இசைக்கலைஞர்களுக்கு எல்லையில்லை!

இந்திய  இசைக்குப் புதிய மாற்றம் தேவைப்படும் நேரம் இது.
இசைக்கலைஞர்களுக்கு எல்லையில்லை!


இந்திய இசைக்குப் புதிய மாற்றம் தேவைப்படும் நேரம்இது. அதற்காக "மாஜ்ஜா' (ம்ஹஹத்த்ஹ) என்ற இசை மேடையை உருவாக்கியிருக்கிறார் ஏ.ஆர் ரஹ்மான். "இதன்மூலம் இந்திய இசைக்கலைஞர்களை உலகளாவிய மேடைகளுக்கு எடுத்துச் செல்ல முடியும். காரணம் இந்தியஇசையின் சக்தியை நான் எப்போதும் நம்புகிறேன்' என்றுநம்பிக்கை தெரிவிக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

1992-ஆம் ஆண்டு வெளியான "ரோஜா' படம் மூலம் தமிழ் இசையுலகிற்கு அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான். முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தனது அபாரமான திறமையினால், கிராமி விருது, மற்றும் இரண்டு முறை ஆஸ்கர் விருதையும் தட்டிச் சென்றவர். தன்னுடைய வெற்றிக்குப் பின்னால் உள்ள அனுபவங்களை, வளரும் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தான் கடந்து வந்த பாதையின் இசை அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:
மாஜ்ஜா பற்றி சொல்லுங்கள் என்றதும், "இது எனது எண்ணத்தில் உதித்த அமைப்பாகும்.

இதன் மூலம் திறமை வாய்ந்த இசைக்கலைஞர்களுக்கு அரியதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களுடைய திறமையை உலகத்திலுள்ள அனைவரும் அறிந்து கொள்ள வைக்க முடியும். இதில் இசைக்கலைஞர்கள் அவர்களுடைய படைப்பாற்றலை எந்த வகையிலும் குறைத்து கொள்ளாமலும், வணிக ரீதியிலான நோக்கம் இல்லாமல் தங்களுடைய அடையாளத்தை இழக்காமலும் இருப்பதற்கு இது ஒரு பாலமாக இருக்கும். ஏராளமான இசைக்கலைஞர்கள் தங்களுடைய இசைப்பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக எல்லோருடைய இசையும் கேட்கப்படுவதில்லை. தற்போதுள்ள டிஜிட்டல் உலகில் எந்தவொரு தடைகளும் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் "மாஜ்ஜா' அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. திறமையானவர்களை உலகத்துக்கு எடுத்துக்காட்ட வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் இந்த அமைப்பு செயல்படும்' என்ற விளக்கத்துடன் பேச ஆரம்பிக்கிறார்.

மாஜ்ஜாவைப் பற்றி உங்கள் பார்வை என்ன?

இசைக்கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்த உதவும் தளம். இங்குள்ளவர்களிடம் திறமைகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. அவை வெளிச்சத்துக்கு வரும் இதன் மூலம் வேலை வாய்ப்புகள் பெருகும். சுற்றுலாவை மேம்படுத்தலாம். பொழுது போக்குடன் கூடிய சந்தோஷத்தை மக்களுக்குத் தரலாம். இது ஒரு மாற்று பொழுது போக்குத் தளமாக இருக்கும்.

இப்போதுள்ள இளம் கலைஞர்களிள் திறமை சுரண்டப்படுகிறதா?

நவீன உலகில் எல்லோரும் அறிவாளிகள் புத்திசாலிகளாக உள்ளனர். வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடாமல் யாரும் ஜெயிக்க முடியாது. இசையை முழு நேர தொழிலாக எடுத்துக் கொள்வதற்குத் தனித் தைரியம் வேண்டும். இன்று சமூகவலைத்தளங்கள் என்ற ஆயுதம் உள்ளது. இதன் மூலம் எந்த விஷயத்தையும் மக்களிடம் இருந்து மறைக்க முடியாது.

சரியான இசையமைப்பாளரை கண்டு கொள்வது எவ்வளவு
முக்கியம் என்று நினைக்கிறீர்கள்?

சரியான குரல் சரியான இசையமைப்பாளருடன் இணையும் போது,
அது ஓர் அதிசயத்தை நிகழ்த்தும். கூடுதலாக ஒரு நல்ல இசைக்குழு
அமைந்துவிட்டால் மேலும் அவர்கள் எதிர்காலத்தில் நன்கு பிரகாசிக்கலாம்.

வணிகத் தேவைகளையும் உங்கள் படைப்பு சுதந்திரத்தையும்
எவ்வாறு சமாளிக்கீறீர்கள்?

