ரோஜா மலரே! - 89: நகைச்சுவை நடிகர்களில் முத்திரை பதித்தவர்! --குமாரி சச்சு 

நானும் என்னுடைய சீட்டை எடுத்தேன்,  சீட்டில் இருந்தது என்னவென்று பார்த்தால், சோ சாருக்கு  5 டாலர்  கொடுக்கவும் என்று போட்டிருந்தது.
ரோஜா மலரே! - 89: நகைச்சுவை நடிகர்களில் முத்திரை பதித்தவர்! --குமாரி சச்சு 


நானும் என்னுடைய சீட்டை எடுத்தேன்,  சீட்டில் இருந்தது என்னவென்று பார்த்தால், சோ சாருக்கு  5 டாலர்  கொடுக்கவும் என்று போட்டிருந்தது. ஒருவருக்கு, நீங்கள் ஒரு பாட்டுப் பாடுங்கள் என்றும், மற்றொருவருக்கு நீங்கள் நடனம் ஆடுங்கள் என்றும் வந்தது. எனக்குத்தான் பணம் கொடுங்கள் என்று வந்திருக்கிறது. நான் இதை முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. இதை நான் திருட்டுத்தனம் என்று சொல்வேன். ஆனால் சோ சார் அதை ஒப்புக்கொள்வில்லை. என் பர்சில் இருந்து, 5 டாலரை எடுத்துக் கொடுத்தேன். சோ சாரும் நான் கொடுத்ததை, வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி, தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

நான் கொடுக்கும் போதே, "உங்கள் இலக்கு என்னிடம் பணம் வாங்கிக் குவிப்பது இல்லை. அதனால் இந்தப் பணத்தை உங்களிடமிருந்து எப்படியாவது திரும்பி வாங்கிக் காண்பிக்கிறேன்', என்று சொல்லிவிட்டு தான் கொடுத்தேன். அதற்கு அவர் "நீங்கள் தான் கொடுத்தீர்கள். நான் வாங்கிக் கொண்டேன். நீங்கள் முடிந்தால் வாங்கிக் காண்பியுங்கள்', என்று சொல்லி விட்டார். அப்பொழுதிலிருந்து நான் எப்படி எல்லாமோ செய்து அந்த 5 டாலர் பணத்தை அவரிடமிருந்து வாங்கி விட வேண்டும் என்று முயன்றும் முடியவில்லை. இந்த ஸ்டார் நைட் நிகழ்ச்சியில் நான், சோ, மனோரமா, நடிக்கும் காமெடி ஸ்கிட் நடித்தோம். அதை எழுதியது சோ தான். 

சந்திரபாபு பாடி, நடனம் ஆடினார். மக்கள் எங்கள் நிகழ்ச்சியை வெகுவாக ரசித்தார்கள். 

திரும்பி வரும் போது, எனக்கு சிங்கப்பூர் விமான நிலையத்தில் உண்மையாகவே சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்பொழுது கூட சோ எனக்கு சில்லறை கொடுக்கவில்லை. காரணம், அதில் அந்த 5 டாலர் இருக்கும் அல்லவா? இது நடந்தது 1976-77-ஆம் ஆண்டு.

நடிகர்களில் தனி முத்திரை பதித்த ஒருவர் உண்டென்றால் அது வி.கே.ஆர் தான். எல்லா விதமான பாத்திரங்களிலும் அவர் நடித்திருக்கிறார். தந்தை பாத்திரம் என்றாலும் சரி, காமெடி பாத்திரம் என்றாலும், அவர் "ஓகோ' என்று பண்ணி விடுவார். அது மட்டுமல்ல, வில்லன் கதாபாத்திரத்திலும் அவர் வெற்றி பெற்று விடுவார். படத்தில் ஒரு முக்கிய குணசித்திரம் என்றாலும், அவர் பெருமைமிகு நடிப்பை வழங்குவதில் சளைத்தவர் இல்லை. இப்படி எந்த வேடம் கொடுத்தாலும், அவருக்கு நிகர் அவரே. 

