புதிய அவதாரம் எடுக்கும் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகர் என புதிய அவதாரம் எடுத்துள்ளார் "கேப்டன் கூல்' என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி.
புதிய அவதாரம் எடுக்கும் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகர் என புதிய அவதாரம் எடுத்துள்ளார் "கேப்டன் கூல்' என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி.

கால்பந்து, ஹாக்கி, வாலிபால், கூடைப்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகள் உலகளவில் அதிக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்தியாவில் கிரிக்கெட் மட்டுமே பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறும் மைதானங்களுக்கு ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள் திரண்டு வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 1983-இல் ஒரு நாள் உலகக் கோப்பையை பெற்றுத் தந்த கேப்டன் கபில்தேவுக்கு என தனியாக சிறப்பு உள்ளது.

அவ்வரிசையில் கேப்டன்களில் அதிக வரவேற்பு மற்றும் செல்வாக்கு பெற்றவராக தோனி திகழ்கிறார்.

குறிப்பாக 2007-இல் டி20 உலகக் கோப்பை, 2011-இல் ஒருநாள் உலகக் கோப்பை, 2013-இல் சாம்பியன்ஸ் கோப்பை உள்ளிட்ட 3 பெரிய கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையும் தோனி வசம் உள்ளது.

தலைசிறந்த பினிஷர் என்ற பெயர், விக்கெட் கீப்பர் எனப் புகழப்படும் தோனி, டெஸ்ட்டில் 4876, ஒருநாளில் 10,773, டி20-இல் 1617 ரன்களை குவித்துள்ளார்.

ஆட்டத்தில் எத்தகைய நெருக்கடி ஏற்பட்டாலும் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல், இயல்பாக செயல்படுபவர் என்பதால் "கேப்டன் கூல்' என்ற சிறப்பு பெயரும் தோனிக்கு கிடைத்தது.

சர்வதேச அரங்கில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நீடித்து வருகிறார். அண்மையில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரிலும் சென்னை அணிக்கு 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்று தந்தார் தோனி.

ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் பரந்த அனுபவத்தை பெற்றுள்ள தோனியை இந்திய அணியின் ஆலோசகராக நியமித்துள்ளது பிசிசிஐ. தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையே அவரது முதல் அசைன்மென்டாகும்.  தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோர் மேற்பார்வையில் இந்திய அணி குறுகிய ஓவர் ஆட்டங்களில் சரிவை கண்டு வந்தது. மேலும் 2013-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பைக்கு பின், இந்திய அணியால் ஒருநாள், டி20, சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.

இதைக் கருத்தில் கொண்டும், குறுகிய ஓவர் ஆட்டமுறையில் தோனிக்கு நீண்ட அனுபவம் உள்ளதாலும், அதைப் பயன்படுத்திக் கொள்ள பிசிசிஐ முடிவு செய்து, அவரை அணியின் ஆலோசகராக நியமித்தது. பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் கோலி ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்து அணிக்கு தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டியதே தோனியின் பணியாகும்.

மேலும் அனைத்து வீரர்களுக்கும், தோனிக்கும் இடையே மிகவும் சுமூகமான உறவு உள்ளதால், இந்த நடைமுறை அணிக்கு பலமாக அமையும் என கருதப்பட்டது. மேலும் புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம் தற்போதைக்கு இல்லை என்ற நிலையில், தோனியின் நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.

தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இளம் வீரர்களுக்கு பேட்டிங், பெளலிங் போன்றவற்றிலும் உரிய ஆலோசனைகளை தந்து வருகிறார் தோனி. மேலும் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்துக்கும் தோனி உரிய வழிகாட்டியாக திகழ்கிறார். அவரது தலைமைப் பண்பு மற்ற வீரர்களுக்கும் முன்னோடியாக உள்ளது.

டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விடுவிக்கப்படுவார். அதன் பின் அப்பதவியில் நியமிக்கப்படும் வாய்ப்பு தோனிக்கும் உள்ளது எனக் கருதப்படுகிறது.

விக்கெட் கீப்பர், கேப்டன், விவசாயி என பல்வேறு வகைகளில் தனது திறனை வெளிப்படுத்தியுள்ள தோனி, தற்போது அணியின் ஆலோசகர் என்ற பொறுப்பிலும் முத்திரை பதிப்பார் என்பது திண்ணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com