கலைத்தன்மை கெடாமலும் வணிக ரீதியான எதிர்பார்ப்பை குறைக்காமலும் இரண்டையும் சமமாக எண்ணி நடுநிலையான பாதையில் நான் செல்வதாக நினைக்கிறேன். எனவே வாய்ப்பு வரும்போது, நாம் முயற்சித்த பிடித்த சில விஷயங்களைச் செய்கிறோம். அது ஒரு புனிதமான வெளிப்பாடு. அதனை எதனோடும் ஒப்பிட முடியாது.

தற்போதுள்ள இசை உருவாக்கம் எப்படி உள்ளது?

இப்போது ஏராளமான விஷயங்கள் மாறிவிட்டன. இது தற்போதுள்ள இசைக்கலைஞர்களுக்குச் சாதகமாக உள்ளது. என்னால் கண்டறியப்பட்ட பல இசைக்கலைஞர்கள் என்னுடைய ஸ்டூடியோவிற்கு வந்துவிட்டால், நாங்கள் அனைவரும் ஒரு பாடலை உருவாக்கும் வேலையில் ஈடுபடுவோம். எந்தவொரு அழுத்தமும் இல்லாமல் அவர்களுடைய குரலைப் பதிவு செய்வோம்.

முன்பு இருந்தது போன்ற பதற்றமோ அழுத்தமோ இப்போது கிடையாது. 1980 களில் பாடும் கலைஞர்கள் பல பேர் கொண்ட இசைக்குழுவிற்கு முன்னால் நின்று கொண்டு பாட வேண்டிய கட்டாயம் இருந்தது. அதோடு சரியான ஸ்ருதியிலும் - வார்த்தைகள் உச்சரிப்பு- தெளிவான குரல் வளம் - இப்படி எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. மேலும் பாடல் பதிவிற்கான கால நேரம் மிகவும் குறைவு. ஏனென்றால் அந்தக் காலத்தில் நேரடியான பாடல் பதிவு செய்வதற்கு ஆகும் செலவு மிக மிக அதிகம். இதைப்பார்க்கும் போது இப்போது பாடகர்களுக்கு எந்த வகையிலும் பதற்றமோ அழுத்தமோ இல்லை.

இசைக்கலைஞர்களை எதன் அடிப்படையில் தேர்வு செய்வீர்கள்?

ஒரு கலைஞன் அவருக்கே உரித்தான ஆளுமையோடு இருப்பது எல்லோரையும் ஈர்க்கும். உண்மையான கலைஞர்களை யாராலும் தடுக்க முடியாது. அதற்கு எந்தத் தடையும் இல்லை. இசையை முறையாகக் கற்றுக்கொள்ளவில்லையென்றாலும், ஒரு சிலர் மிகுந்த திறமையுள்ளவர்களாக இருக்கிறார்கள். இசையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களை விட இவர்களுடைய திறமை அசாத்தியமாக இருக்கிறது. இதுதான் இயற்கையின் சக்தி. இதுவே அவர்கள் பிரகாசிக்கக் காரணம். சிலருடைய குரலில் மறந்து போன பாரம்பரியத்தைப் பார்க்க முடிகிறது. சிலரிடம் புதுமையான விஷயங்களை உணர முடிகிறது. அதனால் என்னுடைய பார்வையில் இசைக்கலைஞர்களுக்கு வரையறை என்பதே கிடையாது.

அடுத்தத் தலைமுறையினரிடம் உங்களைக் கவர்ந்த விஷயங்கள் என்ன?

சமீபமாக நமது இந்திய இசைக்கலைஞர்களின் புதிய புதிய வித்தியாசமான இசையைக் கேட்க முடிகிறது. அவர்கள் தன்னம்பிக்கையோடு தங்களை வெளிப்படுத்துவதைப் பார்ப்பது சுவராஸ்யமாக உள்ளது. இன்றைய இளைய தலைமுறை கலைஞர்களிடம் ஒரு தனித்துவம் இருப்பதை காண முடிகிறது. இது தான் நான். நான் யாரைப் போலவும் இல்லை. என்னால் என்ன முடியுமோ அதை நன்றாகச் செய்கிறேன் என்று வெளிப்படையாகச் சொல்கிறார்கள்.

இசையை கற்பிக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அல்லது பிறப்பிலேயே இசையறிவு இருக்க வேண்டுமா?

ஒரு குதிரையை தண்ணீருக்கு அருகில் மட்டுமே அழைத்துச் செல்ல முடியும். அதனைத் தண்ணீர் குடிக்க வைக்க முடியாது என்று ஒரு பழமொழி உண்டு. வெறும் இசையறிவு இருந்தால் மட்டுமே போதாது. ஆர்வம் இருப்பவர்களுக்கு நாம் சிறிய வாய்ப்புக் கொடுத்தாலும் அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு விரைவில் தங்களை மேம்படுத்திக் கொண்டு வெற்றி பெற்றவர்களையும் என்னுடைய அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். ஒரு சிலருக்கு ஏராளமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டாலும் அதைப் பயன்படுத்தாமல் இருப்பவர்களும் உண்டு. ஆகவே ஆர்வமுடைய இசைக்கலைஞர்கள் பெரிய அளவில் சாதிக்க முடியும்.

