ரத்தத்தின் ரத்தமே... - 8

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் எனது சொந்த ஊராகிய நெல்லையிலிருந்து, எனது உறவுக்கார அம்மையார் ஒருவர் கர்ப்பப்பை ஆபரேஷன் செய்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார்.
ரத்தத்தின் ரத்தமே... - 8


முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் எனது சொந்த ஊராகிய நெல்லையிலிருந்து, எனது உறவுக்கார அம்மையார் ஒருவர் கர்ப்பப்பை ஆபரேஷன் செய்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார். சென்னையில் உறவினராகிய நான் இருப்பதாலும், நானே டாக்டர் என்பதாலும், தன்னை பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன் என்ற தைரியம் அந்த அம்மையாருக்கு. நானும், சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள மிகப்பெரிய பெண்கள் அரசு மருத்துவமனையில் அந்த அம்மையாரை அட்மிட் பண்ணினேன். தெரிந்த டாக்டரம்மா ஒருவரிடம் சொல்லி ஆபரேஷனுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் சற்று வேகமாக செய்யச் சொன்னேன். அந்த அம்மையாருக்கு ஓரே மகள்.

மகளை வசதி படைத்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். மருத்துவமனையில் பகலில் அந்த அம்மையாரின் மருமகனும், இரவில் அந்த அம்மையாரின் மகளும் கவனித்துக் கொண்டார்கள். ஆபரேஷனுக்கு இரண்டு நாள்கள் முன்னதாக, அந்த அம்மையாரை கவனிக்கும் நர்ஸ், மருமகனைக் கூப்பிட்டு, "உங்க மாமியாருக்கு 2 நாள்களில் ஆபரேஷன். பண்ணப் போறோம். எனவே நாளைக்கு நீங்க 1யூனிட் ரத்தம் கொடுக்கணும், காலையிலேயே சாப்பிட்டுவிட்டு நேராக வந்து விடுங்கள். அரைமணி நேரத்தில்; ரத்தம் எடுத்து விடலாம்' என்றார் நர்ஸ். அந்த மருமகனும் "சரி', என்று சொல்லிவிட்டார்.

மறுநாள் அந்த அம்மையாரின் மருகனுக்காக ஆவலோடு காத்திருந்தார் நர்ஸ். மருமகனிடமிருந்து ரத்தம் எடுக்க வேண்டும். அதற்கு அடுத்த நாள் பேஷன்ட்டை ஆபரேஷனுக்கு ரெடி பண்ண வேண்டும். இப்படி பல வேலைகள் இருப்பதால் நர்ஸ் ஒரே டென்ஷனில் உட்கார்ந்திருந்தார்.

மருமகனிடம் ரத்தம் எடுக்க வேண்டும். ஆனால் மருமகன் ஆள் சுவடே தெரியவில்லை. காத்திருந்தது தான் மிச்சம். அவர் வரவேயில்லை. செல்போன் இல்லாத காலம் அது. அதனால் எங்கேயும் ,போன் போட்டுவிசாரிக்கவும் முடியவில்லை.

"என் மருமகன் எனக்காக எதையும் செய்வார். எனக்காக ரத்தம் கொடுக்க கொஞ்சம் லேட் ஆனாலும் எப்படியும் வந்துவிடுவார்' என்றார் அந்த அம்மையார். "மறுநாள் ஆபரேஷன் ஆயிற்றே, எல்லாம் ரெடியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்காக நான் இந்த நேரத்தில் மருத்துவமனைக்குள் நுழைந்தேன்.

என்னைப் பார்த்தவுடனேயே அந்த நர்ஸ், "டாக்டர் நாளைக்கு ஆபரேஷன் பிக்ஸ் பண்ணியிருக்கு, உங்களுக்கு நல்லா தெரியும். ஆனா ரத்தம் கொடுக்கிறேன்னு சொன்ன அந்த அம்மாவின் மருமகன் இன்னும் வரலை. இப்ப ரத்தம் இல்லைன்னா ஆபரேஷனை கேன்சல் பண்ண வேண்டியதுதான்' என்றார் அந்த நர்ஸ். நானும் உடனே அந்த அம்மையாரிடமும், அவரின் மகளிடமும் "எங்கே உங்க வீட்டுக்காரர்?' என்று கேட்டேன். "கண்டிப்பா வந்துடுறேன் என்று தான் சொன்னார் என்ன ஆச்சுன்னு தெரியலை', என்று பதட்டத்துடன்சொன்னார்கள்.

