ரத்தத்தின் ரத்தமே... - 13

ரத்தவாடை - இது ஒருவர் கூட விரும்பாத, வெறுப்பு விளைவிக்கிற, அருவருக்கதக்க ஒரு வாடை, ஒரு நாற்றம், ஒரு மணம் என்றுதான் நாம் சொல்வோம்.
ரத்தத்தின் ரத்தமே... - 13

ரத்தவாடை - இது ஒருவர் கூட விரும்பாத, வெறுப்பு விளைவிக்கிற, அருவருக்கதக்க ஒரு வாடை, ஒரு நாற்றம், ஒரு மணம் என்றுதான் நாம் சொல்வோம். ரத்தத்தின் வாசனை ரொம்ப நல்லா இருக்கும் என்று, யாரும் சொல்வது கிடையாது. ஏனெனில், ரத்தத்தின் மீதுள்ள இயற்கையான பயம். நம்முடைய ரத்தம் ஆனாலும் சரி, அல்லது வேறு யாருடைய ரத்தம் ஆனாலும் சரி, ஒரு சொட்டு ரத்தத்தை நாம் முகர்ந்து பார்க்க, கொஞ்சம் தைரியம் வரும். ஆனால், சொட்டச் சொட்ட ரத்தம் வடிந்து கொண்டிருந்தால், அதைப் பார்க்கவே நமக்கு தைரியம் வராது.

"ரத்தத்தில் கலந்துள்ள எந்த ரசாயனப் பொருள், ரத்தத்துக்கு வாசனையை உண்டாக்குகிறது? ரத்த வாசனையை உணர்ந்தபின், விலங்குகளின் நடவடிக்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மத்தியாஸ் லங்கா என்கிற விலங்கியல் துறை பேராசிரியர் ஈடுபட்டார். ஸ்வீடன் நாட்டிலுள்ள "கொல்மார்டன்' வனவிலங்கு பூங்காவில் இந்த ஆய்வை அவர் செய்தார்.

ரத்த வாசனையைப் பற்றி ஆய்வு செய்ய ஆராய்ச்சியின் உள்ளே நுழைந்த அவர், மனித மற்றும் விலங்குகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய பல புதிய விஷயங்கள் கிடைத்திருப்பதாக சொன்னார். "எந்த விலங்குகளும் மனிதனின் ரத்தத்தை வெறுப்பதில்லை. பாலூட்டிகளின் ரத்தத்தில், எளிதில் ஆவியாகக் கூடிய ஒருவித ரசாயனப் பொருள் கலந்திருக்கிறதா என்று ஆய்வு செய்தார். மனித ரத்தத்தில் ஏதாவதொரு குறிப்பிட்ட நோயினாலோ, குறிப்பிட்ட ரசாயன மாற்றத்தினாலோ, மனித உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தினாலோ, ஒரு குறிப்பிட்ட ரத்தவாடை வருமா? என்றும் அலசி ஆராய்ந்தார். ஆனால், குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவும் கிடைக்கவில்லை. "நிரந்தரமாக உடலில் நடைபெறும் ரசாயன மாற்றங்களும் வளர்சிதை மாற்றங்களும் சேர்ந்து ரத்தத்துக்கு ஒரு குறிப்பிட்ட வாசனையை உண்டு செய்கிறது' என்று ஆய்வை முடித்துவிட்டார் அந்த ஸ்வீடன் நாட்டு விலங்கியல் துறை பேராசிரியர்.

மற்ற பிராணிகளைத் தின்று உயிர் வாழும் விலங்குகளுக்கு, (இவைகளை அசைவ விலங்குகள் என்று கூட சொல்லலாம்) ஏதோ ஒரு சூழ்நிலையில் மனிதன் உணவாகக் கிடைத்துவிட்டால், மனிதனை அடித்துக் கொன்று தனக்கு இரையாக்கிக் கொள்கிறது. தினந்தோறும் காட்டில் மற்ற விலங்குகளை அடித்துக் கொன்று உணவாக்கிக் கொள்ளும் இந்த அசைவ விலங்குகள், மற்ற விலங்குகளின் ருசியில் பெரிதாக மயங்கிவிடுவதில்லை.

ஆனால், ஒருமுறை மனித ரத்தத்தை ருசி பார்த்த இந்த அசைவ விலங்குகள் மனிதனை மறக்கவும் முடியாமல், மனிதனை ஒதுக்கவும் முடியாமல், மனித ரத்தத்துக்கு ஏங்கி, காத்துக் கிடக்கும். இதற்குக் காரணம், மற்ற விலங்குகளை விட மனித உடலில், மனித ரத்தத்தில் உப்புச்சத்து அதிகமாக இருப்பதுதான். ஒருமுறை மனித ரத்தத்தை ருசித்துவிட்டால், மறுபடியும், மறுபடியும் மனித ரத்தத்துக்காகவே ஏங்கி, காத்துக் கிடக்குமாம். மனித ரத்தத்தின் உப்பு நிறைந்த சுவை மனிதனை உண்டு பழகிய அசைவ விலங்குகளுக்கு தீராத ஆசையை உண்டு செய்து விடுகிறது. நாட்டில் மனிதர்களுக்கு மத்தியில் மனித ரத்தத்துக்குதான் அதிக கிராக்கி என்று பார்த்தால் காட்டில் அசைவ விலங்குகளுக்கு மத்தியிலும் மனித ரத்தத்துக்கு அதிக கிராக்கியாக இருக்கிறது.

