ரத்தத்தின் ரத்தமே... - 6

"உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் ரத்தவகை என்னவென்று தெரிந்து கொள்ள ஆசையா?' என்று வெகு ஜனங்களைக் கேட்டால், "தேவையில்லை வேண்டாம் தெரிந்து என்ன உபயோகம்?' இப்படித்தான்
ரத்தத்தின் ரத்தமே... - 6

"உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் ரத்தவகை என்னவென்று தெரிந்து கொள்ள ஆசையா?' என்று வெகு ஜனங்களைக் கேட்டால், "தேவையில்லை வேண்டாம் தெரிந்து என்ன உபயோகம்?' இப்படித்தான் பதில்கள் வரும். ஆனால் அதே நேரத்தில் "உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்து கொள்ள ஆசையா? என்று கேட்டால், அனைவரும் ஒரே குரலில், "ஆமாம். தெரிந்து கொள்ள ஆசை' என்று சொல்வார்கள்.

கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்து கொள்ள உதவும் Sex Determination Test என்ற பாலின கண்டுபிடிப்புப் பரிசோதனை நம்நாடு உட்பட பல நாடுகளில் அறவே தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டுபிடிக்கும் காரியத்தை முற்றிலும் மறந்துவிடுங்கள். அதற்குப் பதிலாக குழந்தையின் ரத்தம் என்ன வகையாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுங்கள்.

உங்கள் குழந்தையின் ரத்த வகை முக்கியமாக அந்தக் குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோரின் மரபணுக்களைச் சார்ந்தே இருக்கப் போகிறது. அப்படியிருக்கும்போது குழந்தையின் ரத்த வகை ஏதாவதொன்றாகத்தானே இருக்கப்போகிறது. பின் ஏன் பிறக்கப்போகும் குழந்தையின் ரத்த வகையை தெரிந்துகொள்ள இந்த அவசரம்? பிறக்கப்போகும் குழந்தையின் ரத்தவகையை தெரிந்து வைத்துக் கொள்வதால் என்ன நன்மை? என்று பல பேர் யோசிக்கலாம்.

பொதுவாக திருமணத்திற்கு முன்பு நம் மக்கள் மணப்பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஜாதகப் பொருத்தம் இருக்கிறதா என்பதைத்தான் முதலில் பார்ப்பார்கள். அதில் தான் அதிக நேரத்தையும் அதிக கவனத்தையும் செலுத்துவார்கள். ஆனால் திருமணத்திற்கு முன்பு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் ரத்தப் பொருத்தமும் பார்க்கவேண்டும். இது அவசியம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அப்பொழுதுதான் இந்த உலகத்திற்கு ஆரோக்கியமான குழந்தைகள் கிடைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ரத்த வகையைப் பார்க்காமல் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது பிறப்பிலேயே குறைபாடு உள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்பு அதிகம்.

திருமணமான ஒரு ஜோடியின் ரத்தவகை என்பது அந்தத் தம்பதியருக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கக் கூடிய ஒரு விஷயமாக இருக்கின்றது. திருமணமான தம்பதிகளின் ரத்த வகை பொருந்தா தன்மையுடன் இருந்தால் குழந்தைப்பேறு அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு பெண் கர்ப்பமாயிருக்கும்போது அவளுடைய ரத்தத்தைப் பரிசோதனை செய்வதன் மூலம் பிறக்கப்போகும் குழந்தையின் ரத்தம் ரீசஸ் காரணி (Rhesus Factor) உள்ளதா இல்லையா என்று கண்டுபிடித்துவிடலாம்.

ரீசஸ் காரணி என்பது ஒருவகைப் புரதப் பொருளாகும். இந்தப் புரதப் பொருள் ரத்தத்தில் கலந்திருக்கிறது. ஒருவருடைய ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் மேலே இந்த ரீசஸ் காரணி புரதப் பொருள் படிந்திருந்தால் அந்த நபருடைய ரத்தம் "பாஸிட்டிவ்' என்றும் ரீசஸ் காரணி புரதப் பொருள் படியவில்லையென்றால் அந்த நபருடைய ரத்தம் "நெகட்டிவ்' என்றும் கூறப்படும்.

