எலக்ட்ரிக் வாகனம்: சுற்றுச்சுழலுக்கு நன்மை அளிக்குமா?

தினசரி அதிகரித்து வரும் பெட்ரோல் விலை மக்களுக்கு பெரிய கவலையாக மாறியுள்ளது. இப்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 100 ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
எலக்ட்ரிக் வாகனம்: சுற்றுச்சுழலுக்கு நன்மை அளிக்குமா?

தினசரி அதிகரித்து வரும் பெட்ரோல் விலை மக்களுக்கு பெரிய கவலையாக மாறியுள்ளது. இப்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 100 ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கிறது. மற்றொரு புறம், டீசல் விலையோ பெட்ரோலுக்கு நிகரான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை, பெட்ரோல் விலையை விட 5 ரூபாய்தான் குறைவாக உள்ளது. இதற்கெல்லாம் மேலாக, புவி வெப்பமடைதல் தற்போது ஒரு உண்மையான அச்சுறுத்தலாக இருக்கிறது. காற்று மாசுக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று வாகனங்களில் இருந்து வரும் புகை. உலகம் முழுவதும் காற்று மாசு என்பது அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

இந்தியா முழுவதும் 20 கோடிக்கும் மேலான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயங்கி வருவதாக மத்திய போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

கனடா மற்றும் அண்டார்டிகாவில் எல்லா நேரத்திலும் அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது. அதே நேரத்தில் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை சீற்றங்கள் உலகம் முழுவதும் பேரழிவை உருவாக்கி வருகின்றன. இதற்கு முக்கியக் காரணம் காற்று மாசுபட்டால் ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள் தான்.
இந்த காரணிகளைக் கருத்தில் கொண்டு, இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதிக காற்று மாசுபாட்டை தடுக்க மின்சார வாகனங்களின் வருகையை ஊக்குவித்து வருகின்றன. 

மின்சார வாகனங்களை மக்கள் விரைவாக ஏற்றுக்கொள்வதற்கு பல்வேறு மானியங்களையும் வழங்குகின்றன.முன்பெல்லாம் மின்சார வாகன உற்பத்தியில் ஓரிரு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து முன்னணி வாகன நிறுவனங்களும் "இவி' எனப்படும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் இறங்கியுள்ளன. 

நச்சுகாற்றை ஒழிப்பது சிரமம்தான் என்று பலரும் நினைக்கும் நேரத்தில் மின்சார கார்கள், ஸ்கூட்டர்கள் வருகை பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் மின்சார கார்கள், ஸ்கூட்டர்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதை சாலைகளில் பார்க்க முடிகிறது. பிற வாகன நம்பர் பிளேட்டுகளை விட பச்சை நிறத்திலான எலக்ட்ரிக் வாகன பயன்பாடு தனித்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டில் முக்கியத்துவம் பெறுவது பேட்டரிகள். இந்த பேட்டரி தயாரிப்பு என்பது சற்று கடினமான பணி தான். 

அர்ஜென்டினா போன்ற உவர் நிலங்களில் இருந்துதான்  பேட்டரி தயாரிப்பதற்கான மூலப்பொருள் லித்தியம் கார்பனேட் தோண்டி எடுக்கப்படுகிறது. 14 ஆயிரம் டன் லித்தியம் தயாரிக்க 42 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என கூறப்படுகிறது. 

இந்தியா போன்ற நாடுகளில் இந்த லித்தியம் கார்பனேட் எடுக்க முடியாது. மிகவும் வறண்ட உவர் நிலங்களில் இருந்துதான் இது பெறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் வாழும் மக்கள் தண்ணீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர்.

பல தனியார் நிறுவனங்கள் லித்தியம் எடுத்து வருகின்றன. இந்த பேட்டரிகளின் ஆயுட்காலம் அதிகபட்சம் 4 முதல் 5 ஆண்டுகள்தான் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

சார்ஜ் செய்து பயன்படுத்தும் வகையில் கார் இருப்பதால் சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படலாம் என்றாலும், அதன் பேட்டரி தயாரிக்க இப்படி தண்ணீர் செலவாக்கப்படுவதும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புதானே.

