ரோஜா மலரே! - 88: பெண் வேடத்தில் அசத்திய நடிகர்! - குமாரி சச்சு

அந்தப் படத்தில் திரைக்கதையின் படி சோ ஒரு வேலை செய்வார். அது தான் படத்தின் "ஹைலைட்'.
ரோஜா மலரே! - 88: பெண் வேடத்தில் அசத்திய நடிகர்! - குமாரி சச்சு

அந்தப் படத்தில் திரைக்கதையின் படி சோ ஒரு வேலை செய்வார். அது தான் படத்தின் "ஹைலைட்'. அந்த "மாட்டுக்கார வேலன்' படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் நானும் இருந்ததால் என்னையும் அழைத்தார்கள். காலையில் இருந்து, எம்.ஜி.ஆர்-லக்ஷ்மி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். நான் காத்திருந்தேன். திடீரென்று என்னை அழைத்தார்கள். நானும் ஒப்பனையைச் சரி செய்து கொண்டு, படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்றேன். என்னை அழைத்துக் கொண்டு போகும் உதவி இயக்குநரிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டே வர, "அவர் ஓர் இளம் நடிகை ஒருவர் நடிப்பதற்காகச் செட்டிற்கு வந்து இருக்கிறார் என்றும், அவர்கள் நன்றாக நடிக்கிறார்' என்றும் கூறினார்.
நான் அவர் கூறுவதைக் கேட்டுக்கொண்டே "மாட்டுக்கார வேலன்' செட்டிற்குள் நுழைந்தேன். அந்தச் செட்டில் நடுத்தர வயதுடைய ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். என்னை அழைத்துப் போயிருந்த உதவி இயக்குநர் என்னைப் பார்த்து, "அதோ அவர் தான் புது நடிகை' என்றார். அவர் காட்டிய திசையில் பார்த்தேன். ஒரு பெண் தனக்குக் கொடுக்கபட்ட வசனத்தை, அவள் கையில் இருந்த தாளை பார்த்து படித்து, மனப்பாடம் செய்து கொண்டு இருந்தாள். அந்த நடிகை உயரமாக இருந்தார். அவருக்குப் "பாப் கட்டிங்' செய்யப்பட்டு இருந்தது. "ஹேர் ஸ்டைல்' சிறப்பாக இருந்தது. செட்டிற்குள் ஒருவித இருட்டு இருந்தது. எப்பொழுமே செட்டிற்குள் நடுவில் தான் ஒரு பிரகாசமான லைட் இருக்கும். மற்ற பகுதிகள் ஒருவிதமான இருள் சூழ்ந்து இருக்கும்.
"டேக்' என்று இயக்குநர் சொன்னால் தான் குறிப்பிட்ட இடங்களில் எல்லாம் லைட் போட்டு அசத்தி விடுவார்கள். நான் அருகில் இருந்த ஒரு மேக்கப் கலைஞரை பார்த்து, "யார் இவர்?' என்று கேட்டேன். அவர் சான்ஸ் கேட்டு வந்த பெண் என்று கூறினார். இந்த செட்டில் அசோகன், லக்ஷ்மி என எல்லா நட்சத்திரங்களும் இருந்தார்கள். பின்னால் இருந்து பார்க்கும் போது அந்தப் பெண்ணின் உடல்வாகு சிறப்பாக இருந்தது. நிறமும் வெண்மை நிறத்தில் இருந்தார். நான் அந்தப் பெண்ணை முன்னால் பார்க்க வேண்டும் என்று அவரது முன்புறம் சென்றேன். எனக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
நான் பார்த்தது நபர் யார் தெரியுமா? சோ. அதுவும் பெண் வேடத்தில்! அவருக்குப் பெண் வேடம் மிகவும் கச்சிதமாக
இருந்தது. அதுவும் பின்னால் இருந்து பார்க்கும் போது அச்சு அசலாகப் பெண் என்று நினைக்கும் வண்ணம் இருந்து. அந்தப் படத்தில் அவர் தன் அப்பாவான அசோகனை ஏமாற்றுவார்.
என்னைப் பார்த்த சோ சார், "ஏமாந்துட்டீயா?', என்று சிரித்துக்கொண்டே கேட்டார். "இல்லை' என்று பேசுவதற்குள், , சமாளிக்காதே' என்றார். "பின்னால் இருந்து பார்க்கும் போது நீங்கள் பெண் தான் என்று நினைத்தேன்', என்று உண்மையை ஒப்புக்கொண்டேன்.