ஐந்து நிமிடம் யோசித்தேன். பின், வேகமாக மருத்துவமனையின் ரத்த வங்கிக்கு போனேன். "நானே ஒரு யூனிட் ரத்தம் கொடுக்கிறேன். ஆபரேஷன் நடக்கிறபடி நடக்கட்டும்' என்று சொல்லிவிட்டு எனது ரத்தத்தைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டேன். மறுநாள் ஏற்கெனவே செய்து வைத்த முன்னேற்பாட்டின்படி, ஆபரேஷன் நல்லபடியாக அந்த அம்மையாருக்கு நடந்து முடிந்தது.

ஆபரேஷன் முடிந்தபிறகு தான் வந்தார் அந்த மருமகன். "என்ன சார், என்ன ஆச்சு?' என்று கேட்டேன். என்னைத் தனியாக கூட்டிக் கொண்டு போனார் மருமகன். "டாக்டர், சாதாரணமாகவே ரத்தத்தை கண்டாலே எனக்கு ரொம்ப பயம். அதிலும் ரத்த தானம் பண்ண வேண்டும் என்று சொன்னதைக் கேட்டதிலிருந்து குளிர் ஜீரமே வந்து விட்டது. ஆஸ்பத்திரியில் எப்படியாவது சமாளித்துக் கொள்வார்கள் என முடிவு பண்ணி, யாரிடமும் சொல்லாமல், கொள்ளாமல் ஓடிவிட்டேன். தயவுசெய்து இந்த விஷயத்தை என் மனைவியிடமும், என் மாமியாரிடமும் சொல்லிவிடாதீங்க. ரொம்ப அசிங்கமா நினைப்பாங்க' என்றார் மருமகன்.

இப்பொழுதெல்லாம் தானாகவே விருப்பப்பட்டு ரத்த தானம் செய்ய வருபவர்கள் அதிகம். ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சற்று யோசித்துப் பாருங்கள். ரத்த தானம் செய்கிறீர்களா? என்று ஒருவரைக் கேட்டால், திரும்பிப் பார்க்காமல் மைல் கணக்கில் ஓடுபவர்கள்தான் ஏராளம். ரத்தம் தானமாகக் கிடைப்பதென்பதே மிகமிக கஷ்டம்.

இலவச ரத்ததான முகாம் என்று குறிப்பிட்ட இடங்களில், அவ்வப்பொழுது நடத்துவார்கள். ஆனால் முகாம் நடக்குமே தவிர, ரத்தம் கொடுக்க ஒருவர் கூட
வரமாட்டார்கள்.

அமெரிக்காவில் தினமும் சுமார் 32000 பைன்ட்(1 பைன்ட் சுமார் 473 மில்லி லிட்டர்) ரத்தம், நோயாளிகளுக்குக் கொடுக்கப்படுகிறதாம். அதாவது தினமும் சுமார் 15136 லிட்டர் அளவு ரத்தம் உபயோகமாகிறது என்று அர்த்தம். இப்படித்தான், ஒவ்வொரு நாட்டிலும் தினமும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் ரத்தம் அவசரத்துக்கும், ஆபத்துக்கும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக ஊடகங்கள், வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், பள்ளி, கல்லூரிகளில் என பலவகைகளில் ரத்ததான முகாம்களை நடத்தினாலும், கேட்டு முடித்தபின், ஏதோ இதற்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் தான் எல்லோரும் நடந்து கொள்கிறார்கள்.
18 வயதிலிருந்து 60 வயதுக்குட்பட்ட ஆண், பெண் யார் வேண்டுமானாலும் ரத்த தானம் செய்யலாம். ஆனால் அவர்களின் எடை மட்டும் சுமார் 45 கிலோவுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறையும், பெண்கள் 4 மாதங்களுக்கு ஒரு முறையும் ரத்த தானம் செய்யலாம்.

(தொடரும்)

சிந்தியுங்கள்!

ரத்த தானம் செய்யலாமா, வேண்டாமா என்பதை பிறகு யோசியுங்கள். முதலில், ரத்த தானம் செய்தால் நமது உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை முதலில் சிந்தியுங்கள்.

அடிக்கடி ரத்த தானம் செய்து வந்தால்....

1. இதய நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
2. கல்லீரல் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.
3. புற்றுநோய் உருவாகக் கூடிய சாத்தியக் கூறுகளை குறைக்கலாம்.
4.புதிய சிவப்பணுக்கள் உடலில் அதிகமாக உற்பத்தியாகி, உடலின் செயல்பாட்டை செம்மைப்படுத்தி சுறுசுறுப்பாக வைக்கிறது.
5.நீண்ட காலம் இளமையாக இருக்க முடியும் என்று ஆராய்ச்சி சொல்கிறது.
6. மாரடைப்பு வராமல் தவிர்க்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com