இரு வெவ்வேறு மனிதர்களின் ரத்தத்தை ஒன்றாகச் சேர்க்கும்போது அது ஒத்துப்போகுமா? போகாதா? சேருமா? சேராதா? என்று கண்டுபிடிக்க இந்த ரீசஸ் காரணிதான் முக்கியமானதாக இருக்கிறது. எனவே ஒவ்வொருவரும் தனது பிரதான ரத்தவகைகளாகிய ஏ,பி, ஏபி, மற்றும் ஓ வகையுடன் இந்த ரீசஸ் காரணி இருக்கிறதா இல்லையா என்பதையும் தெரிந்து வைத்துக்கொண்டு ஏ பாஸிட்டிவ், ஏ நெகட்டிவ், பி பாஸிட்டிவ், பி நெகட்டிவ், ஏபி பாஸிட்டிவ், ஏபி நெகட்டிவ், ஓ பாஸிட்டிவ் , ஓ நெகட்டிவ் இதில் உங்கள் ரத்த வகை எது என்று தெரிந்துகொண்டு சொல்ல வேண்டும்.

உங்களுடைய ரத்தவகை என்ன என்று கேட்டால் முதலில் ஏ,பி, ஏபி, மற்றும் ஓ இதில் ஏதாவதொன்றை சொல்ல வேண்டும் என்கிறீர்கள். ஆனால் இப்பொழுது இந்த 4 ரத்த வகைகளோடு பாஸிட்டிவ் அல்லது நெகட்டிவ் என்பதையும் சேர்த்து சொல்ல வேண்டும் என்கிறீர்கள்.. பிரதான ரத்தவகைகளாகிய ஏ,பி, ஏபி, மற்றும் ஓ ஆகியவற்றுடன் இந்த பாஸிட்டிவ் அல்லது நெகட்டிவ் இதையும் சேர்த்துச் சொன்னால்தான் நீங்கள் கூறும் உங்களது ரத்தவகை முழுமை பெற்றதாக இருக்கும்.

ரீசஸ் காரணிதான் தாயின் ரத்தமும் குழந்தையின் ரத்தமும் ஒன்றோடொன்று சேருமா சேராதா என்பதைத் தீர்மானிக்கும். ரீசஸ் காரணி ரத்தத்தில் சேர்ந்திருப்பவர்கள் ஆர்.ஹெச் பாஸிட்டிவ் என்றும் ரீசஸ் காரணி இல்லாதவர்கள் ஆர்.ஹெச் நெகட்டிவ் வகையைச் சேர்ந்தவர்கள் என்றும் அழைக்கப்படுவர். ஐரோப்பிய நாட்டின் மொத்த ஜனத்தொகையில் சுமார் 15 சதவீதம் பேர் ஆர்.ஹெச் நெகட்டிவ் வகையைச் சேர்ந்தவர்கள். ஏபி நெகட்டிவ் ரத்தவகைக்காரர்கள் ரொம்பக் குறைவாகவே இருப்பார்கள். அதேமாதிரி பி நெகட்டிவ் மற்றும் ஓ நெகட்டிவ் ரத்தவகைக்காரர்களும் உலகின் மொத்த ஜனத்தொகையில் சுமார் 5 சதவீதம் தான் இருக்கிறார்கள்.

ஒரு கர்ப்பிணிப்பெண் ஆர்.ஹெச் பாஸிட்டிவ் வகையைச் சேர்ந்தவளாக இருந்தால் அவளுடைய ஆரோக்கியத்துக்கும் அவள் குழந்தை பிறப்புக்கும் எந்தவொரு பிரச்னையும் இல்லை. ஏன் பெற்றெடுக்கும் குழந்தையின் ரத்தம் ஆர்.ஹெச் பாஸிட்டிவ்வாக இருந்தாலும் சரி ஆர்.ஹெச் நெகட்டிவ்வாக இருந்தாலும் சரி ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆர்.ஹெச் நெகட்டிவ் ரத்தவகையைச் சேர்ந்த நிறைய கர்ப்பிணிப் பெண்கள் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையும் ஆர்.ஹெச் நெகட்டிவ் வகையைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள். அப்பொழுதுதான் தாயின் ரத்தமும் குழந்தையின் ரத்தமும் ஒத்துப் போகும்.

