ரோஜா மலரே! - 91: சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு பயணம்! - குமாரி சச்சு

நானும் வி.கே.ராமசாமியும் பல படங்களில் நடித்திருக்கிறோம். அவருடன் நான் ஜோடியாக நடித்த படங்கள் இரண்டு. அந்தப் படங்கள்,
ரோஜா மலரே! - 91: சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு பயணம்! - குமாரி சச்சு


நானும் வி.கே.ராமசாமியும் பல படங்களில் நடித்திருக்கிறோம். அவருடன் நான் ஜோடியாக நடித்த படங்கள் இரண்டு. அந்தப் படங்கள், "ஹலோ பார்ட்னர்' மற்றும் "தாலியா சலங்கையா'. இது மட்டுமல்ல, மேலும் சில படங்களில் நான் அவருக்கு மகளாகவும் நடித்திருக்கிறேன். 

ஒரு காலகட்டத்தில் நான் நடிக்கும் நகைச்சுவை வேடங்களைத் தவிர்த்து, குணச்சித்திர பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தேன். எனக்கே ஒரு விதமான சலிப்பு ஏற்பட்டுவிட்டது. எவ்வளவு நாள், இதே விதமான நகைச்சுவை வேடங்களை ஏற்று நடிப்பது என்று நினைத்து, ரூட்டை மாற்ற முடிவு செய்தேன். அதனால் தான், என்னுடைய நடிப்பு திறமையைக் காட்ட, குணச்சித்திர வேடங்களைத் தேர்ந்து எடுத்து நடிக்க ஆரம்பித்தேன். அதனால் நகைச்சுவை நடிகர்களுடன்  நடிப்பது குறைந்து போய் விட்டது. அது மட்டுமல்ல,  இப்பொழுது சில நல்ல  வேடங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க முடிகிறது என்று சந்தோஷப்பட்டேன். அப்போது, தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க எனக்கு அதிகமாக வாய்ப்பு வரத் தொடங்கியது. இதனால் வி.கே.ஆரை பார்ப்பது அரிதாகி விட்டது. 

அந்த சந்தர்ப்பத்தில் ஒரு நாள், சென்னையில், பிரம்மாண்ட "ஸ்டார் நைட்'  

நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் பல தரப்பட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். நானும் அந்த  நிகழ்ச்சிக்கு போய் இருந்தேன். அங்கே வி.கே.ஆரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்னைப் பார்த்தவுடன் அவர், ""என்னம்மா ஸ்டூடியோ பக்கமே உன்னைப் பார்க்க முடியவில்லை ஏன்? நடிப்பதை நிறுத்திவிட்டாயா?'' என்று கேட்டார். 

""நடிப்பதை நிறுத்தவில்லை. இப்போ நான் நடிப்பது நகைச்சுவை வேடங்களுக்கு பதிலாக குணச்சித்திர வேடங்களில் தான் அதிகமாக நடிக்கிறேன். அது மட்டுமல்ல, தொலைக்காட்சி தொடர்களில்  அதிகமாக நடிக்கிறேன். அங்கு நல்ல வேடங்கள் கிடைக்கிறது. பெயரும் கிடைக்கிறது. நாம் மக்கள் ஒவ்வொருவரின் வீட்டிற்கு உள்ளே சென்று, அவர்களுடன் பேச முடிகிறது. ஆனால் பணம் கொஞ்சம் கம்மி தான். ஆனால் தொடர்ந்து வேலை செய்ய வாய்ப்புக் கிடைக்கிறது. அதனால்  இன்னும் நடித்துக் கொண்டு இருக்கிறேன், மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்'' என்று தெரிவித்தேன்.

 "" பணம் எப்படி கிடைக்கிறது. அவர்கள் சொல்லும் பணத்தைச் சரியாகக் கொடுக்கிறார்களா இல்லையா?''என்று கேட்டார். ""தொலைக்காட்சி தொடர்களில் நாம் நடித்தால், சரியாகப் பணம் நமக்குக் கிடைத்து விடுகிறது. சினிமாவில் நாம் நடித்தால், நமது டப்பிங் முடித்தவுடன் தான் நமக்கு சம்பளமே கொடுப்பார்கள். அதைப் பெறுவதற்குள்  நமக்குப் பல மாதங்கள் ஆகிவிடும். ஆனால் தொலைக்காட்சி தொடர்களில் அப்படி இல்லை. நீங்கள் இன்று நடித்தால், நீங்கள் நடித்து விட்டு, வீட்டிற்கு போகும் போது, நீங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு செல்லலாம்.  தினந்தோறும் சம்பளம் வாங்கலாம்.''  என்றேன்.

