நிறுவனம் உருவான வரலாறு

நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் "ஆரெம்கேவி சில்க்ஸ்' நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் வளர்ந்த விதம் குறித்து அதன் நிர்வாக இயக்குநர் சிவகுமார் இங்கு விவரிக்கிறார்:
நிறுவனம் உருவான வரலாறு

நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் "ஆரெம்கேவி சில்க்ஸ்' நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் வளர்ந்த விதம் குறித்து அதன் நிர்வாக இயக்குநர் சிவகுமார் இங்கு விவரிக்கிறார்:

தாத்தா விஸ்வநாத பிள்ளை 97 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1923-இல் திருநெல்வேலி மேல ரத வீதியில் "ஆரெம்கேவி அண்ட் கோ' -வைத் திறந்தார். திருநெல்வேலி மட்டுமின்றி கேரளாவின் திருவனந்தபுரத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் இந்நிறுவனம் பெயர் பெற்று விளங்கியது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று விற்பனை அமோகமாக
இருந்தது.

இந்நிலையில் கடையை விரிவாக்கம் செய்ய விரும்பி திருநெல்வேலியில் வடக்கு ரத வீதியில் விஸ்தாரமான அளவில் , மாற்றியது 1947-ஆம் ஆண்டில். இப்பொழுது கடையின் பெயர் "ஆரெம்கேவி விஸ்வநாத பிள்ளை அண்ட் சன்ஸ்' எனப் பெயர் மாறியது. தொடர்ந்து உலகப் போர் மூண்ட நிலையிலும் வாடிக்கையாளர்கள் வருகைக்குத் தடையில்லை. பின்னி மில்லின் "ஸ்டாக்கிஸ்ட்' என்று அழைக்கப்பட்டோம். உலக யுத்தம் காரணமாக பொருள்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்தது. ரேஷன் முறை முதன்முதலாக அறிமுகம் ஆனது. பொருள்கள் பிளாக் மார்க்கெட்டில் விற்ற போதிலும் எங்களது கடையில் அதே விலை- அதுவும் நியாயமான விலையிலேயே தாத்தா விற்று வந்தார்.
வடக்கு ரத வீதி கடையில் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை இரண்டுமே நடைபெற்றது.
தாத்தாவின் கொள்கைகள் என்னவென்றால் ...

1.வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவர்களது திருப்தியே நமக்கு முக்கியம்.
2.சப்ளையர்களை திருப்தி செய்வது- அவர்களது பில்லை உடனுக்குடன் பைசல் செய்வது..
3. சிப்பந்திகளைக் கவனிப்பது-அரசு வகுத்துள்ளவாறு தொழிலாளர்களுக்கு என்னென்ன சலுகைகள் உண்டோ அவற்றை வழங்கி அவர்களை மகிழ்விப்பது.
4. அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை மற்றும் அரசு நடைமுறைகளைக் கவனத்துடன் உரிய நேரத்தில் உரியவற்றைச் செய்வது.
இந்நான்கும் நிறுவனத்தை நடத்துபவர்களுக்கு அத்தியாவசியம். இதனைக் கடைப்பிடித்தால் அந்நிறுவனம் "ஓகோ' வென்று வளரும் என்பார்கள். தாத்தா
சொன்னதை இன்றுவரை கடைபிடித்து வருகிறோம்.

நெல்லைக்கப்பாலும் எங்களது நிறுவனத்தைத் விரிவாக்கம் செய்யலாம் என்ற யோசனை பல காலமாக இருந்து வந்தது. முதலில் சென்னையில் நிறுவனம் சார்பாக ஒரு கிளையைத் தொடங்கலாம் என சென்னை, தியாகராயநகர் உஸ்மான் சாலையில் கடையை 2004-ஆம் ஆண்டில் தொடங்கினோம்.

சென்னையில் பல கடைகள் இருக்க ஆரெம்கேவி நிறுவனத்தில் புடவை எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அந்த நிறுவனங்களை எல்லாம் மீறி நமது நிறுவனத்தில் புடவைகள் வாங்க வேண்டுமானால் செய்ய வேண்டியது என்ன என்று நன்கு ஆராய்ந்தே தொடங்கினோம்.

ஏதாவது ஒரு சிறப்பு இருக்க வேண்டும். புது டிசைன், நீடித்த உழைப்பு மற்றும் வண்ணம் இவற்றில் கவனம் செலுத்தினால் நல்லது என்று முடிவெடுத்தோம். அது தவிர பாரம்பரிய வண்ணங்கள், டிசைன்கள் இவற்றையும் இன்றைய இளைய தலைமுறை விரும்பும் வகையில் மாற்ற வேண்டும். அதே போல பட்டுப்புடவையின் எடை குறைவாக இருக்குமாறு உற்பத்தி செய்ய வேண்டும் என்ற முடிவின் படி இயங்கினோம். புடவைகள் தயாரிக்க காஞ்சிபுரம், ஆரணி பகுதிகளில் தறிக்கூடங்களை உருவாக்கினோம். இதில் திறமை வாய்ந்த 400 நெசவுக் கலைஞர்கள் பணிபுரிகிறார்கள்.

