புத்தகங்களின் ஆலயம்

தமிழகத்தில் புத்தக வாசிப்பு குறைந்து வருகிறது என்று சொல்லப்பட்டாலும் நூல்கள் விற்பதில் சாதனை புரிந்து கோவையில் பீளமேடு ஃபன்மாலுக்கு அருகில் சுமார் 2 லட்சம் புத்தகங்களைக் கொண்ட நூலகத்தைச் சொந்தக்
புத்தகங்களின் ஆலயம்


தமிழகத்தில் புத்தக வாசிப்பு குறைந்து வருகிறது என்று சொல்லப்பட்டாலும் நூல்கள் விற்பதில் சாதனை புரிந்து கோவையில் பீளமேடு ஃபன்மாலுக்கு அருகில் சுமார் 2 லட்சம் புத்தகங்களைக் கொண்ட நூலகத்தைச் சொந்தக் கட்டடத்தில் தொடங்கியிருப்பவர் ராஜன். ராஜனின் "ஆம்னி புக்ஸ் லைப்ரரி' யின் மூன்று தளங்களும் ஏசி, லிஃப்ட் வசதிகளுடன் பிப்ரவரி 15 முதல் இயங்கி வருகிறது. இந்தியாவிலேயே மிகப் பெரிய தனியார் நூலகம் "ஆம்னி புக்ஸ் லைப்ரரி' தான்...!

தனது வெற்றிக் கதையைப் பகிர்கிறார் ராஜன்:

""மேல்மருவத்தூருக்கு அருகில் கீழ் கொடுங்காளூர் கிராமம்தான் எனக்கு சொந்த ஊர். சாதாரண ஏழைக் குடும்பம் தான். அதனால் பள்ளி படிப்பு முடித்ததும் மேலே படிக்க வாய்ப்பின்றி வேலை தேடி தொண்ணூறுகளில் சென்னை வந்தேன். என்சைக்கிளோபீடியா போன்ற அறிவு சார்ந்த புத்தகங்களை விற்கும் நிறுவனத்தில் விற்பனையாளராகச் சேர்ந்தேன். ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை விற்றால் எனக்கு பத்து ரூபாய் கமிஷன் கிடைக்கும். அப்படி மாதம் நான்காயிரம் வரை சம்பாதிக்க ஆரம்பித்தேன்.

சின்ன அறையில் தங்கி, நூல்களை விற்று வந்தேன். ஆடம்பரத்துக்கு ஆசைப்படாமல் சிக்கனமாக செலவு செய்து பணத்தைச் சேமிக்க ஆரம்பித்தேன். புத்தக கண்காட்சிக்குப் போய் பல வகையான நூல்களை பார்த்து வருவேன். அப்போதுதான் ஒரு அதிசய உண்மை தெரியவந்தது. ரூ 500 மதிப்புள்ள புத்தகங்கள் கண்காட்சியில் ரூ. 300 க்கு விற்கப்படுவது தெரிய வந்தது. அந்த விலைக்கு வாங்கப்பட்ட நூல்களை எனது நிறுவனம் எனக்குத் தந்து 500 க்கு விற்கச் சொல்லி எனக்கு ரூ.10 கமிஷன் கொடுத்துவிட்டு ரூ.190 லாபம் சம்பாதிப்பது தெரிந்தது.

புத்தக விற்பனையில் இவ்வளவு லாபமா என்று அசந்து போனேன். ஆனால் புத்தகங்களை மொத்தமாக விலைக்கு வாங்க வேண்டும். மொத்தமாக வாங்கப் போதுமான பணமும் வேண்டும். ஆனால் என்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை. உடனே பெற்றோரிடம் சென்றேன். "நல்ல லாபம் தரும் புத்தக விற்பனை' குறித்து சொன்னேன். பெற்றோர் தந்த பணம், முதலீடாக வைத்து மொத்தமாக நூல்களை வாங்கி சொந்தமாக விற்பனையை ஆரம்பித்தேன்.

சென்னை சைதாப்பேட்டையில். "ஓம்சக்தி புக் ஹவுஸ்' என்ற புத்தகக் கடையையும் ஆரம்பித்தேன். எனது இரண்டு சகோதரர்களும் என்னுடன் புத்தக விற்பனையில் இணைந்தார்கள்.

அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களிடம் புத்தகங்களைத் தவணை முறையிலும் கொடுத்தோம். தவணையை வசூலிக்க பல தடவைகள் அலுவலகங்கள் ஏறி இறங்க வேண்டும். சிலர் அடுத்த வாரம் அல்லது மாதம் தருவதாகச் சொல்வார்கள். பொறுமையுடன் மீண்டும் செல்வோம். இப்படித்தான் எங்கள் புத்தக விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியது. சில ஆண்டுகளில் அறிவு சார்ந்த புத்தகங்களை வெளிநாடுகளிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்ய ஆரம்பித்தோம். குழந்தைகளுக்கு அறிவு வளர்க்கும் வண்ணப் படங்களுடன் கூடிய புத்தகங்கள் வெளிநாடுகளில் வெளியாகும்.

அப்போது இந்தியாவில் அந்த மாதிரி புத்தகங்கள் வெளியாகவில்லை. மனதைக் கவரும் வண்ணத்தில் தரமான புத்தகங்களைத் தங்கள் பிள்ளைகளுக்காக வாங்க ஆரம்பித்தார்கள். எங்கள் புத்தக விற்பனை, வருமானம் கூடியது. இன்றைக்கும் சிறார்களுக்கான புத்தகங்களை மேல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம்.

பத்து ஆண்டுகளுக்கு முன் நான் கோவைக்கு குடி பெயர்ந்தேன். அங்கு "ஆம்னி புக்ஸ்' நிறுவனத்தைத் தொடங்கினேன். எனது சம்பாத்தியம், சேமிப்பு அனைத்தையும் என்னை ஆளாக்கிய நூல்களில் விதைத்தேன்.

வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஒரு நூலகம் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் கனவாக மாறியது. சேமித்த பணத்தில் பல ஆண்டுகளாக நூல்களை வாங்கிக் குவித்தேன். கோவையில் பிரதான இடத்தில் மனை வாங்கி மூன்று அடுக்கு கட்டிடத்தை 5500 ச.அடி பரப்பளவில் கட்டினேன். அங்கு சுமார் இரண்டு லட்சம் நூல்களை வாங்கினேன். இந்த நூல்கள் 90 சதவீத நூல்கள் புதியவை. விலை கொடுத்து வாங்கியது. பத்து சதவீதம் மட்டுமே அரிய பழைய நூல்கள். இந்த நூலகத்தில் சிறார்களுக்கு மட்டும் 60ஆயிரம் நூல்கள் உள்ளன.

அனைத்து தலைப்பிலும் சிறியோர், இளைய தலைமுறை, பெரியவர்களுக்கு நூல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நாவல்கள் முக்கிய கதையாளர்களின் தொகுப்பே உள்ளது. பெரும்பாலான நூல்கள் ஆங்கிலத்திலும், போதுமான நூல்கள் தமிழிலும், மலையாள நூல்களும், தொடக்க நிலை ஹிந்தி நூல்களும் உள்ளன.

நூலகத்தில் பாட நூல்கள் இல்லை. ஆய்வு நூல்கள் உண்டு. உதாரணத்திற்கு, கட்டடக்கலை குறித்த நுணுக்கங்களை சொல்லும் நூல்கள் உண்டு. இது ஒவ்வொரு துறைக்கும் பொருந்தும். போட்டி தேர்வுகளுக்கு ஆயத்தம் செய்ய தேவையான நூல்களும் இருக்கின்றன. சிறார்கள், பெரியவர்கள் என்று சுமார் 200 பேர்கள் நூலக உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர்.

கோவை, சென்னை நகரங்களில் எங்களது நூல் விற்பனை ஆண்டிற்கு இரண்டு கோடிகள். இந்த நூலகக் கட்டடத்தை வாடகைக்கு விட்டால் எனக்கு கணிசமான தொகை வாடகையாக கிடைக்கும். ஆனால் மக்களிடையே குறைந்த செலவில் வாசிக்கும் வழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே லாபத்தை மட்டும் பார்க்காமல் சேவையின் அடிப்படையில் இந்த நூலகத்தை ஆரம்பித்துள்ளேன். என்னைப் பொருத்தவரையில் இது நூலகம் இல்லை... புத்தகங்களின் ஆலயம்'' என்கிறார் ராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com