உப்பு சேர்க்காமல் நாம் எந்த ஒரு உணவையும் உண்பதில்லை. இதேபோல் அசைவ விலங்குகளுக்கும் உப்பு சேர்ந்த ரத்தம் சதை மிகவும் பிடிக்கும். மனிதனைப் போல மானுக்கும் அதனுடைய உடலிலும் ரத்தத்திலும் உப்பு அதிகம். ஆக அசைவ விலங்குகளுக்கு மானையும் மனிதனையும் தவிர மற்ற விலங்குகள் உணவாக கிடைத்தால் அவைகளுக்கு சாதா சாப்பாடு கிடைத்த மாதிரி ஆகும். அதே மனிதனும் மானும் கிடைத்தால் அசைவ விலங்குகளுக்கு "ஸ்பெஷல் சாப்பாடு' கிடைத்த மாதிரி ஆகும். ஆனால் "ஸ்பெஷல் சாப்பாடு' எப்பொழுதுமே கிடைக்காது அல்லவா. அதனால்தான் மனித ரத்தத்தின் ருசி கண்ட சில கொடூர அசைவ விலங்குகள் வளர்ச்சியடையாத நாடுகளில் காட்டோரம் உள்ள கிராமங்களில் தனியாக சிக்கும் மனிதர்களை காத்திருந்து தாக்கும். மனித ரத்தத்தின் ருசிக்காக மனிதர்களையே குறிவைத்து மறுபடியும் மறுபடியும் தாக்க ஆரம்பிக்கும்.

மனிதனின் ரத்தத்தை ஒரு நாய் பார்க்க நேரிட்டால் அந்த நாய் அந்த ரத்தத்தை நக்கி நக்கி ருசி பார்க்கும். பின் விட்டுவிட்டு வந்துவிடும். அதிகமாக மனித ரத்தத்தை நாய் ருசிக்க நேரிட்டால் நாய் வாந்தி எடுத்துவிடும். இது நாய்க்கு நல்லதல்ல. எனவே மனித ரத்தம் இருக்குமிடத்திற்கு நாய் போகாமலிருப்பது நல்லது. புலியும் சிறுத்தையும் மனித ரத்தத்தையோ மற்ற விலங்குகளின் ரத்தத்தையோ உறிஞ்சி குடிக்காது. குடிக்கவும் முடியாது. உறிஞ்சி குடிப்பதற்குண்டான உடலமைப்பு இயற்கையாகவே இந்த விலங்குகளிடம் இல்லை.

அட்டை என்று சொல்லக்கூடிய ஒரு வகை பூச்சி இனம் மனிதனையோ மற்ற விலங்குளையோ கடித்து தோலோடு தோலாக உடலோடு உடலாக ஒட்டிக் கொள்ளும். இவ்வாறு ஒட்டிக் கொண்ட இந்த அட்டைப் பூச்சி குறைந்தது 10 நிமிடங்களாவது மனிதனின் உடலிலுள்ள ரத்தத்தைக் குடிக்கும். சில சமயங்களில் சுமார் ஒரு மணி நேரம் கூட குடித்துக் கொண்டிருக்கும். ஒரு முறை உறிஞ்சினால் சுமார் 2 டீஸ்பூன் அதாவது கிட்டத்தட்ட 10 மில்லி லிட்டர் குடிக்கும். அட்டை குடிக்கும் ரத்தம் மிகக் குறைவுதான். நாம் ரத்தம் டெஸ்ட் செய்ய கொடுக்கும் ரத்தத்தின் அளவுதான். ஆனால் அட்டை குடித்து முடித்தபின் வயிறு நிறைந்தபின் அது உடலை விட்டுவிடும். அல்லது விழுந்துவிடும். ஆனால் அது கடித்த இடத்திலிருந்து வடியும் ரத்தம் நிற்காமல் தொடர்ந்து மணிக்கணக்கில் வெளிவந்து கொண்டிருக்கும். சில நேரங்களில் ஒரு நாள் முழுக்கக்கூட ரத்தம் வடிந்து கொண்டே இருக்கும். இதைப் பார்க்காமல் கவனிக்காமல் விட்டுவிட்டால் அது உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும்.