பெற்றோரில் தாய்க்கும், தந்தைக்கும் என்ன மாதிரியான ரத்தவகைகள் இருந்தால் குழந்தை என்ன ரத்தவகையில் பிறக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அது எப்பொழுதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கணவன் மனைவி 2 பேருக்கும் ஏ ரத்தவகை இருந்தால் குழந்தை ஏ அல்லது ஓ ரத்தவகையுடனே பிறக்கும். கணவருக்கு ஏ ரத்தவகையும் மனைவிக்கு பி ரத்தவகையும் இருந்தால் பிறக்கும் குழந்தை ஏ அல்லது பி அல்லது ஏபி அல்லது ஓ இதில் ஏதாவதொரு ரத்த வகையுடனே பிறக்கும்.

கணவன் மனைவி 2 பேருக்கும் பி ரத்தவகை இருந்தால் பிறக்கும் குழந்தை பி ரத்தவகையுடனே பிறக்கும்.

கணவருக்கு ஏ ரத்தவகையும் மனைவிக்கு ஓ ரத்தவகையும் இருந்தால் பிறக்கும் குழந்தை ஏ அல்லது ஓ ரத்தவகையுடனே இருக்கும்.

கணவருக்கு ஓ ரத்தவகையும் மனைவிக்கு ஏபி ரத்தவகையும் இருந்தால் பிறக்கும் குழந்தை ஏ அல்லது பி அல்லது ஓ ரத்தவகையுடனே பிறக்கும்.

கணவருக்கு பி ரத்தவகையும் மனைவிக்கு ஓ ரத்தவகையும் இருந்தால் பிறக்கும் குழந்தை பி அல்லது ஓ ரத்தவகையுடனே பிறக்கும்.

கணவருக்கு பி ரத்தவகையும் மனைவிக்கு ஏபி ரத்தவகையும் இருந்தால் பிறக்கும் குழந்தை பி அல்லது ஏ அல்லது ஏபி ரத்தவகையுடனே பிறக்கும்.

கணவருக்கு ஏபி ரத்தவகையும் மனைவிக்கு ஏ ரத்தவகையும் இருந்தால் பிறக்கும் குழந்தை ஏ அல்லது பி அல்லது ஏபி ரத்தவகையுடனே பிறக்கும்.

தாயும்; தந்தையும் ஏபி ரத்தவகையாக இருந்தால் பிறக்கும் குழந்தை ஏ அல்லது பி அல்லது ஏபி ரத்தவகையுடனே இருக்கும்.

தாயும்; தந்தையும் ஓ ரத்தவகையாக இருந்தால் பிறக்கும் குழந்தை ஓ ரத்தவகையுடனே இருக்கும்.

சில நேரங்களில் தாய்; தந்தையரின் ரத்தவகை இல்லாமல்; வேறு ரத்தவகை வரவும் வாய்ப்புண்டு. உதாரணத்திற்கு தாய் ஏபி ஆக இருந்து தந்தை ஓ ஆக இருந்தால் பிறக்கும் குழந்தை இவ்விரண்டில் இல்லாமல் ஏ அல்லது பி ரத்தவகையாக இருக்கும்.

ஜெர்மனி நாட்டில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ரத்தம் டெஸ்ட் பண்ணும்போது கண்டிப்பாக ரீசஸ் காரணி ஆர்.ஹெச் இருக்கிறதா இல்லையா என்பதையும் சேர்த்து பண்ண வேண்டும். நம் நாட்டிலும் கர்ப்பிணிப் பெயண்கள் அனைவருக்கும் ரீசஸ் காரணி ரத்த டெஸ்ட் கண்டிப்பாக செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

திருமணமான பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாகவே கணவனும் மனைவியும் தங்களுடைய ரத்தவகையைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மகப்பேறு மருத்துவரிடம் இதை முன்கூட்டியே காண்பித்து ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com