காமெடி நடிகர்களில் வி.கே.ஆருக்கு தனி இடமுண்டு. அந்த வகையில் பார்த்தால், அவரது வசன உச்சரிப்பு, டைமிங், உடல் மொழி, கச்சிதமாக இருக்கும். பழகுவதில் எளியவர், இனியவர். நாடகத்தில் நடித்தவர் என்பதால், தான் பெற்ற நாடக அனுபவங்களை, நடிகர், நடிகையர்களுடன் பலமுறை பகிர்த்துள்ளார். 

அந்த அனுபவங்களைக் கேட்கும் போது மனதிற்கு நெகிழ்ச்சியாக இருக்கும். அவர் சொல்ல சொல்ல வருத்தம் ஏற்படும். "நான் இன்று நல்ல நிலையில் இருந்தாலும், நான் நடந்து வந்த பாதை மிகவும் கஷ்டப்பட்டு வந்த பாதை. அன்று உண்ண உணவும், உடுக்க துணியும் இல்லை. நான் இருந்த நாடக சபாவில் தினக்கூலி. எங்கள் நாடகம் நடந்தால், கூட்டம் சேர்ந்தால் தான் எங்களுக்கு அன்று சாப்பாடு கிடைக்கும். ஹவுஸ் ஃபுல் ஆனால் வயிறார உணவு கிடைக்கும். வருடத்திற்கு பத்து நாள் அப்படி நடந்தால், அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்கும். ஆனால் அவ்வாறு நடக்காது. உணவுக்கே இந்த நிலை என்றால் மற்றவை பற்றிச் சொல்லத் தேவையில்லை' என்பார்.

ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு நாடகம் நடத்த வி. கே. ஆர். குழுவினர் வந்தார்களாம். அந்தக் காலத்தில் ஒரு மாதம், ஒரே இடத்தில் நாடகம் நடத்துவார்களாம். நல்ல நாடகம் என்றால், நன்றாக வசூல் ஆகும். ஒரு முறை, அரக்கோணத்தில் நாடகம் நடத்திட முனைந்தார்கள். நாடகத்திற்கு வசூல் சுத்தமாக இல்லை. நாலு நாள்கள் இதே நிலை தொடர்ந்தது. அங்கே உள்ள பலசரக்குக் கடையில், கடனுக்குப் பொருள்களை வாங்கித் தொடர்ந்து நாடகம் நடத்தினார்களாம். நாலு நாளைக்கு பிறகு, அந்த பலசரக்கு கடையின் உரிமையாளர், உணவு சமைக்க, அரிசி மற்ற பொருள்களை, கடனில் வழங்க மறுத்துவிட்டாராம். 

அடுத்தவேளை சாப்பாட்டுக்கே வழி இல்லை என்ற நிலையில், என்ன செய்வது என்று அறியாமல் எல்லோரும் செய்வது அறியாமல் நின்றார்களாம். நடிகர், நடிகைகள் மட்டும் அங்கு இருக்கவில்லை. அவர்களுடைய குழந்தைகளும் இருந்தார்களாம். அதுமட்டுமல்லாமல் தொழில் நுட்பக் கலைஞர்கள், அதாவது மேக்கப் நிபுணர்கள், இப்படிப் பலதரபட்டவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கும் சாப்பாட்டிற்கு வழி இல்லை என்று சொன்ன வி.கே.ஆர். என்னைப் பார்த்து, "சச்சு, நீ நாடகத்தில் இருந்து வரவில்லை. குழந்தை நட்சத்திரமாக வந்து விட்டாய். அதனால் இதை எல்லாம் நீ பார்த்திருக்க வழி இல்லை. நான் நன்றாக இருக்கும் போது தான் நீ பார்க்கிறாய். ஆனால் நாங்கள் ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கும் கஷ்டபட்டுதான் இந்த நிலையை  அடைந்தோம். நான் எதற்கு இதைச் சொல்கிறேன் என்று கேள்' என்றார்.  அதைக் கேட்டவுடன் நான் மிகவும் வருத்தப்பட்டேன். அப்படி அவர் என்ன சொன்னார்?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com