சுமார் நூறு வெளவால்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு ஓர் ஆண்டில் சுமார் 25 பசுமாடுகளின் ரத்தத்தைக் குடித்துவிடுமாம். சாதாரண வெளவால்கள் மாலை மங்கி இருள் வந்துவிட்டாலே இரை தேட ஆரம்பித்துவிடும். பெரும்பாலும் காய்களையும் பழங்களையும் மட்டுமே குறிவைத்து தேடி உண்ணும். ஆனால் "ரத்தக் காட்டேரி' என்று சொல்லப்படும் ஒரு வகை அதிபயங்கர வெளவால்கள் நடு இரவில்தான் வெளியே வர ஆரம்பிக்கும். இரவில் படுத்துக் கிடக்கும் ஆடு, மாடு, குதிரை, கழுதை போன்றவைகளின் ரத்தம்தான் இந்த ரத்தக் காட்டேரி வெளவால்களுக்கு நல்ல உணவு. சுமார் அரைமணி நேரம் வெளவால் ரத்தத்தைக் குடிக்கும். மிக மிக அரிதாக கிராமப்புறங்களில், காட்டோரங்களில் இந்த ரத்தக் காட்டேரி வெளவால்களுக்கு மனித ரத்தமும் இரையாகக் கிடைப்பதுண்டு. அப்படிக் கிடைத்துவிட்டால், இந்த ரத்தக் காட்டேரி வெளவால்களுக்கு அன்று ஸ்பெஷல் சாப்பாடு தான்.

சாதாரணமாக அனைத்து வகை சிலந்திகளும் சிறிய பூச்சி, கொசு, வண்டு போன்றவைகளை தன் சிலந்தி வலைக்குள் விழவைத்தப் பின் அந்தப் பூச்சியின் உடலிலுள்ள ரத்தத்தை மட்டும் உறிஞ்சிவிட்டு பூச்சியை தின்னாமல் அப்படியே விட்டுவிடும். ஆனால் லிபியா நாட்டில் வாழும் ஒருவகை சிலந்தி மனித ரத்தத்தைக் குடிக்கும் பழக்கம் கொண்டது.

கனடா நாட்டில் உல்ப் மற்றும் டார்வின் தீவுகளில் மட்டுமே வாழும், "ஜியோஸ்பிஸா' என்கிற மிக அரிய ஒருவகை சிறிய பறவை மனித ரத்தத்தைக் குடிக்கும் பழக்கம் கொண்டது.

சமைக்கப்படாத, நன்றாக வேகவைக்கப்படாத எந்த ஒரு விலங்குகளின் பாகங்களையோ, ரத்தத்தையோ, அப்படியே சாப்பிடுவது சரியல்ல. ரத்தம், மிகச் சுலபமாக பாக்டீரியாக்களை வளரவிடும். நோய்க்கிருமிகளை தங்க வைத்துக் கொள்ளும். அதனால்தான், ரத்தம் சம்பந்தப்பட்ட உணவுப் பொருள்கள் விற்பதற்கு, சிங்கப்பூரில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரமற்ற முறையில் சேகரிக்கப்படும் ரத்தம் உணவாக உட்கொள்ளும்போது உணவு மூலமாக உடலுக்குள் நோய்களை கொண்டு சென்றுவிடும்.
மனித ரத்தத்தில் அநேகமாக எல்லா உலோகப் பொருட்களும் கூட மிக மிகச் சிறிய அளவில் கலந்திருக்கின்றன. மனித ரத்தத்தில் சுமார் 0.02 சதவீதம் தங்கம் கூட இருக்கிறது. கேட்க ஆச்சரியமாக இருக்கிறதல்லவா உண்மைதான்.
உதாரணத்திற்கு உங்களுடைய உடலின் எடை சுமார் 65 கிலோ என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களது உடல் எடையில் சுமார் 10 சதவீதம் தான் உங்களது மொத்த ரத்தத்தின் எடை. அதாவது 65 கிலோ, 10 சதவீதம். இந்த 6 அரை கிலோ ரத்தத்தில் 0.02 சதவீதம் எடைதான் உங்களது ரத்தத்திலுள்ள தங்கத்தின் அளவாகும். ஒரு மூக்குத்தி செய்வதற்குக்கூட உபயோகப்படாத தங்கத்துக்கு ஆசைப்பட்டு வேறு மாதிரி யோசிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்.
உங்கள் விரலில் காயம் ஏற்பட்ட இடத்திலிருந்து சில துளி ரத்தம் வந்தால் உடனே விரலை வாய்க்குள் வைத்து உறிஞ்சி ரத்தத்தை நிறுத்த முயற்சி செய்யாதீர்கள். நிறையபேர் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஏன் அப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால் "ரத்தம் வீணாகிவிடுகிறதாம். அதனால் ரத்தத்தை உறிஞ்சி மறுபடியும் உடலுக்குள்ளேயே அனுப்புகிறேன் என்று சொல்கிறார்கள். நீங்கள் உறிஞ்சும் ரத்தம் உங்கள் ரத்தத்துடன் போய்ச் சேரவும் சேராது. எந்த விதத்திலும் அது உபயோகப்படவும் செய்யாது. உறிஞ்சிய ரத்தத்தை வெளியே துப்பிவிட்டு முதலில் காயத்திலிருந்து வெளிவரும் ரத்தத்தை நிறுத்தும் வேலையைச் செய்யுங்கள்

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com