""தொலைக்காட்சி பெட்டியை மக்கள் பார்ப்பார்களா? அங்கு நடித்தால் பெயர் கிடைக்குமா?'' என்றும் கேட்டார்.  ""கிடைக்கும், இன்னும் சில காலம் போனால், இந்தத் தொலைக்காட்சி தொடர்கள் எல்லோருடைய வீட்டிலும் பேசப்படும் பொருளாக மாறி விடும். இப்போதே புகழ் பெறத் தொடங்கி விட்டது. நீங்களே இதன் புகழை பார்க்கத் தான் போகிறீர்கள்'' என்று சொன்னேன். நான் சொல்லி சில மாதங்கள் கூட ஆகவில்லை, நாங்கள் இருவரும் ஒரு தொலைக்காட்சி தொடரில் சேர்ந்து நடித்தோம். அந்தத் தொடரின் பெயர் "கோகுலம் வீடு'. 

அந்தத் தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. "மங்கை' ஹரிராஜன் இயக்கினார். 

இப்பொழுது உள்ளது போல் மெகா தொலைக்காட்சி தொடர்கள் எல்லாம் அப்பொழுது இல்லை.

அப்பொழுது வாரம் ஒரு முறை மட்டுமே தொடர் ஒளிபரப்பப்படும். "மங்கை' ஹரிராஜன் சுமார் 23 தொலைக்காட்சி தொடர்கள் இயக்கி உள்ளார். அவர் சுமார் 6 படங்களும் இயக்கினார். அந்தத் தொடர் வரும் போதே, தொலைக்காட்சி தொடர்கள் மிகவும் புகழ் பெற்று விட்டது.

தினமும் சம்பளம் கொடுப்பார்கள் என்று நான் சொன்னதை வி.கே.ஆர். அனுபவித்தார். அவர் அந்தத் தொடரில் நடிக்கும் போதே, என்னிடம் சொன்னது நன்றாக நினைவில் இருக்கிறது. "நமக்கு தேவை வருமானம். பணம் சரியாக நமக்கு வர 

வேண்டும். அதைத் தான் நீ முதலில் சொல்ல வேண்டும்'என்று சொன்னார் வி.கே.ஆர் அடுத்து இன்னொருவரை பற்றி சொல்லப் போகிறேன். அவர் நல்ல நடிகர், இவருக்குக் காமெடியும் வரும். குணச்சித்திர நடிப்பிலும் மிகச் சிறப்பாகச் செய்வார். அது மட்டுமல்ல, பலதரப்பட்ட வேடத்தை ஏற்று நடித்து, தமிழ் மக்களை அசத்தியவர். வசனம் பேசுவதிலும் வல்லவர். குறிப்பாக காமெடி வசனங்களை, டைமிங்குடன் பேசுவார். துரு துரு என்று எப்போதும் இருப்பார். குறிப்பாக, நாம் எப்போதும் சொல்லுவோமே "மெட்ராஸ் பாஷை', அதைப் பேசுவதில், இவரை மிஞ்சியவர் கிடையாது. அதே போல் இவருக்கு ஐயர் வீட்டு பாஷையும் அத்துப்படி.

இவர் நாடகத்தின் மூலம் நம் தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த சொத்து. சினிமாவிற்கு வந்த பின், இவர் பெயருக்கு முன்னால் எந்த அடை மொழியும் சேர்க்கப்படவில்லை. இவர் நாடகத்தில் இருந்த போதே இவருக்குக் கிடைத்த அடைமொழி, இவர் சினிமாவிற்கு வந்த பின்னும் தொடர்ந்தது. இவர் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே அவரை நான் பார்த்திருக்கிறேன். அப்பொழுதே இவர் நடிப்பும், வசனம் பேசும் முறையிலும், பலரையும் கவர்ந்து விட்டார். யார் அவர்?

தொடரும் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com