கடலுக்குள் சாகசம்!

ஒலிம்பிக்ஸில்  தங்கப் பதக்கம் வென்ற  நீரஜ் சோப்ராவுக்கு மூச்சுவிட நேரமில்லை.
கடலுக்குள் சாகசம்!

ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மூச்சுவிட நேரமில்லை. இந்தியா திரும்பியதும், கங்கை நதி சுத்திகரிப்பு நிதிக்காக ஏலம் விட தனது உயிரைவிட மேலான ஜாவ்லினை (ஈட்டியை) பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து பாராட்டு விழாக்கள், விளம்பரங்கள், பேட்டிகள், சானல் நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து கலந்து கொண்ட நீரஜ், அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்தப் போட்டியிலும் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தார்.

ஓய்விற்காக மாலத்தீவு சென்றிருக்கும் நீரஜ் அங்கு கடலுக்குள் மூழ்கி பயிற்சியைத் தொடங்கியிருக்கிறார்.

"விண்ணில் பறந்தாலும், ...மண்ணில் நடந்தாலும், நீரில் நீந்தினாலும் என் நினைவெல்லாம் ஜாவ்லின்தான்.....' என்று பதிவை போட்டதுடன், மாலத்தீவின் கடலில், கடலுக்குள் மூழ்கப் பயன்படுத்தும் உடை மற்றும் ஆக்சிஜன் சிலிண்டருடன் கையில் ஈட்டி இல்லாமல் மூழ்கி ... ஈட்டி எறிவது போல பயிற்சி செய்கிறார். அதனைப் படம் பிடித்து "பயிற்சி தொடங்கிவிட்டது' என்று தலைப்பும் கொடுத்து தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றமும் செய்திருக்கிறார்.

தண்ணீருக்குள் மூழ்கிவிட்டால் தரையில் நடக்கும் அல்லது தரையில் ஈட்டி வீசும் வேகத்தில் கடலுக்குள் நடக்கவோ, ஈட்டியை வீசவோ முடியாது. சுற்றிச் சூழ்ந்திருக்கும் தண்ணீர் ஒருவரது வேகத்திற்குத் தடையாக இருக்கும். ஆனால் உடற்பயிற்சிக்கு தண்ணீர் உகந்தது. அதனால்தான் நீந்துதலை எல்லா உடல் பயிற்சிகளைவிட சிறந்தது என்கிறார்கள். எதையோ தீர்மானித்துத்தான் நீரஜ் பயிற்சியைக் கடலுக்குள் தொடங்கி இருக்கிறார் என்கின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள்.

ஒலிம்பிக்ஸிற்கு முன் தலைமுடியை நீளமாக வளர்த்திருந்த நீரஜ் இப்போது நீளத்தைக் குறைத்து சிகை அலங்காரத்தை மாற்றிக் கொண்டுள்ளார். ஆடம்பர உடைகளை வாங்கிக் குவித்திருக்கும் நீரஜ் தொடர்ந்து பதக்கங்களையும் வென்று வருவார் என நம்பலாம். ஏனென்றால் அவர் வயது வெறும் 23 தான். சாதனைகளில் இன்னும் பாக்கியிருக்கிறது...!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com