தெரியுமா?...

சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக சொற்பொழிவு ஒன்றின் போது, ஒருவர் விவேகானந்தரிடம் "பக்தி மனதில் இருந்தால் போதாதா? எதற்கு இத்தனை கோயில்கள்?' என்று பணிவுடன் கேட்டார்.
தெரியுமா?...


புரிய வைத்த விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக சொற்பொழிவு ஒன்றின் போது, ஒருவர் விவேகானந்தரிடம் "பக்தி மனதில் இருந்தால் போதாதா? எதற்கு இத்தனை கோயில்கள்?' என்று பணிவுடன் கேட்டார்.

அந்த நபரிடம் விவேகானந்தர், "எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து கொடுங்கள்' என்றார். ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து நீட்டினார். அந்த நபர். "நான் தண்ணீர் தானே கேட்டேன். எதற்கு சொம்பு?' என்றார் விவேகானந்தர். மேலும் அந்த நபர் புரியும் படி பக்தி என்பது தண்ணீர், கோயில் என்பது சொம்பு என்று சிரித்துக்கொண்டே சொன்னார் விவேகானந்தர். அந்த நபர் சுவாமி விவேகானந்தரின் பாதங்களைத் தொட்டு வணங்கினார்.

-உ.ராமநாதன், நாகர்கோவில்

இயற்கை டார்ச் லைட்!

மேகாலயாவில் இரவில் எங்காவது போக வேண்டும் என்றால், டார்ச் லைட்டின் உதவி தேவையில்லை. அங்கே விளையும் எலெக்ட்ரிக் காளான்களைப் பிடுங்கி கையில் பிடித்துக் கொண்டு இரவில் எங்கும் செல்லலாம். இந்த எலெக்ட்ரிக் காளான்கள் இரவில் ஒளிர்வதால் கிடைக்கும் வெளிச்சம் டார்ச் லைட்டின் வெளிச்சம் போன்று பயன்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் எலெக்ட்ரிக் காளான்கள் இயற்கை டார்ச் லைட்டுகளாக மேகாலயாவில் மாறியிருக்கின்றன.

சமீபத்தில் இந்தியா, சீன விஞ்ஞானிகள் கூட்டாக மழைக் காலத்தில் அஸ்ஸாமில் ஆய்வுகளை இரண்டு வாரம் நடத்திய போது இதுவரை அறியப்படாத காளான்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த ஆய்வின் போது எலெக்ட்ரிக் காளான்களைப் பற்றி உள்ளூர்வாசிகள் கூற... விஞ்ஞானிகள் குழு மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா மாவட்டத்திற்கு விரைந்தது.

மேகாலயா குடிமகன் ஒருவர் இரவில் வழிகாட்ட, விஞ்ஞானிகள் மூங்கில் காட்டிற்குள் சென்றனர். வழிகாட்டி விஞ்ஞானிகள் கொண்டு சென்ற டார்ச் லைட்டுகளின் வெளிச்சத்தை நிறுத்தச் சொன்னார். அப்படியே செய்த விஞ்ஞானிகள் அடர்ந்த மூங்கில் காட்டுக்குள் கும் இருட்டை எதிர்பார்த்தனர். ஆனால் பச்சை நிற ஒளி அந்தப் பகுதியில் பரவியிருப்பதை பார்த்து பரவசம் அடைந்தனர்.

பட்டுப்போன மூங்கில்களில் முளைத்திருந்த எலெக்ட்ரிக் காளான்களின் ஒளியை வெளியிட்டுக் கொண்டிருந்தன. இது புதுவகைக் காளான்கள் என்று விஞ்ஞானிகள் புரிந்து கொண்டனர். இரவில் ஒளியை வெளியிடும் 97 காளான் வகைகள் இந்த பூமியில் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் மேகாலயாவில் வளரும் காளான்கள். மேகாலயா வாசிகள் இரவு நேரத்தில் வழி பார்த்து நடக்க இந்த எலெக்ட்ரிக் காளான்களின் ஒளியைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சவூதி அரேபியாவில் விநோதம்

நாய்க்கு சுத்தம் போதாது. அதனால் பொது இடங்களில் அதன் நடமாட்டத்திற்கு தடை உண்டு. இப்போது கூட சவூதியில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே நாய்கள் நடமாட அனுமதி உண்டு.

நாய்கள் வேட்டைக்கு, வீட்டு பாதுகாப்பு மற்றும் ஆற்றல் குறைவானவர்களுக்கு கைடாக மட்டுமே தேவைக்கு ஏற்ப இறக்குமதி செய்ய அனுமதி தரப்படும். அங்கு ஒரு சமயம் ஆண்கள் நாயுடன் நடைப்பயிற்சி செல்ல தடை இருந்தது. அதனை வைத்து பெண்களுடன் பேச பார்க்க பயன்படுத்துவர் என போலீஸ் சந்தேகப்பட்டது. இன்று நிலைமாறியுள்ளது.

