சாதனைக்குப் பின்னால்....

நோபல் பரிசு, இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம்,  உலக அமைதிக்கு பங்களிப்பு  முதலான  துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
சாதனைக்குப் பின்னால்....

நோபல் பரிசு, இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், உலக அமைதிக்கு பங்களிப்பு முதலான துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காக தான்சானியா எழுத்தாளர் அப்துல் ரஸாக் குர்னா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அகதிகளுக்கு நேரிடும் பிரச்னை, ஒரு நாட்டை இன்னொரு நாடு ஆளும் போது ஏற்படும் காலனி ஆதிக்கம் காரணமாக அடிமை வாழ்வு வாழும் மக்களின் ரண வலி ரஸாக்கிற்குப் புரியும். அடக்குமுறையால் பாதிப்படைந்தவர்களின் அவலக் குரல்களை "வாழ்வுக்குப் பிறகு' நாவலில் எதிரொலித்ததற்காக அப்துல் ரஸாக் குர்னாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

தான்சானியாவை பூர்விகமாகக் கொண்ட அப்துல் ரஸாக் குர்னாவுக்கு 73 வயதாகிறது. அகதிகளைக் குறித்து எழுத அப்துல் ரஸாக்கை விட வேறு பொருத்தமான எழுத்தாளர் இருக்க மாட்டார். ஏனென்றால் ரஸாக் தான்சானியாவிலிருது 1960-இல் இங்கிலாந்தில் அபயம் தேடிய அகதி ஆவார். இதுவரை 10 நாவல்களை எழுதியுள்ளார். 1994-இல் ரஸாக் எழுதி வெளியிட்ட சொர்க்கம் நாவலின் கரு தான்சானியாவில் வளர்ந்த ஒரு சிறுவனின் வாழ்க்கைதான். அதை எழுத்துக்களில் விவரித்த விதம் ரஸாக்கிற்கு புக்கர் பரிசு வந்தடைய காரணம் ஆகியது. நோபல் பரிசு மூலம் அப்துல் ரஸாக்கிற்கு 11.40 லட்சம் டாலர்கள் பரிசுத் தொகையாகக் கிடைக்கும். "அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் வரையில் எனக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது என்ற செய்தியை நான் நம்பவில்லை' என்கிறார் ரஸாக்.

ஊடகர்களான திமித்திரி அந்திரியேவிச் முரத்தொ மரியா அஞ்சலீட்டா ரெஸா, பேச்சு உரிமைகளுக்காகவும், கருத்து சொல்வதற்கான சுதந்திரம் வேண்டும் என்று தங்கள் நாடுகளில் பல ஆண்டுகளாக உரத்த குரல் எழுப்பி வருபவர்கள். இவர்களது உரிமைக் குரலுக்காக, மன தைரியத்திற்காக உலக அமைதிக்கான நோபல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நோபல் பரிசு சமமாக இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

மரியா ரெஸாவின் சொந்த நாடு பிலிப்பைன்ஸ். ஆட்சியில் உள்ளவர்களின் அதிகார துஷ்பிரயோகம், நாட்டில் அவிழ்த்துவிடப்படும் வன்முறை, நாட்டில் ஆட்சியாளர்களின் வளர்ந்து வரும் சர்வாதிகாரத்தை எதிர்த்து கருத்துக்களை விமர்சனங்களை முன்வைக்க அடிப்படை கருத்து சுதந்திரத்தை தனது ஊடகம் மூலம் வெளிக்காட்டியவர். "பாண்டோரா ஆவணங்கள்' மூலம் பல நாடுகளைச் சேர்ந்த பல பிரபலங்களின் செல்வக் குவிப்பை தண்டோரா போட்டுச் சொன்ன புலனாய்வு பாணியில் தனது "ரேப்ளர்' இணைய இதழை நடத்தி வருகிறார்.

மரியா ரெஸ்ஸா கருத்து சுதந்திரத்திற்காக சட்டத்தின் துணையுடன் நீதிமன்றங்களில் போராடுபவர். தைரியமாக உண்மைகளைப் புட்டு வைக்கும் ஊடகர்களை அபாயம் தொடரும். தனது "ரேப்ளர்' இணைய செய்தி ஊடகத்தின் மூலம் பொய் செய்திகளைப் பரப்புபவர்' என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதெர்த்தேவும், அவரது ஆதரவாளர்களும் எதிர் தாக்குதல் நடத்திவருகிறார்கள். அந்த அளவுக்கு மரியா அயராமல் ஊடகப் பணியைச் செய்து வருகிறார்.

பிலிப்பைன்ஸ்சில் மரியா பிறந்தாலும், சொந்த நாட்டில் ராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்ததும் அமெரிக்கா சென்று விட்டார்.

"எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது.... வெள்ளை நிறத்தவர்களிடையே பழுப்பு நிறக்காரியான நான் என்ன சாதிக்கப் போகிறேன் என்று என்னையே நான் கேட்டுக் கொண்டேன். இந்த தலைமுறையில் உண்மையைத் தெரிந்து கொள்ள யுத்தம் நடத்தவேண்டி வரும்' என்று சொல்லும் மரியா கல்லூரி படிப்பு முடிந்ததும் தனது வேர்களைத் தேடி 1986 -இல் மீண்டும் பிலிப்பைன்ஸ் வந்து சேர்ந்தார். அப்போது அங்கு ஆட்சியாளர் மார்கோஸ்ûஸ எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்கியிருந்தார்கள்.

நாட்டில் என்ன நடக்கிறது என்று ஆர்வம் காட்டத் தொடங்க.... அந்த ஆர்வம் மரியாவை ஊடகராக மாற்றியது. பல பிரபல ஊடக நிறுவனங்களில் செய்தியாளராகப் பணிபுரிந்த மரியா 2012-இல் "ரேப்ளர்' இணைய ஊடகத்தை ஆரம்பித்தார். பிலிப்பைன்ஸ் நாட்டில் முதன்மை இணைய ஊடகமாக "ரேப்ளர்'ரை கொண்டு போக ஆர்வமிக்கவர்களை மரியா தன்னுடன் இணைத்துக் கொண்டார்.

மரியாவின் உழைப்பு வீண் போகவில்லை. அவரது இணைய ஊடகத்தை சுமார் 45 லட்சம் பேர்கள் தொடருகிறார்கள். "ரேப்ளர்'ரில் வெளியாகும் புலனாய்வு கட்டுரைகள் பிலிப்பைன்ஸ் மக்களிடையே பிரபலம்.

"மரியா முன்வைத்த காலை பின் எடுக்க மாட்டார்... அவருக்கு எது சரியென்று படுகிறதோ அதற்காகப் போராடுவார். மரியாவுக்கு ஊடகத் துறையில் நல்ல அனுபவம் உண்டு... அதனால் ஊடகப் பொறுப்புகளை நேர்த்தியாகச் செய்து முடிக்கிறார். ஆட்சியாளரான ரொட்ரிகோ துதெர்த்தே யை கடுமையாக விமர்சனம் செய்பவர் இவர்தான் மரியா...' என்கின்றனர் பிலிப்பைன்ஸ் ஊடக ஆர்வலர்கள், போதை மருந்து அபாயம், ஊழல், லஞ்சம், மனித உரிமை மறுப்பு குறித்து கட்டுரைகள் மரியாவின் இதழில் முன் உரிமை கிடைக்கும். ரொட்ரிகோ துதெர்த்தே அரசு நிகழச்சிகளில் மரியாவின் நிருபர்கள் பங்கேற்பதை தடை செய்தார். டைம் இதழ் 2018 -இல் அட்டைப்படத்தில் மரியாவின் படத்தை வெளியிட்டதுடன் கட்டுரையையும் பிரசுரித்தது.

"ஊடகங்களை, ஊடகர்களை மதிக்க வேண்டும்' என்ற செய்தியை அனைத்து நாடுகளின் அரசுகளுக்கு நோபல் பரிசு தந்திருக்கிறது' என்கிறார் 58 வயதாகும் மரியா அஞ்சலீட்டா ரெஸா.

நோபல் பரிசு பெற்ற திமித்ரி முரத்தொ, இரும்புத்திரை என்று சொல்லப்படும் ரஷ்யாவில் பேச்சுச் சுதந்திரத்துக்கு அழுத்தம் வரும்போதெல்லாம் பேச்சு சுதந்திரத்திற்கு ஆதரவு தந்து ஆலமரமாக நிற்பவர். "நோவாஜா கெஜெட்டா' என்ற சுதந்திர செய்தித்தாளின் நிறுவனர்களில் ஒருவர்.

திமித்திரி அந்திரியேவிச் முரத்தொ 1993 இலிருந்து ஊடகத்துறையிலிருந்து இயங்குபவர். இவரது இதழான "நோவாய் கெஸட்டா' மூலம் ரஷ்ய அரசியல், பேச்சு உரிமை, ஊழல், ரஷ்யா நடத்தும் போர்கள், மனித உரிமை மறுப்பு போன்ற விஷயங்களில் திமித்திரியின் கவனம் பதிந்துள்ளது. முரத்தொ வயது 59.

அரசாங்கத்தை எதிர்த்து எழுதுவதால், "நோவாய் கெஸட்டா'வைச் சேர்ந்த ஆறு ஊடகர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். "நோவாய் கெஸட்டா' ஊடகங்களுக்கு சதா திக் திக் தருணங்கள்தான்...!

"எங்களை பொருத்தவரையில் உயிரைத் தியாகம் செய்த "நோவாய் கெஸட்டா' ஊடகர்களை கெளரவிக்கும் விதத்தில் நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதாக கருதுகிறோம். பரிசுத் தொகையை சமூக நல திட்டங்களுக்கும், அரசு அழுத்தத்திற்கு இலக்காகியிருக்கும் புதிய தலைமுறை ஊடகர்களுக்கும் பகிர்வோம்..' என்கிறார் திமித்திரி அந்திரியேவிச் முரத்தொ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com