"வடை மாலை' படத்தில் ஒரு காமெடி காட்சி, அந்தப் படத்தில் மட்டுமே வந்தது. இதுவரை எந்தப் படத்திலும் வரவில்லை. இந்தப் படத்தில் கவிஞர் வாலி கதை, வசனம் எழுதி படத்தையும் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஆங்கில எழுத்தான "ஏ' க்கு ஒரு வரி விளக்கம் கொடுப்பார். இப்படியே போய், அனைத்து ஆங்கில எழுத்துகளும் அவர் விளக்கம் கொடுக்கும் அழகை பார்த்து, ரசித்து, சிரிக்கும் அளவிற்கு இருந்தது. இது மட்டுமல்லாமல், ஆங்கில எழுத்தான "ஏ' என்ன பண்ணியது "பி' க்கு என்று சொல்லவார். இப்படி கோர்வையாகச் சொல்வதை ரசிகர்கள் ரசிக்க வேண்டும் என்றால், அதை ஒரே ஷாட்டில் எடுக்க வாலி விரும்பினார். அந்தக் காலம் ஃபிலிம் சுருள் காலம். இன்று போல் டிஜிட்டல் உலகம் இல்லை.
இந்த ஒரு "ஷாட்' சுமாராக 200 அடிக்கு மேல் இருக்கும். அந்தக் காலத்தில் அடி கணக்குதான். நீளமான "ஷாட்' அது. வாலி-சோ இருவரும் இணைத்து ஒரு ஓரமாக உட்கார்ந்து, "இதை இப்படி எடுக்க இருக்கிறேன்' என்று கவிஞர் வாலி சொல்ல, கேட்டுக் கொண்டிருந்தார் சோ. இந்தக் காட்சியில் ஒரு சில வரிகளில் எனக்கு வசனமே வரும். அத்தனையும் பேசுவது சோ தான். அதனால் அவங்க இரண்டு பேரும் பேசி முடித்தவுடன், நாங்கள் தயாரானோம். ஒரு "ஷாட்' என்பதை மனதில் கொண்டு சிறப்பாக வசனம் பேசி, நடித்துக் கொடுத்தார் சோ.
ஒரு முறை தான் இந்தக் காட்சி எடுக்கப்பட்டது என்றாலும், இயக்குநர் வாலி மீண்டும் இதை எடுக்க வேண்டும் என்று நினைத்தார். காரணம், ஒரு சில இடங்களில் சோவுக்கு "குளோஸ் அப்' வைத்தால் நன்றாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. டிராலி வைத்து சோ அவர்கள் வசனம் பேசிக்கொண்டே முன்னே செல்லே, அவர் பின்னே நான் நடந்து வர, ஷாட்
சிறப்பாக வந்தது. திரும்பவும் சோ அவர்கள் சரியாகப் பேசி நடிக்க, நாங்கள் எல்லோரும், இதை ரசித்துப் பார்த்தோம்.
நான், மனோரமா, சந்திரபாபு, நாகேஷ், சோ, வெண்ணிற ஆடை நிர்மலா, இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன், பாடகி எம்.ஆர்.விஜயா, திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எல். ஸ்ரீநிவாசன் தலைமையில், சிங்கப்பூரில் ஒரு கலை நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த "ஸ்டார் நைட்' முடிந்தவுடன், நாங்கள் எல்லோரும் மலேசியாவில் ஜோஹார் பாரு என்று ஊருக்குச் சென்றோம்.
அந்த நகரம் சிங்கப்பூருக்கு அருகில் இருக்கும், மலேசிய நகரம். சென்னைக்கும் திருச்சிக்கும் போகும் தூரம் தான். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கார் தருகிறோம் அல்லது எல்லோரும் ஒன்றாக ஒரு வேனில் செல்கிறீர்களா? என்று கேட்டார்கள்.
எல்லோரும் ஒரே குரலில் ஒன்றாகச் செல்கிறோம் என்று கூறினோம். வேன் தயாராக இருந்தது, எல்லோரும் அதில் ஏறினோம். எல்லோரும் இருக்கிறோம் நாம் ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடுவோம். ஒவ்வொரு சீட்டாக ஏதாவது எழுதி, அதில் போட்டி இருக்கும் படி செய்யவேண்டும் என்றும் முடிவானது. எல்லோரும் சீட்டை எடுக்க, அதில் இருப்பது போலேவே செய்தார்கள். என் முறை வந்தது. நானும் சீட்டை எடுத்தேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com