பெங்களூரில் தான் பட்டுநூல் வாங்க வேண்டும். அந்த பட்டுநூல் சாம்பிளையும், எங்களது முறிகேற்றும் நிலையத்தில் அங்குலத்திற்கு 18-24 இழைகள் வருமளவுக்கு முறுக்கேற்றி அதன் சாம்பிளையும், சாயம் அதாவது வண்ணம் ஏற்றிய நிலையில் அதன் சாம்பிளையும் ஒவ்வொரு நிலையிலும் தர நிர்ணய கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அனுப்பி வைப்போம். இந்த மையம் கர்நாடகாவில் உள்ளது. அவர்களது சான்று கிடைத்தவுடன்தான் புடவை நெய்யும் வேலையே தொடங்கும்.

இது போன்ற காரணங்களினால் ஆரெம்கேவிபுடவைகளின் தரம் உறுதி செய்யப்பட்டது.

அடுத்து வித்தியாசமாக இருக்க வேண்டும். அப்படியென்றால் என்ன? டிசைனில் புதுசுதான். 1997-ஆம் ஆண்டிலேயே "தீமாட்டிக் ஸாரி' என்று அறிமுகம் செய்தோம்.
பாரதியாரின்" சின்னஞ்சிறுகிளியே' பாடலுக்கு ஏற்ப 32 அபிநயங்கள் பிடித்து அதை வரைபடமாக்கி பார்டரில் நெய்தோம். முந்தானையிலும் ஒரு போஸ் பெரிதாக வரும். இந்த புதிய புடவை நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்றும் ஆர்டர் வருகிறது.

அடுத்து "ஐஸ்வர்ய பூக்கள்' என்றொரு டிசைன். இந்த ஐஸ்வர்யப்பூக்கள் எங்கே இருக்கின்றன? பத்மநாதபுரம் அரண்மனை தர்பார் ஹாலின் மேல் விதானத்தில் 90 பூக்கள் வடித்திருக்கிறார்கள். பார்த்தால் ஒன்று போல் இருக்கும். உற்றுப் பார்த்தால்தான் ஒவ்வொரு பூவுக்கும் உள்ள வித்தியாசம் தெரியவரும். இந்தப் பூக்கள் இருக்கிற இடத்தில் ஐஸ்வர்யம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. அந்தப்பூக்களின் வடிவத்தை கம்ப்யூட்டர் துணை கொண்டு ரெடி செய்தோம். இந்தப் புடவையும் வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமல்ல; மத்திய அரசின் விருதினையும் பெற்று தந்தது.
எங்களது டிசைன்களை மற்றவர்கள் காப்பி செய்வதும் நடந்தது. எனவே அடுத்த முயற்சியாக வண்ணமேற்றுவதில் வித்தியாசம் காண்பிக்க முயற்சி செய்தோம். 50 ஆயிரம் கட்டங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான வண்ணத்தில். எங்களது பாரம்பரிய நுணுக்கங்களைப் பயன்படுத்தி சாயமேற்றி கைதேர்ந்த நெசவுக் கலைஞர்களால் அந்தப் புடவை உருவாக்கம் பெற்றது. நடிகை ஜோதிகா இந்த டிசைனின் அம்பாசிடர் ஆனார். அவரின் உருவம் தாங்கிய விளம்பரமும் வரவேற்பு பெற்றது. விற்பனையிலும் சாதனை புரிந்தது.
இந்தப் புடவையின் சிறப்பான வண்ணத்தில் ஒன்றைக் காண்பித்தால், அந்த வண்ணம் மட்டுமே கொண்ட புடவையையும் உருவாக்கி தருகிறோம்.
"வர்ணஜாலம் கலெக்ஷன்' புடவையை பிரபல அப்ஸ்ட்ராக்ட் ஓவியர் விக்டர் வாஸரேலியின் ஓவியங்களைப் பயன்படுத்தி தயாரித்தோம். "இந்தப் புடவைகளை பட்டில் ஒளி அலையை ஏற்படுத்திய சாதனை' என்று பலரும் புகழ்ந்தார்கள்.
ராஜா ரவி வர்மாவின் 150-ஆவது ஆண்டையொட்டி அவரது "ஹம்ஸ தமயந்தி' ஓவியத்தைப் பயன்படுத்தி
புடவை தயாரித்தோம். லினோ தொழில் நுட்பத்தின் மூலம் நேர்த்தியான பட்டில் 40 சதவீதம் குறைவான எடையில் நெய்யப்பட்ட இந்தப் புடவைகள் அணிவதற்கு மென்மையானவை. ( பேடண்ட்: 2288/ சி.எச்/2009)
"ரிவர்ஸபிள் ஸாரி' ஒரே புடவையில் 4 முந்தானை, அதற்கேற்ற 4 பார்டர்கள் மற்றும் 2 உடல் பகுதி என புதிய தொழில் நுட்பத்துடன் உருவாக்கினோம். ஒரே செலவில் இரண்டு புடவைகள் ஆயிற்று. இதுவும் ஆரெம்கேவியின் பெருமை என்று சொல்லலாம். உலகிலேயே மிக நீளமான புடவை 720 அடியில் தயாரித்தோம். இதில் மகாபலிபுரம் சிற்பங்கள் பயன்படுத்தப்பட்டன.
இது நாள்வரை "ஆரெம்கேவி சில்க்ஸ்' நிறுவனத்தின் குடும்ப உறுப்பினர்கள், கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வருகிறோம். நிறுவனத்தையும் அப்படியே வளர்த்தும் வருகிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com