உள்ளங்கைகளில் உலக சாதனை

பொதுவாக உலக சாதனை படைப்பது என்பதே ஒரு சவாலான விஷயம். அதையும் மீறி தொடர்ந்து மூன்று உலக சாதனைகளை செய்து "ஹாட்ரிக்' சாதனை புரிவது என்பது யாராலும் எளிதில் செய்து முடிக்க முடியாத காரியம் ஆகும்.
உள்ளங்கைகளில் உலக சாதனை

பொதுவாக உலக சாதனை படைப்பது என்பதே ஒரு சவாலான விஷயம். அதையும் மீறி தொடர்ந்து மூன்று உலக சாதனைகளை செய்து "ஹாட்ரிக்' சாதனை புரிவது என்பது யாராலும் எளிதில் செய்து முடிக்க முடியாத காரியம் ஆகும். அந்த வகையில், குமரிமுனையில் உள்ளது போன்ற திருவள்ளுவரின் முழு உருவச் சிலையை அப்படியே ஓவியமாக வரைந்து அதில் திருக்குறள்களை எழுதி உலக சாதனை படைத்துள்ளார் கோவில்பட்டியைச் சேர்ந்த மு. சிவசங்கரி. 

இதேபோன்று, காய்ந்த அரச மர இலையில் மகாத்மா காந்தியின் உருவத்தை வரைந்தும், அரிசியில் தாஜ்மஹால் போன்ற உருவத்தை உருவாக்கியும் மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளார் சிவசங்கரி. தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் துறை பேராசிரியையாக பணிபுரிந்து வரும் சிவசங்கரியிடம் உலக சாதனைகள் குறித்து கேட்ட போது சொன்னார்:

""என்னுடைய அனைத்து முயற்சிகளுக்கும் விதையாக திகழ்ந்தது தந்தை முருகானந்தம். "பரிசுக்காக போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம், உனது திறமையை வெளிப்படுத்த கிடைக்கும் சந்தர்ப்பமாகவே அதை கருதி எந்தவித போட்டியாக இருந்தாலும் துணிவுடன் கலந்து கொள்'  என்றார். அதனை ஏற்று தற்போது மூன்று உலக சாதனைகள் படைத்துள்ளேன். சிறு வயதில் இருந்தே பேச்சு, கட்டுரை, கவிதை , ஓவியம் , பாட்டு என எல்லா வகையான போட்டிகளிலும் பங்கேற்றுள்ளேன். இதுவரை 50-க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளேன்.

ஓவியத் துறையில் எனக்கு ஆர்வம் இருந்தபோதிலும் அதை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்டையிலேயே திருவள்ளுவரின் படத்தை வரையத் தொடங்கினேன். 133 செ.மீ உயரத்தில் படம் வரைந்து அதில் 1330 திருக்குறளையும் எழுதி உள்ளேன். 1329 நிமிடம் 58 நொடிகளில் இந்த ஓவியத்தை வரைந்தேன்.

புதுச்சேரியில் உள்ள "அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்டு ரிசார்ச் பவுன்டேஷன்' என்ற அமைப்பு எனது சாதனையைப் பாராட்டி உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்தது.

இதன் தொடர்ச்சியாக காய்ந்த அரச மர இலைகளில் சின்ன சின்னதாக மகாத்மா காந்தியின் உருவத்தை வரைந்தேன். பின்னர் ஏறத்தாழ 500 காய்ந்த அரச மர இலைகளை கொண்டு 9 மணி நேரத்தில் மகாத்மா காந்தியின் உருவத்தை பெரிய அளவில் உருவாக்கினேன். இதனால் எனது பெயர் அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்டு புத்தகத்தில் இரண்டாவது முறையாக இடம்பெற்றது.

அதன் பிறகு ஒரு லட்சம் அரிசி மணிகளை கொண்டு உலக அதிசயமான தாஜ்மஹால் போன்ற உருவத்தை உருவாக்கினேன். காகிதத்தில் படம் வரைந்து அதில் அரிசி மணிகளை ஒட்டுவதுதான் பலரது வழக்கம். ஆனால், நான் அப்படி செய்யாமல் அரிசி மணிகளை கொண்டு தாஜ்மஹால் கட்டுவது போன்று உருவாக்கினேன். அரிசி மணிகளை ஒட்டுவதற்கு பசை மற்றும் நிறம் தெரிய பெயிண்ட் மட்டுமே பயன்படுத்தினேன்.

மூன்று நாள்களில் ஒரு லட்சம் அரிசி மணிகளால் 13.5 செ.மீ உயரமும், 8.1 செ.மீ அடிப்பகுதியும் கொண்ட சிறிய  அளவிலான தாஜ் மஹாலை உருவாக்கினேன். இதையும் உலக சாதனையாக அங்கீகரித்து சாதனை புத்தகத்தில் மூன்றாவது முறையாக எனது பெயர் இடம்பெற்றது. உலக சாதனையில் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளேன்.

சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைதலில் ஆர்வம் இருந்ததால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளேன். 

எனது குடும்பத்தினரின் ஒத்துழைப்பே சாதனை புரிய உந்து சக்தியாக இருந்தது. புதுமையான ஓவியங்கள் வரையவே விருப்பம் உள்ளது''.  என்றார் சிவசங்கரி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com