ரோஜா மலரே! - 80: ஸ்ரீதரின் சிரிப்பு; கோபுவுக்கு வாய்ப்பு! - குமாரி சச்சு

திடீர் என்று நாங்கள் நடித்துக் கொண்டிருந்த போது சிரிப்பலைகள் கேட்டது. யார் சிரித்தது?  எப்பொழுதுமே படப்பிடிப்பு நடக்கும் இடம் பரபரப்பாகக் காணப்படும்.
ரோஜா மலரே! - 80: ஸ்ரீதரின் சிரிப்பு; கோபுவுக்கு வாய்ப்பு! - குமாரி சச்சு


திடீர் என்று நாங்கள் நடித்துக் கொண்டிருந்த போது சிரிப்பலைகள் கேட்டது. யார் சிரித்தது?  எப்பொழுதுமே படப்பிடிப்பு நடக்கும் இடம் பரபரப்பாகக் காணப்படும். வெளியே அந்தக் காட்சிக்கு தேவைப்படாத நடிகர், நடிகையர் அரட்டை கச்சேரி நடத்திக் கொண்டிருப்பார்கள். ஆனால் செட்டின் உள்ளே, பெரிய காட்சியாக இருந்தால், இயக்குநர், அவரைச் சுற்றி உள்ள தொழில் நுட்பக் கலைஞர்கள், காட்சி நன்றாக வரவேண்டுமே என்ற ஆதங்கதோடு, உழைத்துக் கொண்டிருப்பார்கள். 

ஆனால் காட்சி எப்படி இருந்தாலும், படப்பிடிப்புத் தளம் அமைதியாக இருக்கும். ஆனால், நகைச்சுவை காட்சிகள் படமாகும் போது மட்டும், இயக்குநர் "ஆக்ஷன்' என்று கூறினால் மட்டும் அமைதியாகி விடும். காட்சி எடுக்கப்படும் முன்னரும், பின்னரும், அதில் நடிகர், நடிகையர், ""இப்படிச் சொல்லலாமா வசனத்தை'' என்று இயக்குநருக்கு பேசிக் காட்டுவார்கள். 

ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கும் போது யூனிட்டில் உள்ளவர்கள் கூட சிரிப்பார்கள். ஆனால் "ஆக்ஷன்' என்று  இயக்குநர் சொல்லி விட்டால், சப்த நாடியும் அடங்கி, அந்த இடமே அமைதியாகி விடும். ஆனால் "ஊட்டிவரை உறவு' படப்பிடிப்பில் நானும், நாகேஷும்  நடித்துக் கொண்டிருந்தோம். இயக்குநர்  "ஆக்ஷன்' சொல்லி விட்ட பிறகு, நாங்கள் மும்ரமாக நடித்துக் கொண்டிருத்த போது திடீரென்று சிரிப்பலைகள் கேட்டது. யார் இந்தக் காட்சியின் நடுவில் இப்படிச் சிரிக்கிறார்கள் என்று பார்க்க ஆசைப்பட்டேன். "கட் கட்' என்றார் இயக்குநர் ஸ்ரீதர். இது மாதிரி ஒரு முறை அல்ல பல முறை "டேக்'கின் போது பிரச்னை ஏற்பட்டது. இதற்குக் காரணம் நாங்கள் அல்ல. நாங்கள் நடிப்பதை நிறுத்தி விட்டு, இயக்குநரைப் பார்த்தோம். அப்புறம் தான் தெரிந்தது சிரித்ததே அவர்தான் என்று. காட்சி எடுக்கப்படும் போது, இப்படி அவரே சிரித்ததால், அவரால் இந்த நகைச்சுவை காட்சியை எடுக்க முடியவில்லை என்பது புரிந்தது. 

அதனால் இயக்குநர் ஸ்ரீதர், சித்ராலயா கோபுவை பார்த்து, ""கோபு நீ எடுப்பா, நான் செட்டிற்கு வெளியே போகிறேன். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை,'' என்று கூறி விட்டு, செட்டிற்கு வெளியே போய் விட்டார். அதனால், அவர் கூறியபடி கோபு சார், எங்கள் காட்சியை இயக்கி முடித்தார். கோபு முதல் தடவையாக அந்தக் காட்சியை இயக்கினார். ஆனால், அதற்குப் பிறகு சித்ராலயா கோபு பல படங்கள் இயக்கினார். அவை பெரும்பாலும் நகைச்சுவை படங்களே!

தேவரின் "துணைவன்' படத்திலும், எங்கள் இருவருக்கும் அருமையான வேடங்கள் கிடைத்தன. என் நகைச்சுவை நடிப்பு வரிசையில் ஒரு மறக்க முடியாத படம் என்று சொன்னால்,  "துணைவன்' படத்தினைச் சொல்லலாம். 