பொது முடக்கம் என்பது உங்களுக்கு சவாலாக இருந்ததா? அல்லது பயனுள்ள பொழுதாக அமைந்ததா?

சென்னையிலுள்ள ஸ்டூடியோ என்னுடைய வீட்டிற்கு அருகாமையில் உள்ளதால் நான் இசையமைப்பாளர் ஆனதில் இருந்தே வீட்டிலிருந்து வேலை செய்வது எனக்குப் பழக்கமான ஒன்றுதான். இசை சம்பந்தப்பட்ட யோசனைகள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரும். பொது முடக்கக் காலத்தில் மக்கள் துன்பப்படுவதைப் பார்த்து மன வேதனை அடைந்தேன். எனது பவுண்டேஷன் மூலம் முடிந்த வரை உதவிகள் செய்தேன். இசை படைப்பு என்று வருகிற போது இந்த பொது முடக்கக் காலத்தில் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது என்று சொல்லலாம்.

பொது முடக்கக் காலத்தில் நிறையப் புதுமையான விஷயங்களைப் பார்க்க முடிந்தது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி என்னைத் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்ற வைத்தது என்று சொல்லலாம். உலகளாவிய இசைக்கலைஞர்களை வைத்து பல இசை ஆல்பங்களை உருவாக்க முடிந்தது. இதற்கு நான் தொழில்நுட்பத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

மணிரத்னம் உங்களைத் திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர். வெற்றிக்கூட்டணியாக நீங்கள் இருவரும் அடுத்து எப்போது இணையப் போகிறீர்கள்?

நன்கு புரிந்த ஒருவரோடு வேலை செய்வது ஒரு வரப்பிரசாதம். அந்த வகையில் மணி சாருடன் இன்னும் நிறைய வேலை செய்யணும். அவருடன் வேலை செய்வது ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கும். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. என் மேல் அவருக்கு நம்பிக்கை அதிகம்.

என்னுடைய பாட்டை மக்கள் விரும்பி கேட்கிறார்களா? அல்லது என்னை இசையமைக்க வைக்கும் இயக்குநர் கேட்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் என் மீது இருவருமே நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைதான் என்னை இரவு பகலாக உழைக்க வைக்கிறது.

கே-பாப் போன்ற புதிய வகை இசையால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்று சொல்லலாமா? இந்த புது டிரெண்ட் பற்றி உங்கள் கருத்து என்ன?

சவுத் கொரியன் தொலைக்காட்சியின் மிகப் பெரிய ரசிகன் நான். பாப் கலாசாரம் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக உள்ளது. மிக இளம் வயதுடைய இசைக்கலைஞர்கள் தொடர்ந்து மிகத் தரமானப் பாடல்களைக் கொடுத்து வருவது ஆச்சரியமாக உள்ளது. அவர்களுக்கென்று தனித்தன்மை இருக்கிறது. பி.டி.எஸ் என்ற இசைக்குழுவை பார்க்கும் போது அவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் எந்தளவு வெறித்தனமான அன்பு செலுத்துகிறார்கள் என்பதைப் பார்க்க முடிகிறது. பாப் இசையிலேயே இது ஒரு புதிய பரிணாம வளர்ச்சி என்று சொல்லலாம். அதை அவர்கள் மிகவும் அற்புதமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

புகழ்பெற்ற உங்களது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?

ஒரு படைப்பாளனுக்கு அவருடைய பயணமே மிகுந்த உற்சாகத்தை அளிக்கக்கூடியது. நான் ஏதாவது விரும்பினால், அது எனது தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. அதனால் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன். எல்லோரையும் திருப்திபடுத்த வேண்டுமென்ற நிலையில் என்னுடைய தாகம் அடங்குவதில்லை. அதனால் அதே கடின உழைப்பு உற்சாகத்தையும் தொடர்ந்து செலுத்தி வருகிறேன். கடந்த கால இசைப்பயணத்தைப் பார்க்கும் போது ஒவ்வொரு பாடலுக்குமே சரிசமமான என்னுடைய உழைப்பை கொடுத்திருக்கிறேன். எந்த நோக்கத்திற்காக இசையமைத்தாலும், ஒரே மாதிரியான மன நிலையில் தான் இசையமைத்து வந்திருக்கிறேன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்.

கட்டுரை : அனகா "indulge'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com