இந்தியாவில் இந்த ஆண்டுதான் மின்சார கார்கள் பற்றி அதிக அளவு பேசப்பட்டு வருகின்றன.சுற்றுச்சூழலுக்கு நல்லது என கூறப்படும் பெட்ரோல், டீசல் கார்களின் விலையை விட இந்த கார்களின் விலை மிக அதிகம். கோனா வகை கார்கள் வீட்டு மின்சாரத்தில் 19 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும், டி.சி மின்சாரம் என்றால் 6 மணி நேரம் ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 450 கி.மீ வரை பயணிக்கலாம். 

ஆனால் இந்த பேட்டரிகள் அதிகபட்சமாக  4 முதல் 5 ஆண்டுகள் வரை மட்டுமே பயன்படுத்தமுடியும். அதன்பின் இதை மாற்றியாக வேண்டும். அப்படி மாற்றப்படும் பேட்டரி கழிவுகள் எப்படி கையாளப்படும் என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால், லித்தியம் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த பேட்டரிகள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து  என்கின்றார்கள்.

எலக்ட்ரிக் வாகன பயன்பாடு பற்றி சிலரது கருத்துகள்:


வானவன் 
இயற்கை ஆர்வலர்

""இன்றைய சூழ்நிலையில் பேட்டரி வாகனங்களின் பயன்பாடு நன்மை அளிக்கக்கூடியது தான். ஆனால் இதிலுள்ள பேட்டரிகளை 3 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும் . அதன் பின்னர் இதனை மறு சுழற்சி செய்ய முடியுமா? அல்லது இவை குப்பைகளாக மாறும் போது சுற்றுச்சுழலுக்கு தீங்கு விளைவிக்குமா தெரியவில்லை. மேலும் பேட்டரி வாகனங்களின் விலை அதிகம். பேட்டரி மாற்றும் செலவை கணக்கிடும் போது பெட்ரோல் விலையும் அதற்கு நிகராகத்தான் உள்ளது. பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டால் புகையில்லாமல் இருப்பது நல்ல விஷயம் தான். ஆனால் பேட்டரி வாகனங்களில் உள்ள குறைபாடு என்ன என்பது இனி வரும் காலங்களில் தான் தெரியவரும்.  எடுத்துக்காட்டாக கரோனா பொதுமுடக்கம் காரணமாக  கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழிற்சாலைகள் இயங்கவில்லை. வாகன பயன்பாடும் இல்லை. இதனால் சுற்றுச்சுழல் மாசுபாடும் இல்லை. இதன் காரணமாக இந்த ஆண்டு சரியான அளவு மழை பெய்துள்ளது. காற்று மாசும் வெகுவாக குறைந்துள்ளது. பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டில் நன்மைகள் ஏற்பட்டால் அதனை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வோம்.''

கோகுல கண்ணன்
ஆட்டோ மொபைல் இன்ஜினியர்

""பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டை பொருத்தவரையில் நன்மையும், தீமையும் சரிசமமாக உள்ளன. மேற்படி வாகனங்களை அதிகதூரம் பயணம் செய்ய முடியாது. உள்ளூர் பயன்பாட்டிற்கு மட்டுமே உதவும். மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களுக்கு இது அதிகம் பயன்படாது. காரணம் எல்லா அடுக்குமாடி குடியிருப்பிலும் வாகனம் நிறுத்தும் இடங்களில் சார்ஜ் செய்ய பிளக் பாயிண்ட்டுகள் இருக்காது. உதாரணமாக பேட்டரி வாகனங்களை 3 மணிநேரம் தொடர்ந்து சார்ஜ் செய்தால் தான் 60 கிலோ மீட்டர் ஓட்ட முடியும். இதிலுள்ள பேட்டரியை 150 செல்கள் வரை இருக்கும். இதில் எந்த செல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சரி செய்தால் போதும். குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் வரை தயாரிப்பு நிறுவனங்கள் உத்தரவாதம் தருகிறார்கள். ஒரு கட்டத்தில் இந்த பேட்டரி செயல்பாடு இல்லையென்றால் மாற்றும்போது குப்பைகளாகிவிடும். இவை கண்டிப்பாக சுற்றுச்சுழல் மாசுபாட்டை ஏற்படுத்தும். 