நாகேஷ் "டேக்'கில் என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியாது. ஒத்திகையில் பல முறை செய்து பார்த்த பின், அவர் "டேக்'கில் அதையே செய்வார் என்று எதிர்பார்க்க முடியாது. முன்பே சொன்னது போல், அவர் தனது கற்பனையில் தோன்றியதை  ஏதாவது செய்வார். அது 

வசனமாக இருக்கட்டும், உடல் மொழியாக இருக்கட்டும், புதிதாக ஏதாவது செய்வார், இயக்குநருக்குப் பிடித்துப் போய்விட்டால் வைத்துக் கொள்ளச் சொல்வார்.

ஒரு நாள்  வேறொரு படப்பிடிப்பு நடக்கும் போது, அந்தக் காட்சிக்கு ஒரு முறைக்கு இரு முறையாக ஒத்திகைப் பார்த்தோம், நன்றாக வந்தது. இயக்குநருக்கு ரொம்ப சந்தோஷம். "டேக்' என்று சொன்னார். நாகேஷ், டேக்கில் நான் வசனம் பேசிக் கொண்டிருக்கும் போது, இரண்டு முறை என் வாய் மீது தட்டி விட்டார். ஒத்திகையின் போது அவர் இதைச் செய்யவில்லை என்பதால், நானும் இதை எதிர்பார்க்கவில்லை. காட்சி சரியாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் வலியை பொறுத்துக் கொண்டு  நடித்து விட்டேன். காட்சி முடிந்தவுடன் கோபத்தோடு அவரைப் பார்த்தேன். அதற்குள் என் பல்லின் மேல், அவரது விரல் பட்டதால், என் உதடு கிழிந்து ரத்தம் வரத் தொடங்கியது. நான் அவரிடம் சொன்னேன், "நீங்கள் இப்படி செய்யப் போவதை, எனக்கு முன்பே "சொல்லவில்லை' என்று கேட்டேன். இதெல்லாம் நடந்தது "நம்பிக்கை நட்சத்திரம்' என்ற படத்தில்.

"டேக்' முடிந்ததும் என்னிடம் வந்து அவர்   மன்னிப்பு கேட்டார். "டேக்கில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது இதைச் செய்தால் சரியாக இருக்கும் என்று தோன்றியது. அதனால்,  செய்து விட்டேன்' என்று மீண்டும், மன்னிப்பு கேட்டார். "நம்பிக்கை நட்சத்திரம்' படத்தில் நான் வீட்டு வேலைக்காரியாக நடிப்பேன்.

அந்த வீட்டில் உள்ள கார் ஓட்டுநராக நாகேஷ் நடிப்பார். நான் மலையாள மொழி பேசும் வேலைக்காரி, அவர் தமிழ் பேசும் டிரைவர். பின்னர் நாங்கள் இருவரும் காதலித்துக் கல்யாணம் செய்து  கொள்வோம். அந்தப் படத்தின் வசனத்தில் நகைச்சுவை மிளிரும். இன்னும் சொல்லப் போனால் "காதலிக்க நேரமில்லை' படத்தில், எங்கள் நகைச்சுவை காட்சிகள் பேசப்பட்ட அளவிற்கு "ஊட்டிவரை உறவு' காட்சிகளும் பேசப்பட்டன. இன்று வரை அந்தக் காட்சிகளைப் பற்றிப் பேசுகிறார்கள் என்றால், அந்தக் காட்சிகள் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

நான் ஒரு முறை படப்பிடிப்புத் தளத்திற்குப் பக்கத்தில் மர நிழலில் உட்கார்ந்தேன். அப்பொழுது  ஒருவர் வந்து, "வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது' என்று கூறினார். இன்று போல், அன்று கைபேசி எல்லாம் கிடையாது. மிக முக்கியமான செய்தியாக இருந்தால் மட்டுமே இப்படிக் கூப்பிடுவார்கள், செட்டிக்குள் நுழைந்து விட்டால், வெளியே என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் எல்லாம் காட்சி, வசனம் என்று படப்பிடிப்பே கதி என்று இருப்போம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  செட்டில் இருந்து விட்டால் எல்லோரும் அவரவர் வேலையில் கவனமாக இருப்போம். இயக்குநர் அனுமதித்தால் தான் செட்டை விட்டே வெளியே செல்வார் சிவாஜி.

அன்று எனக்கு உணவு இடைவேளைக்கு முன்னதாகவே, நான் நடிக்கும் காட்சி முடிந்து விட்டது. ஆகையால் நான் செட்டை விட்டு வெளியே வந்து உட்கார்ந்து இருந்தேன். எனக்குத் தொலைபேசி அழைப்பு என்றவுடன், எழுந்து போய் என் அம்மாவிடம் பேசி விட்டு, "மதிய உணவுக்கு எப்பொழுது உணவு கொடுத்து அனுப்புகிறாய்?', என்று கேட்டேன். திடீரென்று என் கையில் உள்ள தொலைபேசியைப் பிடுங்கினார் ஒருவர். யார் அவர்?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com