நாய் வைத்திருப்பவர்களுக்கு அதனை வெளியில் அழைத்துச் சென்றால் தான் திருப்தி. இதனை உணர்ந்த ஒரு பெண்மணி, மனிதர்களுடன், நாய்களையும் அனுமதிக்கும் வகையில், ஆஹந்ண்ய்ஞ் ப்ர்ற் என்ற பெயரில் ஒரு உணவகம் திறந்துவிட்டார். இங்கு வரும் மனிதர்களுடன் நாய்க்கும் அனுமதி. அந்த நாய்களை குளிக்க வைத்து உலர வைக்கும் வசதியும் கூடுதலாக இங்கு உண்டு.

-ராஜிராதா, பெங்களூர்


ஆச்சரியமூட்டும் கடிதங்கள்

பிரெஞ்சுக்காரர் ஒருவர் 300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கடிதத்தைப் பிரிக்காமல் படித்துள்ளார்கள் ஆய்வாளர்கள். கடிதத்தை எழுதி, பல மடிப்புகளாக மடித்து கடிதத்தின் பெறுநர் மட்டுமே பிரித்துப் படிக்கும் வகையில் பூட்டி அனுப்பும் முறையில் அனுப்பப்பட்ட கடிதம் அது.

அது பெறுநருக்குச் சென்று சேர்க்கப்படாமல் நெதர்லாந்தில் ஓர் அஞ்சலகத்தில் "சைமன் டி பிரையன்' என்ற அஞ்சல் அலுவலரின் மரப்பேழை சேமிப்பில் இருந்த சேர்ப்பிக்கப்படாத பல கடிதங்களுடன் ஒன்றாக இதுவும் தங்கிப் போனது. இதை "பிரையன் சேகரிப்பு' எனக் குறிப்பிடுகிறார்கள்.

"பிரையன் சேகரிப்பு' தொகுப்பில் இருந்த பிரிக்கப்படாத 577 கடிதங்களில் ஒரு கடிதத்தைத்தான் "மெய்நிகர் கடித விரிப்பும் படிப்பும்' என்ற முறையில் பிரிக்காமல் அறிவியல் துணைகொண்டு தொழில் நுட்ப முறையில் படித்துள்ளார்கள். அதைப் பிரித்துப் படித்தால்தான் என்ன என்று வியப்புடன் வைக்கப்படும் கேள்விக்கு வரலாற்று ஆய்வாளர்களின் விளக்கம் அளித்துள்ளனர்.

ஒன்று மிகப் பழமையான ஆவணம் மேலும் சிதைந்து விடும் அதைத் தவிர்க்க வேண்டும். மற்றொன்று, அவ்வாறு மடிக்கப்பட்ட முறைகள் வரலாற்றுச் சிறப்பு கொண்டவை அதை இழக்கக்கூடாது. முன்னர் ஸ்காட்லாந்து அரசி மேரி (பிப்ரவரி 8, 1587) அன்று, தனது மரணதண்டனை நிறைவேற்றப்படும் சில மணி நேரங்களுக்கு பிரான்ஸ் நாட்டின் அரசரும் தனது மைத்துனருமான மூன்றாம் ஹென்றி மன்னருக்கு ஒரு கடிதம் எழுதி, அதை இவ்வாறு பூட்டி அனுப்பினார்.

இவ்வாறு பூட்டிய முறையில் உள்ள கடிதங்களைப் பிரித்தால் வரலாற்றுக் கருவூலமான அவற்றின் மடிப்பு முறைகள் விரிந்து நிரந்தரமாகப் பூட்டு சிதைந்துவிடும். இதுநாள் வரையில் பூட்டப்பட்ட கடிதங்கள் தேவையின் அடிப்படையில் மட்டுமே முத்திரைகள் வெட்டப்பட்டு, ஓரங்கள் பிரிக்கப்பட்டு படிக்கப்பட்டுள்ளது.

-ஜி


1 கிலோ காய் - 1 லட்சம் ரூபாய்!

ஒரு கிலோ காய், ஒரு லட்சம் ரூபாய் என்றால் அதிசயிக்கிறார்கள். ஆனால் உண்மை.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரேஷ் சிங், உலகில் அதிக விலை உள்ள பயிரான "ஹாப் தளிர்கள்' (hop shoots) பயிரிட்டு விற்பனை செய்து வருகிறார்.

ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்க, அந்தக் காயில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

உண்ணும் உணவு குடலுக்குச் செல்லும் போது ஏற்படும் செரிமானப் பிரச்னையை ஒழுங்குபடுத்துவதில் தொடங்கி, புற்றுநோய் பரப்பும் செல்களைத் தேடித் தேடி அழிக்கிறதாம் இந்தக் காய். "ஹாப் தளிர்கள்' கொடி வகையைச் சேர்ந்தது.

10 மீட்டர் உயரத்திற்கு வளருமாம். இந்தச் செடியின் ஆயுள் 20 ஆண்டுகள். "ஹாப்' கொடியின் காய், தண்டு என்று எல்லா பகுதிகளிலும் மருத்துவ குணம் இருப்பதால், கிலோ ஒரு லட்சம் வரை விற்பனை செய்கிறார் அம்ரேஷ் சிங்.

பதினொன்றாம் நூற்றாண்டிலிருந்து பல நாடுகளில் இந்தப் பயிர் பயிரிடப்பட்டாலும், இந்தியாவில் முதல் முறையாக "ஹாப் தளிர்கள்' களை அறிமுகப்படுத்தியவர் அமரேஷ் சிங் தான்!

-பனுஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com