல்லாம் இருக்கும் என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் மேஷ ராசியில் பிறந்தவர்கள் மிகவும் சாதுவாக இருப்பார்கள். ஆனால் நாலுபேர் சொல்லும் நல்ல விஷயங்களை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். சிம்மராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள், தைரியமானவர்கள். ஆனால், யாருக்கும் அடங்கமாட்டார்கள். தனுசு ராசிக்காரர்கள் நீதிக்கும் நேர்மைக்கும் பயப்படுவார்கள்.

ஆனால், கோபம் மட்டும் வந்தால் எதிரிகள் உதிரிகளாகி விடுவார்களாம். இப்படி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும் என்று ஜோதிடர்கள் சொல்வார்கள். அதுபோல "இந்த ரத்தவகை உள்ளவருக்கு கோபம் அதிகம் வரும். இந்த ரத்தவகை உள்ளவருக்கு வயிற்றில் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்' என்று சொல்லும் வழக்கம் நம் நாட்டிலும் உண்டு. வெளி நாட்டிலும் உண்டு.

"ஏ' ரத்தவகைக்காரருக்கு கொசு கடிப்பது என்பது ரொம்ப ரொம்ப குறைவாம். இந்த குரூப்காரர்கள் மதுவுக்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம். வயிற்றில் இரைப்பைப் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகமாம். மன உளைச்சலில் அதிகம் அவதிப்படுவார். மிகப் பழமையான ரத்தவகை "ஏ' தான்.

"பி' ரத்த வகைக்காரர்கள் நல்ல ஆயுளுடன் நீண்ட காலம் வாழ்வார்கள். ஜப்பான் நாட்டில் நூறு வயதைத் தாண்டி வாழ்பவர்களை கண்டுபிடித்து கணக்கெடுத்து அவர்களுடைய ரத்தம் என்ன வகை என்று டெஸ்ட் செய்து பார்த்ததில் சுமார் 29.4 சதவீதம் பேர் "பி' ரத்தவகையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். "பி' ரத்தவகைக்காரர்களுக்கும் வயிற்றில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். இந்த ரத்த வகைக்காரர்களுக்கு நன்மை செய்யக்கூடிய குடல் பாக்டீரியாக்கள் சுமார் 50 ஆயிரம் மடங்கு மற்ற ரத்த வகைக்காரர்களை விட அதிகமாக இருக்கும்.

"ஏபி' ரத்தவகைக்காரர்களுக்கு ஞாபக மறதி பிரச்னை அதிகம் இருக்கும். ரொம்ப சாதுர்யமானவராக இருப்பார்கள். மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் இவர்கள் இருப்பார்கள்.

"ஓ' ரத்தவகைக்காரர்களும் நீண்ட நாட்கள் வாழ்வார்கள். இந்த ரத்தவகைக்காரர்களுக்கு இருதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவு. இவர்களுக்கு மலேரியா பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம். அப்படியென்றால் இவர்களுக்கு கொசுக்கடி வாய்ப்பு அதிகம் என்று அர்த்தம். அதே மாதிரி ரத்த உறைவு ஏற்பட வாய்ப்பு அதிகம். இவர்களை அதிகமாக நம்ப முடியாது. இவர்கள் சிரிப்பதை வைத்தோ அழுவதை வைத்தோ முடிவு பண்ணிவிட முடியாதாம். மிகவும் கடினமாக இருப்பார்களாம். தனுசு ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் கோபம் அதிகமாகவே வரும் என்று சொல்வதைப் போல ஜப்பானில் "ஓ' ரத்தவகைக்காரர்கள்.

கொஞ்சம் முரட்டுத்தனமாக இருப்பார்கள். "ஓ நெகட்டிவ்' ரத்த வகைதான், மிகச் சிறந்த ரத்தவகை. ஏனெனில் அடிக்கடி உபயோகப்படுவதும் அவசரத்துக்கு உபயோகப்படுவதும் ஆபத்துக்கு உபயோகப்படுவதும் "ஓ நெகட்டிவ்' ரத்த வகை தான். ஜோதிடம் சொல்வது போல யூகத்தின் அடிப்படையில் இந்த ரத்த வகைக்காரர்களுக்கு இந்த குணாதிசயம் இருக்கலாம் என்று சொல்லப்படும் விஷயங்களை நீங்கள் நம்பி எந்தக் காரியங்களையும் முடிவு செய்ய வேண்டாம்.

ஆபத்துக்கு ரத்தத்தை அள்ளி அள்ளி தானம் செய்பவர்கள்" ஓ' ரத்தவகையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே. "ஓ' ரத்த வகைக்காரர்களின் ரத்தத்தை மற்ற எல்லா வகை ரத்தவகையினரும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். "ஏ,பி, ஏபி மற்றும் ஓ' ஆகிய நான்குவகை ரத்தப் பிரிவினருக்கும் "ஓ' ரத்தவகைக்காரர்கள் தங்களது ரத்தத்தை தானமாகக் கொடுக்கலாம். அதனால்தான்" ஓ' வகை ரத்தம் அதிக கிராக்கி. இந்தியாவில் "ஓ' ரத்தவகைக்காரர்கள் தான் அதிகம் இருக்கின்றார்கள். அப்படியிருந்தும் "ஓ' வகை ரத்தத்துக்கு அதிக தேவை இருக்கின்றது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com