உதாரணமாக பெட்ரோலில் இயங்கும் வாகனங்களை இரண்டாயிரம் கிலோ மீட்டர் ஓட்டினாலே ரூ.1500 வரை பராமரிப்பு செலவு வைத்துவிடும். நடுத்தர குடும்பத்தின் செலவை குறைக்க இது பயன்படும். ஆனால் இதிலுள்ள பேட்டரியை மாற்றும் போது ரூபாய் 60 ஆயிரம் வரை செலவாகும். இந்த விலைக்கு புதிய வாகனம் ஒன்றை வாங்கிவிடலாம். 

பேட்டரி வாகனங்களை இயக்க ஆரம்பிக்கும் போதே வேகம் எடுக்கும். அதற்கு உதாரணம் தான் மின்சார ரயில்கள். அவை இயங்க ஆரம்பிக்கும் போது வேகம் எடுக்கும். அப்போது உள்ளே பயணிப்பவர்களுக்கு ஜெர்க் உண்டாக்கும் என்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். எனவே பேட்டரி வாகனங்களை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள பழகி கொள்ள வேண்டும்.'' 

கார்த்தி 
எலக்ட்ரிக் வாகன டீலர்

""பெட்ரோல் விலை எப்போது 100 ரூபாயை தாண்டியதோ அப்போதே "இவி' எனப்படும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்களின் கவனம் திரும்பிவிட்டது. இதன் ஆரம்ப விலை 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக இரு சக்கர வாகனம் என்றாலே நாள்தோறும் 50 கி.மீ வரை தான் பயணம் செய்வார்கள். அதற்கு மேல் கார் போன்றவற்றைத் தான் பயன்படுத்துவார்கள். 

ஆனால் இவி பொருத்தவரை அன்றாடம் 150 கி.மீ வரை பயணம் செய்யலாம். இதற்கு விரைவாக சார்ஜ் செய்யும் வசதிகள் வந்துவிட்டன. 35 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் 120 கி.மீ வரை பயணம் செய்யலாம். 2022- ஆம் ஆண்டிற்குள் அனைத்து இடங்களிலும் இந்த இவியை சார்ஜ் செய்ய வசதிகள் உருவாகி விடும்.  இப்போது நடுத்தர குடும்பம் ஒன்றுக்கு மாதம் பெட்ரோல் செலவாக 6 ஆயிரம்  ரூபாய் ஆகிறது. ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களில் பேட்டரிக்கு 6 ஆண்டு உத்தரவாதம் தருகிறார்கள். உள்ளே பொருத்தப்பட்டு இருக்கும் மோட்டாருக்கு 3 ஆண்டு உத்தரவாதம் தருகிறார்கள். இவை இரண்டும் தான் முக்கியம். இதர பாகங்களில் விலை மிகவும் குறைவு தான். அதனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள், பட்ஜெட் போட்டு வாழும் மக்கள் "இவி'யை தான் விரும்புகிறார்கள்'' என்கிறார்.

இயற்கையை பாதுகாக்க நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் சில தொழில் நிறுவனங்கள் பணமாக்கும் முயற்சியாக பார்க்கின்றன. உண்மையில் இயற்கையை காக்க நாம் எடுக்கும் இது போன்ற முயற்சிகள் பலன் தருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com